முள்பாதை 52

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

நாளை மறுநாள் நிச்சயதார்த்தம். என் இதயம் பாறாங்கல்லாக கனத்தது. எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொண்டேன். நிச்சயதார்த்தம் நடந்து விட்டால் மட்டும் என்ன? தாலிகட்டும் முன் நின்று போன திருமணங்கள் எத்தனை இல்லை?
அம்மாவும் அப்பாவும் நிச்சயதார்த்த வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள். அன்று காலையில் அம்மா சாரதிக்கு போன் செய்தாள். மதியம் வந்து என்னை கடைத்தெருவுக்கு அழைத்துச் சென்று நிச்சயதார்த்தப் புடவையை வாங்கி வரச் சொன்னாள். அம்மா சாரதியிடம் பேசும்போது கேட்டுத்தான் தீர வேண்டும். பேச்சில் எதிராளியை கட்டிப் போடும் வித்தையில் அம்மா மகா கெட்டிக்காரி. சாரதியிடம் பேசும்போது மட்டும்தான் அம்மாவுக்கு இந்த லயமும், நயமும் வெளிப்படும். எங்களிடம் பேசும்போது இவை எதுவும் மருந்துக்குக் கூட இருக்காது. அம்மாவின் இதயத்தில் சாரதிக்கு தனிப்பட்ட இடம் இருப்பது எல்லோருக்கும் தெரியும். அவனிடம் அப்படி என்ன குணாதிசயம் இருக்கிறதோ அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
அம்மா கேட்டுக் கொண்டது போலவே சாரதி வந்தான். நான் வேண்டுமென்றே தாமதமாகக் கிளம்ப முடிவு செய்தேன். நான் இல்லாத போது கிருஷ்ணனிடமிருந்து போன் வருமோ என்று பயம்! எனக்காக யாராவது போன் செய்தால் உடனே வந்து சொல்லும்படி திருநாகம் மாமியிடம் சொல்லிவிட்டு மாடிக்கு போனேன். அரைமணி நேரத்தில் முடிய வேண்டிய அலங்காரத்திற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டு கீழே வந்தேன்.
போன் எதுவும் வரவில்லை. வெளியே போகும் முன் “யாராவது போன் செய்தால் ஒரு மணிநேரம் கழித்து கட்டாயம் போன் பண்ணச் சொல்லுங்கள்” என்று மாமியிடம் சொல்லிவிட்டு சாரதியுடன் கிளம்பினேன்.
போகும்போது வழியில் சாரதி லேசான கோபம் கலந்த குரலில் கேட்டான். “எல்லா விஷயத்திலேயும் அம்மாவின் விருப்பம் போல் நடந்து கொள்பவளுக்கு இந்தப் புடவையில் மட்டும் என்னுடைய செலக்ஷன் எதுக்கு?” அவனுடைய போக்கைப் பார்த்தால் என்னுடன் இப்படி வருவது கொஞ்சம் கூட பிடிக்காதது போலவும், அம்மாவின் வற்புறுத்தலைத் தட்ட முடியாமல் வந்திருப்பது போலவும் இருந்தது.
“எனக்கு என்ன தெரியும்? அம்மா உங்களுடன் போகச் சொன்னாள்” என்றேன்.
“நாளைக்குக் கல்யாணம் ஆனபிறகு உங்க அம்மா என்னை விட்டுவிடச் சொல்வாள். விட்டுவிடுவாயா?”
“அம்மா ஒருக்கால் அப்படிச் சொன்னால் விட்டுவிட வேண்டியதுது¡ன். அம்மாவுக்கு எல்லாம் தெரியும்.”
சாரதி உள்ளூர ஏதோ முணுமுணுத்துக் கொண்டான்.
“என்ன சொன்னீங்க? எனக்கு எதுவும் கேட்கவில்லை.” ரொம்ப அக்கறையுடன் கேட்டேன்.
“ஒன்றுமில்லை” என்றான்.
எங்களுடைய கார் டி.நகரில் பெரிய ஜவுளிக் கடையின் முன்னால் நின்றது. இருவரும் உள்ளே போனோம். கடை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது.
கடை முதலாளி எங்களுடைய குடும்ப நண்பர். எங்களைப் பார்த்ததும் எழுந்து வரவேற்றார். கடையில் வேலை செய்பவர்கள் விதவிதமான புடவைகளை பிரித்துக் காட்டினார்கள். எந்தப் புடவையைப் பார்த்தாலும் முதலில் நன்றாக இருப்பது போல் தோன்றும். இரண்டாவது தடவை பார்க்கும் போது எதுவும் பிடிக்கவில்லை. கடைக்குள் நுழைந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. சாரதி நன்றாக இருக்கு என்று சொன்னவற்றை நான் குறை சொன்னேன். எனக்குப் பிடித்தவற்றை சாரதி மறுப்பு சொன்னான். கடைக்காரர்களுக்கு சலிப்பு ஏற்பட்டாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் மேலும் மேலும் புடவைகளை எடுத்துப் போட்டார்கள். கடைசியில் மயில் கழுத்து கலர் புடவையை செலக்ட் செய்தேன். சலிப்படைந்த நிலையில் இருந்த சாரதி உடனே சரி என்று சொல்லிவிட்டான்.
எனக்குத் தெரியும். அம்மாவுக்கு இந்தக் கலர் கொஞ்சம் கூட பிடிக்காது. ஒருதடவை அப்பா ஆசைப்பட்டு எனக்கு பாவாடைத் துணியை இந்த கலரில் வாங்கி வந்த போது நன்றாக இல்லை என்று அம்மா அதை வேலைக்காரியிடம் கொடுத்துவிட்டாள். அந்த கலர் எந்த அளவுக்கு தனக்கு பிடிக்காது என்று ஒருமணி நேரம் லெக்சர் கொடுத்தாள். இப்போத சாரதி செலக்ட் செய்தான் என்றால் நிச்சயம் மறுப்பு சொல்ல மாட்டாள். அவ்வளவு வெறுப்பும் எங்கே போய் விட்டது என்று அம்மாவிடம் கேட்டு விடவேண்டும். அதுதான் என் உத்தேசம்.
புடவையை வாங்கிக் கொண்டோம். சாரதி பணம் கொடுப்பதற்காக கௌண்டர் பக்கம் போனான். நான் வெளியே வரும்போது அப்பொழுதுதான் உள்ளே நுழைந்து கொண்டிருந்த ஒரு நபரின் மீது என் பார்வை விழுந்தது. அவன் என்னைப் பார்க்கவில்லை. வேறு பக்கம் போய்க் கொண்டிருந்தான். ஒரே எட்டில் அவனை நெருங்கி கையைப் பிடித்துக் கொண்டேன். திடுக்கிட்டவன் போல் திரும்பிய கிருஷ்ணன் என்னைப் பார்த்ததும் திகைப்பில் ஆழ்ந்தான். அவன் முகத்தில் பிரமிப்பும், வியப்பும் கலந்து தென்ப்டன.
“நீயா? எவ்வளவு அதிர்ஷ்டம்!” என்றான்.
“பலே திருடன் நீ. வந்து மூன்று நாட்களாகியும் என்னைச் சந்திக்கணும் என்று உனக்குத் தோன்றவில்லை. குறைந்த பட்சம் ஒரு போன் கூட செய்யவில்லை.”
அவன் நெற்றிப் புருவம் முடிச்சேறியது. “நன்றாக இருக்கிறது உன் குற்றச்சாட்டு. மாமாவிடம் போன் நம்பர் கொடுத்து உன்னை பேசச் சொல்லி, நான்தான் உன்னுடைய போன்காலுக்காக காத்துக் கொண்டிருந்தேன்.”
