மின் அஞ்சல்

This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


மின் அஞ்சல் தோன்றி 2001 ஆம் ஆண்டோடு முப்பது வயது முடிகிறது; அமெரிக்கப் பொறியாளர் ரே டோம்லின்சன் (Ray Tomlinson) 1971 ஆம் ஆண்டு இம்முறையினை அறிமுகப் படுத்தினார். ஆனால் அவர் அனுப்பிய முதல் செய்தி என்ன, யாருக்கு அதை அனுப்பினார் என்பதை அவராலேயே நினைவுகூற இயலவில்லை. கேம்பிரிட்ஜில் முதன்மைப் பொறிியாளராகப் பணியாற்றும் அவருக்கு நினைவில் இருப்பதெல்லாம் 200 வரிகள் அடங்கிய குறியீடுகளும், இரு கணினி நிரல்களும் (programs) மட்டுமே. அவற்றுள் ஒரு நிரல், கோப்பு மாற்றங்களுக்கும், மற்றொன்று செய்தி அனுப்புவதற்கும் பயன்பட்டவை. இந்நிரல்களில் இருந்த குறை என்னவெனில் அனுப்புவோரும், பெறுவோரும் ஒரே வகையான கணினியைப் பெற்றிருந்தால் மட்டுமே, அவற்றிலுள்ள அஞ்சல் பெட்டிகள் இயங்கி, செய்திப் பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருந்தது. விரைவில் இக்குறையை டோம்லின்சன் போக்கினார். கணினி வலையமைப்பில் (computer network) தொலை தனியாள் அஞ்சல் பெட்டிகளை (remote personal mailboxes) உருவாக்கி செய்திகளைப் பெறுவதற்கும், அனுப்புவதற்குமான வழிகளை உருவாக்கினார். மேலும் தற்போது அனைவருக்கும் பழக்கமான @ என்ற குறியீட்டைப் பயன்படுத்தி, உரியவருக்குச் செய்தியை, சரியாகச் சேர்ப்பிக்கும் முறையை உருவாக்கியவரும் இவரே. முதன் முதலில் மின் அஞ்சல் வசதி அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது; ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் மிக முக்கியமான தொலைத் தொடர்புத் தகவல் வசதியாக மின் அஞ்சல் வளர்ச்சியுற்று விளங்குகிறது.

அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலின்போது உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தோருக்கும் மின்அஞ்சல் ஒன்று மட்டுமே நம்பகமான இணைப்புப் பாலமாக விளங்கியதை நாம் அறிவோம். தொலைபேசி இணைப்புகள் செயலிழந்து விட்ட நிலையில், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் போன்ற அமெரிக்க நகரங்களையும் உலகின் பிற பகுதிகளையும் தொடர்புபடுத்த மினஞ்சல் மட்டுமே பெரிதும் உதவியது. ஆனால் அதற்கடுத்த ஒரு வாரத்திலேயே மின் அஞ்சல் வழியே நிம்டா (nimda) என்ற கணினி நச்சு நிரல் (computer virus) பரவி, கணினி வலையமைப்பையே நிலைகுலையச் செய்து விட்டது; பல்லாயிரம் கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. மின் அஞ்சல், பயனர்களுக்கு (consumers) விருப்பத்தை ஊட்டுகின்ற அதே வேளையில் வெறுப்பையும் ஊட்டத் தவறுவதில்லை. ஒரே வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைய வேண்டுமா ? வீட்டில் உட்கார்ந்து கொண்டே ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டுமா ? படிக்காமலே டாக்டர் பட்டம் பெற வேண்டுமா ? இப்படிப் பல விளம்பரங்களை மின் அஞ்சலில் பார்த்து ஏமாறுவோரும் உண்டு. எனவே பிற தகவல் தொடர்பு சாதனங்களில் உள்ள நிறை, குறைகள் அனைத்தும் மின் அஞ்சலிலும் உண்டு என்பதை நினைவில் கொள்வோம்.

