முள்பாதை 56

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

கிருஷ்ணன் மேலும் சொல்லத் தொடங்கினான். “நான் ஸ்கூல் பைனல் படித்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. பரீட்சைகள் இன்னும் முடியவில்லை. தஞ்சாவூர் பக்கம் பயங்கரமாக புயல் வீசியது. சனிக்கிழமை அன்று மாலையில் வீட்டுக்கு வந்த நான் இரவு முழுவதும் காற்றும் மழையுமாக இருந்ததால் மறுபடியும் ஸ்கூலுக்குக் கிளம்ப முடியவில்லை. அன்று ஆரம்பித்த மழை நான்கு நாட்களுக்கு இடைவிடாமல் பெய்து கொண்டே இருந்தது. ஏரிகள் உடைந்தன. ஊர் முழுவதும் வெள்ளம் புகுந்துவிட்டது. எத்தனையோ குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்தன. எங்களுடையது ஓட்டுவீடு. எங்கே பார்த்தாலும் ஒழுகிக்கொண்டிருந்தது. நானும், அம்மா மற்ற குழந்தைகள் உயிரை கையில் பிடித்தக் கொண்டு அந்த நாட்களை எப்படியோ கழித்தோம். எந்த நிமிடம் வீடு இடிந்து விடுமோ, எந்த வினாடி எங்கள் உயிர் போய்விடுமோ என்று நடுங்கிக் கொண்டிருந்தோம். போனால் எல்லோரும் ஒன்றாக போகணும். இல்லாவிட்டால் எல்லோரும் உயிருடன் இருக்கணும். ஒருத்தர் போய் ஒருத்தர் இருக்கும் வேதனை எங்களுக்கு வேண்டாம் என்று கடவுளை பிரார்த்தனை செய்து கொண்டேன்.
புயலின் தீவிரம் கொஞ்சம் குறைந்தது. வீடு இடிந்து போகாமல் இருந்தது எங்களுக்கு ஆச்சரியம்தான். பக்கத்திலேயே இருந்த வீடுகள் இடிந்துவிட்டன. இன்னொரு வீட்டில் கூரை பிய்த்துக் கொண்டு போய்விட்டது. அவர்கள் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்லை. எங்களுக்கு அது மறுபிறவி. ஆனால் அந்த சந்தோஷம் அதிகநாட்கள் நிலைக்கவில்லை. பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. ஆடுமாடுகள் இறந்து போயின. பால் கிடைப்பது துர்லபமாகிவிட்டது. அரசாங்கம் உதவி செய்தாலும் அது எந்த மூலைக்கு?
எப்படியோ கஷ்டப்பட்டு வீட்டைச் சரி செய்து கொண்டோம். கடைத்தெருவில் எல்லா பொருட்களும் வானத்தை எட்டின. கையில் சல்லிகாசு இல்லை. இருப்பதை வைத்துக்கொண்டு நாட்களை ஓட்டினோம். வசதி இருப்பவர்கள் ஓரளவுக்குக் கொடுத்து உதவினார்கள். ஆனால் எத்தனை நாட்களுக்குத் தாங்க முடியும்? எல்லோரும் பட்டினி கிடக்க வேண்டிய நிலை வந்துவிடது. மணி, மது ரொம்ப சின்னக் குழந்தைகள். பசி தாங்க முடியாமல் தீனமாக அழுது கொண்டே இருப்பார்கள். அம்மா மாமாவுக்குக் கடிதம் எழுதி பணம் அனுப்பச் சொல்லி வேண்டுகோள் விடுத்தாள். ஏற்கனவே உங்களுக்கும் எங்களுக்கும் நடுவில் சண்டை இருந்தது.
அப்படியும் அம்மா சுவாபிமானத்தை விட்டுவிட்டு மாமாவுக்கு இரண்டு கடிதங்களை எழுதினாள். பதிலே வரவில்லை. மாமாவரையிலும் கடிதங்கள் போய் சேர்ந்திருக்காது என்றும், சேர்ந்திருந்தால் மாமா கட்டாயம் அனுப்பியிருப்பார் என்றும் அம்மா திடமாக நம்பினாள். கடைசியில் அப்பாவின் நினைவாக பாதுகாத்து வந்த மோதிரத்தை விற்றுவிட்டு என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தாள். மாமாவிடம் எங்களுடைய வீட்டு நிலைமையை சொல்லச் சொன்னாள்.
நான் கிளம்பும் போது மது ஜுரத்தில் சுயநினைவு இல்லாமல் கிடந்தான். நான் திரும்பி வரும் வரையில் உயிர் பிழைத்திருப்பானா என்று பயமாக இருந்தது. எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கிளம்பினேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்கூல் எக்ஸ்கர்ஷனுக்காக சென்னைக்குப் போயிருந்ததால் உங்கள் விட்டை சுலபமாகவே கண்டுபிடித்து விட்டேன். அன்று நான் போன போது உங்கள் வீட்டில் ஒரே சந்தடியாக இருந்தது.
லாயர் ஆனந்தனைப் பார்க்க வந்தேன் என்று நான் சொன்னபோது திருநாகம் மாமி என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு “யார் நீ?” என்று கேட்டாள். தூசி படிந்த ஆடையில் ஏழ்மையின் மறு உருவமாகக் காட்சி தரும் கோலத்தில் அவருடைய தங்கையின் மகன் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை.
சமையல்கார மாமி உள்ளே போய் சொன்னதம் மாமா வெளியில் வந்தார். என்னைப் பார்த்ததும் “என்ன கிருஷ்ணா? என்ன நடந்தது?” என்று பதற்றத்துடன் கேட்டார். சுருக்கமாக எங்களுக்கு வந்த இடைஞ்சல்களைச் சொன்னேன்.
மாமாவின் விழிகளில் நீர் சுழன்றது. “நான் ஊரிலேயே இல்லை. கல்கத்தாவிலிருந்து நேற்றுதான் திரும்பி வந்தேன். நாளையோ அதற்கு அடுத்த நாளோ நானே கிளம்பி வருவதாக இருந்தேன்” என்றார். என்னை தோளைச் சுற்றி அணைத்தபடி உள்ளே அழைத்துப்போனார். அங்கே வரிசையாக நுனி வாழை இலை போட்டு விருந்த சாப்பாடு பரிமாறப்பட்டு இருந்தது. “வா… வா..” இன்று மீனாவுக்குப் பிறந்தநாள்” என்றார். நீ பட்டுப் பாவாடையில் உடம்பு முழுக்க நகைகளுடன் பெண்கள் கும்பலுக்கு நடுவில் இருந்தாய். மாமா என்னை சாப்பிட உட்காரச் சொல்லிவிட்டு போனார். நான் பந்தியில் உட்காரப் போனபோது உங்க அம்மா அங்கே வந்தாள். “உன்னை இங்கே யார் உட்காரச் சொன்னது? அடுத்த அறையில் வேலைக்காரர்களுக்குப் பந்தி போட்டிருக்கு. அங்கே போ” என்று எரிந்து விழுந்தாள். நான் எழுந்து அடுத்த அறைக்குப் போனேன். “கிழிசலும் கந்தலுமாக உடுத்திக் கொண்டு பிச்சைக்காரனாட்டம் வந்து விட்டான் விருந்துச் சாப்பிட.” மாமி முணுமுணுப்பது காதில் விழுந்தது. சரேலென்று திரும்பினேன். என் இதயத்தில் தீ பற்றி எரிவது போல் இருந்தது. கையில் கிடைத்ததை எடுத்து மாமியின் முகத்தில் வீசியிருப்பேன். ஆனால் பரிசாரகன் “கொஞ்சம் நகரு தம்பி” என்று குரல் கொடுத்ததால் நகர்ந்து கொண்டேன். நான் சாப்பிடவில்லை. பிறகு மாமா கேட்டபோது சாப்பிட்டேன் என்று சொன்னேன். அன்று மாலை ரயிலுக்குப் போவதாகச் சொன்னேன். மாமா தற்சமயம் ஆயிரம் ரூபாய் தருவதாகவும், அதை எடுத்து போகச் சொல்லியும், பின்னால் தான் வந்து அம்மாவுடன் பேசுவதாகவும் சொன்னார்.
அந்தப் பணத்தை வாங்கிக் கொள்வதற்கு எனக்கு ரோஷமாக இருந்தது. ஆனால் மாமா நல்லவர். எங்களிடம் பிரியம் வைத்திருப்பவர். அதோடு எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் அம்மாவுக்கு ஏமாற்றம் தர முடியாது. அதனால் வேறு வழியில்லாமல் சம்மதித்தேன். மாமா என்னிடம் பணம் கொடுக்கும் போது யாரோ அழைத்ததால் முன் அறைக்குப் போனார். நான் பணத்தை பத்திரமாக கவரில் வைத்துக் கொண்டிருந்த போது உங்க அம்மா அங்கே வந்தாள். பணத்தைப் பார்த்ததும் வேகமாக என் அருகில் வந்து “இந்தப் பணம் ஏது?” என்று கேட்டாள். மாமா கொடுத்தார் என்று சொன்னேன்.
“மாமா கொடுத்தாரா? கொடுப்பார் கொடுப்பார். அவருடைய நல்ல குணத்தை பயன்படுத்திக் கொண்டு உங்க அம்மா எங்களிடமிருந்து பிடுங்கப் பார்க்கிறாள். அவராவது ஒரு வார்த்தை என்னிடம் சொல்லியிருக்க வேண்டாமா?”
“மாமி! வீட்டில் ரொம்ப கஷ்டமான நிலைமை.” விளக்கமாக சொல்லப் போனேன்.
அதைக் கேட்டதும் மாமி சள்ளென்று எரிந்து விழுந்தாள். “விட்டில் கஷ்டமா? யாருக்குத்தான் கஷ்டங்கள் இல்லை? விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும். அவ்வளவு கஷ்டமாக இருந்தால் நீயும் உங்க அம்மாவும் எங்கேயாவது போய் பிச்சை எடுங்கள். அவ்வளவுதானே தவிர எங்கள் வீட்டுக்குப் படையெடுத்து வரவேண்டாம். அட்டையாக எங்களை உறிஞ்சவும் வேண்டாம்.” நெருப்புத் துண்டுகள் போல் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள்.
சிலையாக நின்றுவிட்டேன். அந்தப் பணம் எனக்கு பிசாசு போல் தென்பட்டது. ‘அவ்வளவு கஷ்டமாக இருந்தால் நீயும் உங்க அம்மாவும் எங்கேயாவது போய் பிச்சை எடுங்கள்.’ மாமி சொன்னது என் இதயத்தை ஈட்டியாய் தாக்கியது. பணத்தை மேஜைமீது வைத்துவிட்டு வந்துவிட்டேன். மாமாவிடம் சொல்லிக் கொள்ளவில்லை. நான் வாசலுக்கு வரும்போது நீ என் எதிரில் வந்தாய். உன் கையில் பார்பி டால் இருந்தது.
என்னைப் பார்த்ததும் “ப்ளீஸ்! என் பின்னல் ஹ¤க்கில் மாட்டிக் கொண்டு விட்டது. கொஞ்சம் எடுத்து விடேன்” என்று திரும்பி நின்றாய். ஒரே தள்ளாக உன்னை தள்ளிவிட்டால் என்ன என்று ஆவேசமாக இருந்தது. ஆனால் எப்படியோ கட்டுப்படுத்திக் கொண்டேன். பிளவுஸ் ஹ¤க்கில் மாட்டியிருந்த உன் பின்னால விடுவித்தேன். அன்று நீ அணிந்திருந்த நகைகளை, கட்டம் போட்ட பச்சைநிறப் பாவாடை இன்றும் எனக்கு நினைவு இருக்கு.
நேராக ஸ்டேஷனுக்கு வந்து ரயில் ஏறினேன். இரண்ட நாட்களாக சாப்பிடாததால் தலை கிறுகிறுத்தது. பசியின் கொடுமையை விட உங்க அம்மா அவமானப்படுத்தியது இதயம் பிளந்துவிட்டது போல் வேதனையாக இருந்தது. அம்மா கேட்ட போது மாமா ஊரில் இல்லை என்று பொய் சொன்னேன்.
இரண்டு நாட்கள் கழித்து மாமா எங்க ஊருக்கு வந்தார். பணத்தை எடுத்துக் கொள்ளாமல், சொல்லிக் கொள்ளாமல் வந்ததற்கு என்னை கடிந்து கொண்டார். தான் கொண்டு வந்த பணத்தை அம்மாவிடம் கொடுக்கப் போனார். அந்தப் பணத்தை தொடக்கூடாது என்று நான் அம்மாவைத் தடுத்துவிட்டேன். அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டால் நான் வீட்டில் ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டேன் என்றேன்.
அம்மா, மாமா இருவரும் திகைப்புடன் பார்த்தார்கள்.
“பணம் இல்லை என்றால் பட்டினி கிடப்போம். இல்லையா பிச்சை எடுத்து சாப்பிடுவோம். அவ்வளவுதானே தவிர உகள் பணம் வேண்டாம்” என்றேன்.
என்னுடைய போக்கு அம்மாவுக்கு வியப்பாக இருந்தது. மாமா போகும் போது என்னை அருகில் அழைத்து “உண்மையைச் சொல்லு கிருஷ்ணா! மாமி ஏதாவது சொன்னாளா?” என்று கேட்டார். நான் பதில் சொல்லவில்லை. மாமா போய் விட்டார். இரண்டு முறை மனியார்டர் அனுப்பி வைத்தார். நான் திருப்பி அனுப்பிவிட்டேன்.
கையோடு தஞ்சாவூருக்கு போனேன். ட்ரான்ஸ் போர்ட் ஆபீசில் சரக்குகளை ஏற்றி இறக்கும் கூலியாக வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு தடவை கர்ணம் மாமா பார்த்துவிட்டு “இந்த வேலை உனக்கு எதுக்கு?” என்று என்னை மளிகைக் கடையில் கணக்கு எழுதும் வேலைக்கு சேர்த்தார். மளிகைக்கடை முதலாளி ரொம்ப நல்லவர். வட்டி போட்டுக் கொண்டாலும் கேட்ட மளிகை சாமானைக் கொடுத்துவிடுவார். தேவைப்பட்ட மளிகையை வாரக் கடைசியில் எடுத்துக் கொண்டு போவேன். அத்தனை கஷ்ட காலத்திலேயும் படிப்பை விடவில்லை. தேர்வுகளை எழுதினேன். அந்தக் கோடை விடுமுறையில் நானும், சாமிகண்ணு, அம்மா எல்லோரும் கடுமையாக உழைத்தோம். எங்களுடைய விடா முயற்சியில் நிலம் மறுபடியும் விளைச்சலுக்குத் தயாராகிவிட்டது. மேற்கொண்டு படிக்கணும் என்று எனக்கு விருப்பம் இருந்தாலும் சூழ்நிலை சாதகமாக இல்லை. நான் பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்று அம்மா ரொம்ப ஆசைப்பட்டாள். நடக்காத விஷயத்திற்குக் கவலைப் பட்டுக் கொண்டு உட்காருவது என் சுபாவத்திற்கு விருத்தம். அன்று உங்க அம்மா என்னை வசைபாடிய முகூர்த்ம் எப்படிப்பட்டதோ தெரியாது. நான் ஒருத்தன் உயிரோடு இருக்கும் வரையில் என் அம்மாவுக்கோ, கூட பிறந்தவர்களுக்கோ எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்ற பிடிவாதம் ஏற்பட்டது.”
மென்மையான குரலில், கம்பீரமாக, நடுநடுவில் நிறுத்தி, மறுபடியும் தொடங்கி சொல்லி முடித்த கிருஷ்ணன், சோபாவில் தனக்கு பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்து “நீ எப்போ வந்து உட்கார்ந்து கொண்டாய்? நான் கவனிக்கவே இல்லையே?” என்றான் வியப்புடன்.
“சொல்வதை நிறுத்தாதே. பிறகு என்ன நடந்தது?” ஆர்வத்துடன் கேட்டேன்.
“பிறகு சொல்வதற்கு விசேஷமாக ஒன்றுமில்லை. படிப்பை நிறுத்திவிட்டு விவசாயத்தில் இறங்கினேன். ஏற்கனவே இருந்த நிலத்தை படிப்புக்காக விற்று விட்டதால் வேறு நிலத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டேன். சாமிகண்ணு துணையாக இருந்ததால் எனக்கு கஷ்டம் தெரியவில்லை. தரிசல் நிலமாக இருந்த அந்த நிலத்தை விளைச்சலுக்கு ஏற்ற விதமாக மாற்றுவதற்கு இரண்டு மூன்று வருடங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. ஆனால் கஷ்டப்பட்டவர்களுக்குத்தான் சுகத்தின் மதிப்பு தெரியுமோ என்னவோ. இப்போ அந்தத் தோட்டத்தைப் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.”
சற்று நிறுத்தி மீண்டும் சொன்னான். “எந்த வேலையைத் தொடங்கினாலும் முழு ஈடுபாட்டுடன் செய்வது என் சுபாவம். படிப்பின் மீது எனக்கு இருந்த ஆர்வத்தை விவசாயத்தின் பக்கம் திருப்பிவிட்டேன். விவசாயத்தில் புதுப் புது வழிகளை கண்டுபிடித்து அதிக விளைச்சல் கிடைக்கும் விதமாகச் செய்ய வேண்டும் என்பது என் லட்சியம். இப்போ என் பேச்சு மூச்சு எல்லாமே விவசாயம்தான். இப்போ சொல்லு. உன்னுடைய கேள்விக்கு என்னால் என்ன பதில் சொல்ல முடியும்? இது விதியின் விளையாட்டு தவிர வேறு என்ன? எங்கே நீ? எங்கே நான்? வானத்திற்கு பூமிக்கு உள்ள அளவுக்கு நமக்குள் வேறுபாடு இருக்கிறது. எந்த தைரியத்தில் உன்னை நான் ஏற்றுக்கொள்ள முடியும்? நீயே சொல்லு.”
கிருஷ்ணனின் கையை என் கையில் எடுத்துக் கொண்டேன். அந்தக் கை முரட்டுத்தனமாக இருந்தாலும் ஆரோக்கியத்துடன், நீளமான விரல்களுடன் அழகாக இருந்தது. “எந்த தைரியத்தில் அத்தனை சின்ன வயதிலேயே வீட்டுப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டாயோ அதே தைரியத்துடன்தான்” என்றேன்.
“அது வேறு விஷயம் மீனா! என்னுடைய கஷ்ட சுகங்கள் அம்மாவையும் மற்றவர்களையும் சேர்ந்தது. வாழ்க்கையின் கசப்பை, இல்லாமையை எனக்குச் சமமாக அவர்களால் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால்…”
“என்னால் முடியுமா என்பதுதானே உன் சந்தேகம்? வேண்டுமென்றால் பேப்பரையும், பேனாவையும் கொண்டு வா. எழுதித் தருகிறேன்.”
“இப்பொழுது அப்படித்தான் சொல்லுவாய். சில நாட்கள் போனதும் கிராமத்து வாழ்க்கை உனக்குப் பிடிக்காமல் போகக் கூடும். பட்டிணத்திற்குப் போகலாம் வா என்பாய். நமக்குள் கருத்து வேற்றுமைகள் வரத் தொடங்கும்.”
“அபப்டி ஒரு நாளும் நடக்காது. ஏன் தெரியுமா? உன்னிடம் என்னைக் கவர்ந்த அம்சம் உன்னுடைய தனித்தன்மைதான். உன்னுடன் கலந்துவிட்ட விஷயம் அது. அந்த தனித்தன்மையை நீ இழந்தால் தவிர வேறு எந்தக் காரணத்தினாலேயும் எனக்கு சலிப்பு வராது. சத்தியம் வேண்டுமானாலும் செய்கிறேன்.”
அவன் என் பக்கம் பார்த்தான். என் பேச்சிற்குப் பின்னால் இருக்கும் உண்மையை கண்டறியணும் என்பது போல் அவன் பார்வை தீட்சண்யமாக இருந்தது.
“அம்மாவும், நீயும் பிறகு சந்தித்துக் கொள்ளவே இல்லையா?” நான் கேட்டேன்.
“சந்திக்காமல் என்ன? போன வருடம் கூட தஞ்சாவூரில் ஒரு திருமணத்தில் சந்தித்துக் கொண்டோம். மணமகள் எங்கள அம்மாவுக்கு தூரத்து சொந்தம். மணமகன் உங்க அம்மாவின் சிநேகியின் மகன். அந்த த் திருமணத்திற்கு மாமாவும் வந்திருந்தார். மாமாவுடன் நான் பேசிக்கொண்டிருந்த போது மாமி அங்கே வந்தாள். “யார் இந்தப் பையன்?” என்று கேட்டாள்.
“யாரோ இல்லை? நம் கமலத்தின் மகன் கிருஷ்ணன்.” மாமா சொன்னார்.
“ஓஹோ!” என் பெயரைக் கேட்டதும் மாமியின் முகம் மாறிவிட்டது. “என்ன செய்து கொண்டிருக்கிறான்?” என்று கேட்டாள்.
“விவசாயம் செய்கிறான்.” மாமா பெருமையுடன் சொன்னார்.
“அதைவிட வேறு என்ன செய்ய முடியும்?” இளக்காரமாக பார்த்தாள்.
அந்தத் திருமணத்தில் கூட உங்க அம்மாவுக்கும் எனக்கும் நடுவில் சண்டை வந்தது. வரதட்சணை விஷயத்தில் மாப்பிள்ளை வீட்டார் பிரச்னையைக் கிளப்பினார்கள். நான் சமாதானப்படுத்த முயன்ற போது உங்க அம்மா நடுவில் புகுந்து கொண்டு பெண்வீட்டாரை தாழ்வாகப் பேசினாள். நான் முகத்தில் அடித்தாற்போல் பதில் கொடுத்தேன்.
“சாப்பிட இருக்கோ இல்லையோ. திமிர் மட்டும் நிறையவே இருக்கு” என்றாள்.
“நாக்கை அடக்கிப் பேசுங்கள். எங்களுக்கு இருக்கோ இல்லையோ அதைப் பற்றி உங்களுக்கு என்ன?” என்றேன்.
“கிருஷ்ணா! என்ன இது? சம்பந்தி வீட்டாரை சமாதானப்படுத்துவதை விட்டுவிட்டு நடுவில் நீங்க இருவரும் சண்டை போட்டுக் கொள்வதாவது?” மாமா என்னை பின்னால் இழுத்தார்.
மறந்துபோய்க் கொண்டிருந்த அவமானத்தை அந்த நிகழ்ச்சியால் மறுபடியும் கிளப்பிவிட்டாள் உங்க அம்மா. ஏதோ வேலையாக சென்னைக்கு வந்தபோது சினிமா ஹாலில் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். மீனா! உண்மையைச் சொல்கிறேன். உங்க அம்மா நமக்கு இடையே தாண்ட முடியாத பள்ளத்தாக்கு. என் பெயரைக் கேட்டாலே எரிந்து விழுபவள், உன்னை மனைவியாக அடைந்த பிறகு என்னை உயிருடன் விட்டு வைப்பாளா?”
என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டவன் போல் உட்கார்ந்திருந்தான். மெதுவாக அவன் கையில் கிள்ளினேன்.
இந்த உலகிற்கு வந்தவன் போல் பார்வையைத் திருப்பினான். “அம்மாடியோவ்!” திடீரென்று என் கையை விட்டுவிட்டு எழுந்து கொண்டான்.
“என்ன ஆச்சு? பதற்றத்துடன் கேட்டேன்.
“மணியைப் பார். பொழுது விடிந்து விட்டது போல் இருக்கு.” கடியாரத்தை பார்த்தேன். ஐந்து மணி ஆகப் போகிறது. “மைகாட்!” என்றேன்.
“கிளம்பு. அரைமணியில் உன்னை கொண்டு விடுவதாக மாமாவிடம் சொல்லியிருக்கிறேன்.”
“வீட்டுக்கு நான் போய்த்தான் ஆகணுமா?”
“கட்டாயம் போகணும்.”
“சரி. அப்படி என்றால் ஒரு நிபந்தனை.”
“என்ன அத?”
“நீ என் வருங்காலக் கணவன். உன் பேச்சைக் கேட்பது என் கடமை. அதன்படி போகிறேன்.”
கிருஷ்ணனின் இமைகள் படபடத்தன. சொல்லத் தெரியாத உணர்வு எதையோ கட்டுப்படுத்திக் கொண்டது போல் அவன் தாடை எலும்பு இறுகியது. என் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு சோபாவிலிருந்து எழுப்பினான். அவன் கண்களில் வேதனை, சந்தோஷம் இரண்டும் கலந்த உணர்வு பிரதிபலித்தது.
“மீனா! பொருளாதார ரீதியான வித்தியாசம் மட்டும் இல்லை என்றால் உண்மையிலேயே உன்னைக் கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்து கொண்டிருப்பேன். அந்தஸ்து வேறுபாடு என்னை பின் வாங்கச் செய்கிறது. இல்லாவிட்டால் நான் யாருக்கும் பயப்படுபவன் இல்லை, உங்க அம்மாவையும் சேர்த்து.”
“இப்போ மட்டும் என்னவாம்? நீ என்னை கடத்திக் கொண்டு போவதற்கு பதிலாக நானே உன்னைத் தேடி வந்திருக்கிறேன். எதுவாக இருந்தாலும் ஒன்றுதானே.”
“ஊஹ¤ம். இரண்டும் ஒன்று எப்படி ஆகும்? அந்த சாகசச் செயலில் இருக்கும் சந்தோஷம் இப்படி பணிந்து போவதில் எப்படி வரும்? கிளம்பு. இப்படிப் பேசிக் கொண்டே இருந்தால் நாட்கள் கழிந்துவிடும்.”
“நான் சாரதியை அழைத்துக் கொண்டு பத்துமணிக்கு மறுபடியும் வருகிறேன். அவனிடம் நீ பேசு. அவன் சில விஷயங்களை உன்னிடம் சொல்லுவான். நீ வெறுமே கேட்டுக் கொள். அவன் கேட்டதற்கு ஒப்புக்கொள். அது போதும்.”
“அப்படியே ஆகட்டும் தாயே.”
அது என்ன விஷயம் என்று அவன் என்னை கேட்காததற்கு சந்தோஷப்பட்டேன்.
கிருஷ்ணன் டாக்ஸியில் என்னை கேட்டுக்கு முன்னால் இறக்கி விட்டுப் போனான். இன்னும் முழுவதுமாக விடியவில்லை. வானத்தில் லேசான வெளிச்சம் பரவிக் கொண்டிருந்தது. காகங்கள் கரைந்து கொண்டிருந்தன. நான் சின்ன கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனேன். இரவு முழுவதும் தூங்கா விட்டாலும் எனக்குக் களைப்பாக இருக்கவில்லை. கிருஷ்ணனிடம் நெருக்கமாக, உரிமையுடன் பேசிக் கொண்டிருந்தது சுவர்க்கத்தில் இருப்பது போல் இருந்தது.
மெதுவாக உள்ளே வந்து கொண்டிருந்தவள் திடீரென்று நின்றுவிட்டேன். எதிரே வாசற்கதவு திறந்து கிடந்தது. வாராண்டா ஈசிச்சேரில் யாரோ பின்னால் சாய்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தார்கள். யாரது? அம்மா இல்லையே? என் பயத்தைக் கண்டு எனக்கே சிரிப்பு வந்தது. அம்மாவாக இருந்தால் நான் வீட்டில் இல்லை தெரிந்த பிறகு சும்மா இருப்பாளா? ஓசைப்படுத்தாமல் அருகில் சென்று பார்த்தேன். நான் நினைத்தது சரியாகிவிட்டது. அப்பா என் வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்டு வாசலில் ஈசிச்சேர் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பார் போலும். கண்ணயர்ந்து விட்டார்.
மெதுவாக உள்ளே போய்விட்டேன். ஒருக்கால் அப்பா எழுந்து கொண்டு எப்போ வந்தாய் என்று கேட்டால் அப்பொழுதே வந்து விட்டேன் என்று சொல்லிவிடலாம்.
ஹாலுக்குள் நுழைந்தேன். திருநாகம் மாமி அப்பொழுதுதான் எழுந்து கொண்டாள் போலும். விடாமல் தும்மல் போட்டுக் கொண்டிருந்தாள். மாமி எழுந்து கொண்டதும் குறைந்தது அரை டஜன் தும்மலாவது போடுவாள். அம்மா காதில் விழுந்தால் “ச்சீ… ச்சீ… பாழாய்ப் போன் சகுனம்” என்று திட்டுவாள்.
மாமி எழுந்து கொண்டுவிட்டதால் மாடிக்குப் போகும் முயற்சியைக் கைவிட்டேன். செருப்பைக் கழட்டி சோபாவின் அடியில் தள்ளிவிட்டு, சோபாவில் சுவற்றுப் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டேன். மாமி தும்மல் போட்டுக்கொண்டே ஹாலுக்கு வந்தாள்.
“சின்னம்மாவா! இங்கே படுத்திருக்கீங்களே?” என்றாள். தூங்கிக் கொண்டிருப்பவள் போல் நான் அசையவில்லை. பதில் குரலும் கொடுக்கவில்லை. வெளியே சென்ற மாமி “அட! பெரிய அய்யாவும் வராண்டாவில் தூங்கராங்களே?” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டது காதில் விழுந்தது. அடுத்த நிமிடம் தூக்கம் என்னைத் தழுவிக் கொண்டது.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்