இந்த முறை நான் நெற்றியை சுளித்தேன். “அப்பாவிடம் சொல்லியிருந்தாயா? அப்பா எதுவும் தெரியாதது போல் சும்மா இருந்தாரே?”
“பார்த்துப் பார்த்து சலிப்படைந்து இனி உன்னிடமிருந்த போன் வரப் போவதில்லை என்று முடிவு செய்தேன். சும்மா பொழுது போகாமல் குழந்தைகளுக்கு டிரெஸ் வாங்குவோம் என்று கிளம்பினேன்.”
“ராஜியும், நானும் எழுதிய கடிதம் கிடைத்ததா?”
“கிடைத்தது.”
அதற்குள் சாரதி அங்கே வந்தான்.
“யாரு?” என்று கேட்டான். அவன் குரல் தீட்சண்யமாக இருந்தது.
“இவன்… இவன்…. நான்.. கிருஷ்ணன்…” தடுமாறினேன்.
“சிறுவயது நண்பர்கள்.” எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் கிருஷ்ணன் சொன்னான்.
“இவர் மிஸ்டர் சாரதி.” சாரதியை அறிமுகப்படுத்தினேன்.
“என் பெயர் கிருஷ்ணன்.” முறுவலுடன் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டு கையை நீட்டினான்.
சாரதி விருப்பம் இல்லாமலேயே அந்தக் கையைப் பற்றி குலுக்கினான்.
இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் கூர்மையாக பரிசீலித்ததை நான் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். கையை குலுக்கிக் கொண்டே எதிராளியை எடைபோடுவது போல் அவர்கள் பார்த்துக் கொண்டது எனக்கு வித்தியாசமாக, வேடிக்கையாக இருந்தது.
ஒரு நிமிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனமாக நின்று கொண்டிருந்தோம்.
“உங்களுடைய வேலை முடிந்து விட்டது போலிருக்கு. வரட்டுமா?” கிருஷ்ணன் பொதுவாக விடைபெற்றுக் கொண்டு நகர்ந்து விட்டான்.
சாரதி வெளியே நடந்தான். நானும் இயந்திரகதியில் அவனை பின்பற்றினேன். இரண்டு நாட்களாக கிருஷ்ணனிடமிருந்து போன் வரும் என்று காத்திருந்த எனக்கு அவன் இப்படி கண்ணில் பட்டும், வாய்விட்டுப் பேச முடியாமல் போனது மனதிற்கு என்னவோ போல் இருந்தது.
சாரதி போய் காரில் அமர்ந்து கொண்டான். நானும் கதவைத் திறந்து உள்ளே உட்காரப் போனேன். எனக்கு ஏனோ கிருஷ்ணனை மறுபடியும் சந்திக்கவே முடியாதோ என்று தோன்றியது. அந்த பயத்தில் காரில் உட்காரப் போனவள் எண்ணத்தை மாற்றிக் கொண்டு “இப்பொழு§து வருகிறேன்” என்று சொல்லிவிட்டு சாரதியின் பதிலுக்காக காத்திருக்காமல் மறுபடியும் கடைக்குள் ஓடினேன்.
கிருஷ்ணன் உடைகளை தேர்வு செய்து கொண்டிருந்தான். நான் அவன் கையைப் பற்றிக் கொண்டு பதற்றத்துடன் கேட்டேன்.
“எங்கே தங்கியிக்கிறாய்?”
“தாஜ் ஹோட்டல்.”
“ரூம் நம்பர்?”
கிருஷ்ணன் சொன்னான்.
“சரி. நான் சரியாக நாலுமணிக்கு உன் அறைக்கு வருகிறேன். அந்த சமயத்தில் வேறு யாராவது ரூமில் இருந்தால் வெளியில் அனுப்பிவிடு. உன்னிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும்.”
“மீனா!”
“இப்போ எதுவும் சொல்லாதே. வரட்டுமா… பை…” வேகமாக சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டேன்.