மின் அஞ்சல் தோன்றிய ஆண்டுக்கு மீண்டும் செல்வோம்; 1971 இல் மின் அஞ்சல் தோன்றியபோது, அது பெரும் வெற்றியை அளித்தது என்று கூறுவதற்கில்லை. அப்போது சில நூறு பேரே இந்த வசதியைப் பயன்படுத்தினர்; மேலும் மின் அஞ்சலுக்கு முக்கியத் தேவையான மோடெம் (modem) அன்று மிகக் குறைந்த வேகத்திலேயே, அதாவது இன்றைய வேகத்தில் இருநூறில் ஒரு பங்குக்கும் குறைவாகவே பணியாற்றியது; அதனால் மிகக் குறைந்த அல்லது சிறிய செய்திகளையே அப்போது அனுப்ப முடிந்தது. 1985 ஆம் ஆண்டு வாக்கில் தணியாள் கணினி (personal computer–pc) பயன்பாட்டிற்கு வந்த பிறகே மக்களும், மாணவர்களும், ஆய்வாளர்களுமாக கோடிக் கணக்கானவர்கள் இவ்வசதியைப் பயன்படுத்தத்துவங்கினர். 1990 களில் வைய விரிவு வலை (world wide web – www) அறிமுகப்படுத்தப்பட்டபின் இணையப் பயனாளர்களும், மின் அஞ்சலைப் பயன்படுத்துவோரும் பல்கிப் பெருகி விட்டனர். “ அறிமுகம் இல்லத ஆயிரக்கணக்கானவர்கள் எனது கண்டுபிடிப்பைப் பாராட்டியும், சிலர் குறை கூறியும் செய்தி அனுப்புகின்றனர்; ஆனால் அவை அனைத்தும் எனக்கு மின் அஞ்சல் வழியாகவே வருகின்றன”, என்று ரே டோம்லின்சன் கூறுகிறார்.

இணையத்தின் சாதாரணப் பயன்பாடு

இணையத்தில் மிக முக்கிய பயன்பாடாக விளங்குவது மின் அஞ்சல் சேவையே. இதற்குக் காரணம் இதன் விரைவுத்தன்மை, செலவின்மை, நம்பகத்தன்மை ஆகியனவே. கணினியின் முன்னர் உட்கார்ந்து கொண்டே செய்திகளை அனுப்பவும், பெறவும் இயலும்; ஒரே செய்தியைப் பலருக்கு ஒரே நேரத்தில் எவ்விதக் கூடுதல் செலவுமின்றி அனுப்ப இயலும். ஒரே வகையான செய்தி, அறிக்கை, விளம்பரம், நிகழ்ச்சி நிரல்கள் போன்றவற்றைப் பலருக்கு அனுப்ப வேண்டிய தேவை ஏற்படும் போது இவ்வசதி பெரிதும் உதவுகிறது.

மின் அஞ்சல் மனோ வேகத்தில் செல்லுகிறது எனில், சாதாரண அஞ்சல்கள் முயல் வேகத்தில் கூட அல்ல, ஆமை வேகத்தில் தான் செல்லுகின்றன; அதனால்தான் ஆங்கிலத்தில் சாதாரண அஞ்சல் சேவையை நத்தை அஞ்சல் (snail mail) என்றே கூறுகின்றனர். மேலும் மின் அஞ்சலுடன் பல்வேறு மின்னணுக் கோப்புகளையும் (electronic files), அதாவது, ஆவணங்கள் (documents), ஒலிக்கோப்புகள் (sound files), ஒளிப்படங்கள் (photographs) போன்றவற்றையும் இணைத்து உலகின் எப்பகுதிக்கும் சில நொடிகளில் போய்ச்சேருமாறு அனுப்பிட இயலும். டோமில்சனின் முயற்சியினால் இணையத்தில் இணைந்துள்ள எக்கணினிக்கும் செய்திகளை அனுப்புவது எளிதாயிற்று; இதற்கு உதவுவது அவரது கண்டுபிடிப்பான @ குறியீடே ஆகும். பொதுவாக மின் அஞ்சலில் அதிகமாக அனுப்பபடுவது எழுத்து வடிவில் அமைந்த உரைச் செய்திகளே (text). பல்வேறு நீண்ட இணைப்புகளையும் (attachments) கூடச் சுருக்கமான உரைச் செய்தியோடு இணைத்தே அனுப்புகிறோம்.

மின் அஞ்சலின் எளிமைத்தன்மை

ஒவ்வொரு நாளும் இணைய உலகில் கோடிக்கணக்கான மின் அஞ்சல்கள் அனுப்பபடுகின்றன. மிகக் குறுகிய காலத்தில் மின் அஞ்சல் பலராலும் கையாளப்படுகின்ற தகவல் தொடர்புச் சாதனமாக வளர்ந்து விட்டது; மேலும், நம்பமுடியாத அளவுக்கு இஃது ஓர் எளிய சாதனமாகும். மின் அஞ்சல்களை உருவாக்கவும், அனுப்பவும், பெறவும் நமது கனினியில் மின் அஞ்சல் பயனர் (e-mail client) என்ற மென்பொருள் (software) நிறுவப்பட்டு, அக்கணினி ஒரு வலையமைப்போடு (network) இணைக்கப்பட வேண்டும்; இதற்கு மின் அஞ்சல் சேவையகத்தை (e-mail server) வழங்கும் இணயச் சேவை நிறுவனம் (Internet Service Provider–ISP) பொறுப்பேற்கும். மேற்கூறிய இணையச் சேவையகம், இணையத்தோடு நிரந்தரமாக இணைக்கப்பெற்றிருக்கும்; அஞ்சல்களைப் பெற்று, சேமித்து, முகவரியைச் சரிபார்த்து, உரியவருக்கு அவற்றைச் சேர்ப்பிக்க நமது அஞ்சலகங்கள் என்னென்ன செய்கின்றனவோ அப்பணிகளையெல்லாம் இணையச் சேவையகம், தனது பயனர் சார்பாகச், செய்கிறது எனலாம்.

சேமிக்கப்பட்ட செய்திகள் அனைத்தும் மின் அஞ்சல் பயனருக்கு அவருடைய தனியாள் கணினியில் (personal computer) உள்ள அஞ்சலக விதிமுறை 3 (post office protocol3 – pop3) மூலம் மீட்டுத்தரப்படுகிறது; மேற்கூறிய pop3 விதிமுறை என்பது பயனர்/சேவையர் விதிமுறையாகும் (client/server protocol). இவ்விதிமுறையின்படி, செய்திகள் பெறப்படுதல், சேகரிக்கப்படுதல், உரியவருக்குச் சேர்ப்பித்தல் ஆகியன மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் பயனர் ஆணையிடும்போது அவருடைய மின் அஞ்சல் முகவரிக்கு வந்துள்ள அனைத்து அஞ்சல்களையும் இணையச் சேவையகத்தோடுடு தொடர்பு கொண்டு, பதிவிறக்கம் செய்து தருவதும் அவ்விதிமுறையின் மூலமே நடைபெறுகிறது.

அனுப்பவேண்டிய செய்திகள், பெறுநர் மின் அஞ்சல் முகவரி ஆகியவற்றைத் தட்டச்சு செய்து பின்னர் ‘அனுப்புக (send) ‘ என்னும் பொத்தான் (button) மீது சொடுக்கினால் (click), உடனே பெறுநர் முகவரிக்கு செய்தி அனுப்பப்படுவதுடன், அனூப்பப்பட்ட தகவலும் உடனே தரப்படும்; இதற்கு ஆகும் நேரம் ஒரு சில வினாடிகளே. தற்போது மின் அஞ்சல் முகவர் என்பது தொலைபேசி எண்ணைப்போல தனிப்பட்டோருக்கும், நிருவனங்களுக்கும் பயன்பாட்டில் உள்ளது. மின் அஞ்சல் முகவரியைப் பார்த்தவுடனே, அது பற்றிய விவரங்களை நாம் அறிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டக editor@ariviyal.co.in. என்ற மின் அஞ்சல் முகவரியைக் காண்போம்; இதில் @ என்னும் குறிக்கு முன் உள்ளது தனிப்பட்டவர் பெயர் அல்லது நிறுவனத்தின் பெயராகும். இவ்வெடுத்துக்காட்டில் editor என்பது அறிவியல் எனும் இதழின் ஆசிரியரைக் குறிக்கிறது; @ குறியீட்டிற்குப் பின்னர் வருவது அவருடைய மின் அஞ்சல் பெட்டி அமைந்துள்ள கனினி முகவரியைக் குறிக்கும்; இங்கு .in என்பது இந்தியாவையும், .com அறிவியல் சேவையரில் (server) அமைந்துள்ள களத்தையும் (domain) குறிக்கும்.

