மெய்மையின் மயக்கம்-15

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)

பிழை பட முடியாத ஞானம்

கோவை ஞானியின் ‘மார்க்சிய அழகியலை ‘ மீண்டும் ஒரு முறை நாம் நோக்குவோம்; அதில் செயல் பட்டு இருக்கின்ற ஞானியிசப் பான்மையினைச் சற்றுக் கவனமாக நாம் நோட்டமும் இடுவோம்.

மிகவும் எச்சரிக்கையாக எழுதப் பட்டு இருக்கின்ற ஒரு நூல் இது என்பது முதல் பார்வையிலேயே நமக்குத் தெரிந்து விடுகிறது. என்ன எச்சரிக்கை தெரியுமா ? எந்தப் பிழையும் அதில் நேர்ந்து விடக் கூடாது என்கின்ற முன் எச்சரிக்கை!

எதிலும் எச்சரிக்கையாக இருப்பதில் தவறு என்ன ? குறை சொல்வதற்காகவே நூல்களைப் படிக்கின்ற குறை-சொல்லிகளாக நாம் மாறி விடாத ஓர் எச்சரிக்கை மிகவும் அதிகமாக நமக்குத் தேவை என்று எண்ணுவதற்கு இங்கே நமக்குத் தோன்றிடலாம் என்ற போதிலும், விசயம் அது வல்ல!

தமது மடமைகளை மற்றவர்களின் மண்டைகளில் திணித்து விடக் கூடாது என்கின்ற ஒர் எச்சரிக்கை ஒவ்வோர் எழுத்தாளனுக்கும் தேவைதான்! அதற்காக, சொல்ல வந்த விசயத்தையே சொல்லாமல் விட்டு விடுவது என்ன ஞாயம் ? பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் கவிதைகளை வேண்டும் என்றால் யாரும் எழுதிக் கொண்டு வரலாம். ஆனால், மார்க்சியம் பற்றியும் அழகியல் பற்றியும் ஆய்வுகளை யாரும் எழுதி விட முடியுமா ?

தனித் தமிழ் அறிஞர்கள் இருக்கிறார்களே, சம்ஸ்க்ருதம் என்று தாங்கள் கருதுகின்ற சொற்களைத் தவிர்ப்பதற்காக அந்தச் சொல்லின் கருத்தினையே அவர்கள் புறக் கணித்து விடுவார்கள்; ‘விசயம் ‘ என்பது சம்ஸ்க்ருதம் என்று தாங்களாகக் கற்பனை செய்து கொண்டு, ‘முக்கியமான விசயம் ‘ என்பதை ‘முக்கியமான ஒன்று ‘ என்று எழுதி விசயத்தைக் கோட்டை விட்டும் விடுவார்கள்!

மொழி என்பது முக்கியம் ஆனதுதான்; ஆனால், கருத்து என்பது அதை விட முக்கியம் ஆனது இல்லையா ?

உணர்வும் (ஃபீலிங்க்) உணர்மையும் (கான்ஷஸ்னெஸ்) ஒன்று அல்ல என்ற போதிலும், உணர்வு என்னும் சொல்லைக் கொண்டே உணர்மையையும் இவர்கள் சுட்டி விடுவார்கள். இதில் பலி கொள்ளப் பட்டுக் கிடப்பதோ உணர்மை என்னும் கருத்தமைவு!

இப்படி, எதனைச் சொன்னாலும் அதனைச் சரியாகத்தான் சொல்லிட வேண்டும் என்கின்ற கோவை ஞானியின் எச்சரிக்கை உணர்மையினால் இவரது நூல் முழுவதும் பலி கொடுக்கப் பட்டு இருப்பனவோ மார்க்சியமும் அழகியலும்தாம்!

மார்க்சிய அழகியலைப் பற்றி நூல் எழுதுவதற்கு முன் வந்து விட்டு, தமது எல்லா எழுத்துகளிலும் ‘இழைந்து ‘ ஓடிக் கொண்டு இருப்பது மார்க்சியமும் அழகியலும்தாம் என்று எழுதி ஓய்ந்து விட இவர் முற்படுவது என்ன வகையான நாணயம் ? இவருக்குத் தெரிந்ததை மட்டும் இவர் எழுதிக் கொண்டு வந்தால் போதாதா ?

ஆனால், இவருக்கு அது போதாது! ஏனென்றால், சிக்கலான விசயங்களிலும் தெளிவு ஊட்டிடக் கூடிய ஒரு பேரறிவாளர் என்றும் எல்லோரும் இன்புற்று இருந்திட வேண்டும் என்று கருதுகின்ற ஒரு பெருந் தன்மையாளர் என்றும், பெயர் எடுத்திட இவர் விரும்புகிறார்; நிலைவான (எற்றெர்னல்) உண்மையின் உறைவிடமாகத் திகழ்ந்திடவும் இவர் ஆசைப் படுகிறார்.

அதே நேரத்தில், நமது வாழ்க்கையில் கதை-கவிதைகள் ஆற்றிக் கொண்டு வருகின்ற பங்கு என்ன ? என்னும் கேள்வியில் அடங்கிக் கிடக்கின்ற சிக்கல்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாத மூளைச் சோம்பலில் சிக்கிக் கொண்டு இவர் தவிக்கவும் செய்கிறார்.

எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நூலை எழுதுவதற்குத் தேவையான அத்தனைத் தகுதிகளும் இவரிடம் நிரம்பி வழிந்து கொண்டு இருக்கலாம். அதற்காக, நமக்குத் தெரிந்ததையே மீண்டும் மீண்டும் இவர் எழுதிக் கொண்டு வர, அதனை மீண்டும் மீண்டும் நாமும் படித்துக் கொண்டு வந்திட வேண்டும் என்று இவர் எதிர் பர்ப்பது என்ன வகையான ஞானம் ? அதுதான் பிழைபட முடியாத ஞானம் போலும்!

ஆனால், ஒரே வகுப்பில் பல ஆண்டுகள் இருந்து படித்துக் கொண்டு வருவது ஒன்றும் ஆர்வம் ஊட்டுகின்ற செயல் அல்ல!

சரியும் தவறும்

சரியாகத் தெரிந்து கொள்ளாமல் எதையும் எழுதுவதற்கு யாரும் முற்பட்டு விடக் கூடாது என்னும் எச்சரிக்கை நமக்குத் தேவை என்பதை நாம் மறுப்பதற்கு இல்லை. அதற்காக, சரியானதைத்தான் நான் எழுதுவேன் என்று நம்மில் யாராவது அடம் பிடிப்போம் என்றால், எதையாவது நாம் எழுதி விட முடியுமா ? நாம் என்ன, அறிவுப் பெட்டகங்களா ? நிலைவான உண்மையின் உறைவிடங்களா ? மனித இனத்தின் முக் காலங்களையும் நமது இக் கால மண்டைக்குள் அடைத்து விடுவதற்குதான் நம்மால் முடியுமா ?

சரி என்று தெரிகின்ற நமது கருத்துகளை எதிர் காலம் ஏற்றுக் கொள்ளாமல் போகாது; தவறு என்று தெரிகின்ற நமது கருத்துகளைக் கடுமையாக விள்ளனித்து (விமர்சித்து) வீழ்த்தாமலும் அது விட்டு விடாது! இப்படித்தான் அறிவு வளர்ச்சி என்பது சமுதாயத்தில் ஏற்பட்டுக் கொண்டு வந்திட முடியும் என்கின்ற பொழுது, சரியானதைத்தான் நான் எழுதுவேன் என்றோ அல்லது எதை நான் எழுதினாலும் சரியாகத்தான் அது இருந்திட முடியும் என்றோ நாம் கருதிக் கொள்வதில் என்ன நாணயம் இருந்திட முடியும் ?

சரி என்று நாம் கருதுகின்ற நமது கருத்துகளின் தவறுகளை இன்னொருவர் வந்து நமக்குச் சுட்டிக் காட்டுகிறார்; புதிய விளக்கங்களின் மூலம் தமது கருத்துகளை நிலை நிறுத்தவும் செய்கிறார்! அரை-குறையான நமது சிந்தனைகளை இன்னொருவர் வந்து நிறைவு செய்கிறார்; நிறைவு செய்த சிந்தனைகளைக் கடந்து புதிய சிந்தனைகளுக்கும் அவர் தாவுகிறார்!

வரலாற்றில் இப்படித்தான் புதிய சிந்தனைகள் தோன்றிக் கொண்டு வந்து இருக்கின்றன; தோன்றிக் கொண்டு வந்திடவும் முடியும்; என்கின்ற பொழுது, ஏற்கனவே வளர்ந்து கொண்டு வந்து இருக்கின்ற புதிய சிந்தனைகளைப் புறம் தள்ளி விட்டு, வள்ளுவர் கூறினார்; இளங்கோ கூறினார்; என்று இன்றைய நிலவரங்களுக்குள் பழைய சிந்தனைகளைத் திணித்திட முயல்வது ஒரு வகையான அறிவாண்மைக் கயமை ஆகி விடாதா ?

இன்றைய நிலவரங்களைப் புரிந்து கொள்கின்ற முயற்சிகளை நாணயத்துடன் நாம் மேற் கொண்டு வருகிறோமா ? என்பதுதான் இன்றைக்கு நம் முன் உள்ள கேள்வியே ஒழிய, முக் காலத்துக் கேள்விகளுக்கும் நம்மிடம் விடைகள் உள்ளனவா, இல்லையா ? என்பது அல்ல!

ஜெய மோகனும் கோவை ஞானியும்

கதை-கவிதைகளின் பயன்பாடு பற்றிய சிக்கல்களை நமக்கு ஜெய மோகன் அடையாளம் காட்டுகிறார்; தமது மடலில் அவற்றை எழுப்புகிறார்; எதிர்க் கருத்துகளைக் கிளர்த்தி விடுகிறார்; ஒரு விவாதத்தினையே தொடங்கியும் வைக்கிறார்! வாசிப்பவர்கள் யாராக இருந்தாலும், தங்கள் சொந்தக் கருத்துகளை வடிவாக்கிடக் கூடிய வாய்ப்புகள் இவ் விவாதத்தின் மூலம் அவர்களுக்குக் கிடைக்கின்றன. ஆனால், கோவை ஞானியின் நூலிலோ வீழ்த்துவதைத் தவிர விவாதிப்பதற்கு என்று வேறு எதுவும் இல்லை.

திரவிடர் வரலாற்று ஆய்வுகளில் ஈடுபடுவதற்கு எல்லோரும் முன் வந்திட வேண்டும் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார் பி. :டி. சீனிவாசனார்! எதிர்க் கருத்துகளுக்காக எப் பொழுதும் ஒரு கதவை நாம் திறந்தே வைத்து இருக்க வேண்டும் என்று கருத்துக் கூறினார் மாக்ஸ் முல்லர்! இவர்களது தவறான கருத்துகளை நாம் சாடுகின்ற பொழுதில் கூட, இவர்களின் இந்தப் பான்மைக்கு நாம் மதிப்பு அளிக்கிறோம்; இவர்களிடம் இருந்து ஏராளமாகக் கற்றும் கொள்கிறோம்.

ஆனால், கோவை ஞானியிடம் இருந்தோ நாம் கற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை.

ஏனென்றால், நிலைவான உண்மை எதுவும் நமக்குத் தேவை இல்லை; வரலாற்றின் நிகழ்ப்பாட்டில் அப்படி எதுவும் இருந்திடவும் முடியாது!

இங்கே, நிலைவான உண்மைகளின் உறைவு இடங்களான அடிப்படை வாதங்கள்தாம் நமது நினைவுக்கு வருகின்றன.

அடிப்படை வாதங்கள்

எந்தெந்த மதங்களின் அடிப்படை வாதிகள், எங்கெங்கே, எப்படி எப்படி மோதிக் கொள்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், இந்திய ஒன்றியத்திலோ இந்து அடிப்படை வாதிகளும் இஸ்லாம் அடிப்படை வாதிகளும் அவ்வப்போது மோதிக் கொண்டு வருகிறார்கள்; அல்லது தாங்கள் மோதிக் கொள்கின்ற பொழுதுகளில் எல்லாம் தங்கள் மதங்களின் அடிப்படை வாதங்களை அவிழ்த்து விட்டுக் கொண்டு வருகிறார்கள்!

இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையே உள்ள ஒற்றுமைதான் இதற்குக் காரணம் என்பதுதான் இதில் வேடிக்கை!

ஹிந்துத்வம் என்பது ஒரு வாழ்க்கை முறையாம்—-ஹிந்துத்வ வாதிகள் கூறுகிறார்கள்!

இஸ்லாம் என்பதும் ஒரு வாழ்க்கை முறைதானாம்—-இஸ்லாத்வ வாதிகள் கூறுகிறார்கள்!

இஸ்லாத்வ வாதிகளுக்கும் ஹிந்துத்வ வாதிகளுக்கும் இடையேதான் எவ்வளவு பெரிய ஒற்றுமை! இது மட்டுமா ?

ஹிந்துத்வம் என்பது என்றும் மாறாததாம்; இஸ்லாம் என்பதும் என்றும் மாறாததுதானாம்!

இவ்வளவு நெருக்கமான ஒற்றுமைகள் இவர்கள் இடையே இருந்து கொண்டு வருகின்ற போதிலும், தங்களுக்குள் இவர்கள் அடித்துக் கொள்கிறார்கள்; கொலை வெறி பிடித்துப் போய் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்கிறார்கள்; கொன்று குவித்துக் கொண்டும் வருகிறார்கள்.

ஏனென்றால், இரு வேறு நிலைவான உண்மைகளைத் தங்கள் மண்டைகளில் சுமந்து கொண்டு இவர்கள் வருகிறார்கள். ஆனால், உலக மயம் ஆகிக் கொண்டு வருகின்ற இன்றைய சந்தை நிலவரங்களோ, இவற்றுள் ஒன்றே ஒன்று மட்டும்தான் நிலை நின்றிட முடியும் என்னும் ஒரு மூட நம்பிக்கையினைப் பின் தங்கிய நாடுகளில் இவர்கள் இடையே உருவாக்கி விட்டு இருக்கிறது.

அதாவது, ஒதுங்கிக் கிடக்கின்ற உலகின் மூலை-முடுக்குகளில், தனித் தனியாகத் தங்களை நிலை நிறுத்திக் கொண்டு, தாங்கள் நடத்திக் கொண்டு வந்து இருக்கின்ற தங்கள் தனிக் காட்டு ஆட்சியினை, தனித் தனியாக இனியும் இந்த நிலைவான உண்மைகள் தொடர்ந்திட முடியாத வகையில்—-நெருக்கமாக உலகம் சுருங்கிக் கொண்டு வருகின்ற ஒரு சூழ் நிலையில்—-பல் வேறு நிலைவான உண்மைகளுக்கு இடம் இல்லை என்று இவர்கள் நம்புகிறார்கள்.

இதனால்தான், முழு முதலான ஒரே ஒரு நிலைவான உண்மையாகத் தங்களுக்குத் தெரிந்த ஒரே உண்மையை மட்டும் நிலை நிறுத்தி விட வேண்டும் என்கின்ற துடிப்பில்—- மற்றவர்களுக்கும் தெரிந்து இருக்கக் கூடிய பலவான உண்மைகளை அழித்து விடுகின்ற ஆவேசத்தில்—-கொலை வெறியர்களாக மாறிக் கொண்டு இவர்கள் வருகிறார்கள்.

ஆனால், இந்த நிலைவான உண்மைகளோ சிற்றுடைமைக் காரர்களின் உண்மைகள்; முதலாண்மையின் வளர்ச்சியில் சிற்றுடைமைகள் அழிந்து கொண்டு வருவதைத் தடுத்து நிறுத்தி விடுகின்ற ஒரு கற்பனையில், சிற்றுடைமைக் காரர்களின் சிந்தையிலே வடிவமைக்கப் பட்டு இருக்கின்ற உண்மைகள்!

ஏனென்றால், நிலைவான உண்மையாக இல்லை என்ற போதிலும், முதலாண்மை உலகின் ஒரே உண்மையாக நிலவிக் கொண்டு வருவது ‘முதலின் ‘ இயக்கம் மட்டும்தான் ஆகும்! இந்த இயக்கத்தில்—-முதலாண்மையின் வளர்ச்சியில்—- அழிந்து கொண்டு வருகின்ற உண்மைகள்தாம் இந்த நிலைவான உண்மைகள் என்பதனை உள்ளுணர்வாகவேனும் இவர்கள் அறிந்து கொண்டு இருக்கிறார்கள்; அழிவின் விளிம்பில் நின்று கொண்டு அனைத்தையும் அழித்து விடுவதற்கு முயன்று கொண்டும் வருகிறார்கள்.

இதனால், இழிவு படுத்தப் பட்டு வருவதோ கடவுள் நம்பிக்கை; பங்கப் படுத்தப் பட்டு வருவதோ மனித நேயம்!

உலகச் சந்தையின் போட்டிகளைப் போல, மக்களின் நம்பிக்கைத் தளங்களில் தங்கள் மதப் போட்டிகளை இவர்கள் நடத்திக் கொள்ளலாமே! தத்தம் நம்பிக்கைகளை

மக்களின் மனச் சந்தைகளில் விளம்பரம் செய்து, வெற்றிகரமாக அவற்றை இவர்கள் விற்றுக் கொண்டும் வந்திடலாமே!

இதனை விட்டு விட்டு, ஆயுதங்களைக் கையில் ஏந்திக் கொண்டும் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக் கொண்டும் இவர்கள் வருவது, இவர்களது நம்பிக்கைகளின் தரத்தில் இவர்கள் வைத்துக் கொண்டு இருக்கின்ற நம்பிக்கையினையே ஒரு கேள்விக் குறியாக்கி விடுகிறது! தங்கள் நம்பிக்கைகளின் வலிமையினை விட, தங்கள் ஆயுதங்களின் வலிமையில்தான் அதிகமாக இவர்கள் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் போலும்!

ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் உறைந்து இருக்கின்ற இறைமையினை—-பரம்

பொருளினை—-தேடி அடைவதற்கு முயன்றிடாமல், மனிதர்களுக்கு அப்பால் வேறு எங்கோ உறைந்து கொண்டு வருவதாகப் பன்மையில் இறைமையைக் கற்பனை செய்து கொண்டு, அந்தப் பன்மையின் வேறுபாடுகளைக் களைவதற்காகத் தங்களுக்குள் பகை கொண்டு நிற்கின்ற இந்த மனிதர்களோ, ஆதி சங்கரரின் பார்வையில் பரிதாபத்திற்கு உரியவர்கள்!

நமது ஸ்தாலினிசச் சிந்தனையாளர்களை நாம் எடுத்துக் கொள்வோம். அயல் நாடுகளின் தொழில் நுட்பங்களை வரவேற்கின்ற இவர்கள், அயல் நாடுகளின் முதலீடுகளை மட்டும் எதிர்த்துக் கொண்டு வந்திட வில்லையா ? ஆனால், அயல் நாட்டு முதலீடுகள் இல்லாமல் அயல் நாட்டுத் தொழில் நுட்பங்கள் இந்தியாவிற்குள் எப்படி நுழைந்திட முடியும் ?

உலகச் சந்தையின் போட்டிகளை எதிர் கொள்ளக் கூடிய வலிமையில்தான் தேசங்களின் வலிமை அடங்கிக் கிடந்திட முடியுமே ஒழிய, அணு குண்டுகளின் வலிமையில் அல்ல!

ஆனால், இவர்களுக்கோ ‘அரசு முதலாண்மை ‘தான் நிலைவான உண்மை! எனவேதான், தனியார் முதலாண்மையின் வளர்ச்சியினைத் தடுத்து நிறுத்தி விடுகின்ற முயற்சிகளில் மும்முரமாக இவர்கள் ஈடுபட்டுக் கொண்டு வருகிறார்கள்; இதன் மூலம், பொதுமைச் சமுதாயம் கருத் தரித்திடக் கூடிய ஒரே கருப் பையினை அகற்றி எடுத்து விடவும் முயன்று கொண்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில், இத் தகு சிற்றுடைமைத் தனமான முயற்சியில், முதலாண்மையின் புரட்சிகரமான வளர்ச்சிகளை—-தனி மனித மாண்பு, விடுதலை, தனிப்பு உரிமை, நம்பிக்கை உரிமை, தேர்வு (ச்சாய்ஸ்) உரிமை, ஆகியவற்றின் எழுச்சிகளை—-தடுத்து நிறுத்துவதற்கும் இவர்கள் முயன்று கொண்டு வருகிறார்கள்.

எப்படியும், முதலாண்மையின் பரவலான வளர்ச்சியில், சிற்றுடைமைச் சமுதாயங்களுக்கே உரிய சிந்தனைகளின்—-கனவுகளின்—-நம்பிக்கைகளின்—-விளைவுகளான ஹிந்துத்வம், இஸ்லாத்வம், முதலான அனைத்து அடிப்படை வாதங்களும், ஸ்தாலினிசத்திற்கே உரிய அரசு முதலாண்மை வாதங்களும், அழிந்து போவது மட்டும் உறுதி.

ஆனால், இந்த முதலாண்மையின் வயிற்றில் மட்டுமாகத்தான் கருக் கொண்டு வளர்ந்திடக் கூடிய பொதுமைச் சமுதாயத்தின் மலர்ச்சிதான் நமக்கு முக்கியம். ஆனால், ஆதியிலே வார்த்தையாக அது இருந்தது என்று எதையோ விவிலியம் கூறுவதைப் போல, ஆதிக் காலத்துக் கரட்டுச் சமுதாயத்திற்குள் நம்மை அழைத்துக் கொண்டு சென்று விடுவதற்குக் கோவை ஞானியோ முற்பட்டுக் கொண்டு வருகிறார்.

எனினும், கோவை ஞானியின் ஆதிப் பொதுமைச் சமுதாயத்திற்குள் நுழைவதற்கு முன்னர், அவரது பெருந்தன்மையினைச் சற்றே வியந்து நாம் பார்த்து விடுவோம்.

01-08-2004

தொடரும்

Series Navigation

author

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்

Similar Posts