மாறுதலின் இக்காலகட்டத்தில்…….

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

எட்டு நூல் வெளியீட்டு விழாவில் ஜெயமோகன் ஏற்புரை


இலக்கிய விமரிசனம் செய்வது ஒரு படைப்பாளிக்கு ஆபத்தான விஷயம். ஏனெனில் இலக்கியவ்மிரிசனம் சார்ந்து சொல்லப்படும் ஒரு சொல் உடனடியாக ஒன்பது சொற்களை பதிலாக உருவக்குகிறது. அதற்குப்பதில் சொல்ல நாம் தொண்ணூறு சொற்களை உருவாக்கவேண்டும். இது முடிவே இல்லாத செயல்பாடு. ஆகவே உலக அளவில்கூட பல முக்கியமான படைப்பாளிகள் காலப்போக்கில் விமரிசகர்கள் ஆகியிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் டி எச் எலியட். தமிழில் க.நா.சு. நான் அடிப்படையில் ஒரு நாவலாசிரியனாக இல்லாமலிருந்தும்கூட விமரிசகனாகச் செயல்படவேண்டிய தேவை உள்ளது. காரணம் இது ஒரு மாற்றம் நிகழும் சூழல். இச்சூழலுக்கு ஏற்ப நம் இலக்கிய எண்ணங்களை சற்று செம்மைப்படுத்திக் கொள்ளவேண்டியுள்ளது..ஆகவேதான் இவ்விமரிசனம்.

நேற்றுவரை நவீன இலக்கியச்செயல்பாடுகளுக்கு எவ்விதமான இலக்கிய முக்கியத்துவமும் இருந்தது இல்லை. அதற்குக் காரணம் அன்றைய முக்கியமான இரு கலாச்சாரசெயல்பாடுகள் ஒன்று நம் மரபின் இலக்கியச்செல்வங்களை மீட்டெடுத்து நவீன காலகட்டத்துக்கு ஏற்ப அமைப்பது. இரண்டு அப்போதுதான் வாசிக்க ஆரம்பித்த லட்சக்கணக்கான மக்களுக்கு சுவையூட்டக் கூடிய வெகுஜன இலக்கியங்களை உருவாக்குவது. ஆகவே நவீன இலக்கியம் புறக்கணிக்கப்பட்டது.இதனால் அன்றைய இலக்கிய முன்னோடிகள் நவீன இலக்கியத்தை மற்ற இரு போக்குகளுக்கும் எதிரானதாக நிறுத்த முயன்றார்கள். அதை ஒரு சுடரை பொத்தி எடுத்துச் செல்பவர்கள் போல பாதுகாத்தார்கள்.

ஆனால் இப்போது ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதற்கு நவீன ஊடகங்களின் வளர்ச்சி ஒரு காரணம். ஐராவதம் மகாதேவன், மாலன், கோமல் சுவாமிநாதன், வாசந்தி, பாவை சந்திரன் போன்ற இதழாளர்கள் நவீன இலக்கியத்தை வெகுஜன ஊடகங்களில் அறிமுகம் செய்தார்கள். திண்ணை காம் போன்ற இணைய இதழ்கள் அதை உலகமெங்கும் கொண்டு செல்கின்றன. மிகப்பெரிய நாவல்களை எழுதினால் வாங்கி வாசிக்க ஆளிருக்கிறது. இத்தனை நூல்களை ஒரேசமயம் கொண்டுவர முடிகிறது.இப்போது சாதகமான காற்று அடிக்கிறது .சுடரை பற்றவைக்க வேண்டிய நேரம். கலைகளை எடுத்து இச்சுடரின் உண்மையான தீவிரம் என்ன சென்று பார்க்க வேண்டியுள்ளது. அதற்குத்தான் இந்த விமரிசனம்.

நேற்றுவரை நம் விமரிசன மூதாதையர் நவீன இலக்கியத்தை ஒரு மாற்றுத்தரப்பாக ஒட்டுமொத்தமாக முன்வைத்தார்கள். இன்று அதில் உள்ள உள்ளோட்டங்களை நாம் பரிசீலித்து ஆய்வு செய்ய வேண்டும். நேற்று வரை நவீன இலக்கியவாதிகளைப்பற்றிய சில பிம்பங்களை உருவாக்கி அதை மற்ற இரு போக்குகளுக்கு எதிராக நிறுத்த சிற்றிதழாளர்கள் முயன்றார்கள். இன்று அப்பிம்பங்களை பொருட்படுத்தாமல் அவர்களை கறாராக ஆராய்ந்து பார்க்கவேண்டியுள்ளது. நவீன இலக்கியத்தின் உயிர்த்துடிப்பான பகுதிகள் எவை என்று பார்க்கவேண்டிய நேரம் நெருங்கியுள்ளது. ஆகவேதான் இந்த நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

மேலும் இலக்கியவிமரிசனம் என்றாலே சலிப்பூட்டும் ஆய்வுகள் என்ற நிலையை மாற்றி உத்வேகமும் சரளமும் உள்ள மொழியில் அவற்றை எழுதவேண்டிய அவசியம் இப்போது உள்ளது. இன்று எல்லா படைப்பாளிகளின் நூல்களும் கிடைக்கின்றன. புதுமைப்பித்தன் கு அழகிரிசாமி கி ராஜநாராயணன் சுந்தர ராமசாமி தி ஜானகிராமன் என எல்லா முக்கிய படைப்பாளிகளுக்கும் முழுத்தொகுப்புகள் வருகின்றன. இவற்றை கவனத்துக்கு கொண்டுவர வேண்டியுள்ளது. இவற்றை வாசிக்க வாசகனை பயிற்றுவிக்க வேண்டியுள்ளது . அதற்கு அவனை கவரும் நடையில் எழுதப்பட்ட விமரிசனங்கள் தேவை. இவ்விமரிசனங்களின் சிறப்பம்சம் இதுதான்.

.இலக்கியமுன்னோடிகளான 20 படைப்பாளர்கள் மீதான விரிவான விமரிசன ஆய்வுகள் 7 நூல்களிலாக தொகுக்கப்பட்டுள்ளன. இந்த இருபது படைப்பாளிகளும் பெரும்பாலும் கால அடிப்படையில் சில தற்செயல்களின் அடிப்படையில்தான் தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்களே இலக்கிய முன்னோடிகள் என்பதல்ல என் தரப்புஇன்னும் 15 பேரைப்பற்றி அடுத்தவருடம் எழுதுவேன்.

இங்கே விமரிசனத்தின் எல்லைகளைப்பற்றி சொல்லவேண்டியுள்ளது. நான் இலக்கியப்படைப்பை படிக்கும்போது பெறுவது ஒரு தனி அனுபவம் . அது சுதந்திரமானது. அப்படிப்பட்ட தனி அனுபவங்களுக்கு இடையே ஏராளமான முரண்பாடுகள் இருக்கும். அம்முரண்பாடுகளை களைந்துதான் சீரான பார்வையை முன்வைக்கமுடியும். அப்போதே அனுபவ உண்மை பங்கப்பட்டு விடுகிறது. விமரிசனத்துக்கு உரிய இயல்பான சிக்கல் இது. எந்த விமரிசனமும் காலகட்டம் சார்ந்ததுதான். விரைவிலேயே காலாவதியாகக் கூடியதுதான்.

இதில் முடிவுகள் இல்லை. என் வாசிப்புகள் தான் இவை . இவற்றை வாசகன் பரிசீலிக்கலாம். இந்த எழுநூறுபக்கங்களில் குறைந்தது இருநூறு முக்கியமான வாசக அவதானிப்புகள் உள்ளன. உதாரணமாக கயிற்ரவவு[ புதுமைப்பித்தன்] கதையின் ஒரு நீட்சியே பொய்த்தேவ்ய்[ க நா சு] என்றஅவதானிப்பை சொல்லலாம். அவை வாசகனுக்கு அவனது வாசிப்பின் கோணங்களை பெருக்கிக் கொள்ள உதவலாம். அதுவே இந்த விமரிசனங்கள் அளிக்கும் முக்கியமான பயனாகும்.

இந்த மாறுதலின் காலகட்டத்தில்தான் நாம் மேலும் கவனமாக இருக்கவேண்டியுள்ளது. இப்போது புகழ் வருகிறது. நாளை ஒருவேளை பணமும் வரலாம். இன்று என் கூட்டத்துக்கு பலதரப்பட்டவர்கள் அடங்கிய பெரியகூட்டம் வந்திருக்கிறது. இதெல்லாம் ஒரு பெரிய மாற்றம். இம்முக்கியத்துவத்தை நாம் உடனடியாக சுய லாபத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாகாது.

இந்தமேடைக்கு உரிய விஷயமா என்று தெரியவில்லை. ஆனால் இங்கே வந்துள்ள இந்த பெரும்கூட்டம் இதை இங்கே சொல்லவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. நேற்றுமுழுக்க இளம்நண்பர்கள் பலரிடமிருந்து இந்த விஷயம் பற்றிய மனக்குமுறல்களைக்கேட்டு மனம் வருந்தி அதன் பிறகே இதை சொல்கிறேன்.

சிறுபத்திரிகை என்பது ஒரு ஊடகம் . அது இன்று போதாமலாகும்போது நாம் அடுத்த கட்டத்துக்கு போகிறோம். மின் ஊடகங்களுக்கு , பெரிய இதழ்களுக்கு. திரைப்படங்களுக்குக் கூட செல்லலாம். ஆனால் சிறுபத்திரிகைகள் எந்த விழுமியங்களை ஒழுக்கங்களை நேற்றுவரை கடைப் பிடித்தனவோ அவற்றின் பிரதிநிதியாகவே நாம் அங்கே செல்கிறோம். நம்மை முன்னிறுத்திக் கொள்ள சுயலாபங்களை அடைய அல்ல.

நவீன இலக்கியத்தின் முக்கியமான விழுமியம் என்ன ? எப்போதும் நாம் எதை உண்மையிலேயே நம்புகிறோமோ அதை சார்ந்து நிற்பது அதற்காக வாழ்வது என்பதே. அந்த நம்பிக்கை மிதமிஞ்சிப்போய் நாம் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொள்வது உண்டு. அத்துமீறுவதும் உண்டு. நமது நம்பிக்கைகளே நமக்கு பெரிதாக உள்ளன. நட்பு அல்ல. புகழ் அல்ல. வாழ்க்கையில் வெற்றி என்று கருதப்படும் எவையுமே அல்ல. நமது ஆதர்ச புருஷர்கள் எவருமே வெற்றி பெற்றவர்கள் அல்ல. மகத்தான தோல்விகளை அடைந்தவர்கள்தான். தல்ஸ்தோய், காஃப்கா, பாரதி, புதுமைப்பித்தன்…..

ஆனால் நம்மில் சிலர் சில சந்தர்ப்பங்களிலாவது அதை மறந்துவிடுகிறோமா என்ற ஐயம் ஏற்படுகிறது. 5.10.03 அன்று இளையபாரதி என்பவரது நூல்வெளியீட்டுக்கூட்டத்தில் நான் தற்செயலாக செல்ல நேர்ந்தது . அது எனக்கு ஆழமான அதிர்ச்சியை அளித்தது . அக்கூட்டத்தில் நான் மிக மதிக்கும் இலக்கியப்படைப்பாளியான வண்ணதாசன் அங்கு பேசிய பிற திராவிட இயக்க பேச்சாளர்களை விட தரம் தாழ்ந்த ஒரு உரை ஆற்றினார். மு.கருணாநிதி அவர்களை மிக மிக ஆர்ப்பாட்டமான வார்த்தைகளால் புகழ்ந்து, அவரை ஒரு இலக்கியமேதையாக வர்ணித்தார். கவிஞர்கலாப்ரியா மு கருணாநிதியை தன் ஆதர்ச எழுத்தாளராகவும் தன்னுடைய வழிகாட்டியாகவும் சொல்லி புகழ்மொழிகளை அடுக்கினார்.

அதைவிடக் கீழிறங்கி கவிஞர் ஞானக்கூத்தன் பிரதமர் வாஜ்பாய் மு கருணாநிதி ஆகியோரை தொட்டபோது தன்னுடைய கரங்களின் ஒரு அதிர்வு ஏற்பட்டது என்று சொன்னார். கவிஞர் இன்குலாப் பற்றி சொல்லும்போது ஒருமுறை நான் சொன்னேன். எனக்கு அவரது ஒருவரி கூட கவிதையாக படவில்லை , ஆனால் அவர் தான் ஏற்ற இலட்சியங்களுக்காக வாழ்பவர் என்ற முறையில் அவர் என் பெருமதிப்புக்கு உரியவர் என்று. அம்மேடையில் இங்குலாப் பேசிய பேச்சு கீழ்த்தரமான துதிபாடலாக இருந்தது.

கருத்து மாறுபாடுகள் இருப்பினும் எனக்கு என்றுமே முற்போக்கு எழுத்தாளர்கள்மீது அவர்கள் ஆழமான நம்பிக்கை உண்டு. ஆனால் அந்தமேடையில் முற்போக்கு எழுத்தாளர்களான பா.கிருஷ்ண குமார், வேல ராமமூர்த்தி ஆகியோர் பேசியசொற்கள் என்னை கூச வைத்தன. உண்மையில் அந்தமேடையில் அப்படி பேசவேண்டிய அவசியமே இல்லை என்ற எண்ணமே பிற தி.மு.க பேச்சாளர்கள் பேசியபோது ஏற்பட்டது. இவர்கள் தாங்களே சென்று காலில் விழுகிறார்கள்.

அந்தமேடையில் கவிஞர் அப்துல் ரகுமான் பேசியபேச்சுதான் என்னை எதிர்வினை செய்ய வைத்தது. அந்தமேடையிலேயே பண்பாட்டுடனும் நிதானத்துடனும் பேசிய இருவர் மு.கருணாநிதியும் அப்துல் ரகுமானும்தான். அப்துல் ரகுமான் மிகுந்த நாசூக்குடன் அதைச் சொன்னாலும் அந்த குற்றச்சாட்டு முக்கியமானது . அவர் உள்பட திராவிட இயக்கம் உருவாக்கும் எழுத்து 97 சதவீதம் என்றும் சிற்றிதழ் எழுத்தாளர்களும் முற்போக்கு எழுத்தாளர்களும் சேர்ந்து எழுதும் எழுத்து 3 சதவீதம் என்றும் அவர் சொன்னார். அந்த 3 சதவீதம் மற்றவர்கள் இலக்கியவாதிகளே அல்ல என்று தங்களுக்குள் முணு முணுத்துவந்தார்கள். மு கருணாநிதியின் இலக்கிய சாதனைகளை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. இப்போது இளையபாரதி ஒரு பெரிய படைப்பாளி என்று சொல்கிறார்கள். கருணாநிதியை இலக்கியவழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் சொல்கிறார்கள். அந்த 3 சதவீதம் இறங்கி வந்திருக்கிறது . இப்போதாவது அவர்களுக்கு இது புரிந்தது நல்லதுதான் என்றார் ரகுமான்.

அப்பேச்சின் சாரமான வினா இதுதான். ‘ நேற்றுவரை நாங்கள் உங்களை எங்கள் மேடையில் உட்காரவைக்கவில்லை, எங்களை இலக்கியவாதிகள் அல்ல என்றீர்கள். இன்று இந்தமேடையின் ஓரத்தில் அமர இடமளித்ததுமே துதிபாட ஆரம்பிக்கிறீர்கள்ளப்படியானால் உங்கள் பிரச்சினைதான் என்ன ? ‘

அதற்கு மேலும் நாசூக்காக மு கருணாநிதி பதில் சொன்னார். அவர்கள் நம் ஆதரவை அங்கீகாரத்தைக் கேட்டு வந்திருக்கிறார்கள் அவர்களை புண்படுத்தாமல் இருப்பதே முறை என்றார் அவர்.

அந்தமேடையில் நான்குமேர் போய் துதிபாடிவிட்டால் அது இலக்கிய அங்கீகாரம் ஆகிவிடுமா ? நவீன இலக்கிய உலகம் என்பது சில மனிதர்களினாலானதல்ல .அது சில அடிப்படை நம்பிக்கைகள் ஒழுக்கங்கள் ஆகியவற்றால் ஆனது. எதை நாம் நம்புகிறோமோ அதற்காக வாழ்வது , அதைச் சார்ந்து நிற்பது அதற்காக வாழ்வது என்பதே. அந்த நம்பிக்கை மிதமிஞ்சிப்போய் எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொள்வது உண்டு. எழுத்தாளர்கள் உணர்ச்சிகரமானவர்கள் என்பதனால் அத்துமீறுவதும் உண்டு. நமது நம்பிக்கைகளே நமக்கு பெரிதாக உள்ளன. நட்பு அல்ல. புகழ் அல்ல. வாழ்க்கையில் வெற்றி என்று கருதப்படும் எவையுமே அல்ல. நமது ஆதர்ச புருஷர்கள் எவருமே வெற்றி பெற்றவர்கள் அல்ல. மகத்தான தோல்விகளை அடைந்தவர்கள்தான். தல்ஸ்தோய், காஃப்கா, பாரதி, புதுமைப்பித்தன்…..

அங்கே மேடைக்கு சென்று அமர்ந்திருந்தவர்கள் அல்ல அந்த மூன்று சதவீதம். அந்த விழுமியங்களை எவர் பேணுகிறார்களோ அவர்கள் தான். வாழையடிவாழையாக அவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். இன்று நான் இதை சொல்கிறேன்.நாளை நான் தவறு செய்தால் இன்னொருவர் சொல்லவேண்டும்.

இந்தப் படைப்பாளிகள் இப்படி சமரசம் செய்யும்போது தங்களைப் பிந்தொடர்ந்து வந்துகொண்டு இருக்கும் அடுத்த தலைமுறையைப்பற்றி யோசிக்கவேண்டும் என்பது மட்டுமே என் கோரிக்கை. அவர்கள் முன் தங்களை இவர்கள் சிறுமைப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் இவர்களை பின்பற்றுவார்கள் என்று நான் எண்ணவில்லை. இளமையில் எப்படியோ இலட்சியவாதம் சார்ந்த ஒரு வேகத்துக்கு ஆளாகித்தான் எழுதவருகிறார்கள். அவர்களுக்கு சமரசங்கள் சலிப்பையே தரும். அவர்கள் கண்ணில் இவர்கள் சரிவடைவது பற்றித்தான் எனக்கு வருத்தம்.

அதை வெளிப்படுத்த காரணம் நாளை நான் சமரசம் செய்தால் அதை தட்டிக் கேட்க சிலராவது இருப்பார்கள் என்பதனால்தான்.எழுதுவதுமட்டுமல்ல எழுத்தாளனாக வாழ்வதும் முக்கியமே.

இந்தமேடையில் நின்று அந்த 3 சதவீத முணுமுணுப்பின் பிரதிநிதியாகச் சொல்கிறேன் , திரு மு கருணாநிதி அவர்கள் எழுதும் எழுத்துக்கள் தீவிர இலக்கியத்தின் எப்பிரிவிலும் பொருட்படுத்தக் கூடியவை அல்ல.

இவ்விமரிசன நூல்களில் நான்என் ஆதர்சபாத்திரங்களான எழுத்தாளர்களைப்பற்றித்தான் எழுதியிருக்கிறேன். ஆனால் கறாரான கூர்மையான விமரிசனத்தையே முன்வைத்துள்ளேன். அதே கூர்மையான விமரிசனம் என் படைப்புகள் மீதும் வரவேண்டும் என்பதே என் எண்ணம். நன்றி

tamizhininool@yahoo.co.in

Series Navigation