மார்ச் 11, 2004 : சென்ற வாரங்கள்

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

மஞ்சுளா நவநீதன்


கருணாநிதியின் ஆச்சரியங்கள்

கருணாநிதி என்னை ஆச்சரியப்படுத்தாமல் பேசுவதே இல்லை. அதுவும் அந்தந்த நேரத்து அரசியல் கூட்டணிக்குத் தகுந்தாற்போல பேசுவதும், அதே நேரத்தில் இந்த கருத்தைத்தான் அவர் பிறந்த நாள் முதலாகக் கொண்டிருப்பது போல பேசுவதும் மிகுந்த ஆச்சரியத்துக்குரியது.

ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் மாறியிருப்பது அவரது கூட்டணி. இருப்பினும் உலகத்திலேயே கொள்கையை மறக்காத, கொள்கையை விட்டுக்கொடுக்காத ஒரே கட்சி போல அவர் திமுகவைக் காட்டுவதும், கொள்கையை விட்டுக்கொடுக்காத ஒரே ஆளாகத் தன்னைக் காட்டிக்கொள்வதும் ஆச்சரியத்துக்குரியது. அதை அவர் வீராவேசமாகப் பேசுவதைப் பார்த்து ஒவ்வொரு முறையும் உண்மை என்று நம்பும் உடன் பிறப்பைப் பார்த்தாலும் ஆச்சரியமே வருகிறது.

நேற்று வரை பாஜகவுடன் கூட்டணி வைத்து மத்தியில் ஆட்சி செய்துவிட்டு, இன்று பாஜகவை வகுப்புவாதக் கட்சி என்று தூற்றுவது கேட்டு அவரவருக்குப் புல்லரித்திருக்கும் என்பது ஒரு பக்கம்.

இன்னொரு விஷயத்தை நான் படித்தேன். எத்தனை பேருக்கு இதில் இருக்கும் முரண் புரிந்திருக்கும் என்று புரியவில்லை.

ஒரு தமிழ்நாட்டு ஜாதி மக்களை அன்னியர் என்று பேசி இது நாள் வரை அரசியல் செய்துவரும் திராவிட முன்னேற்றக் கழகம், சோனியாவை அன்னியர் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் எழுதியதற்காக அதிமுக மீது வழக்குத் தொடுக்க இருக்கிறது.

சோனியா இத்தாலியில் பிறந்தார் என்பதும், இந்தியப் பிரதமரின் மகனை திருமணம் செய்த பின்னரும், வெகுகாலமாக பிரதமரின் வீட்டிலேயே வசித்த பின்னரும் அவர் இந்திய குடியுரிமையைப் பெறவில்லை என்பதையும் சோனியாவே மறுக்க மாட்டார். ஆனால், 2000 வருடங்களோ அதற்கு முன்னரோ இந்தியாவுக்கு வந்ததாக ஆங்கிலேயரால் கட்டப்பட்ட கதையை கையில் எடுத்துக்கொண்டு இவ்வளவு காலம் அரசியல் நடத்திவரும் திராவிட முன்னேற்றக் கழகம், அதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்று ஆயிரம் கட்டுரைகள் வந்தாலும் அவற்றை உதாசீனம் செய்துவிட்டு தொடர்ந்து இனவெறி அரசியல் நடத்திவரும் திராவிட முன்னேற்றக் கழகம், இன்று சோனியாவை வெளிநாட்டுப் பெண் என்று சொல்லக்கூடாது என்று நீதிமன்றம் ஏறப்போகிறது.

இந்திரா காந்தியின் விசுவாச காங்கிரஸ் இந்திய விசுவாச காங்கிரஸாக இல்லை என்பதற்கு இது ஒன்றே போதுமான உதாரணம். இந்தியாவுக்கு விசுவாசமாக இருந்திருந்தால், எப்படி பிரதமரின் வீட்டில் ஒரு இத்தாலிய குடிமகள் எல்லா அரசாங்க ரகசியங்களையும் கேட்டுகொண்டு உட்கார்ந்திருக்க முடியும் என்று காங்கிரஸார் கேட்டிருப்பார்கள். இந்திராவே இந்தியா என்று கூவிய காங்கிரஸ் ‘மேலிட மோகக் ‘ கலாச்சாரத்தின் தொடர்ச்சியே சோனியாவே இந்தியா என்ற கூக்குரலுக்கும் காரணம். அன்று நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று நேரத்துக்குப் பொருத்தமாக கூவிய குரல் இன்று இத்தாலியின் மகளே வருக, இம்பீரியலிஸ ஆட்சி தருக என்று அழைக்கிறது.

குடும்ப அரசியலில் ஸ்டாலின் தளபதி ஆகிவிட்டார். பெரியார் கீழ் அண்ணா பெற்ற பட்டம் இது, ஸ்டாலினைத் தளபதி என்று அழைப்பதன் மூலம் கருணாநிதி பெரியார் என்றும், அடுத்த அண்ணா ஸ்டாலின் என்றும் நாமகரணம் செய்தாகிவிட்டது போலும். தளபதி தானைத் தலைவர், முத்தமிழ் வேந்தன் போன்ற நாமகரணங்களில் ஒலிக்கும் நிலப்பிரபுத்துவ வாசனை பற்றி யாரும் ஆய்வு செய்யலாம்.

வாழ்க தலைவர் கலைஞரின் பேச்சுவன்மை. வளர்க அவர்தம் உடன் பிறப்புகளின் விசுவாசம்.

***

விஞ்ஞானம் தப்புத் தப்பாக

பால்வீதி என்பது நாம் இருக்கும் அண்டத்தின் பெயர். அதனை milkyway galaxy என்ற ஆங்கிலப்பெயரிலிருந்து தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்டது. அண்டம் என்ற வார்த்தை galaxy என்ற ஆங்கில வார்த்தையின் மொழியாக்கமாகக் கொள்ளலாம். வானத்தை அண்ணாந்து பார்க்கும்போது, நிலா இல்லாத கரிய வானத்தின் நடுவே ஒரு வெண்ணிற ஒளிச்சாலையைப் பார்க்கலாம். இதனை கிரேக்கர்கள் பால்வீதி என்றார்கள். ஜீயஸின் மனைவியின் பாலென இதனை உருவகித்தார்கள். மற்ற அண்டங்களுக்கு பால்வீதி என்ற பெயர் பொருந்தாது. நாம் இருக்கும் அண்டம் மட்டுமே பால்வீதி என்ற பெயர் பெற்றது. மற்ற அண்டங்களுக்கு வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன (அல்லது அறிவியலாளர்களால் வைக்கப்படுகின்றன)

பிரபஞ்சம் என்பது பல அண்டங்கள் அடங்கியது. பிரபஞ்சத்தை பேரண்டம் என்றும் குறிப்பிடலாம். இதனை ஆங்கிலத்தில் universe என்ற பெயரால் அழைக்கிறார்கள்.

இவற்றைச் சொல்லக்காரணம், தினமலரில் வெளிவந்த ஒரு சிறிய படமும் அந்த படத்தைப் பற்றி எழுதியிருந்த விளக்கமும்தான்.

சமீபத்தில் ஹப்பிள் தொலைநோக்கியில் நம் பிரபஞ்சத்தின் நமக்குத் தெரியக்கூடிய மூலையின், சுமார் 13 பில்லியன் ஒளிவருடங்கள் தொலைவில் உள்ள பகுதியை ஒளிப்படமாக எடுத்து நாஸா வெளியிட்டிருக்கிறது. இதனைப் பற்றிய ஒரு விளக்கமும் இல்லாமல் தவறான செய்திகளை தினமலர் வெளியிட்டிருக்கிறது. அந்தப் படத்தை போட்டு கீழ் வருமாறு தினமலர் எழுதியிருக்கிறது.

‘பால்வீதி எனப்படும் நட்சத்திரக் கூட்டங்களில் பல ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் அடங்கியிருக்கும். இது போன்ற பால்வீதிகள் பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கில் உள்ளன. நான்கு பால்வீதிகள் உள்ள இந்த அபூர்வப் படத்தை ஹபிள் தொலைநோக்கி மூலம் நாசா விஞ்ஞானிகள் எடுத்துள்ளனர் ‘

அறிவியல் செய்திகளைக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, தவறான செய்திகளைக் கொடுக்கக்கூடாது என்று தான் நாம் கோரவேண்டும் போல இருக்கிறது.

***

இந்து பெயரைச் சொல்லும் கட்சிகளில் பூசல்.

பைசா பெறாத கட்சிக்குள் ஆயிரம் கோஷ்டிப் பூசல் என்பது காங்கிரசுக்கு மட்டுமே பொருந்தும் என்று இதுவரை கருதி வந்தீர்கள் என்றால் அதனை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்துக்கட்சி என்ற பெயரில் வரும் பாஜக, இந்து மக்கள் கட்சி என்ற பெயரில் இயங்கும் இன்னொரு கட்சி. அது சென்ற தேர்தலின் போது இரண்டாக உடைந்தது. சென்னையிலேயே இந்த இரண்டு இந்துக் கட்சிகளுக்கும் வினாயகர் சிலை ஊர்வலம் நடத்துவதில் போட்டி வேறு. நாகர்கோவில் பகுதியிலும் இந்து கட்சிகள் இரண்டாக இருக்கின்றன. இது போதாதென்று சிவசேனை வேறு இருக்கிறது. அதுவும் தமிழ்நாடெங்கும் வேட்பாளர்களை நிறுத்தப்போகிறது என்று கேள்வி.

ஆனால் திராவிட முன்னேற்றக்கழகம் தோன்றிய காலத்தில் இது போன்றே பற்பல கழகங்கள் ஒரு மக்கள் இயக்கத்தின் வெளிப்பாடாகத் தோன்றின. (யாருக்காவது மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ்த் தேசியக் கட்சி எல்லாம் ஞாபகம் இருக்கிறதா ?) அது போல, இவையும் இந்து ஓட்டு வங்கியின் வளர்ச்சியை உபயோகப்படுத்திக்கொள்ள இவை தோன்றுகின்றனவா அல்லது காங்கிரஸ் போல தனிநபர் அரசியல் காரணமாக கோஷ்டி உருவாகின்றனவா என்பது போகப்போகத்தான் தெரியும்.

இல்லை இந்து என்பதன் அரசியல் அடையாளம் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டதன் விளைவா இது ?

***

திபெத் – மறக்கப் பட்ட ஒரு நாடு

மார்ச் 10ஆம் தேதி, திபெத்தியர் எழுச்சியின் நினைவு நாள். அல்லது தி இந்து என்.ராம், இன்ன இதர இந்தியப் பத்திரிக்கைகளைப் பொறுத்த மட்டில் சீன எழுச்சியின் நாள்.

1959 மார்ச் 10 ஆம் தேதி ஒரு லட்சம் திபெத்தியர்கள் அரண்மனையைச் சுற்றி நின்று, திபெத் திபெத்தியர்களுக்கே என கோஷமிட்டார்கள். மார்ச் 21ஆம் தேதி, கோஷங்கள் எழுப்பிய ஆயிரக்கணக்கான திபெத்திய ஆண்கள், பெண்கள் குழந்தைகள் சீனப்படையினரால் அரண்மனை முன்னர் படுகொலை செய்யப்பட்டார்கள். லாஷா நகரத்தைச் சேர்ந்த சுமார் 10000க்கும் மேற்பட்டவர்கள் ‘காணவில்லை ‘ என்று சீன அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டார்கள்.

http://www.tibet.ca/pub/lhasauprising.html

Tibet in Revolt, George Patterson, Faber and Faber, London, 1959.

Daughter of Tibet, Rinchen Dolma Taring, Allied Publishers, New Delhi, 1970

My Land and My People, The Dalai Lama, Panther Books, UK, 1962

வருடம் 2004. அதற்குள் ஏராளமான சீனர்கள் திபெத்தில் குடியமர்த்தப்பட்டு திபெத்தின் மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது – சீனர்கள் இங்கே குடியேற்றப் பட்டு மக்கள் விகிதாசாரம் குலைக்கப் பட்டுவிட்டது. ராணுவ அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட ஆளுக்கு இன்று சீனாவின் தலைமைப்பதவி கிடைத்திருக்கிறது. திபெத்தின் கனிம மற்றும் நீர்வளங்கள் சுரண்டப்பட்டு சீனர்களுக்கும் சீனப்பிராந்தியங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. முழுக்காலனியாதிக்கத்தின் கீழ், திபெத்தின் கலாச்சாரம் மொழி மக்கள் ஆகியோர் நசுக்கப்படுகிறார்கள்.

இன்னும் சமாதான வழியிலேயே சுதந்திரம் பெறுவோம் என்று தலாய்லாமா பேசிக்கொண்டிருக்கிறார். வெள்ளைக்கார சீடர்களிடம் உள்ளத்தை சுத்தப்படுத்துவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்.

காந்தியின் போராட்டம் வெற்றி பெற்றது என்றால் காலனியாதிக்க பிரிட்டிZஆரிடம் கூட ஒரு மனசாட்சி இருந்ததால் தானோ என்னவோ ? மனசாட்டியை சீன கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் குடியரசிடம் எதிர்பார்க்க முடியாது என்று நீண்ட பயணம் தொடங்கி தியானன்மன் சதுக்கம், ஃபாலுன் காங் வரை தெரியத் தான் செய்கிறது.

***

அத்வானியின் ஜப்பானியக் கார் ஊர்வலத்தைத் தடை செய்க

அத்வானி இடக்கரடக்கலாக ரத யாத்திரை – கருணாநிதியின் தானைத்தலைவர் . தளபதி ஃப்யூடலிசத்திற்குச் சற்றும் குறையாத, ஆனால் மதமும் ஏற்றப் பட்ட வார்த்தை- என்று அழைத்து போன முறை நடத்திய யாத்திரையின் முடிவு ஒரு மசூதியின் உடைப்பு. இரு வகுப்புகளுக்கிடையே நிரந்தரப் பிளவு.

ஆட்சியைப் பிடிக்க முடிந்தது பா ஜ கவிற்குக் கிடைத்த பலன். ஆனால் இப்போதும் கூட கூட்டணி இல்லாமல் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பது ஒரு ஆறுதல்.

ஆனால் இது போன்ற யாத்திரைகளினால் என்ன பலன் ? வெயிலில் கருகும் போலிஸ்காரர்கள் வழி நெடுகக் கூட்டி வரப்பட்ட மக்கள் வெள்ளம், அத்வானி போன்றவர்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பு அளிக்க வேண்டுமே என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு செயல்படும் உயர் அதிகாரிகள் எல்லாம் எந்தப் பயனும் இல்லாத வெத்துவேட்டு சமாசாரங்கள் இவர்களின் இந்த உழைப்பு குற்றங்களைத் தவிர்க்கவும் மக்களுக்குப் பணி புரியவும் பயன் படுவதில்லை. இப்படிப்பட்ட வி அய் பிக்களின் ஈகோவை திருப்தி செய்யத் தான் இந்த ரதமும் யாத்திரையும்.

சேZஅன் காலத்தில் ஒரு சில தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த சீர்திருத்தங்களை மேலும் செழுமைப் படுத்த வேண்டிய வேளை வந்திருக்கிறது.

1. முடிந்த வரையில் பொதுக் கூட்டங்கள் தடை செய்யப் படவேண்டும். பெரு நகரங்களில் ஒரு சில மைதானங்கள் சில குறிப்பிட்ட நாட்களுக்கு அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். ஆனால் அரசியல் கட்சிக்கு வரும் அரசியல் பிரமுகர்களின் பாதுகாப்பு அந்தந்த அரசியல் கட்சியின் பொறுப்பாய் இருக்க வேண்டும். காவல் துறையைப் பயன்படுத்தக் கூடாது. காவல் துறை மக்களின் பாதுகாப்புக்குத் தானே தவிர அரசியல் வாதிகளின் இடமும் வலமும் காட்சி தரவல்ல. மைதானங்கள் மக்களிடம் ஒப்புவிக்கப் படவேண்டும். பூங்காக்களாகவும். விளையாட்டு மைதானங்களாகவும் அவை பேணப் பட வேண்டும். இப்படி மைதானங்களில் நடக்கும் கூட்டங்களின் வீராவேச உரைகளும் முடிந்த வரையில் மைதானத்திற்கு வெளியே அன்றாட அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் மக்களின் செவிகளை ஆக்கிரமிக்கக் கூடாது.

2. வீதி முனைக் கூட்டங்கள் அறவே தவிர்க்கப் படவேண்டும். தெருவைத் தோண்டி குண்டும் குழியுமாக பந்தல் போட்டு ,நிம்மதியாய் வீட்டில் இருப்பவர்களின் காதுக்குள் நுழைகிற உரிமையை யாரும் இந்த அரசியல் வியாதிகளுக்கு வழங்கிவிடவில்லை.

3. டவுன் ஹால் போன்ற இடங்களில் தான் அரசியல் கூட்டங்கள் நடத்தப் படவேண்டும் அதில் பேசும் பேச்சுகள் வெளியே கேட்கலாகாது.

4. ஊர்வலங்கள் தவிர்க்கப் படவேண்டும். அப்படி ஊர்வலங்கள் அனுமதிக்கப் பட்டால், வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தான் நிகழ்த்தப் படவேண்டும்

5. காகிதத்தில் பிரம்மாண்ட சுவரொட்டிகள் அச்சடித்து ஒட்டுவது தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு சுவரொட்டியும் , ஒரு மரத்தைக் கபளீகரம் செய்து தயாரிக்கப் படுகிறது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி மரத்தையெல்லாம் சுவரொட்டிகளாய் மாற்றிய பிறகு, பஞ்சம், நிலத்தடி நீர் போச்சு என்று புகார் சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கிறது ?

6. இந்த சுவரொட்டிகள் அச்சடிப்பது நிறுத்தினால் வேலை வாய்ப்பு பாதிக்கப் படும் என்பவர்களுக்கு ஒரு யோசனை. மறு சுழற்சி செய்யப்பட்ட தாள்களில் வேட்பாளர் பற்றி அச்சுச் செய்து வீடு வீடாக வினியோகம் செய்யட்டும். (இதற்காகவாவது அனைவருக்கும் கல்வி என்பது செயல் படுத்தப் படாதா ?)

பகல் கனவு என்கிறீர்களா ? அதுவும் சரிதான். ஊதுகிற சங்கை ஊதுவோம் விடியும் போது விடியட்டும். யாராவது பொதுநல விரும்பி விஜயன் அல்லது கோபாலன் கண்ணில் பட்டால் , பொது நலவழக்குப் போட்டு அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமல் ஏதாவது கொஞ்சம் நடந்தாலும் சரிதான்.

—-

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation