மாத்தா ஹரி -அத்தியாயம் – 33

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


ஹரிணி ‘இரண்டாவது வாழ்க்கை’, வலைதளத்தில் தற்போதைக்கு இலவச உறுப்பினராவதென்று தீர்மானித்தாள். நோனா பெயரையே ஏன் முதற்பெயராக வைத்துக்கொள்ளக்கூடாது, என்று நினைத்தாள். நோனா மாத்தா ஹரியின் பெண்குழந்தை. மாத்தா ஹரியையும், பவானியையும் தொடர்பு படுத்துகிறபோது, தான் நோனாவாக அவதாரம் எடுப்பதும் ஒருவகையில் பொருத்தமாக இருக்கக்கூடும். மாத்தாஹரி என்ற பெயரில் நடத்தப்படுகிற தள நிர்வாகிகள் ‘நோனா’ பெயர்கொண்ட அவதாரத்திற்காகக் காத்திருப்பதாக அரவிந்தன் கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. இரண்டாவது பெயராக, சம்பந்தப்பட்ட வலைத் தளத்தின் விதிப்படி அவர்களது பட்டியலிலேயே ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்தாள். தனது அவதாரத்திற்குப் பெண்ணுருவமே பொருத்தமானதாக இருக்குமென்று தோன்றியது. கேட்டிருந்த பிற தகவல்களையும் நிரப்பினாள். மின்னஞ்சலில் அவர்கள் அனுமதிகிடைத்ததும், இரண்டாவது வாழ்க்கை வலைபக்கத்திற்கு வந்தாள். தனது அவதாரத்தின் பெயரை நிரப்பி லாகின் செய்தாள். இரண்டாவது வாழ்க்கை உலகிற்குள் நுழைந்ததும், இவள் அவதாரம் எவருக்கோ காத்திருப்பதுபோல நிற்கிறது. ஓரிரு நிமிடங்கள் குழப்பமாக இருந்தது. முப்பரிமாண உருவங்கள் பல வருவதும் போவதுமாக இருக்கின்றன. சில ஜோடியாகவும், சில தனித்தும் இயங்கின. ஆரம்பத்தில் தனது அவதாரத்தை இயக்க வைப்பது ஹரிணிக்கு அத்தனை சுலபமாக இல்லை. ஆர்வத்துடன் பழகிக்கொண்டதும் எளிதாக இருக்கிறது. இவளை நோக்கி இன்னொரு அவதாரம் -ஆண்-இளைஞன். பரட்டைத் தலையும், முகத்தில் ரஷ்ய தாடியும் கொண்ட- வருகிறது.

– ஹாய்! உன்னைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். உன் வரவு நல்வரவாகட்டும், இருகையையும் குவித்து ஆசியர்களைப்போல வணங்கி நிமிர்ந்தான்.

– நீ?

– தேவவிரதன்.

– நான்..

– உன்னுடையப் பெயரை எங்களுக்குச் சொல்லவேண்டுமென்று அவசியமில்லை. நோனா என்று எல்லோருக்கும் தெரியும். எங்களைத் தேடி நீ வருவேண்ணும் தெரியும். இப்போது நம்ம தீவுக்குப் போகலாமா?

– எப்படி?

