மெய்மையின் மயக்கம்-7

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெயமோகனின் பதில் [26-02-2004] குறித்து…)

சோதிப் பிரகாசம்

ஜெய மோகனின் குழப்பம்

கதைகளையும் கவிதைகளையும் நாம் படித்திட வில்லை என்றால் நமது அறிவு மழுங்கிப் போய் விடும் என்றும், அதே நேரத்தில், நம்மிடம் அறிவு வளர்ச்சி ஏற்பட்டு விட்டால் அறிவான எந்திரங்களாக நாம் மாறி விடுவோம் என்றும் ஓர் இரண்டும்-கெட்டான் எச்சரிக்கையினை நமக்கு விடுத்து இருக்கின்ற ஜெய மோகன், கூடவே கூறுகிறார்—-அம்மணமான மனிதர்கள் நாம் என்று; உணவு மட்டும் இருந்தால் நமக்குப் போதும்; உடை எதுவும் நமக்குத் தேவை இல்லை என்று!

அதே நேரத்தில், ஒரு மிருகமாக வாழ்ந்திடாமல், மனிதனாக மனிதன் வாழ்ந்திட வேண்டும் என்றால், தனது ‘வாழ்க்கையினை மனிதன் அறிந்து ஆக வேண்டும் ‘ என்று கூறி, அறிவுக்கு எதிரிகளாக நாம் மாறி விட்டது போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்கி விட்டு விடவும் அவர் முயல்கிறார்.

ஆக, இவர் குறிப்பிடுகின்ற அறிவு, கதை-கவிதைகள் தந்திடக் கூடிய அறிவு என்பது வெளிப்படை! அந்த அறிவு இல்லை என்றால்தான் வெறும் எந்திரங்களாக நாம் மாறி விடுவோம் என்பது நமக்கு அவர் அளிக்கின்ற முன்-எச்சரிக்கை!

எண்ணம் நல்லதுதான்; எச்சரிக்கையும் சரிதான்; மதிப்பிட முடியாத ஒரு ‘பயன் மதிப்பு ‘ இவற்றிற்கு உண்டு என்றால், அதுவும் இருந்து விட்டுப் போகட்டும்!

ஆனால், வாசகர்களுக்குத் தெரியாதவற்றை எல்லாம் எழுதி அவர்கள் இடையே ஒரு பெரியவாளாகத் தம்மைக் காட்டிக் கொண்டு விட வேண்டும் என்கின்ற ஆவேசத்தில், தமக்குத் தெரியாதவற்றை எல்லாம் எழுதிட இவர் முற்பட்டு விடுவது எந்த வகையில் ஞாயம் ?

எனினும், அறிவுத் தேடல் பற்றிய ஜெய மோகனின் கருத்துகளை முதலில் கொஞ்சம் நாம் பார்த்து விடுவோம்.

மேதாவிப் பட்டம்

மனிதனுக்கு அறிவே தேவை இல்லை என்று யாராவது கூறி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா ? என்றால், நிச்சயமாக இல்லை!

‘கல்வியே தேவை இல்லை ‘ என்று ஜெய மோகனிடம் கூறி இருக்கக் கூடிய வணிகர்கள் கூட, அறிவு தேவை இல்லை என்று கூறி இருப்பதற்கு அணுவளவும் வாய்ப்பு இல்லை.

ஒரு வேளை, அவர்களிடம் ஜெய மோகன் கூறி இருக்கக் கூடிய கதை-கவிதைத் தனமான ஒரு கல்வி தேவை இல்லை என்றோ அல்லது தங்கள் தொழிலுக்கும் வாழ்க்கைக்கும் பயன் பட முடியாத ஒரு மேதாவித் தனமான கல்வி தேவை இல்லை என்றோ அவர்கள் கூறி இருந்து இருக்கலாம்; அதனைப் புரிந்து கொள்ளுகின்ற ஆற்றல் ஜெய மோகனுக்கு இல்லாமலும் இருந்து இருக்கலாம்.

மாறாக, மற்றவர்களுக்கு முட்டாள் பட்டத்தைக் கட்டி விடுவதன் மூலம், தமக்கு மேதாவிப் பட்டத்தைச் சூட்டிக் கொண்டு விட முடியும் என்று இவர் கருதுவது அறிவாண்மை நாணயம் ஆகுமா ?

இந்த அறிவாண்மை நாணயத்தை அடகு வைத்து விட்டு, அதற்குப் பதிலாக இவர் ஈட்டிக் கொள்வது ஒரு பெரியவாள் பட்டமாகவே இருந்து விட்ட போதிலும், அதனால் மற்றவர்களுக்கு என்ன பயன் ? இவருக்குதான் என்ன பயன் ? எத்தனை நாள்தான் அதன் நிலைப்பும் நீடிப்பும் ?

சரி, அது போகட்டும்! அறிவுத் தேடல் பற்றிய ஜெய மோகனின் சித்திரத்தைச் சிறிது நாம் காண்போம்.

அறிவுத் தேடல்

அறிவுத் தேடல் பற்றிய ஜெய மோகனின் வருணனை பின் வருமாறு:

‘வாழ்தல் என்றால் உயிர் வாழ்தல் என்று ஒருவர் புரிந்து வைத்திருக்கிறார் என்றால் அவருக்கு இவ்வுலகின் எத்தனையோ விஷயங்கள் தேவையில்லை. ‘

‘மிருகத்துக்கும் மனிதனுக்கும் இடையேயான முக்கிய வேறுபாடே இதுதான். மிருகம் வெறுமே உயிர் வாழ்கிறது. மனிதனின் வாழ்க்கை தொடர்ச்சியான ஓர் அறிதலாகும்; ஒவ்வொரு கணமும் அவன் எதையாவது கண்டடைந்தபடியே இருக்கிறான். அப்படி அறிவதை மேலும் தீவிரமாக ஆக்க, மேலும் நுட்பமாக ஆக்க அவன் முயல்கிறான். பிறரது அறிதல்களை தன் அறிதல்களுடன் சேர்த்துக் கொள்கிறான். ‘

‘இவ்வாறுதான் மனிதனின் முடிவற்ற அறிவுத் தேடல் உருவாயிற்று. இன்று மனித நாகரீகம் என்று சொல்லும் அறிவியல், தத்துவம், மதம், சமூக அமைப்பு எல்லாமே இப்படி உருவானதே. ஒருவர் தனக்கு ‘சுய அறிவு ‘ உள்ளதாக சொல்கிறார் என்றால் அந்த அறிவு அவருக்கு சூழலில் இருந்து அவரையறியாமல் இயல்பாக கிடைத்த ஒன்று என்றே பொருள். ‘

‘ஆக அறிவை, அதன் இடைவிடாத தேடலை, முன்னகர்வை, குறைந்த அளவேனும் சிந்திக்கும் பழக்கம் கொண்ட ஒருவர் மறுக்க மாட்டார். ‘

‘அப்படியானால் சுரேஷ் அவர்களின் நண்பர் மறுப்பது இலக்கியம் என்ற துறையை மட்டுமே. ‘

ஜெய மோகனின் கருத்துகள் இவை!

50 ஆண்டுகளுக்கு முன்னர் கத்தோலிக்கக் கோவில்களில் குருவானவர்கள் எலத்தின் மொழியில் மந்திரங்களைச் சொல்வார்கள். தமிழ் நாட்டுத் திரு மணச் சடங்குகளில் இன்றும் கூட சம்ஸ்க்ருதத்தில்தான் மந்திரங்கள் ஓதப் பட்டு வருகின்றன. புரிந்து கொள்ள முடியாத கடவுளுக்குப் புரியாத மொழிகளில் வழிபாடுகளை நடத்துவதில் பக்தர்களுக்கு ஒரு போதை மயக்கம் ஏற்படாமல் இருப்பது இல்லை போலும்!

புரியாத புதிர்

‘தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் ‘ என்றும் ‘தெரியாமல் போனாலே வேதாந்தம் ‘ என்றும் பாடுகின்ற கண்ண தாசன், ‘என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் ‘ என்று தமது பாடலைத் தொடர்வார்.

ஒரு முறை கேட்டோர் எல்லாம் மறு முறையும் கேட்டிட வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டிடக் கூடிய ஒரு பாடலாகத் தமிழில் திகழ்ந்து கொண்டு வந்து இருந்த ஒரு பாடல் இது—-இதன் இசைக்காக மட்டும் அல்ல; கருத்திற்காகவும் கூட!

ஆனால், இந்தப் பாடலின் கருத்தினைப் புரிந்து கொண்டது அல்ல இந்தப் பாடலை எல்லோரும் விரும்பியதற்குக் காரணம்; மாறாக, புரிந்து கொள்ள முயலாத அல்லது விரும்பாத ஒரு வாழ்க்கையினை—-புரிந்தும் புரியாமல் மனிதர்கள் வாழ்ந்து கொண்டு வருகின்ற ஒரு வாழ்க்கையினை—-அதற்கே உரிய ‘மாய்மை ‘யுடன் ‘விளக்கிடற்கு ‘ இந்தப் பாடல் முயல்கிறது என்பதுதான் அதற்குக் காரணம்!

‘வேதாந்தம் ‘ என்னும் கருத்தமைவின் (கான்செப்ட்) மூலம் உப நிஷதங்களை இந்தப் பாடல் குறிப்பிட வில்லை; உள்முகமான சிந்தனைகள் (ஸ்பெகுலேற்றிவ் திங்கிங்க்) அத்தனையையும் குறிப்பிடுகிறது. ‘சித்தாந்தம் ‘ என்னும் கருத்தமைவின் மூலம் சித்தர் சிந்தனைகளை இது குறிப்பிடுகிறதா அல்லது காரண அறிவினைக் குறிப்பிடுகிறதா ? என்பது மிகப் பெரியது ஒரு கேள்விக் குறி. இனி, ‘ஞானம் ‘ என்றால் என்ன என்பது இன்னும் பெரிய கேள்விக் குறி!

ஏனென்றால், அறிவு என்பதற்கும் ஞானம் என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன ? ஞானம் என்பதும் அறிவுதான் என்றால், எந்த வகையான அறிவு அது ? அதன் ஆழ-அகலங்கள் என்ன ? என்னும் கேள்விகள் எழுந்து விடுகின்றன. ஞானம் கைவரப் பெற்ற தவசிகளோ, குண்டலினி போன்ற மாய்மையான ஆற்றல்களின் உறைவிடங்களாகவும் கருதப் பட்டு வந்து இருக்கிறார்கள்.

ஜெய மோகனின் ‘விஷ்ணு புரம் ‘ கதையின் தொடக்கத்தில் நமக்கு அவர் அறிமுகப் படுத்தி வைக்கின்ற இருவரில் ஒருவர், பூமியின் குண்டலினி மையத்தைத் தேடி செம் மணல் பரப்பில் அமிழ்ந்து சென்று விடுகின்ற ஒரு ஞானிதானே!

எப்படியும்—-கண்ண தாசனின் பாடல் பிடித்துப் போயிற்று எல்லோருக்கும்!

அவ் அளவு ஏன், ‘வன்முறை இல்லாமல் வறுமையை ஒழிப்போம் ‘ என்ற கருணா நிதியாரின் வரியினை அவரது தம்பிகள் அனைவரும் புரிந்து கொண்டு விட வில்லையா—-இருக்கின்ற ஆட்சியினை ஒழிப்போம்; அடுத்த ஆட்சியினை அமைப்போம் என்று ? நிற்க, வன்முறைக்கும் வறுமைக்கும் இடையே அப்படி என்னதான் ஓர் உறவு ?

இப்படித்தான், ஜெய மோகனின் தெளிவான கருத்துகளும் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றன!

எத்தனையோ விசயங்கள்

‘வாழ்தல் ‘ என்றால் வெறுமனே ‘பிழைத்து இருத்தல் ‘ என்றுதான் நாம் புரிந்து வைத்துக் கொண்டு இருக்கிறோமாம்; ஆனால், வெறும் பிழைப்பிற்கு அப்பால் ‘எத்தனையோ விசயங்கள் ‘ வாழ்க்கையில் உள்ளனவாம்!

சரி, ஏற்றுக் கொள்கிறோம்!

ஆனால், வாழ்க்கையைப் பற்றி விளக்கிக் கூறுவதற்கு முன் வந்து இருக்கின்ற ஜெய மோகனுக்கு, ‘எத்தனையோ விசயங்கள் ‘ என்பதற்கு அப்பால், வேறு விளக்கங்கள் எவற்றையும் வாழ்க்கைக்கு வழங்கிட முடிய வில்லையே, ஏன் ? ‘எத்தனையோ விசயங்கள் ‘ என்பதனை எத்தனை விசயங்களாக—-எத் தகு விசயங்களாக—-நாம் புரிந்து கொள்வது ?

‘இடை வெளிகளை நிரப்புக ‘ என்று வினாத் தாள்களை இவர் வழங்க, அந்த இடை வெளிகளை நமது ‘கற்பனை ‘யால் அல்லது கற்பனைகளால் நாம் நிரப்பிக் கொள்ள வேண்டும் என்று இவர் எதிர் பார்க்கிறாரா ? இவரிடம் இருந்து எதையாவது கற்றுக் கொள்ளலாம் என்று இவரை நாம் நாடினால், இவரோ விடைகளை நாம்தாம் தேடிக் கொள்ள வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துவதற்கு அல்லவா, முன் வந்து இருக்கிறார்!

‘எத்தனையோ விசயங்களில் ‘ ‘ஒரு விசயத்தை ‘யாவது நமக்குச் சுட்டிக் காட்டி, தமது ‘தேடலின் ‘ தன்மையினை நமக்கு இவர் வெளிப் படுத்தி இருந்தால், எல்லை இல்லாத ஒரு கானல் நீர்ப் பரப்பில், யாரும் விளக்கிட முடியாத ஒரு வாழ்க்கையைத் தேடித் தேடி அலுத்துப் போய், ‘எங்கும் தேடினேன்; என்னைக் காண வில்லை ‘ என்று கவிதை பாடி, நாமும் ஒரு ‘படைப்பாளி ‘ ஆகி இருக்கலாமே!

ஆனால், வாழ்க்கையைத் தேடித் தேடி அலுத்துப் போய் ஒரு கவிதையைப் பாடி விடுகின்ற காலம் வரையிலாவது நாம் பிழைத்து இருந்திட வேண்டுமே! ‘பிழைத்து இருத்தல் ‘ மட்டும் இல்லை என்றால், ஜெய மோகன் கூறுகின்ற ‘எத்தனையோ விசயங்கள் ‘ நமக்கு எதற்கு ?

எனவே, பிழைப்பையும் பிற ‘விசயங்களை ‘யும் யாரும் எதிர்ப் படுத்திட முடியாது என்பது தெளிவு. எத்தனையோ விசயங்களில் எந்த விசயத்தையும் ஜெய மோகன் குறிப்பிட்டு விட வில்லை என்ற போதிலும், வயிற்றுப் பிழைப்பும் பிறவும் நிரவலானவையே (காம்ப்லிமென்டரி) அன்றி, எதிரும் பகைமையும் ஆனவை அல்ல.

ஏசு எவ் வளவோ மேல், அப்பத்தினால் மட்டும் மனிதன் உயிர் வாழ்வது இல்லை என்று கூறி மனிதனின் விடுதலையினை அவர் வலியுறுத்தினாராம்! ஆனால், பின் தொடரும் ‘நிழலின் குரலில் ‘ வருகின்ற ராம சாமியோ, ‘பல கோடி விதிகளால் ஆனது வாழ்க்கை ‘ என்று கூறி நமது வாழ்க்கையை மாய்மைப் படுத்தி விடுகிறார்.

ஆனால், வாழ்க்கை ஒன்றும் அத்தனை மாய்மை ஆனது அல்ல.

லெனின் கூறுவார்—-உற்பத்தியையும் பகிர்வையும் பற்றிய ஆய்வு அல்ல அரசியல் பொருளாதாரம்; மாறாக, உற்பத்தியில் மனிதர்கள் கொள்ளுகின்ற ‘உறவு ‘ பற்றிய ஆய்வு என்று!

இது போல, உயிர் வாழ்க்கைக்கு உற்பத்தி ‘உறவு ‘; காதல் வாழ்க்கைக்குக் குடும்ப ‘உறவு ‘ என்னும் அடிப்படையில் அமைக்கப் பட்டு இருப்பதுதான் மனித வாழ்க்கை! இந்த ‘உறவு ‘களின் இயக்கம்தான் விதி; இந்த ‘விதி ‘யின் வெளிப்பாடுதான் சட்டம்; அதன் காவலன்தான்—-உருவப்பாடுதான்—-அரசு; இவற்றை எல்லாம் சுற்றிச் சுழல்வனதாம் விரல் விட்டு நாம் எண்ணிடக் கூடிய பிற உறவுகள்!

இவை மட்டுமா ?

மனித விடுதலை என்பதும் அடிமைப்பாடு என்பதும்—-மனித மாண்பு என்பதும் உரிமைகள் என்பதும்—-மகிழ்ச்சி என்பதும் துயரம் என்பதும்—-விருப்பு என்பதும் வெறுப்பு என்பதும்—-முதலிய பிற அனைத்தும் இந்த உறவுகளைக் குணவரைப் படுத்துகின்ற பான்மைகள்தாம் ஆகும்.

இந்த உறவுகளின் சிக்கல்களில் இருந்துதான் மதங்களும் கதை-கவிதைகளும் கூட எழுகின்றன.

ஆக, ஜெய மோகன் இயம்புகின்ற ‘எத்தனையோ விசயங்கள் ‘ அனைத்தும் பொன்றாதவையோ (இன்ஃபினிட்), நிலைவானவையோ (எற்றெர்னல்) அல்ல என்பதில் ஐயம் இல்லை.

இனி, ஜெய மோகன் சுட்டிக் காட்டுகின்ற மிருகங்களுக்கு நாம் வருவோம்.

27-06-2004

(தொடரும்)

Series Navigation