மழையாக நீ வேண்டும் – 1

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

வேதா மஹாலஷ்மி


விரல் பிடித்து நடக்க வேண்டும்,
நீ விரும்பியதை சமைக்க வேண்டும்,

கதை கதையாய் கதைக்க வேண்டும்,
காலாறத் திரிய வேண்டும்,

காதுக்குள் கொஞ்ச வேண்டும்,
கைபிடித்து தொங்க வேண்டும்,

நீ கவிதை கிறுக்க வேண்டும்,
அதில் பிழை நான் பொறுக்க வேண்டும்,

உன் தமிழைத் திருத்த வேண்டும்,
தலையில் பொய் பேன் எடுக்க வேண்டும்,

கீதம் இசைக்க வேண்டும்,
கிச்சுகிச்சு மூட்ட வேண்டும்,

நீ பாடிக் கேட்க வேண்டும்,
எனக்காய் பதறிப் பார்க்க வேண்டும்,

காலை தினமலரில், காபியில்,
தேநீரில், தினைமாவில்,
தினமும் என் பங்கு வேண்டும்,

மாலை மதி வேண்டும்,
மாடிப்படியாய் நாம் மாற வேண்டும்,

மலர்ந்த உன் நினைவெல்லாம்
மலர்த்திப் பார்க்க வேண்டும்,

அம்மா திட்ட வேண்டும்,
நான் அழகாய் அழ வேண்டும்,

மூன்றாம் நிலவு வேண்டும்,
அது மறுநாள் தெரிய வேண்டும்,

பல்லாங்குழி வேண்டும்,
படைவெட்டி விளையாட வேண்டும்,

பாசம் நிறைக்க வேண்டும்,
அதில் படுத்து நான் உறங்க வேண்டும்,

நான் வளர்ந்த கதையெல்லாம்
உன் வாயாரக் கேட்க வேண்டும்,

வசந்தம் பூக்க வேண்டும்,
என் வயது குறைய வேண்டும்,

உன் வரவுக்காய் பார்த்திருந்த
வெளிளிக் காலை வேண்டும்,

வெளிளமாய் நினைவுகள்
வற்றித் தடம் நிறைக்க,
வறண்டு போய் வலிக்கும் மனசுக்கு..
மருந்தாக மறுத்தாலும்,
மழையாகவேனும், நீ வேண்டும்!
மழலையாய் நான் மாற,
எனக்கே எனக்காய்
அப்பா! உன் மடி வேண்டும்!!

மழையாக நீ வேண்டும் – 2
====

– வேதா மஹாலஷ்மி

விரல் பிடித்து நடக்க வேண்டும்,
நீ விரும்பியதை சமைக்க வேண்டும்,

கதை கதையாய் கதைக்க வேண்டும்,
காலாறத் திரிய வேண்டும்,

காதுக்குள் கொஞ்ச வேண்டும்,
கைபிடித்துத் தூங்க வேண்டும்,

நீ கவிதை கிறுக்க வேண்டும்,
அதில் பிழை நான் பொறுக்க வேண்டும்,

உன் தமிழைத் திருத்த வேண்டும்,
தனிமையில் வருட வேண்டும்,

கீதம் இசைக்க வேண்டும்,
கிச்சுகிச்சு மூட்ட வேண்டும்,

நீ பாடிக் கேட்க வேண்டும்,
எனக்காய் பதறிப் பார்க்க வேண்டும்,

காலை உறக்கத்தில், கனவில்,
கவிதையில், காதலில்,
சின்னச் சிரிப்பில், சிறகுப் பார்வையில்,
மனதில், நினைவில்,
மறக்கவே முடியாமல்..
தினமும் என் பங்கு வேண்டும்,

மாலை மதி வேண்டும்,
மரத்தின் வழி பார்க்க வேண்டும்,

மலர்ந்த உன் நினைவெல்லாம்
மலர்த்திப் பார்க்க வேண்டும்,

அம்மா திட்ட வேண்டும்,
நான் அழகாய் அழ வேண்டும்,

மூன்றாம் நிலவு வேண்டும்,
அது மறுநாள் தெரிய வேண்டும்,

உதட்டைச் சுழிக்க வேண்டும்,
உன் உள்ளம் உருக்க வேண்டும்,

உன் கண்கள் சிவக்க வேண்டும்,
கவிதை பிறக்க வேண்டும்,

பாசம் நிறைக்க வேண்டும்,
அதில் படுத்து நான் உறங்க வேண்டும்,

நீி வளர்ந்த கதையெல்லாம்
உன் வாயாரக் கேட்க வேண்டும்,

வசந்தம் பூக்க வேண்டும்,
என் வயது குறைய வேண்டும்,

உன் வரவுக்காய் பார்த்திருந்த
ஞாயிறு மதியம் வேண்டும்,

வாழ்த்திற்காய் காத்திருந்த
பிறந்தநாள் முழுதும் வேண்டும்,

வெளிளமாய் நினைவுகள்
வற்றித் தடம் நிறைக்க,
வறண்டு போய் வலிக்கும் மனசுக்கு..
மருந்தாக மறுத்தாலும்,
மழையாகவேனும், நீ வேண்டும்!
மழலையாய் நீ மாற,
உனக்கே உனக்காய், மீண்டும்
என் மொத்தமும் பொழிய வேண்டும்!

veda
piraati@hotmail.com

Series Navigation

வேதா மஹாலஷ்மி

வேதா மஹாலஷ்மி