கடைக்கு எதிரே நிறுத்தியிருந்த காரில் அமர்ந்திருந்த சாரதிக்கு நான் கிருஷ்ணனிடம் நெருக்கமாக நின்றபடி பேசிய காட்சி கண்ணில் பட்டிருக்கும். ஸ்டீரிங்கை அழுத்தமாக பற்றியிருந்தது போல் அவன் முகத்தில் கோபம் நிழலாடிக் கொண்டிருந்தது. நான் வந்து அமர்ந்து கதவைச் சாத்திய பிறகும் அவன் காரை ஸ்டார்ட் செய்யவில்லை.
“என்ன பேசிக் கொண்டிருந்தாய்?”
“ஒன்றுமில்லை.”
“யாரவன்?”
“சொன்னேனே கிருஷ்ணன் என்று.”
“எனக்கு போக்குக் காட்டுவதற்காக சொல்லப்பட்ட பதில் அது. அதைக்கூட புரிந்துகொள்ள முடியாத முட்டாள் என்று நினைத்துவிட்டாயா?”
பின்னாலிருந்து கார் ஒன்று வந்து நின்றது. எங்களுடைய கார் குறுக்கே இருந்ததால் ஹாரனை அடித்தார்கள். சாரதி காரை ஸ்டார்ட் செய்தான். ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்தினான் போலும். விடுபட்ட அம்புபோல் கார் வேகமாகப் பறந்தது. அன்று வழியில் எந்த விபத்தும் நடக்காமல் போனது எங்க இருவரின் அதிர்ஷ்டம்தான் என்று சொல்ல வேண்டும்.
கார் நேராக எங்கள் வீட்டுக்குப் போகாமல் சாரதியின் வீட்டு வாசலில் வந்து நின்றது. சாரதி கார நிறுத்திவிட்டு சீரியஸாக சொன்னான். “மீனா! உன்னிடம் முக்கியமான விஷயம் பேசணும். இறங்கி உள்ளே வா.”
சங்கடத்துடன் பார்த்தேன். “நான் அவசரமாக வீட்டிற்குப் போகணும். நீங்க கேட்க நினைப்பதை இங்கேயே கேட்டு விடலாமே?”
“இங்கே உட்கார்ந்து பேசுவது நன்றாக இருக்காது. நீ இறங்கி உள்ளே வரவில்லை என்றால் உங்க அம்மாவிடம் இப்பொழுதே உன் சிறுவயது நண்பனைப் பற்றி சொல்லி, அவனுக்கும் உனக்கும் எந்த விதமான அறிமுகமோ, அந்த நட்பு எதுவரையில் என்றோ தெரிந்துகொள்கிறேன்.”
அவனுடைய மிரட்டலுக்கு எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. அவன் கேட்கப் போகும் முக்கியமான விஷயம் எனக்குத் தெரியாமல் இல்லை. இங்கே காரில் கேட்டாலும், வீட்டில் உட்கார்ந்து கேட்டாலும் நான் சொல்லப் போகும் பதில் ஒன்றுதான். காரைவிட்டு இறங்கினேன்.
முன்னால் சாரதியும், அவனைத் தொடர்ந்தபடி நானும் அவனுடைய டிராயிங் ரூமில் கால் எடுத்து வைத்தோம். உள்ளே நுழைந்ததும் இரண்டு பேரும் ஒரே சமயத்தில் நின்றுவிட்டோம். ஹால் சோபாவில் தலைகுனிந்தபடி ராஜேஸ்வரி அமர்ந்திருந்தாள். சாரதியைப் பார்த்ததும் விருட்டென்று எழுந்து நின்ற ராஜேஸ்வரி அவனுக்கு பின்னால் வந்த என்னைப் பார்த்ததும் திடுக்கிட்டாள். அவள் கண்கள் பயத்தினால் படபடத்தன. முகம் வெளிறிப் போய்விட்டது.
“ராஜேஸ்வரி! நீயா?” சாரதி வியப்படைந்தவன் போல் பார்த்தான்.
“நான்…. நான்… எதற்காக வந்தேன் என்றால்…” ராஜேஸ்வரியால் வார்த்தையை முடிக்க முடியவில்லை. குரல் நடுங்கியது.
ஒரு நிமிஷம் யார் என்ன பேசுவது என்று தெரியாதது போல் நின்று கொண்டிருந்தோம். கடைசியில் சாரதி தானே சொன்னான். “உட்கார்… உட்கார். சமீபகாலமாக எனக்கு ஞாபகமறதி அதிகமாகிவிட்டது. உன்னை இங்கே வரச்சொன்ன விஷயத்தையே மறந்து போய்விட்டேன்” என்று சொல்லிக் கொண்டே என் பக்கம் திரும்பினான். “மீனா! ராஜியை இங்கே வரச்சொல்லி நான்தான் அழைத்தேன். அவள் ரொம்ப அழகாக எம்பிராயிடரி செய்வாள் இல்லையா. புதிதாக கர்டென்கள் வாங்கி எம்பிராயிடரி செய்து தரச்சொல்லி கேட்டுக் கொண்டேன். எந்த கலர் வாங்கினால் நன்றாக இருக்கும் என்று வந்த பார்த்துச் சொல்லச் சொன்னேன்” என்றான்.
அப்படியா என்பதுபோல் பார்த்தேன். ராஜேஸ்வரி உட்காரவில்லை. “நான் … அப்புறமாக வருகிறேன்” என்றாள். அவள் முகத்தைப் பாரத்தால் நினைவு தப்பி கீழே விழந்து விடுவாள் போல் இருந்தது.
அதற்குள் வெளியிலிருந்து “மிஸ்டர் சாரதி!” என்ற குரல் கேட்டது. சாரதி வெளியே சென்றான்.
நான் ராஜியை எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவள்தான் பயந்துவிட்டவள் போல் “அண்ணி! உனக்குப் புண்ணியம் இருக்கட்டும். என்னை உடனே வீட்டுக்கு அழைத்துப் போ. எனக்கு தலையை சுற்றிக் கொண்டு வருகிறது” என்றாள்.
“என்ன ஆச்சு ராஜி?” ஆதரவுடன் அவளுடைய கையைப் பற்றிக் கொண்டேன். அதற்குள் சாரதி உள்ளே வந்தான்.
“எனக்காக ஆபீஸ்காரங்க வந்திருக்காங்க. பத்து நிமிடஙகள் இருண்டு பேரும் உள்ளே உட்கார்ந்திருக்க முடியுமா?” என்றான்.
“ஊஹ¤ம்” என்றேன்.
“ராஜேஸ்வரி கர்டெனுக்காக துணியை செலக்ட் செய்து தருவதாகச் சொன்னாள்” என்றான்.
“அப்புறமாக வருவாள்.”
“மாலையில் கட்டாயம் வரணும். ராஜேஸ்வரி! வருவாய் இல்லையா?”
கட்டாயம் என்ற வார்த்தையை அவன் உச்சரித்த விதத்தில் வேறு ஏதோ அர்த்தம் இருப்பது போல்தோன்றியது.
வருகிறேன் என்பது போல் ராஜி தலையை அசைத்தாள்.
“மீனா! மாலையில் ராஜேஸ்வரியை கட்டாயம் அனுப்பிவை. இல்லாவிட்டால் நானே உங்க அம்மாவிடம் பேசவேண்டியிருக்கும்.” சாரதி திரும்பத் திரும்ப சொன்னாளன். அவன் முகத்தில் பதற்றம் வெளிப்பட்டது. என்னிடம் முக்கியமாக பேசணும் என்று சொன்ன விஷயத்தையே மறந்து விட்டான் போலும். ராஜியும், நானும் வெளியே வந்தோம். சாரதியின் காரை டிரைவ் செய்வது எனக்குப் பழக்கம்தான்.
காரில் வரும்போது ராஜி கைக்குட்டையில் பத்திரமாக மடித்து வைக்கப்பட்ட கடிதத்தை எடுத்து என் பக்கத்தில் வைத்தாள்.”அண்ணி! சற்றுமுன் நீங்க கடைத்தெருவுக்குப் போகும் முன், நீ புடவையை மாற்றிக்கொள்ள மாடிக்குப் போயிருந்த போது சாரதி என்னை அழைத்து வலுக்கட்டாயமாக இந்த கடிதத்தை என் கையில் திணித்தான். நீ அதைப் படித்தால் நான் சாரதியின் வீட்டுக்கு எதற்காக போனேன் என்று உனக்கே புரியும்.”
போக்குவரத்து அதிகமாக இல்லாத சாலையில் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு கடிதத்தை எடுத்துப் படித்தேன்.
பிரியமுள்ள ராஜேஸ்வரி,
ஒரு வாரமாக இரவும் பகலும் நன்றாக யோசித்து விட்டு, பிறகு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். முழுவதுமாக படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மீனாவை என் மனைவியாக அடைய வேண்டும் என்று ஒரு காலத்தில் நான் ஆர்வம் காட்டியது உண்மைதான். மீனாவின் அழகு, ஐஸ்வரியம், முக்கியமாக அவளுடைய அம்மாவின் தனித்தன்மை என்னை பலமாக ஈர்த்தன. படிப்பு மட்டுமே சொத்தாக இருக்கும் எனக்கு மாமியார் வீட்டு ஆதரவு கிடைத்தால் அந்த பக்கபலத்தில் வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேற முடியும் என்று கணக்குப்போட்டேன். ஆனால் நாளடைவில் என் பிரமைகள் விலகிவிட்டன. மீனா இவ்வளவு முட்டாளாக இருப்பாள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அம்மாவின் பாதிப்பு அவள்மீது நிறைய இருக்கிறது. அம்மா தண்ணீரை காட்டி இதுதான் பால் என்று சொன்னால் மீனா அப்படியே நம்பிவிடுவாள். பணக்கார திமிரும், முட்டாள்தனமும் கொண்ட மீனாவை பார்க்கப் பார்க்க என் காலடியில் நிலம் நழுவிக் கொண்டிருப்பதுபோல் உணர்ந்தேன். மீனாவுடன் என்னுடைய நிச்சயதார்த்தம் நடக்கப் போவதில்லை. கிருஷ்ணவேணி அம்மாளிடம் இந்த விஷயத்தைச் சொல்லிவிடப் போகிறேன். அவர்கள் இதை எப்படி எடுத்தக் கொள்வார்களோ எனக்கு நன்றாகவே தெரியும். அவர்களுடன் கருத்து வேற்றுமை வந்து விட்ட பிறகு நான் இங்கே இருக்க வேண்டாமென்று முடிவு செய்துவிட்டேன். கூடிய சீக்கிரம் டில்லிக்குப் போய்விடப் போகிறேன். மீனாவைப் பார்த்த எனக்கு பணக்காரவீட்டுப் பெண்கள் என்றாலே பயம் வந்துவிட்டது. ரொம்ப சாதாரண குடும்பத்திலிருந்து வந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளணும் என்று நினைக்கிறேன். அந்தப் பெண் நீயாகவே ஏன் இருக்கக் கூடாது. மீனாவின் அம்மாவைக் கண்டு நீ பயப்பட வேண்டியது இல்லை. உன்னை எனக்குப் பிடித்திருப்பதாக நானே அந்த அம்மாளிடம் சொல்லிவிடப் போகிறேன். உன்னைப் பார்த்த பிறகு எனக்கு மனைவியாக வரப் போகிறவள் இப்படித்தான் இருக்கணும் என்ற அபிப்பிராயம் ஏற்பட்டது. ராஜேஸ்வரி! என்னை உனக்கு பிடித்திருக்கிறாதா என்று நீதான் என்னிடம் சொல்ல வேண்டும். உனக்கும் விருப்பம் என்றால் நாமிருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டு இங்கிருந்து போய்விடலாம்.
இன்று மாலையில் நீ என் வீட்டுக்கு வந்தால் எல்லா விஷயங்களையும் மனம் விட்டு பேசிக்கொள்ளலாம். சிநேகிதிக்கு அநியாயம் செய்தது போல் ஆகிவிடுமோ என்று நீ தயங்க வேண்டியதில்லை. இதில் உன்னுடைய பிரமேயம் எதுவும் இல்லை. என்னை கவர வேண்டும் என்றோ, உன் பக்கம் ஈர்த்துக் கொள்ளணும் என்றோ ஒருநாளும் நீ முயற்சி செய்ததில்லை. நீ வரவில்லை என்றாலும் நான் மினாவைத் திருமணம் செய்து கொண்டிருக்க மாட்டேன். மீனாவுடன் திருமணத்தை நான் வெறுப்பதற்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தக் கடிதத்தைப் படித்த பிறகும் நீ என்னுடன் பேசுவதற்கு வரவில்லை என்றால் அதை உன் அங்கீகாரமாக எடுத்துக்கொள்வேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கு சம்மதிப்பாய் என்ற எதிர்பார்ப்புடன் இந்தக் கடிதத்தை முடிக்கிறேன்.
இப்படிக்கு
சாரதி

படித்து முடித்துவிட்டுப் பெருமூச்சு விட்டேன். கடிதத்தை பத்திரமாக மடித்து ராஜியின் கையில் கொடுத்தேன். அவள் சாலையின் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன யோசனை ராஜி?”
“என்னை உடனே மெலட்டூருக்கு அனுப்பிவிடு.”
“நீ என்ன தவறு செய்தாய்?”
“உனக்குத் தெரியாது.” ராஜி என் பக்கம் திரும்பினாள். விழிகளில் நீர் சுழல மேலும் சொன்னாள். “அண்ணி! மெலட்டூரில் என் திருமணம் நின்று போனதில் ஏற்பட்ட பிரச்னைகளால் பட்டணத்தில் உன்னிடம் வந்து சில நாட்கள் இருந்தால் அந்த வேதனையை மறந்து போகலாம் என்று ஆசைப்பட்டேன். இப்படி விபரீதமாக நடக்கும் என்று தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேன். இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை என்றால் நீ நம்புவாயா?”
ராஜியின் தலையை என் தோளில் சாய்த்துக் கொண்டேன். “பைத்தியம் போல் பேசாதே. இதில் உன்னுடைய பிரமேயம் இல்லை என்று சாரதியே சொல்லிவிட்டானே.”
“எனக்கு ஏனோ பயமாக இருக்கிறது.”
“விஷயம் இவ்வளவு தூரத்திற்கு வந்த பிறகு என்னை தனியாக விட்டுவிட்டு போகப் போகிறாயா?”
“நான் இருந்தால் இன்னும் பிரச்னைகள் வரும்.”
“வரட்டுமே. எது நடந்தாலும் நம் நன்மைக்குத்தான் என்று நம்புகிறவள் நான். இன்று இந்தக் கடிதத்தைப் பார்த்த பிறகு என் மனம் எவ்வளவு லேசாக இருக்கிறது தெரியுமா?”
“அண்ணி! உன் பேச்சு எனக்குப் புரியவில்லை.”
“இரண்டு நாட்கள் பொறுமையாக இரு. போகப் போக உனக்கே புரியும். பைத்தியம் போல் யோசிப்பதை விட்டு தைரியமாக இரு. எங்கே சத்தியம் செய்து கொடு.” கையை நீட்டினேன். ராஜி என் கையைப் பற்றிக் கொண்டாளே தவிர நான் கேட்டது போல் சத்தியம் செய்து தரவில்லை.

Series Navigation