– இதோ இப்படி.. சட்டென்று இருகையையும் விரித்து ஜிவ்வென்று மேலே போனவன், இவளுக்காகக் காத்திருக்கிறான். இவளுடைய அவதாரத்தையும் மேலே எழும்பச் செய்தாள். அவன் முன்னே பறந்து செல்ல அவனைத் தொடர்ந்து இவளும் பறந்தாள். நிறைய மலைகள், அருவிகள், ஆறுகள், அடர்த்தியான காடுகளெனப் பறந்து, இருவருமாக நீலநிறத்தில் ஸ்படிகம்போல பரவிக் கிடந்த கடற்கரை ஒன்றை அடைந்திருந்தார்கள். கொஞ்சம் ஓய்வெடுக்கலாமா? இல்லை தொடர்ந்து பறந்து செல்லலாமா, தேவவிரதன் கேட்கிறான் அல்லது தேவவிரதனென தன்னை அழைத்துக்கொள்ளும் கேலிசித்திர இளைஞன் கேட்கிறான். அவன் முகத்தைப் பார்க்க வெகுதூரம் பறந்து க¨ளைத்து போனதைப்போலத்தான் இருக்கிறான். தானெடுத்திருந்த அவதாரத்தைப் பார்க்கிறாள். நோனாவின் முகத்திலும் சோர்வு தெரிகிறது. இல்லை எனக்குப் பிரச்சினை இல்லை, எவ்வளவு தூரம் என்றாலும் என்னால் பறக்க முடியும்., சொன்னாளே தவிர தொடர்ந்து பறந்தபோது உடலில் அசதியை உணரமுடிந்தது. தனக்கு முன்னே பறந்துகொண்டிருந்த தேவவிரதனை ஒரு பொம்மை என்று நினைக்க அவளது மனதிற்குச் சம்மதமில்லை. அவனுக்கும் அந்த எண்ணம் இருக்குமா? என்னைப் பார்க்கிறபோதெல்லாம், நான் நோனாவாகத்தான் அவன் மனதில் பதிவேனா? தேவவிரதன் என்கிற அவதாரத்துக்குள் இயங்கும் ஆண் அல்லது பெண் யாராக இருக்கும்? கேட்டால் அவனிடத்தில் பதில் வருமா? அப்படிகேட்பது ஒருவேளை இரண்டாவது வாழ்க்கையின் சட்ட திட்டகளுக்கு முரணானதோ? தொடர்ந்து பதில்களற்ற பல கேள்விகள். இப்போதைக்கு அவனைப் பின் தொடர்ந்து பறக்கவேண்டும், பறக்கிறாள்.

கடல் நீர்க்கிடையில் பெரிய நிலத்திட்டு தெரிந்தது, நீல நீரில் கொத்துகொத்தாய் பவழப் பாறைகளும், நீர்வாழ் தாவரங்களும் தெளிவாய் தெரிந்தன. கூட்டங் கூட்டமாய் கடற்பறவைகள், அவற்றின் ஆரவாரமான சத்தங்கள், தென்னை, புன்னை, முந்திரி.யென வளர்ந்த மரங்கள் நெருங்கியபோது தீவல்ல, தீவுகள் கூட்டம் என்பது புரிந்தது. இங்கேயும் ஒரு நுழைவாயில், பெயர்ப்பலகையின் வளைவில் மாத்தாஹரி என்றிருக்கிறது.

– உண்மையில் எங்கள் குழுமத்தில் உறுப்பினர்கள் ஆனவர்களுக்குத்தான் அனுமதி அளிப்பார்கள். அதோ சிறியகட்டிடமொன்று தெரிகிறது இல்லையா? அங்கே எங்கள் குழுமத்தில் சேர்வதற்கான விண்ணப்பங்களைக் கேட்டுப் பெறலாம். இந்தக் குழுவைப் பற்றிய முழுவிபரங்களும் அதில் தெளிவாக இருக்கின்றன. எங்களைப்பற்றி உனக்கும் ஓரளவு தெரிந்திருக்குமில்லையா?

– உண்மையைச் சொன்னால் எனக்குத் தெரியாதென்றுதான் சொல்லவேண்டும்.

– எங்கள் நோக்கம் மாத்தாஹரியைப் பற்றிய எல்லா ஆதாரங்களையும் சேகரிப்பது, அவள் அப்பாவி என்று நிரூபிப்பது. முக்கியமாக இவ்வமைப்பின் சார்பில் உலகில் மரண தண்டனை என்ற ஒன்றை இல்லாமல் ஒழிப்பது.

– அதை நாம வெளியிலிருந்து செய்யலாமே.

– நான் மாறுக்கலை. ஆனாலும் நம்மில் பலருக்கு பொய்யை பேசுகிறபோது தாங்கள் யாரென்று காட்டிக்கொள்வதில் உள்ள தைரியம், உண்மையைச் சொல்வதில் இல்லை. அதை முகத்தை ஒளித்துகொண்டுதான் சொல்ல முடியுது. அது இங்கே சாத்தியம். தவிர இரண்டாவது வாழ்க்கை மனிதர்கள் அசலான மனிதர்கள். வெளியுலகத்தில் நாம் அன்றாடம் சந்திக்கும் போலி மனிதர்களல்லர். அடுத்த முறை நிறைய பேசலாம். சங்கத்தின் நோக்கங்கள், செயல்பாடுகள் குறித்த படிவத்தினை, நிர்வாக அலுவலகத்தில் கேட்டுப் பெற்றதும் நிதானமாகப் படித்துவிட்டு வா, ஐயமிருந்தால், மூத்த உறுப்பினர்கள் உனக்கு அதற்கான விளக்கத்தை அளிப்பார்கள். நானும் உனக்கு உதவமுடியும். இன்றைக்கு எனக்கு நேரமில்லை.

– மூத்த உறுப்பினர்களில் ஒருசிலரையாவது இன்றைக்கு பார்க்க முடியுமா?

– முடியாது. நாங்க விரும்பினாலும், இரண்டாவது வாழ்க்கையின் பொதுவிதி நீ கட்டண உறுப்பினராக மாறின பிறகுதான் அதை அனுமதிக்கும். உனக்கு விருப்பமிருந்தால் மாத்தா ஹரி வாழ்ந்த நாடுகள் ஒவ்வொன்றின்பேரிலும், ஒரு தீவு இருக்கு, போய்ப்பாரு. உல்லாச இரயிலொன்று இருக்கிறது, எல்லா தீவுகளையும் சுற்றி வருகிறது. கட்டணம் இரண்டு லிண்டன் டாலர். உன்னிடத்தில் லிண்டன் டாலர் இல்லையெனில் நான் தருகிறேன். அந்த அனுபவங்கள் எப்படி இருக்குதென்று அடுத்தமுறை சொல்லேன். அப்படி இல்லையெனில், ஒவ்வொரு தீவையும் தனியாகவும் சென்று பார்க்கலாம். என்னைக் கேட்டால் அது ரொம்ப த்ரிலிங்கானது. ஹாலந்து, இந்தோனேசியா, பிரான்ஸ், ஜெர்மன், ஸ்பெயின், இத்தாலிண்ணு தீவுகள் இருக்கின்றன. நமக்கு நேர் எதிரே தெரிவது இந்தோனேசியா. எங்கே ஆரம்பிக்கப்போற.

– இந்தோனேசியாவிலிருந்தே ஆரம்பிக்கிறேன்.

– தப்பில்லை. நோனா பிறந்தது அங்குதான். முதலில் அதற்கு விஜயம் செய். பிறகு மற்ற தீவுகளுக்கும் போய்வா. நான் போகணும். வரட்டுமா? அடுத்தமுறை சந்திப்போம். சட்டென்று தேவவிரதன் வனங்கி விடைபெற்றான். இவள் தலையாட்டினாள்

இரண்டு கடல் சங்கமித்திருப்பதுபோல டெலி, பாபுரா நதிகள் கலந்திருந்தன. உடைப்பெடுத்த கடல்போல நீர் சுழித்துக்கொண்டு பாய்கிறது. குடிசைகள், வயிறுப்பிய விலங்குகள், கவிழ்ந்த நிலையில் மனித உடல்கள், ஒடிந்த கிளைகள், மிலாறுகள், அவற்றுக்கிடையில் இறக்கை பரத்திக்கிடக்கும் பறவைகள், அடைஅடையாய் சிவந்த எறும்புகள், பாம்புகள் எனப்பார்க்க மூச்சே நின்றுவிடுபோல இருக்கிறது. நெஞ்சைப் பொத்திக்கொண்டாள். மார்பு படபடக்கிறது. அழுகிப்போன உடல்களினின்று புறப்பட்ட துர்நாற்றம் காற்றில் கலந்து முக்கில் நுழைந்தது, குமட்டிக்கொண்டு வந்தது. மறுகரையில் பார்வையை சோர்வுறச் செய்யும்வகையில் நீண்டுகிடக்கும் மலைத்தொடர்கள், மலைத்தொடருக்கு இணையாக நீள்வரிசையில் தென்னைமரங்களும் பாக்குமரங்களும் தோளில் கைபோட்டிருப்பதுபோல வளர்ந்து வழியை அடைத்துக்கொண்டிருக்கின்றன. பெலவான் துறைமுகம், இருளில் மூழ்கிக் கிடக்கிறது. மனிதர் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கும் சாலை, ஓடுகிறாள். பயம் இருட்டிடமா? அல்லது மழையிடமா? தீர்மானமாக சொல்லமுடியவில்லை. இதற்குமுன்பு அப்படி ஓடியதுபோல நினைவில்லை.

– இது மழைக்காலம். நீ மழைக்கடவுளை எழுப்பி இருக்கிறாய், அதன் கோபத்திற்கு உள்ளாகியிருக்கிறாய்.

– நானில்லை.

– இல்லை, அதுதான் உண்மை. எங்கள் வாழ்நாளில், இப்படியொரு மழையை இந்தோனேசியாவில் கண்டதில்லை. வாரத்தின் ஏழூ நாட்களும் மழை பெய்கிறது, சிலசமயங்களில் ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை, சில சம்யங்களில் மணிக்கனக்கில் விடாது பெய்கிறது. சில சமயங்களில் டெலி, பாபுரா நதிகளை யாரோ ஆகாயத்திற்கும்- பூமிக்குமாக திசைதிருப்பியிருப்பதுபோல மழை கொட்டுகிறது. “ஓடு.. வேகமாய் ஓடு, மேடான் நகரம் நீரில் மூழ்கிபோவதற்கு முன் தப்பிவிடு”. பெண்குரல். திரும்பிப் பார்த்தபொழுது குரலுக்குச் சொந்தக்காரியென்று எவளுமில்லை.. மழை உக்கிரத்துடன், காற்றோடு கலந்து முகத்தில் சுளீர் சுளீரென்று முகத்தில் விழுந்து தெறிக்கிறது, காலடியில் மண் சொதசொதவென்று இருக்க, புதைந்த காலை எடுக்கிறபொதெல்லாம், தனது சக்தியை விரயமாக்கியதில், களைத்து இருக்கிறாள். நிலவுள்ள வானம். பாழாய்போன மேகங்களுக்கு அடியில் சிக்குண்டு தவிக்கிறது. முதன்முறையாக தூரத்தில் மலைத்தொடரிலிருந்து, பீறிட்டுக்கொண்டு மின்னற் கீற்றுகள், அதன் நொடிநேர பிரகாசத்தில் மலை முகட்டில் நின்றபடி, இவளிருந்த திக்கினை நோக்கி பெண்மணி ஒருத்தி கையை அசைத்ததுபோல பிரமை.

இந்தமுறை இவளது வேகத்திற்கு ஈடுகொடுத்து, யாரோ பின்னால் ஒடிவருகிறார்கள். மூச்சு இறைக்கிறது. கொஞ்சம் நின்று ஓடினால் தேவலாம். ஓடாதே நில்! சத்தம் இப்போது நெஞ்சிலிருந்து வருகிறது. ஆச்சரியமாயிருக்கிறது. சற்றுமுன்பு அவளுக்கு வெளியே கேட்ட அதே குரல், அதே தொனி, அதே மொழி.

மனதில் ஏற்பட்ட அச்சத்தை ஒதுக்கிவிட்டுத் திரும்பிப் பார்க்கிறாள், நடுத்தரவயது, மெலிந்த பெண்மணி, வெளுத்த முகத்தில், அடுத்தவர் பார்வையைக் கட்டிப்போடக்கூடிய வசீகரம். இவள் ஊமையாக நிற்கிறாள்.

– நோனா?

– என்னைத் தெரியலை. எங்கே ஓடற? என்னைத் தவிக்கவிட்டு ஓடாதேண்ணு எத்தனை முறை சொல்வது. அவன் எப்பஎப்பவென்று இருக்கிறான்.

– யாரு?

– ருடோல்ப். எனது கனவுகளைச் சிதைத்தவன். இப்போ உன்னையும் என்னிடமிருந்து பிரித்துடணும்னு கங்கணம் கட்டிக்கொண்டு அலையறான். அதற்கு இடங்கொடுத்திடாதே.

– நீங்க என்ன சொல்றீங்க..

– கங்கைப் புனலில் நீராடி, தலைவாரி, நறுமலர் சூடி களங்கமில்லா மாணிக்க நிற நெற்றியில், பவழத்தையொத்த குங்குமம் தரித்து, தூய ஜாவா பட்டில் தயாரித்த கெபாயா உடுத்தி, இருகரங்களிலும் வளையல்கள் அசைந்தாட, செம்பஞ்சு குழம்பு பூசிய கால்களில் சலங்கைகள் ஒலிக்க வந்திருக்கிற என்னைத் தெரியலையா?

– மாத்தா ஹரி?

– பரவாயில்லையே என்னை ஞாபகம் வச்சிருக்கிற.

– ஆனால் நான் நோனா இல்லை.

– இங்கே பொய்பேசக்கூடாது. பயப்படாதே கிட்டே வா. உடம்பு ஏன் இப்படி அனலாகக் கொதிக்க்கிறது. நெற்றியில் ஏன் இவ்வளவு வேர்க்குது. அப்படித்தான் நல்லா அணைச்சுக்க.

சரீரத்தில் பாரமொன்றை வாங்கிக் கொண்டதுபோல இருக்கிறது. பெண்மணியின் சரீரத்துடன், பட்டின் வழவழப்பையும், பாலை மணலின் மிருதுத் தன்மையும் சேர்ந்தே உணருகிறாள். சற்றுமுன்பு ஓடுகிறபோது காலடியில் உணர்ந்த ஈரமண்ணின் சொதசொதப்பும் சிலவிடங்களில் உணரப்படுகிறது. உடலுக்குப் பசி, அகோரப்பசி. ஒரு பருக்கையைக்கூட விட்டுவைக்கக்கூடாதென்பதுபோல கண்கள் அலைகின்றன. கைகள் பரபரக்கின்றன. கைகளும், வாயும் ஒத்துழைத்த போதிலும் பசி குறைந்தபாடில்லை. பெண்மணி சிரிக்கிறாள். அவசரப்படாதே என்கிறாள். இவளைத் தின்ன அவள்தான் அவசரப்படுகிறாள். ஹரிணியின் தலை பெண்மணியின் மார்பில் புதைகிறது. இதயங்கள் இரண்டும் அதிவேகத்தில் துடிக்கின்றன. எதையோ தொலைத்தவர்கள்போல ஒருவர்மாற்றி ஒருவர் அடுத்தவர் சரீரத்தில் தேடுகின்றனர். இரு உடல்களும் அந்தரத்தில் மிதக்கின்றன. மறுகணம் இவளது உடல் மாத்திரம் நதியில் அடித்துப்போகிறது.சுழலில் சிக்கிக்கொள்கிறாள். ஆழத்துக்கு இழுத்துக்கொண்டு போகிறது. உயிருக்குப் போராடுகிறாள். கரையிலிருந்துகொண்டு அவள் சிரிக்கிறாள். அவளை ஏற்கனவே கண்டிருக்கிறாள். எங்கு? எப்போது? இவள் ஹரிணி என்பது உறைத்ததும், பதில் கிடைத்தது. அவள்..அப்பெண்மணி மதாம் க்ரோவா?

– ஹரிணி..

– யாரு? கமிலி கூப்பிட்டியா?

– பத்து நிமிடமா கத்தறேன். காதில விழலையா. எந்த உலகத்திலே இருக்க? ஆல்பெர்ட்டோ காலையிலேயே இன்னும் நீ வரலையாண்ணு கேட்டு சத்தம்போட்டான். சிரிலிடம், அவனைக்கேட்காமல் உனக்கு லீவு கொடுத்திருக்கக்கூடாது என்று வாதிட்டான். வேலையிலே கவனம் இருக்கட்டும். இவரை கொஞ்சம் வெளியில் அனுப்பிட்டு வந்திடறேன். அல்பர்ட்டோவோ, சிரிலோ வந்தாக் கொஞ்சம் சமாளி கால் மணி நேரத்துலே வந்திடறேன்.

கமிலியின் மேசைக்கு எதிரே நாற்காலியில் அர்ந்திருந்த அந்நபர் எழுந்துகொண்டார். அவர்கள் அறையில் மூன்றாவதாக ஒரு நபர் அமர்ந்திருப்பதை ஹரிணி அப்போதுதான் கவனித்தாள். வயது ஐம்பதுக்குக் குறையாமல் இருக்கலாம். தோலின் நிறம் வெள்ளையாக இருந்தபோதிலும், தலைமுடியும், உதடுகளும், அவர் கறுப்பரினத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவித்தது

– பப்பா, ஹரிணி, என்னுடய சிநேகிதி. இந்திய வம்சாவளி

– ஹரிணி இவர் என்னுடைய அப்பா. கொல்மார்ல இருக்கிறார்.

– ஹரிணியும், புதிய நபரும் பரஸ்பரம் கைகொடுத்துக்கொண்டனர்.

– மத்மசல் ஹரிணி, உன்னை இத்தனை சீக்கிரம் சத்திப்பேன் என்று நினைக்கலை.

– நீங்க என்ன சொல்றீங்க.

– என் பேர் பிலிப் பர்தோ, இப்போது ஞாபகம் வருதா. போன வாரத்தில் உனக்குக் கடிதங்கூட எழுதி இருந்தேனே.

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation