மொழிச் சிக்கல்கள்

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

நா. இரா. குழலினி


வெகு நேரமாகப் படித்துக்கொண்டிருந்த போதான ஒரு நாளின் பிற்பகுதியில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு காத்துக் கொண்டிருப்பதாக என் அம்மா என்னை அழைத்தாள். ‘ஏம்மா உனக்கு ஃபோன், அண்ணன் லைன்ல இருக்கான் ‘, அண்ணனுடன் பேசும் போது அவர் சொன்னார் ‘பாப்பா சொல்லுச்சுப்பா, அத்தை போன் பண்ணுச்சுண்ணு அதான் என்னன்னு கேக்கலான்னு பண்ணினேன் ‘ என்று, அவருடன் பேசிவிட்டு வந்தபோதுதான் எனக்குத் தோன்றியது. அத்தை எப்போது அஃறிணையானாள் ?1

தொல்காப்பியர் குறிப்பிடும் இருதிணை மூவிடம் ஐம்பால்2 என்னாயிற்று! இது குறித்த சிந்தனை வலுத்த போது வெவ்வேறு காட்சியமைப்புகளாக வந்து போன பல்வேறு நினைவுகளின் நீட்சி எனக்கு பல்வேறு கேள்விகளை கிளைத்துக் கொடுத்தன.

என்றோ பார்வையில் பட்ட ஒரு சுவரொட்டி சொல்லியது மாண்புமிகு அமைச்சரவர்கள் வருகிறார்கள் என்று. எங்கிருந்து வந்தது ‘அமைச்சரவர்கள் ‘ என்கிற மிக அதிக உயர்வு நவிற்சி. அஃறிணையாகிப்போன அத்தையும் அமைச்சரவர்களும் என் பலநாள் தூக்கத்தை கெடுத்தபின் எனக்குத் தோன்றியது தொல்காப்பியமும் நன்னூலும் மறுவாசிப்பிற்குள்ளாக வேண்டிய அவசியம்.

மறுவாசிப்பின்போது எனக்குக் கிடைத்த பதில் மிக எளிதான ஒன்றுதான். தமிழில் பால் பகுப்பை இரண்டு வகைக் கொள்கைகளுக்குட்பட்டு அமைத்திருக்கிறார்கள். ஒன்று எழுவாய் பயனிலை இயைபு மற்றொன்று சுட்டுப்பெயர் மாற்றுக் கொள்கை.

தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய முப்பாலிலும் நான் என்னைப் பற்றிப் பேசுகிற ‘தன்மையிலும் ‘ நான் உன்னைப் பற்றிப் பேசுகிற ‘முன்னிலையிலும் ‘ நான் நம் இருவருக்குமான நேரடி உரையாடலில் தொடர்பில்லாத மூன்றாம் எண்ணிக்கையிலான உயிருளளது அல்லது உயிரற்றது பற்றிப் பேசுகிற ‘படர்க்கையிலும் ‘, எழுவாயிலும் பயனிலையிலும் ஒரே பால் பகுப்பில் பேசுகிறேனா இல்லையா என்பது முதற் கேள்வி. உதாரணமாக நான் போகிறேன் நீ போகிறாய் அவன் போகிறான் போன்ற வாக்கியங்களில் பயன்படுத்தப்படும் ஏன், ஆய், ஆன் என்பன போன்ற மேற்சொன்ன வாக்கியங்களின் விகுதிகள் முறையே தன்மை முன்னிலை படர்க்கை ஆகிய முப்பாலுக்கும் உரியதாயின.

படர்க்கைப் பெயர் எழுவாயாக வரும்போதுதான் நமக்கான சிக்கல் துவங்குகிறது. பொதுவாக படர்க்கைப் பெயர்கள் எழுவாயாக வரும் தொடர்களில் பயனிலைகள் ஐந்து விதமான விகுதிகள் கொண்டு அமைகின்றன அவை ஆன், ஆள், ஆர், அது, அன என்பவையாகும்.

ராமு வந்தான்

குமரி வந்தாள்

ஆசிரியர் வந்தார்

மாடு வந்தது

எருமைகள் மேய்ந்தன

பெரும்பாலான இடங்களில் தன்மை முன்னிலை தவிர்த்த அனைத்துப் பயன்பாடுகளிலும் நாம் இந்தப் பயனிலை விகுதிகளைஸ் பயன்படுத்துகிறோம். இதுவே எழுவாய் பயனிலை இயைபு எனப்படும் முதல் விதியாகும்.

மேற்சொன்ன தொடர்களில் நாம் பெயர்ச்சொல்லிற்குப் பதிலாக சுட்டுச்சொற்களான அவன் அவள் அது அவர் அவை இவன் இவள் இது இவர் இவை (முன்பு வழக்கிலிருந்த உவன் உவள் உவர் உது போன்ற இடைச்சுட்டுகள் இன்று வழக்கிழந்து போயின என்பது குறிப்பிடத்தக்கது) என்பவைகளைஸ் பயன்படுத்தினோமென்றாலும் இந்த இயைபு கெடுவதில்லை எனவே சுட்டுப்பெயர் மாற்றுக் கொள்கை என்பதும் இயல்பாகப் பொருந்தி இருக்கிறது.

இப்படியாகிய பால் வேறுபாடுகளைஜ் தமிழ் இலக்கணங்கள் ஆண்பால் பெண்பால் பலர்பால் ஒன்றன்பால் பலவின்பால் என வகையறுத்துகின்றன. அன்றைக்கான பயன்பாட்டில் ஆசிரியர் வந்தார் என்றால் அது ஒரு குழுவான வெவ்வேறு ஆசிரியர் குழாமைக் குறிக்கும். ஆனால் இன்றைக்கான பயன்பாட்டில் இந்தத் தொடர் ஒரு குறிப்பிட்ட ஆசிரியரையே குறிக்கும். இன்றைக்கு ஒரு ஆசிரியர் குழுவைச் சொல்ல வேண்டுமானால் நாம் ‘கள் ‘ விகுதி சேர்த்து இந்தத் தொடரை மாற்றியமைக்க வேண்டும். ஆசிரியர்கள் வந்தார்கள். அல்லது அவர்கள் வந்தார்கள். ‘கள் ‘ விகுதி உயர்திணைக்கு வராது அஃறிணையிலும் சிலசமயமே வரும் என தொல்காப்பிய நூற்பா கூறுகிறது3, பின் எங்கிருந்து வந்தது இம்மாற்றம். எப்போது அஃறிணை குறித்த விகுதி பலர்பால் குறிக்கும் தனி விகுதியாய் மாறிற்று.4

எனவே ஐம்பால் என்பதை ஆறாம் பாலாய் மாற்றியமைக்க வேண்டிய தேவை இங்கிருந்து துவங்குகிறது. ஆகவே மாற்றியமைக்க வேண்டிய பால் வகைகளை நாம் பின்வருமாறு தொகுக்கலாம்

1. ஆண்பால் (அவன் வந்தான்)

2, பெண்பால் (அவள் வந்தாள்)

3. ஒருமை உயர்வுப் பால் (அவர் வந்தார்)

4. பலர் பால் (அவர்கள் வந்தார்கள்)

5. ஒன்றன் பால் (அது வந்தது)

6. பலவின் பால் (அவை வந்தன/ அவைகள் வந்தன)

ஆயினும் இவற்றோடு நிற்க விடவில்லை நம் தற்போதைய பயன்பாடுகள். அத்தை அஃறிணையான இடத்தை மீண்டும் அடைந்தால் நமக்கு இன்னொரு பால் பகுப்பீடு தேவையாயிருக்கிறது என்கிறபோது நாம் மேற்சொன்ன வகைகளை மீள்பார்வை செய்தால் நமக்கான புது வரைவுகள் கீழ்கண்டவாறு அமையும்

1. ஆண்பால் (அவன் வந்தான்)

2, பெண்பால் (அவள் வந்தாள்)

3. உரிமைப்பால் (அப்பா சொல்லுச்சு/அத்தை வந்தது/அம்மா அழைத்தது/மாமா சாப்பிட்டது)

4. ஒருமை உயர்வுப் பால் (அவர் வந்தார்)

5. பலர் பால் (அவர்கள் வந்தார்கள்)

6. ஒன்றன் பால் (அது வந்தது)

7. பலவின் பால் (அவை வந்தன/ அவைகள் வந்தன)

உரிமைப்பால் என்ற வகையைப் புதிதாகச் சேர்க்க வேண்டிய தேவையை நாம் ஒரு காட்சியினூடாகச் சொன்னால் ஒரு குழந்தை பெரிதும் பழக்கமில்லாத ஒரு நபரைக் குறிப்பிடுகையில் ஆண்ட்டி வந்தாங்க என்பதற்கும் முழுவதும் நெருங்கிய ஒரு உறவினரை அத்தை வந்துச்சு என்பதற்குமான அடையாள இடைவெளுயில் இருந்து வேறுபடுத்தலாம். இவற்றையே எள்ளலின் விளைவாக மிகவும் கீழ்மைப்படுத்தும் நோக்கத்திலுருந்தும் அது வந்துச்சா என்பது போன்ற பயன்பாட்டிலும் நாம் உரிமைப் பொருள் கொடுக்கலாம்.

நீ பாடினாய் என்பதற்கும் நீவீர் பாடினீர் என்பதற்கும் நீங்கள் பாடினீர்கள் என்பதற்கும் இடையில் குறிப்பிடப்படும் நபர் ஒருவராய் இருக்கும் நிலையில் நாம் இந்த ‘மரியாதையை ‘ எவ்வாறு வகைப்படுத்த முடியும், இவற்றையே நாம், தாங்கள் பாடினீர்கள் என்ற வாக்கிய அமைப்பை நோக்கினால் நாம் சொல்ல விரும்பும் ‘மிக விழைந்த ஒருமை உயர்வுப் பால் ‘ என்பதாக வகைப்படுத்தலாம்.

அதே சமயம் அமைச்சரவர்கள் வந்தார்கள் என்பன போன்ற மிக அதிக உயர்வு நவிற்சி அனைத்துத் தனி நபருக்கும் சிற்சில சமயங்களில் நேரும் மிகச்சிறிய வாழ்வுச் சிக்கல்கள் என்பனவாக நாம் புரிந்து கொண்டால் இவற்றை தனியாக வகைப்படுத்த வேண்டிய தேவை இருக்காது. ‘ஏங்கங்க ‘ என்று இருமுறையாக மரியாதை அளிக்கும் என் அண்ணன் மனைவியின் சிலநேரத்திய கூற்றையும் இங்கே ஒப்பு நோக்குதல் தகும். மிக நேரங்களில் இவற்றையே பிழைப்பாகக் கொண்ட நபர்கள், தொகுதியாக மாறும் அவலம் நேருமாயின் மறுபடியுமான ஒரு மீள்பார்வை தேவைப்படலாம்.

இவற்றிக்கிடையேயான ‘குறிப்பாக ‘ நான் மிகவிழைந்து சொல்ல வேண்டியது ஒன்றிருக்கிறது. தொல்காப்பியம் முதற்கொண்டு நன்னூல் இடையாக இன்றைக்கான இலக்கண ஆசிரியர்கள்வரை (இருபாலும் குறித்த பொதுச்சொல்லாகவே பயன்படுத்துகிறேன்), இலக்கண வரையரையின்படியான உதாரணத்திற்காகச் சொல்லப்பட்ட அனைத்து சொற்றொடர்களின் பால் வகைபாடுகளிலும் ஆண்பால் முதலிலும் பெண்பால் அடுத்ததுமான இந்த வகைபாடுகள் தற்செயல் என்றால் என் தமிழின் நேர்மை சந்தேகத்திற்கு உரியது, தமிழ் மொழி துவக்கத்தில் இருந்தே பெண்ணுக்கான மொழியாகத் தன்னைப் பெரிதும் வெளுப்படுத்தியதில்லை.

எனவே இன்றைய தேவை தொல்காப்பியப் பதவுரை அன்று. இன்றைக்கான தமிழுக்கான புத்திலக்கணம் அதிலும் குறிப்பாக மாற்றிலக்கண நோக்கிலான வரையறைகள். சிந்திப்பார்களா நம் தமிழ் நம்பிகள். மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

நா. இரா. குழலினி

(kuzhalini@rediffmail.com)

மேற்கோள்கள்:

1. பெண் அஃறிணையா ?- கட்டுரை – முனைவர் மு.வ. – மொழியியற் கட்டுரைகள்

2. இருதிணைப் பிரிந்த ஐம்பால் கிளவிக்கும்

உரியவை உரிய பெயர்வயி னான – தொல்காப்பியம் (646) பெயரியல்

3. கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே

கொள்வழி உடைய பலஅறி சொற்கே – தொல்காப்பியம் (654) பெயரியல்

4. கள் பெற்ற பெரும் பேறு கட்டுரை முனைவர் மு.வ. மொழியியற் கட்டுரைகள் சென்னை 1956

Series Navigation

நா.இரா. குழலினி

நா.இரா. குழலினி