மஸ்னவி கதை — 10.1 : அறிவான அரபியும் ஆசை மனைவியும்

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

தமிழில் : நாகூர் ரூமி


ஜாடி நீருடன் கலீஃபாவின் சபைக்கு வந்தான் அரபி. தேவையுள்ளவர்களெல்லாம் தங்கள் வலைகளுடன் அங்கே காத்திருப்பதைக் கண்டான் அவன். கணத்திற்குக் கணம் யாராவதொருவர் தனது தேவைகள் நிறைவேற்றப் பட்டவராக கண்ணியப் படுத்தப்பட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

நல்லவனோ கெட்டவனோ, நம்பிக்கை உள்ளவனோ இல்லாதவனோ, அனைவருக்குமான வெயிலையும் மழையையும் போல, கலீஃபாவின் சபை திகழ்ந்தது.

சொர்க்கத்தைப் போல! சூர் ஊதப்பட்டவுடன் உயிர் பெற்றவரைப் போல அங்கே அனைவரும் நின்று கொண்டிருந்தனர். சுலைமானிலிருந்து எறும்பு வரை. உருவங்களைப் பார்த்தவர்கள் முத்துக்களைக் கண்டார்கள். உண்மையைப் பார்த்தவர்கள் கடலிடம் சேர்ந்திருந்தார்கள்.

பிச்சைக்காரர்கள் செல்வத்தை நாடுவதுபோலவே, இறையருளாகிய செல்வம் பிச்சைக்காரர்களைத் தேடுகிறது. அழகானவர்கள் தெளிவான கண்ணாடியைத் தேடுவது போல, அழகின் முகம் கண்ணாடியில் தெரிவது போல, இறை தாராளமாகிய அருளின் முகத்தை பிச்சைக்காரன் பிரதிபலிக்கிறான்.

‘ஓ, முஹம்மதே! பிச்சைக்காரர்களை விரட்டவேண்டாம் ‘ என்று ‘சூரா வள்ளுஹா ‘வில் வருவதைக் கவனியுங்கள்.

இறையருளின் கண்ணாடியாக பிச்சைக்காரர்கள் இருப்பதனால் ஜாக்கிரதை! உங்கள் மூச்சுகூட கண்ணாடியை காயப்படுத்தும்.

கொடுப்பவன் கொடுப்பதனால்தான் பிச்சைக்காரன் பிச்சைக்காரனாக இருப்பது தெரிகிறது. இன்னொரு வகை பிச்சைக்காரர்கள் உண்டு. அவர்களின் தேவைகளுக்கு மேல் அதிகமாக, கேட்காமலேயே கொடுக்கப் படுகிறது.

எனவே எல்லா பிச்சைக்காரர்களும் இறையருளின் கண்ணாடியாக உள்ளார்கள். இறைவனோடு ஒன்றிய இன்னொரு வகையினர் இறையருளோடும் இணைந்தவர்கள்.

இந்த இரண்டு வகையான பிச்சைக்காரர்களைத் தவிர, மற்ற அனைவரும் இறந்தவரே!

இறை சன்னிதானத்தின் வாசலில் நிற்பவர்கள் அல்ல அவர்கள். திரைச்சீலையில் பாவு போடப்பட்ட (உயிரற்ற) உருவங்களை ஒத்தவர்கள் மற்றவர்கள்.

இறைவனைத் தவிர மற்றதைத் தேடுபவர்கள் ஒரு ஞானியின் உருவப் படத்தை ஒத்தவர்கள். இறையருளாகிய உணவுக்கு தகுதியற்றவர்கள். நாயின் உருவப்படம் மீது ரொட்டித் துண்டை எறிய வேண்டாம். உணவை (மட்டும்) யாசிக்கும் ஞானியோ நிலத்து மீனைப் போன்றவர். மீனின் வடிவம் மட்டும்தான் உள்ளது. ஆனால் கடலை விட்டு ஓடி வந்த மீன் அது.

நான் சொல்வதை எத்தனை பேர் சரியாக புரிந்துகொள்வார்கள் என்று தெரியவில்லை. அத்தி மரத்திலிருந்து தனக்கான உணவையெல்லாம் எல்லாப் பறவைகளும் எடுத்துக்கொள்ள முடியாது. வரை படத்து மீனுக்கு நிலத்திற்கும் நீருக்கும் வித்தியாசம் தெரியுமா என்ன ?

சோகமான ஓவியம் சோகத்தை உணருமா என்ன ?! தோற்றத்தில் அது சோகமாக திகழ்ந்தாலும் சோகத்திலிருந்து விடுதலை பெற்றது ஓவியம். இதைப்போலவே இவ்வுலக இன்பதுன்பங்கள் யாவும் ஆன்மீக உலக இன்ப துன்பங்களுக்கு மத்தியில் ஒன்றுமில்லை. உயிரைப் பற்றி உடல் ஒன்றும் அறியாது. உடலைப் பற்றி ஆடை அறியாதது போல.

அரண்மனைக்கு வந்த அரபியை கலீஃபாவின் அதிகாரிகள் வரவேற்றார்கள்.அவன் மீது கஸ்தூரி கலந்த நறுமண நீர் தெளித்தார்கள். (அவன் எதுவும்) பேசாமலே அவன் தேவையை அறிந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள். கேட்குமுன்னே கொடுப்பது அவர்கள் பழக்கமாயிருந்தது.

‘அரபிகளின் தலைவரே! எங்கிருந்து வருகிறீர்கள் ? பிரயாணமெல்லாம் எப்படி ? ‘

என்று விசாரித்தனர்.

‘நான் ஒரு அந்நியன். பாலைவனத்தில் இருந்து பஞ்சம் போக்க சுல்தானின் தயவை நாடி பாக்தாது வந்துள்ளேன். சுல்தானின் தாராள குணத்தின் வாசம் பாலைவனம் முழுவதும், அதன் மணல் துகள்களில்கூட ஊடுறுவிப் பரந்துள்ளது. தீனார்களுக்காகத்தான் நான் இந்த தொலைதூரப் பயணம் மேற்கொண்டேன். ஆனால் இங்கு வந்தவுடன் என் கண்கள் திறந்துவிட்டன ‘

கிணற்றிலிருந்து நீர் எடுக்கும்போது ஜீவ நீராகிய ஹவ்லுல் கவ்தரை யூசுஃப் நபியின் முகத்தில் இருந்து பருகியதைப் போல, விலக்கப்பட்ட கனியை உண்டதால் மனித குலத்திற்கே ஆதம் வித்திட்டதுபோல, பழி வாங்குவதற்காக போர்க்களம் வந்த அப்பாஸ், முஹம்மதையும் அவர் மார்க்கத்தையும் மறுமைவரை காப்பவராக மாறிவிட்டதைப் போல, அப்பா தரப்போகும் இனிப்புக்காக பள்ளி சென்ற குழந்தை, முடிவில் அறிவைப் பெறுவது போல. ‘

‘செல்வத்தை நாடித்தான் இந்த ஏழை இச்சபைக்கு வந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு, உண்மையிலேயே (ஆன்மீகத்தில்) அரபிகளின் தலைவனாகிவிட்டேன். ‘

‘ரொட்டியை நாடி தண்ணீர் கொண்டு வந்தேன். ஆனால் இங்கு எனக்கு ஒரு சொர்க்கமே கிடைத்துள்ளது. சொர்க்கத்திலிருந்து உணவுதான் ஆதமை வெளியே தள்ளியது. எனக்கு உணவுதான் சொர்க்கமளித்துள்ளது. மலக்குகளைப் போல எனக்கு உணவும் நீரும் தேவையில்லாமல் ஆகிவிட்டது. எந்த நோக்கமும் இன்றி சுழலும் கிரகத்தைப் போல நான் இந்த அரண்மனையை வலம் வருகிறேன் ‘

என்றான் அரபி.

ஜாடியில் இருந்து மழை நீரை கலீஃபாவுக்கு பரிசாக வழங்கினான் அரபி. ஜாடி நீரானது பலவகையான அறிவுகளைக் குறிக்கும். கலீஃபாகவோ இறை ஞானமெனும் டைக்ரிஸ் நதியைப் போன்றவர். நாம் நம்முடைய மடமையினால் டைக்ரிஸ் நதிக்கு ஜாடி நீரைப் பரிசளிக்கிறோம். காட்டரபியாவது மன்னிப்புக்குரியவனே, ஏனெனில், அவன் டைக்ரிஸ் நதியை அறியாதவன். அறிந்திருந்தால் ஜாடியை உடைத்துப் போட்டிருப்பான்.

பரிசைப் பெற்றுக்கொண்ட கலீஃபா, ஜாடி நிறைய பொன்னையும் பொருளையும் நிரப்பி அந்த அரபியை கண்ணியப்படுத்தினார். போகும்போது, பாக்தாதின் வளம் மிக்க ஜீவ நதியான டைக்ரிஸ் நதியின் வழியாக அவனைக் கொண்டுவிடச் சொன்னார்

டைக்ரிஸ் நதிப்பயணம் அரபியின் கண்களைத் திறந்தது. தன் முட்டாள்தனத்தை உணர்ந்து கொண்ட அரபி, வெட்கப்பட்டு தலை குனிந்தான். அரசரின் பெருந்தன்மையை எண்ணி வியந்தான், வியர்த்தான்.

தெரிந்து கொள் மகனே! இந்த பிரபஞ்சமும் முழுவதுமே ஞானமும் அழகும் நிறைந்த ஒரு ஜாடிதான். இறைவனின் அழகாகிய டைக்ரிஸ் நதியின் ஒரு துளிதான் இந்த பிரபஞ்சம். பொறாமையினால் ஜாடியின்மீது கல்லெறிந்து உடைப்பவர்களே! தெரிந்து கொள்ளுங்கள். சிதறச் சிதற ஜாடி மேலும் பரிபூரணமடையும். ஜாடி உடைந்தாலும் தண்ணீர் சிந்தாது.

உடைந்த ஜாடியின் ஒவ்வொரு துண்டும் ஆனந்தக் கூத்தாடும். முழுமையைப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு இது முட்டாள்தனமாகத்தான் தோன்றும். பரிபூரண பேரானந்தத்தில் ஜாடியுமில்லை, நீருமில்லை!

நீ உண்மையில் கதவைத் தட்டும்போது அது திறக்கும். ஆனால் உனது எண்ணத்தில் சேறு படிந்துள்ளது. பசிக்கும்போது நாயைப் போலவும், வயிறு நிரம்பியதும் பிணத்தைப் போலவும் நீ ஆகிவிடுகிறாய். சிங்கங்களின் (அவ்லியாக்களின்) பாதையில் நீ எப்படி நடைபோடமுடியும் ?

அரிப்புக்கு மருந்து சொரிவதல்ல. சொரிவதனால் அரிப்பு தீவிரமாகத்தான் ஆகும். சும்மா இருப்பதுதான் மருந்தின் தத்துவம். அப்போதுதான் ஆத்மாவின் பலம் புரியும். நோயோடு சண்டை போட வேண்டாம். முழுமையைப் பகுதிகளாகப் பார்ப்பவர்கள்தான் சண்டை போடுபவர்கள். அரபியையும் அவர் மனைவியையும் போல.

ரோஜாவின் மணம் அதன் பகுதிதான். ஆனால் ரோஜாவின் அழகு அதைச் சுற்றியுள்ள எல்லா பச்சைத்தாவரங்களின் அழகின் பகுதியாக அதைச் சார்ந்துள்ளது. புறாவின் குரல் வானம்பாடியின் பகுதியாக உள்ளது. இப்படிப் புரிந்துகொள்ள முடியாத குருடர்கள்தான் வறுமை என்றும் செழுமை என்றும் பிரித்துப் பார்ப்பார்கள். அரபியின் மனைவியைப் போல.

அந்த அரபியும் நாம்தான். அவன் மனைவியும் நாம்தான். ஜாடியும் நாம்தான். கலீஃபாவும் நாமே. இந்த கதை தலையும் காலும் இல்லாதது போலத் தோன்றுகிறது. மழைத்துளியைப் போல. மழைத்துளியின் தலையும் காலும் மழைத்துளிதான்!

— தொடரும்..

அருஞ்சொற்பொருள்

சூர் — உலகமுடிவு நாளில் இறந்த அனைவரையும் எழுப்ப ஊதப்படும் ஒரு கருவி / அக்கருவியினால் எழுப்பப்படும் சப்தம்

‘சூரா வள்ளுஹா ‘ — திருமறை அத்தியாயம்

ஹவ்லுல் கவ்தர் — சொர்க்கத்து ஓடை

ruminagore@hotmail.com

ruminagore@yahoo.com

ruminagore@gmail.com

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி