மாயபிம்பம்

This entry is part [part not set] of 26 in the series 20100115_Issue

எஸ்ஸார்சி


ஆகா இந்த மூக்குகண்ணாடியை இங்கே வைத்துவிட்டல்லவா தலைவர் பக்கத்து மாநகரம் தஞ்சைக்குச்சென்றுவிட்டார். அங்கு போய் என்ன அவத்தைப்படுகிறாரோ இது ஏன் இப்படி ஆயிற்று. அவன் மண்டையைப்போட்டுக்குழப்பிக்கொன்டான் .மூக்குக் கண்ணாடியின் பெட்டியை ஒரு முறைத்தடவி பார்த்துக்கொண்டான். தலைவரே எதிரில் நிற்பதாய்ப்பாவித்தான்
தலைவர் சென்னையிலிருந்துதான் வந்திருந்தார். முன்னூறு கிலோமீட்டர் தாண்டி அவன் இருக்கும் காவிரிக்கரை ஊரில் தொழிற்சங்கக் கூட்டம். அந்த கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராய் வந்திருந்த அந்தத் தோழர் கபாலி. போராட்டக் களம் பல கண்ட அஞ்சா நெஞ்சர். அவர் அனுபவித்தறியாத தண்டனைகள் இல்லை. பேச்சுவார்த்தையில் மட்டும் யாரும் தலைவரை மடக்கிடவே முடியாது. அது தலைவர்கட்கு எப்போதும் வேண்டியது. அது வாய்த்தற்கரிய பெரும் பேறு அது அவரிடம் இருந்தது. அப்படிச்சொல்வது தவறு. அது அவரிடம் மண்டிக்கிடந்தது என்பதே சரி.. இந்நேரம் அந்தத் தோழர் கபாலி மூக்குக்கண்ணாடி இல்லாமல் என்ன பாடுபடுகிறாரோ
எப்படி பிரச்சனைகள் பார்ப்பது. தோழர்களின் கேள்விகளுக்குப்படி விடைசொல்வது. பணி ஒழுங்குகள் தொழிலாளர்களின் சட்டவிதிகள் பற்றிய சந்தேகங்கள் கேட்க வருவோர்க்கு
என்ன பதில் சொல்லுவது. அப்படி வருகின்றவர்கள் தான் தலைவரைப்பற்றி என்ன நினைப்பார்கள் தலைவரின் வருகையால் பிறகு யாருக்குத்தான் என்ன பயன் . ஆக அவன் இந்த மூக்குகண்னாடியைக்கொண்டுபோய் தலைவரிடம் நேராகக் கொடுத்துவிட்டே வந்துவிடலாம் என முடிவு செய்தான். எப்படியும் மாலையில் தொழிற்சங்கக் கூட்டம் நிச்சயம் இருக்கும் அதற்குள்ளாக இந்தக்கண்ணாடி அவர் வசமானால் எல்லோருக்கும் எத்தனை மகிழ்ச்சி. அவன் யோசித்து யோசித்துப்பார்த்தான்.
இங்கிருந்து தஞ்சைக்குச்சென்று மீன்டும் திரும்ப ஐம்பது ரூபாய் செலவுக்கு வேண்டும். ஒரு ஐம்பது ரூபாய் போய்விடுமே என்றும் பார்த்தால்என்ன ஆவது. ஒரு சினிமாவுக்குப்போனால் கூட இதே செலவு வந்துவிடும்தானே. பின் என்ன இதில் ஆழ்ந்து ஆழ்ந்து யோசனைவேண்டிக்கிடக்கிறது. ஒரு வாரத்திற்கு அலுவலகம் வந்து போகும் போக்குவரத்துச் செலவுக்கான பணம் கைவசம் இருந்தது. அந்தப்பனமே போதும். ஆக அவன் தஞ்சைக்கு ப்புறப்படத்தயாரானான். தஞ்சைக்குக்கிளம்பும் முன் ஒரு அரை நாள் விடுப்பு
வேண்டுமே என்று மேல் அதிகாரியிடம் போய் நின்று பவ்யமாய் விடுப்பு வேண்டினான்.
‘ எதுக்கு லீவு கேக்குறீரு?’
அதிகாரி வினாவைத்தார். அவரின் கன பார்வை. அவர் ஏதோ பூமன்டலத்திற்கு ஏகச் சக்கரவர்த்தியாக இருப்பதுபோலவும் இப்போது எதிரில் வந்து ஒரு மனிதன் கொலைக்குற்றம் செய்துவிட்டு மண்டியிட்டுக்கொண்டு நிற்பது போலவும் தோற்றம் தந்தது.
‘ நேற்று கூட்டத்திற்கு வந்த தலைவர் மூக்குக்கன்ணாடியை இங்கேயே விட்டு விட்டு சென்றுவிட்டார். அவரிடம் அதைச்சேர்ப்பிக்க தஞ்சை வரை சென்று வரவேண்டும்’
‘டூட்டி முடிஞ்சி போலாமே’
‘ இல்ல சார், கூட்டம் துவங்கறதுக்கு முன்னாடி போன அவருக்கு கொஞ்சம் உபயோகமா இருக்கும் அதான்.
‘ சரி, தலைவர் அது இது ன்னு சொல்றீரு. போய் வாரும்’ சொன்னார் அந்த அதிகாரி
ஒரு வழியாக அரை நாள் விடுப்புவாங்கியாகி விட்டது. இனி தஞ்சைக்குக்கிளம்ப வேண்டியதுதான்.
பக்கத்து சீட்டு கிளார்க்கிடம் கொஞ்சம் பேசினான்.
‘ உமக்கு எதுக்கு இந்த வம்பு. நீர் வந்தீரா உன் வேலய ஜோலிய பாத்தீரா. அதோட முடிச்சிகிணும். தலைவரு அவரு கண்ணாடிய இங்க உட்டாதான் என்ன அங்க உட்டாதான் என்ன. நமக்கு இதுல என்ன இருக்கு.’ ஆரம்பித்தார் அந்த பக்கத்து சீட்டுக்காரர். அவன் தஞ்சைக்கு க் கிளம்புவது தீர்மானமாகிய ஒன்று என்று அறிந்தபின்,
‘ சரி சரி போய்ட்டு வாரும் அது அதுல ஏதும் விஷயம் இல்லாமல பூடும்’
என்று முடித்துக்கொண்டார்.
அவனுக்குப் பதில் சொன்னால் தேவலை என்றுதான் தோன்றியது. இருந்தாலும் பதில் சொல்லி என்ன ஆகப்போகிறது முடிந்தவரை முட்டுக்கட்டை போடுவதும் முடியாவிட்டால் கேலி பேசுவதும் இதுகள் எல்லாம்
மீறியும் ஒருவன் ஏதும் சாதித்துவிட்டால் தான்தான் அந்த சாதனைக்கு முழுக்காரணம் என்று ஜம்பம் பேசுவதும்
வழக்கமாய்ப்போய்விட்ட பிறகு பேசிதான் என்ன பேசாவிட்டால்தான் என்ன. அவனுக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டுபுறப்பட்டான்.
மூக்குகண்ணாடி பத்திரமாக மேல் சட்டப்பையில் இருந்தது. அதனை ஒருமுறைத்தொட்டு பார்த்துக்கொண்டான்.
கண்ணாடி என்றால் இது இல்லை. மூக்குக்கண்ணாடி என்றால் மட்டும் இதுதான். மூக்கு இதனில் ஏன் வரவேண்டும் எதோ பித்துக்குளித்தனமாய் யோசித்தான். மூக்கின் மீது கண்ணாடி அமர்ந்து கொள்வதால் இந்தப்பெயர் வந்ததோ. சரி விட்டு விடுவோம் என அந்த வார்த்தைத்தொங்கலை விட்டு வெளியே வந்தான்.

தஞ்சைக்குச்செல்ல எப்போதும் இப்படி ஏனோ கூட்டம். எத்தனை பேருந்துகள் விட்டென்ன. அது அதுவும் ரொப்பிக்கொண்டுதான் புறப்படுகிறது. ஒரு வண்டியைப்பிடித்துக்கொண்டு தொங்கி உள்ளாக னுழைந்து
நின்று கொண்டான். உட்கார இடம் எல்லாம் ஏது. அதுவும் தஞ்சைப்பேருந்தி.ல். டிக்கட் ஒன்றை மறக்காமல்
வாங்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டான். பேருந்தில் பயனிக்கிறவர்கள் அடிக்கொருதரம் டிக்கட் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும்வேண்டும். டிக்கட் தொலைந்து விட்டால் போச்சு. கண்டக்டரின் பார்வையின் உக்கிர சுவாலையை யார் பொறுப்பது. கோபமே உருக்கொண்ட நரசிம்மரை த்தமாஷ் பண்ணி சரிநிலைக்கு கொண்டுவரக்கூட ஒரு லக்குமி நரசிம்மத்தின் மடி அமர வேண்டிவந்தது.
இங்கும் அப்படித்தான். இதில் யாருக்கேனும் மாருபட்ட கருத்து இருந்தால் ஒருமுறை டிக்கட்டைத்தொலைத்து
விட்டு பிறகு அனுபவம் பழகலாம். அதுவும் உங்கள் போறாத காலம் அந்த சாலையோரப் புளியமரத்தடிகளில் நிற்கும் மூன்று பேர் கொண்ட செக்கிங் ச்க்வாடிடம் மாட்டிக்கொண்டு விட்டால் அப்புறம் யார் வந்து உங்களை மீட்பது. .
தஞ்சை பேருந்து நிலயம் சமீபித்தது. இது புதியது. இன்னும் பழையபேருந்து நிலையம் போயாகவேண்டும்.
நகர்ந்து நகர்ந்து வாயிற்படி அருகே வந்தான். இறங்கியாக வேண்டும். இறங்கடவும் விட்டால்தானே..
அதற்குள்ளாக திருச்சிக்குபோவோர் உள்ளே தினித்துக்கொள்ள முண்டி அடித்துக்கொண்டார்கள்.
சட்டைப்பையில் இருந்த தலைவரின்மூக்குக் கண்ணாடி பேருந்துக்குள் கீழே விழுந்துவிடவே பட்டென்று அதனைப்பாய்ந்து எடுத்தான்.
பட்டென்று ஒரு சத்தம் கேட்டது. கண்ணாடி உடைந்துவிட்டிருந்தால் என்ன செய்வது. ஒரே அச்சமாக
இருந்தது சின்னபெட்டிதான். அதனைத்திறந்துபார்த்து விட்டால் தேவலை. அனேகமாக உடைந்து
இருக்காது. இருந்தாலும் திறந்துபார்த்துவிட்டால்தான் மனசுக்குப்பாந்தமாயிருக்கும். அவனின் பூர்விக
தருமங்குடி கிராமத்து மேற்குப்பார்த்த நாகமணிந்த விநாயகரை ப் பிரார்த்தித்துக்கொண்டான்.
கடவுளுக்கு மனிதன் மனசுக்குள் செய்யும் பிரார்த்தனை. அது வெளியில் தெரியாமல் இருக்க அந்த கடவுளே ஏற்பாடுசெய்திருப்பதால் எவ்வளவோ சவுகரியம் என்று சொல்லிக்கொன்டான்.

மூக்குக் கண்ணாடிப்பெட்டியைத்திறந்து பார்த்தான். கண்னாடி உடையவில்லை.
கடவுளுக்கு நன்றி சொன்னான் .யாருக்கும்தான் தெரியாதே பிறகென்ன அவனே தனக்குள்ளாக நன்றி சொல்லிக்கொண்டான்.
தலைவர் தங்கி இருந்த விடுதி நோக்கி வேகு வேகு என நடந்தான். மாலை நேரம். தலைவர் கபாலி
கூட்டத்திற்குத்தன்னை த்தயார் செய்துகொன்டிருக்கும் நேரமிது. தரையிலிருந்து
தூக்கிக்கட்டப்பட்ட விடுதி. புராதன கட்டிடம். விடுதியின் காப்பாளரை அணுகி,
‘கபாலி சாரை பார்க்கணும்’
‘ வழக்கமா போடுற அந்த கடைசீ ரூம்பு’
பதில் சொன்னான் அந்த விடுதிகாப்பாளன். ஒருமுறை அவனை ஏற இறங்கப்பார்த்துக்கொண்டான்.
அந்தப்பார்வைக்கு எத்தனையோ அரும் ப-உரைகள் எழுதலாம்.
கடைசி அறையின் அழைப்பு மணியை அமுக்கினான்.
‘ சும்மா சாத்தி இருக்கு உள்ள வாங்க’
பதில் வந்தது.
‘யாரு’
‘ நான் திருச்சிலியிருந்து வந்திருக்கேன் . நேற்று எங்க ஊரு கூட்டத்துகு அய்யா வந்து இருந்தீங்க. அய்யாவோட மூக்குக்கண்ணாடியை அங்கயே வச்சிட்டு வந்துட்டிங்க. அத எடுத்துகிட்டு வந்தேன். போட்டுக்கற கண்ணாடி இல்லன்னா சிரமம் இல்லிங்களா அதான்’ சொல்லி முடித்தான்.
தலைவரின் குரல் மட்டும்தான் அவனுக்குக் கேட்டது. அவர் பாத் ரூமுக்குள் இருந்திருக்க வேண்டும்.
‘ சரி அதுக்கென்ன. அத மேசை மேல வச்சிடுங்க’
‘ அப்ப நானு’
‘ கிளம்புங்க ஏன் வெயிட் பண்ணிகிட்டு. நான் முகச்சவரம் பண்ணிகிட்டு இருக்கென். கொஞ்சம் நாழி
ஆவும். நீங்க கெளம்புங்க. அதை மேசை மேல வச்சிட்டிங்கள்ள. நான் எடுத்துகிறன்.சரித்தான்’
என்று உலர்ந்தபதில் மட்டும் வந்தது.
அவன் அறைவிட்டு வெளியில் வந்தான்.
‘ கதவ சாத்தி விட்டுட்டு போங்க’
மீண்டும் தலைவரின் அசரீரிக்குரல் கேட்டது.
தன் பெயரை மட்டுமாவது தலைவர் கேட்டிருக்கலாம். அவனே ஒருமுறை சொல்லிக்கொண்டான் அவருக்கு எத்தனையோ பிரச்சனைகள். நாம் சொல்வதெல்லாம் கேட்கவாபோகிறது. சமாதானம் சொல்லிக்கொன்டான்.
தஞ்சைப்பேருந்து நிலையம் நோக்கி மீண்டும் நடக்க ஆரம்பித்தான்.
மனம் அவனுக்கு வலிக்கவே செய்தது.

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி