மூக்கு

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

அப்துல் கையூம்


‘ட்ரிங்’.. ‘ட்ரிங்’.. டெலிபோன் மணி அதிர்ந்தது. ரிசீவரை காதில் வைத்தேன்

“ஹலோ யார் பேசறது?” – உரக்க கத்தினேன்

“நான்தான் உன் மூக்கு பேசுகிறேன்”

மூக்காவது பேசுவதாவது. எனக்கு யாராவது காது குத்துகிறார்களா? நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. எனக்கு ஜலதோஷம் வந்து, நான் மூக்கால் பேசினால், என் குரல் எப்படி இருக்குமோ; அதே குரல். சந்தேகமேயில்லை என் மூக்கேதான்.

“என்ன விஷயம்?” – வியப்பு மேலிட வினவினேன்.

“சதா மூக்கை சிந்துவதை நிறுத்திவிட்டு என்னைப் பற்றியும் சற்று சிந்தித்துப் பார். என் மகிமை உனக்கு புரியும். அதை நாலு பேருக்கு எடுத்துக் கூறு” அசரீரி மாதிரி அறிவித்து விட்டு ரிசீவரை ‘டக்’கென்று வைத்து விட்டது மூக்கு.

முகத்தை அஷ்டகோணத்தில் சுளித்து, பார்வையை சற்று தாழ்த்தி, என் மூக்கு நுனியை எட்டிப் பார்த்தேன். மூக்கு சிவந்திருந்தது.

மூக்கு, எட்டப்பன் பரம்பரையைச் சேர்ந்தது. கோபத்தையும், பதஷ்டத்தையும் மூக்கானது விடைத்தும், புடைத்தும், துடித்தும், சிவந்தும் காட்டிக் கொடுத்து விடும். கூடவேயிருந்து பழகும் நாக்கை சிற்சமயம் பல் கடித்து விடுகிறதே; அதுபோலத்தான் இதுவும்.

ஆச்சரியம் ஏற்படும்போது விரல்களுக்கு மூக்கு மானசீகமான அழைப்பு விடும். தானகவே மூக்கின் மேல் விரல் சென்று வீற்றிருக்கும். “அடி ! ஆத்தி?” என்று தென் மாவட்டத்து பெண்கள் வியக்கும் போதாகட்டும், “அடி ! ஆவுக்கெச்சேனோ?” என்ற வட்டார ராகத்தோடு எங்களூரில் தாய்க்குலம் ஆச்சரியத் தொனி எழுப்பும்போதாகட்டும், இயல்பாகவே அவர்களின் மூக்கின் மீது ஆள்காட்டி விரலானது கேள்விக்குறியாய் வளைந்து விடுவது கண்கூடு.

மூக்குதான் மூச்சை இழுக்கிறது; மூச்சை விடுகிறது.

சற்று நேரம் மூச்சை விட மறந்து பாருங்கள். “ஏன் மறந்து விட்டீர்கள்?” என்ற கேள்வியை யாராவது எழுப்பினால் கூட அதற்கு பதில் சொல்லும் நிலையில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவானேன்? நேராகவே சொல்லி விடுகின்றேனே? மரணம் வந்து விடும்.

இப்போது மூக்கின் மகிமை உங்களுக்கு புரியத் தொடங்கியிருக்குமே?

கண்ணதாசன், இதயதாசன் என்ற புனைப்பெயரைப் போல, ஏன் யாரும் மூக்குதாசன் என்று புனைப்பெயர் வைத்துக் கொள்வதில்லை? மூக்கின் முக்கியத்துவத்தை முழுவதும் உணராததால் இருக்கலாம்.

“முத்துக்களோ கண்கள்; தித்திப்பதோ கன்னம்” என்று கவிஞர்கள் ஏனோ கண்ணைத்தான் அதிகம் புகழ்ந்து பாடுகிறார்கள். முத்துப்போன்ற கண்கள் என்கிறார்களே? அந்த முத்து எப்படி கிடைத்தது என்று அவர்கள் சற்று யோசித்துப் பார்க்கட்டும்.

மூக்கைப் பிடித்து, மூச்சை அடக்கி, ஆழ்கடலில் இறங்கி தேடியதில் கிடைத்ததுதான் அந்த முத்து. கண்களைப் பாடாதவன் கவிஞனாக முடியாது என்றாகி விட்டது.