தனிப்பட்டவருக்கான ஒரு மின் அஞ்சல் முகவரியைக் காண்போம். raghavan@yahoo.com எனும் முகவரி ராகவன் எனும் தனிப்பட்டவருக்கு யாஹூவில் மின் அஞ்சல் பெட்டி உள்ளது என்பதைக் குறிக்கிறது; அடுத்து www.yahoo.com எனும் வலைத்தளத்தில் (web) அவருக்கு இலவச மின் அஞ்சல் கணக்கு உள்ளது என்ற விவரமும் இதில் அடங்கியுள்ளது. மின் அஞ்சலை இரு வழிகளில் அனுப்பலாம்; ஒன்று மின் அஞ்சல் மென் பொருளைப் பயன்படுத்தி அனுப்புதல்; மற்றொன்று மின் அஞ்சலை நிர்வகிக்கும் வலை உலவி (web browser) மென்பொருளைப் பயன்படுத்தி அனுப்புவது. பெரும்பாலான அஞ்சல்கள் வலை அடிப்படையிலான மின் அஞ்சல் சேவையைப் பயன்படுத்தியே அனுப்பப்படுகின்ரன. யாஹூ, ஹாட்மெயில் போன்றவை வழியே அனுப்பபடும் மின் அஞ்சல்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இணையத்தோடு தொடர்பு ஏற்பட்டவுடன், மின் அஞ்சல் வழி செய்தி அனுப்ப, அதற்கான மென்பொருள் தேவைப்படும். சில மென்பொருள்களை இலவசமாகப் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம்; சில மென்பொருள்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. றிவ்வாறு விற்கப்படும் மென்பொருள்களில் மின் அஞ்சல் அனுப்புவதற்கான பல்வேறு வசதிகள் இருக்கும். நாம் அனுப்பும்/பெறும் மின் அஞ்சல் செய்திகள், அவ்வப்போது தொடர்பு கொள்ளும் மின் அஞ்சல் முகவரிகள் ஆகியவற்றைச் சேமித்து வைத்துக் கொள்ளலாம்; அஞ்சலுடன் வரும் அல்லது அனுப்பும் இணைப்புகளையும் சேமித்துக் கொள்ளமுடியும்; ஒரே செய்தியைப் பல முகவரிகளுக்கும் எளிதாக அனுப்பிடக்கூடும்; பல்வேறு கோப்புறைகள் (folders), துணைக்கோப்புறைகளை (sub folders) உருவாக்கி செய்தித்தலைப்புகள் அடிப்படையிலும், முகவரிகள் அடிப்படையிலும் அவற்றை நிர்வகிக்கவும் முடியும்.

மின் அஞ்சல் சேவையின் பயன்கள்

இணையச் சேவையில் மிக அதிகமாகப் பயன்படுவது மின் அஞ்சல் வசதியே; உலகின் எந்த மூலைக்கும், யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எந்தச் செய்தியை வேண்டுமானாலும் மின் அஞ்சல் வழி அனுப்பிட இயலும்; செய்தியை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் ஆகும் நேரமும், செலவும் மிகக் குறைவு; இக்காரணங்களால் தகவல் தொடர்புத் துறையில் மின் அஞ்சலின் மூலம் ஒரு மறுமலர்ச்சியே ஏற்பட்டுள்ளதெனில் அது மிகையன்று. விவாதங்கள், உரையாடல்கள், செய்திப் பரிமாற்றங்கள், குரிப்புரைகள் வழங்குதல் இப்படிப் பலவற்றையும் மின் அஞ்சல் வழி நடத்திட இயலும்.