புகழ்வதற்கு கண்; கேலி செய்வதற்கு மூக்கு – இது அநியாயம் அன்றோ?

பீரங்கி மூக்கு, கிளி மூக்கு, சப்பை மூக்கு, குடை மிளகாய் மூக்கு, தவக்களை மூக்கு என கிண்டல் செய்ய மூக்குதான் உகந்தது என்று நினைக்கிறார்கள் போலும். வாழ்நாள் முழுவதும் மூச்சிழுத்து நம்மை வாழ வைத்த உறுப்புக்கு காட்டும் மரியாதை இதுதானா?

மற்ற கவிஞர்கள் போலல்லாது, கண்ணதாசனிடம் எனக்குப் பிடித்தது, மூக்கையும் சேர்த்து பாடலில் எழுதியதுதான். “அடி ராக்கு, என் மூக்கு, என் கண்ணு. என் பல்லு ..என் ராஜாயீ..” என்றெழுதிய அவரை வாழ்த்துகிறது மனம்.

‘கண்ணே’ என்று காதலியை கொஞ்சுபவர்கள், ‘மூக்கே’ என்று கொஞ்சுவதில்லையே.. ஏன்?

சிறுவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும்போது கூட “உன் மூக்கைப் பெயர்த்து விடுவேன்” என்றுதான் சவடால் விடுகிறார்கள். மூக்கு என்றால் அவர்களுக்கு அவ்வளவு இளப்பமா?
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டியா?

“மனிதனின் புற உறுப்புகளில் சிறந்தது எது?” என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். கண், கை, கால் என்று எல்லாவற்றையும் சொல்வார்கள்; மூக்கைத் தவிர.

மூக்கை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. “கண்தானம் செய்யுங்கள்” என்று வேண்டுகோள் விடுப்பார்கள். “இறந்த பிறகு நான் வேண்டுமானால் மூக்கை தானம் செய்கிறேனே” என்று சொல்லிப் பாருங்கள்.

“போயா நீயும் உன் மூக்கும்” என்று விரட்டியடிப்பார்கள். இந்த நவீன காலத்தில் எந்தெந்த உறுப்பையோ காப்பீடு செய்கிறார்கள். மூக்கை மட்டும் யாரும் இன்சூர் செய்வதில்லை.

ஒருக்கால் நடிகை ஸ்ரீதேவி செய்திருக்கலாம்,. அவர் மூக்கினை ஆபரேஷன் செய்த பிறகுதான் இந்திப் படவுலகில் ‘ஓஹோ’ என்று உச்சத்தை அடைந்தார் என்று சொல்கிறார்கள்.

சிலருக்கு இசை பிடிக்கும். சிலருக்கு இலக்கியம் பிடிக்கும். இதெல்லாம் ஒருவருக்கு இன்பம் பயக்கக் கூடியது, ஜலதோஷம் மட்டும் யாருக்கும் பிடிக்கவே கூடாது. பிடித்தால் அன்றைய தினம் அவர் பாடு திண்டாட்டம்தான். ‘சளி பிடித்தால் சனியன் பிடித்த மாதிரி’ என்று சும்மாவா சொல்வார்கள்?

முன்பெல்லாம் பாரதப் பெண்கள் மாத்திரம்தான் மூக்கு குத்திக் கொள்வார்கள். இப்பொழுது மற்ற நாட்டினரும் குத்துகிறார்கள். “என்ன எனக்கே காது குத்துகிறீரா?” என்று கேட்காதீர்கள். நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை. ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கண், காது, மூக்கு வைத்து எனக்கு பேசத் தெரியாது.

மேலை நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகள், தூரக்கிழக்கு நாடுகளிலெல்லாம் நாகரிகம் என்ற பெயரில் மூக்குத்தி அணிய ஆரம்பித்து விட்டார்கள். மூக்கின் முக்கியத்துவம் நம்மவர்களுக்கு எப்பொழுதோ புரிந்து விட்டது. இப்பொழுதுதான் அவர்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது.

இந்தியப் பெண்களிலே குறிப்பாக பாட்டியா (Bhatia) வகுப்பினர் அணியும் மூக்குத்தியை கவனித்தால் உங்களுக்குப் புரியும். ஒரு கேரட், இரண்டு கேரட், மூன்று கேரட் என்று எந்த அளவு பெரிய வைரத்தை மூக்குத்தியாக அணிகிறார்களோ அந்த அளவு அவர்களுடைய சமுதாய அந்தஸ்த்தை அது உயர்த்திக் காட்டும்.

தனக்கு வருகிற மனைவி ‘மூக்கும் முழி’யுமாக இருக்க வேண்டுமென்று ஒவ்வொருத்தனும் கனவு காண்கிறான். இங்கும் மூக்குதான் முன்னிலை வகிக்கிறது. என்ன முழிக்கிறீர்கள்? முழி பிறகுதான்.

“பெண் கிளி மாதிரி இருப்பாள்” என்று கல்யாணத் தரகர் கூறினால், பச்சை நிறத்தில் அவள் இருப்பாள், கூண்டுக்குள் அடைத்து வைத்திருப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது. நல்ல எடுப்பான மூக்கு என்று நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

கண்ணுக்கு அணிகின்ற கண்ணாடியை ‘மூக்கு கண்ணாடி’ என்றுதானே சொல்கிறோம்? மூக்கு அதனை தாங்கிப் பிடிப்பதால்தானே? குடும்பத்தை நீங்கள் தாங்கிப் பிடித்துப் பாருங்கள். ‘குடும்பத்தலைவன்’ என்று உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனி.

ஓவியமானாலும் சிற்பமானாலும் அதனை தத்ரூபமாக வடிவமைக்க ஒரு கலைஞனுக்கு பெரிதும் உதவுவது மூக்குதான். குறும்புச்சித்திரம் வரைபவர்கள் மூக்கை சரியாக வரைந்துவிட்டு தலையையும் உடம்பையும் தாறுமாறாக வரைந்தால் கூட அது இன்னார்தான் என்று சரியாக நம்மால் ஊகித்து விட முடிகிறது.

ராஜாஜி, இந்திராகாந்தி, ஜிம்மி கார்ட்டர் – இவர்களை வரையுங்கள் என்று கார்ட்டூனிஸ்ட்களிடம் சொன்னால் அவர்களுக்கு அது தண்ணி பட்ட பாடு. அந்த பிரபலங்களின் வித்தியாசமான மூக்கு அவர்களின் வேலையை எளிதாக்கி விடும். (தமிழ்ப் பட நடிகர் நாசரை மறந்து விட்டேனே?)

மாட்டை அடக்க மூக்கணாங் கயிறு போடுகிறார்கள். மனம் போன போக்கில் சுற்றித் திரியும் இளஞனைப் பார்த்து “இவனுக்கு மூக்கணாங் கயிறு போட்டால்தான் வழிக்கு வருவான்” என்றால் “திருமணம் நடத்தி வைத்தால் திருந்தி விடுவான்” என்று அர்த்தம்.

நம் மூக்கில் ஒரு திரியை விட்டாலே நம்மால் தாக்கு பிடிக்க முடியவில்லை. “அச்சு.. பிச்சு..” என்று தும்முகிறோம். பாவம், அந்த மாடுகளின் மூக்கிலே மொத்த கயிற்றினை சொருகி. பாடாய்ப் படுத்துகிறார்கள் இந்த மனிதர்கள். (மேனகா காந்தியின் கவனத்திற்கு)

தும்முவது அபசகுனம் என்று எந்த பிரகஸ்பதி சொல்லிவிட்டு போனான் என்று தெரியவில்லை. அதுவே ஒரு சாஸ்திர சம்பிரதாயமாகி விட்டது.

“இன்று ஒரு முக்கியமான கச்சேரி. போகும் போதே இவன் தும்மி தொலஞ்சிட்டான். போற காரியம் உருப்பட்ட மாதிரிதான்” என்று திட்டித் தீர்த்து விடுவார் எங்க ஊர் சங்கீத வித்வான்.

கல்யாண வீட்டிலே தவில், நாதஸ்வரம் என்று காது சவ்வு கிழிந்து போகுமளவுக்கு ஒலி எழுப்புவது எதற்காகவென்று நினைக்கிறீர்கள்? யாராவது (அபசகுனமாய்?) தும்மித் தொலைத்தால் யார் காதிலும் விழுந்து விடக் கூடாதே என்ற நல்ல(?) எண்ணத்தில்தான்.

“தும்மலுக்காக யாராவது இவ்வளவு செலவு செய்வார்களா? போயா நீயும் உன் கண்டுபிடிப்பும்” என்று நீங்கள் உதாசீனம் செய்யக்கூடும். அதற்காக எனக்கு தும்மல் வந்தால் அதை நான் நிறுத்தப் போவதில்லை. (அச் .. .. .. ..சும்)

வாசற்படியில் நின்று தும்மக் கூடாதாம். புறப்படும்போது தும்மக் கூடாதாம். நல்ல காரியம் நடக்கும்போது தும்மக் கூடாதாம். பொருள் வாங்கும்போது தும்மக் கூடாதாம். (வேற எப்பத்தான்யா தும்முறது?)

நாசியில் திரி, மூக்குப் பொடி, துளசி, மகரந்த பொடி நுழைந்தாலோ அல்லது காற்றுத் துகள்களில் கலந்திருக்கும் அமிலங்களின் காரணத்தினாலோ மூக்கினுள் உறுத்தல் ஏற்பட்டு தானியக்கச் செயலாக தும்மல் வெளிப்படுகிறது.

தும்மினால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்ற மூட நம்பிக்கை வேறு. தும்மலுக்கும், டெலிபதிக்கும் (Telepathy) எந்த தொடர்பும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

எனக்கு தெரிந்த கடைக்காரர் ஒருவர். கடைக்குள் புகுந்ததுமே மூக்கை உறிஞ்சுவார். “என்ன இது? ஏதோ மூச்சா ஸ்மெல் வருகிறதே?” என்பார். “சாம்பிராணியைப் போடு”, “ஊதுவத்தியை கொளுத்து”, “ரூம் ஸ்ப்ரே எடித்து அடி” என்று கடை ஊழியர்களைப் பார்த்து கட்டளை பறக்கும். நாளடைவில் எந்த ஒரு துர்நாற்றம் இல்லாதபோது கூட இதே பல்லவியை பாடுவது அவரது வழக்கமாகி விட்டது.

வாசனை என்று சொல்வதை விட நாற்றம் என்று சொல்வதுதான் மிகப் பொருத்தம். துரதிர்ஷ்டவசமாக நாற்றம் என்ற பதம் துர்நாற்றத்தை மட்டுமே குறிப்பதாக உருமாறி விட்டது. இதனை கலாச்சாரச் சிதைவு எனலாம்.

இயக்குனர்/நடிகர் சுந்தர் சி. யிடம் சென்று ‘உங்கள் மனைவியின் பெயர் நாற்றம்தானே (குஷ்பு)?” என்று சொல்லிப் பாருங்கள். மனுஷர் உங்களை பின்னி எடுத்து விடுவார்.

ஹாஸ்டலில் நாங்கள் தின்பண்டத்தை பிரித்தால் போதும். அடுத்த அறையிலிருக்கும் நகுதா “சும்மாத்தான் வந்தேன்” என்று ஆஜராகி விடுவான். எப்படித்தான் அவன் மூக்கில் வியர்க்கிறதோ? இரையைக் கண்டதும் கழுகின் மூக்கில் வியர்க்குமாம். (படித்து தெரிந்து கொண்டதுதான். நானே நேராகச் சென்று கழுகைப் பிடித்து, மூக்கைத் தடவி, சோதித்துப் பார்க்கவா முடியும்?)

மூக்குக்கு இருக்கும் மாபெரும் சக்தி – மோப்ப சக்தி. புலன் விசாரணையில் எத்தனையோ மர்மங்களின் முடிச்சை மோப்ப சக்தியினால் அவிழ்க்க முடிகிறதே? விலங்கினங்களுக்கு இறைவன் அளித்திருக்கும் அழகிய அருட்கொடை அது.

மோப்ப சக்தி நாய்க்கு மாத்திரமல்ல. எல்லா படைப்பினங்களுக்கும் இருக்கின்றன. இயற்கையின் விசித்திரத்தை தவறாக புரிந்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்.
பாம்பு பாலை உறிஞ்சிக் குடிக்கிறது என்பது சிலரது நம்பிக்கை.

இந்த அறியாமை இந்துக்களில் சிலருக்கு மட்டுமின்றி பிற மதத்தவரிடமும் பரவலாக காணப்படுகிறது. தமிழக – பாண்டிச்சேரி எல்லையில் வாஞ்சூர் என்ற சிற்றூர். மூட நம்பிக்கையில் மூழ்கிப்போன முஸ்லிம் பெண்கள் சிலர் அங்கு சென்று பாலையும் முட்டையையும் பாம்புக்கு வார்ப்பதைப் பார்க்க வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கும்.

இயற்கையிலேயே பாம்பின் நாக்கு பிளவு பட்டிருக்கும். பாம்பினால் உறிஞ்சிக் குடிக்க இயலாது. பாம்பு இரையை அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு அதற்கு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது. இன்னும் சற்று அசந்தால் “பாம்பு முட்டையை ஆம்லெட் போட்டு சாப்பிடும்” என்று கூட சரடு விடுவார்கள்.

பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதுதான் மெய். “பாம்பு பால் குடிக்கிறது” என்று கூறுவது வெறும் கட்டுக் கதை.

அநாவசியமாக மூக்கை நுழைப்பவர்களைக் கண்டால் நமக்கு எரிச்சல் வரும். மூக்கை நுழைப்பதால் சிலநேரம் வெற்றியையும் அடைய முடியும். ஓட்டப் பந்தயத்தின் இலக்கினை இருவர் ஒரே நேரத்தில் எட்டி விட்டதாக வைத்துக் கொள்வோம். வெற்றியை எப்படி நிர்ணயிப்பது? இன்றைய நவீன காலத்தில் கணினியின் மூலம் சுலபமாக கண்டுபிடித்து விடுகிறார்கள். உருப்பதிவை கட்டம் கட்டமாக ஓட விட்டு யாருடைய மூக்கு முதலில் நுழைந்ததோ அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார்கள்.

வாகையை சூட்டித் தந்த மூக்குக்கு ஒன்றுமே கிடைப்பதில்லை. தங்கப் பதக்கத்தை கழுத்து அணிந்துக் கொள்ளும். வெற்றிக் கோப்பையை கைகள் ஏந்திக் கொள்ளும். பயிற்சியாளரின் ‘சபாஷ் தட்டை’ முதுகு ஏற்றுக் கொள்ளும். ப்ரியமானவர்களின் ‘உம்மாவை’ கன்னம் ஏற்றுக் கொள்ளும். மூக்குக்கு – ஹி.. .. ஹி .. வெறும் நாமம்தான்.

ஒசியில் கிடைக்கிறதே என்று மூக்கு முட்டச் சாப்பிடுபவனை கண்டால் கோபம் வரும். ‘அவன் மூக்கை உடைத்தாலென்ன?’ என்று தோன்றும். வன்முறை – அடிதடியில் இறங்காமல் வாய்ப் பேச்சினாலேயே ஒருவனுடைய மூக்கை உடைக்க முடியும். அதுவொரு வசதிதானே?

அறிவு ஜீவிகளுக்குள் விவாதம் ஏற்பட்டு, வாய்ப் பேச்சு நீளும்போது ஒருவர் மற்றவர் மூக்கை உடைப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுவையான நிகழ்ச்சிகளாக அமைந்து விடுவதுண்டு. அதனை ஆராய முற்பட்டால் ‘ரிப் வேன் விங்கிலி’ன் தாடி போன்று இதுவும் நீண்டு விடும்.

உயரத்திலிருந்து செங்குத்தாக கீழே விழும்போது ஆங்கிலத்தில் Nose Dive என்ற பதத்தை உபயோகப் படுத்துவார்கள். வளைந்த இடுக்கியை Nose Plier என்று அழைப்பார்கள். கொள்ளுப்பைக்கு Nose Bag என்று பெயர். அளவு கடந்த ஆர்வலருக்கோ Nosey Parker என்று பெயர். டால்பின்களில் ஒரு வகை பாட்டில் மூக்கு டால்பின்.

“உலகத்திலேயே மிகப்பெரிய மூக்கு உடையவர் யார்?” என்று நண்பர் பாண்டியிடம் புதிர் போட்டேன். பெக்கே.. பெக்கே.. என்று பேய் முழி முழித்தார். “அட.. நீர் தினமும் வழிபடும் பிள்ளையார்தானய்யா அது.” என்று புதிரை விடுவித்ததும் “இந்த சிம்பிள் விஷயம் இந்த மர மண்டைக்கு புரியாமல் போய் விட்டதே?” என்று நொந்துக் கொண்டார்.

முற்காலத்தில் நம்மவர்களிடையே மூக்குப் பொடி போடும் பழக்கம் பரவலாக இருந்து வந்தது. (Thank God) இப்பொழுது அது வெகுவாக குறைந்து விட்டது. “மனைவிக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் உள்ளது. ஆகையால் எனக்கு விவாகரத்து வாங்கித் தர வேண்டும்” என்று கணவன் போட்ட ஒரு விசித்திர வழக்கை சமீபத்தில் பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது.

மூக்குப் பொடி போடுபவர்கள் மூக்கைத் துடைப்பதற்காகவே ஒரு கைக்குட்டையை கச்சிதமாக தைத்து வைத்திருப்பார்கள். ஒரு காலத்தில் வெள்ளை நிறத்தில் இருந்த அந்த துணியானது மரக்கலரில் உருமாறிப் போயிருக்கும். என்னைப் போன்று ‘குளோசப்பில்’ அந்த கண் காணா காட்சியை கண்டவர்களுக்குத்தான் அந்த அவஸ்தை புரியும்.

காரம், மணம், குணம் நிறைந்த மூக்குப் பொடி பெரும்பாலும் மட்டையில்தான் வரும். சிலபேர் மூக்குப்பொடி நிரப்பி வைப்பதற்காகவே வெள்ளியில் மூக்குப்பொடி டப்பா வைத்திருப்பார்கள். கண்ணுக்கு அழகூட்டும் மையே வெறும் தகர டப்பாவில் வசிக்கும்போது, கேடு விளைவிக்கும் இந்த பாழாய்ப் போன மூக்குப்பொடி மட்டும் ஆடம்பரமாக வெள்ளி டப்பாவுக்குள் வாசம் செய்கிறதே என்று நினைத்துப் பார்ப்பதுண்டு.

வாழ்க்கையின் யதார்த்தமும் அதுதானே? சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் அரசியல்வாதிகளும், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நயவஞ்சகர்களும் ஆடம்பர பங்களாவில் வசிப்பதில்லையா?

மூக்குப்பொடி பழக்கமுள்ள பிரபலங்களில் அறிஞர் அண்ணாத்துரை இங்கே குறிப்பிடத்தக்கவர். மேடையில் பேசுவதற்கு முன்னால் “சுர்ரென்று” ஒரு இழுப்பு இழுத்துக் கொண்டு வந்து ‘மைக்’ முன் நின்றால் ‘காட்டச் சாட்டமாக’ அவருடைய பேச்சிலே ‘தூள்’ கிளம்பும்.

தமிழகத்தில் மூக்கறுப்பு போர் என்று ஒன்று நிகழ்ந்திருக்கிறது. கர்நாடக மன்னருக்கும், மதுரை மன்னருக்கும் நடந்த இந்தப் போரில் பிடிபட்ட வீரர்களின் மூக்கை அறுத்து மூட்டை மூட்டையாக மைசூருக்கு அனுப்பிவைத்ததாகச் சான்றுகளிருக்கின்றன.
என்ன அநியாயம் இது? மூ(ர்)க்கத்தனமாக அல்லவா இருக்கிறது?

மூக்கு என்பது நம் முகத்தில் வெறும் அலங்காரத்துக்ககாக மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் சீனாவின் வடகிழக்கு நகரில் வசிக்கும் வாங்சுன்டாய் எனும் சாகஸ மனிதர் மூக்கில் கயிற்றைக் கட்டி, காரை 10 மீட்டர் தூரம் இழுத்துக் காண்பித்தாராம். தமிழ்நாட்டில் அவர் பிறந்திருந்தால் மூக்கையா அல்லது மூக்கையன் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்திருப்பார்கள்.

ருஷ்ய எழுத்தாளரான கோகல், ‘மூக்கு’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். மலையாள மொழியில் வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய ‘உலகப் பிரசித்திப் பெற்ற மூக்கு’ என்ற கதையை நாகூர் ரூமி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அதுபோலவே டக்ளஸ் ஆடமின் (Douglas Adam) கடைசி நூலில் (The Salmon of Doubt) இடம் பெற்றிருக்கும் மூக்கு பற்றிய கட்டுரை சுவராஸ்யம் நிறைந்தது.

யார் கண்டது? நாளை எனது ‘மூக்கையும்’ ஏதாவதொரு நோஸ்ட்ராடாமஸ் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்க்கலாம். அமெரிக்காவில் இருக்கும் நண்பர் மூக்கு சுந்தர் அதற்கு பாராட்டு தெரிவிக்கலாம்.

இராமனைப் பார்த்ததும், காதல் கொண்டு, அவனிடத்தில் காமம் ஒழுகப் பேசிய சூர்ப்பனகை தண்டனையாக மூக்கு அறுபட்டாள் என்பது எல்லோரும் அறிந்ததே. சபையில் ஒருவன் அவமானப்பட்டால் ‘நன்றாக மூக்கறுபட்டான்’ என்று சொல்வது வழக்கமாகி விட்டது.

மூக்கோடு மூக்கு உரசி முகமண் கூறும் பழக்கம் அராபியர்களிடத்தில் மட்டுமின்றி வேறு சில நாட்டவரிடத்திலும் காண முடிகிறது.

“Chick Peas” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கொண்டைக்கடலையை என் மனைவி மூக்குக் கடலை என்றுதான் அழைக்கிறாள். நான் அவளுக்கு மூக்குத்தி வாங்கித்தர மறந்ததை அடிக்கடி இதன் மூலம் எனக்கு நினைவுறுத்துகிறாளா என்று தெரியவில்லை.

மாம்பழ வகைகளில் ஒன்று கிளி மூக்கு மாம்பழம். எங்களூர் பள்ளி வாத்தியார் ஒருவருக்கு மாணவர்கள் வைத்த பட்டப் பெயர் ‘மூக்கு நீட்டி சார்’.

நண்பர்களிடையே அரட்டை அடிக்கும்போது மதுரையைப் பற்றிய பேச்சை எடுத்துப் பாருங்கள். மதுரை மல்லி, மதுரை முனியாண்டி விலாஸ், மதுரை முத்து என்று ஆரம்பித்து கடைசியில் மதுரை மீனாட்சியம்மனின் சிவப்புக்கல் மூக்குத்தியில் போய் முடிந்துவிடும்

ஒருவன் ஜாலியாக தன் கைத்தடியைச் சுழற்றியவாறு சென்று கொண்டிருத்தானாம், அது இன்னொருத்தனின் மூக்கு நுனியில் பட்டு விட்டது. “ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கேட்டதற்கு “என் கைத்தடியை சுழற்றுவதற்கு எனக்கு பூரண சுதந்திரம் இருக்கிறது. அதை கேட்க நீ யார்?” என்று கேட்டானாம்.

“Your freedom ends; where my nose begins” – “உனது சுதந்திரம் என் மூக்கு நுனிவரையில்தான்”. இந்த பதிலானது இன்று எல்லோராலும் எடுத்தாளப்படும் பழமொழியாகி விட்டது.

“ஈராக் கலவரம் முதல் எய்ட்ஸ் ஒழிப்புவரை – சிந்தனையச் செலுத்த எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் விட்டு விட்டு வெறும் மூக்கைப் பற்றிப் பேசி எங்களுக்கும் ஜலதோஷம் பிடிக்க வைத்து விட்டீர்களே?” என்று நீங்கள் தும்மலாம்.

அமெரிக்கா ஈராக்கில் மூக்கை நுழைத்ததால்தானே பிரச்சினையே? ஒருவர் விஷயத்தில் மற்றவர் மூக்கை நுழைக்காமல் இருந்தாலே போதுமானது. உலகத்தில் பாதி பிரச்சினைக்கு மேல் தீர்வு கண்டு விடலாம். உலக நாடுகள் தங்கள் பாதுகாப்புக்கென போர்த்தளவாடங்கள் வாங்கும் பணத்தை ஏழைகளுக்குச் செலவிட்டால் போதும். பூமியில் பட்டினிச்சாவு அறவே ஒழிந்து விடும்.

கட்டுரையை முடித்து விட்டு என் நுனி நாக்கால் மூக்கு நுனியைத் தொட்டேன். மூக்கு சந்தோஷத்தால் சிவந்திருந்தது. அதற்கு புரிந்திருக்கும் என் நற்பணி.


vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்