மின் அஞ்சலின் பயன்கள் சிலவற்றை இங்கு தொகுத்துக் காண்போம்:

ஃ இப்போதுள்ள தகவல் தொடர்பு முறைகளிலேயே மிகவும் மலிவானது மின் அஞ்சல் சேவைதான்

ஃ மின் அஞ்சல் சேவையில் தொலைபேசியின் திறனும், விரைவுத் தன்மையும் எழுத்து வழியான அஞ்சல் முறையுடன் இணைக்கப்படுகிறது

ஃ தொலைபேசியில் கிடைக்காத, பெற இயலாத சில கூடுதல் வசதிகளும் இதில் உண்டு; ஆவணங்களையும் (documents) மற்றக் கணினிக் கோப்புகளையும் (computer files) மின் அஞ்சலுடன் இணைத்து அனுப்ப இயலும்

ஃ மின் அஞ்சலுக்கு தூரம், நேரம் ஆகியவை பொருட்டல்ல; எங்கே வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இதன்வழி தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்; அலுவலக நேரம் காலை 9 முதல் மாலை 5 வரை என்ற கட்டுப்பாடும், சலிப்பும் இதில் இல்லை.

ஃ மனிதர்களுக்கிடையே நேரடித் தொடர்பு என்பதை, விருப்பத்திற்கேற்ப, குறைக்கவும், தவிர்க்கவுக் கூடும்

ஃ ஒரே நேரத்தில் பலருடன் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்; அஞ்சல் வழி அனுப்புவதில் உள்ள அஞ்சல் வில்லை (stamp) ஒட்டுதல், பதிவு அஞ்சலில் (registered post) அனுப்புதல், ஒப்புகைச் சீட்டுக்காகக் (acknowledgement receipt) காத்திருத்தல் ஆகியவை அறவே தவிர்க்கப்படுகின்றன

ஃ சரியான முறையில் பயன்படுத்தினால் மின் அஞ்சல் நாகரிகமான சமுதாயப் பாலமாக விளங்கிடும்

இப்படிப் பல்வேறு பயன்கள் இருப்பதால் மின் அஞ்சலைப் பயன்படுத்துவோர் நாளுக்குநாள் பெருகி வருவது கண்கூடான உண்மை. இவ்வசதியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2000 ஆவது ஆண்டில் 505 மில்லியனாக இருந்த்தது; வரும் 2005 ஆம் ஆண்டில் இத்தொகை 1200 மில்லியனாக உயரும் என்ரு எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் மின் அஞ்சலில் சில குறைகளும் இல்லாமலில்லை; இது முழுக்க முழுக்க பாதுகாப்பானது, ரகசியத்தைப் பாதுகாக்கக் கூடியது என்று சொல்வதற்கில்லை; மின் அஞ்சல் வழி நச்சு நிரல்கள் (viruses) பரவி நமது கனினியைப் பாழாக்கும் அபாயமும் உண்டு. தேவையற்ற, எரிச்சலூட்டும் விளம்பரங்கள், தகவல்கள், கடிதங்கள் ஆகியன நம்து மின் அஞ்சல் முகவரிக்கு வந்து சேர்வதால், வெறுப்பும், சலிப்பும் ஏற்படும்.

மற்ற தொழில்நுட்பங்களைப் போன்றே, காலப்போக்கில் மின் அஞ்சல் தொழில் நுட்பத்திலும் மென்மேலும் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது; இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் கண்டிப்பாக உயரும். ஏற்கனவே குரல் அஞ்சல் (voice mail), ஒளியுரு அஞ்சல் (video mail) எனப் பல வசதிகள் வந்து விட்டன. பொதுவாக மனித இனம் கூடி வாழ்கின்ற இனம்; ஒருவரோடு ஒருவர் தொடர்புகொண்டு உள்ளத்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஆறுதலும், மகிழ்ச்சியும் அடையாத மனிதர்களே இல்லை. எனவே மின் அஞ்சல் மனித குலத்திற்கு அளித்துள்ள பயன் மிக அதிகம். இவ்வசதியின் விளைவாக “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கோட்பாட்டின் உண்மைப்பொருளை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனில் அது மிகையன்று.

***

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

மொழிக் கல்வித் துறை (தமிழ்)

வட்டாரக் கல்வியியல் நிறுவனம்

மைசூர் 570006

Dr R Vijayaraghavan BTech MIE MA MEd PhD

Dept. of Language Education (Tamil)

Regional Institute of Education

Mysore 570006

Series Navigation