மரணம் நிகழ்ந்த வீடு…

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

சசிதரன் தேவேந்திரன்


ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
அதனதன் இயல்பு மாறியிருக்கிறது.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
வந்து போகும் அத்தனை முகங்களிலும்
ஒரு இறுக்கம் திணிக்கபடுகிறது.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
அழும் உறவுகளை தேற்றுவதெப்படியென
யாருக்கும் புரிவதில்லை.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
யாருக்கும் பசிப்பதில்லை.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
நீண்ட நாட்களுக்கு பிறகு
சந்திக்கும் உறவுகளும்
புன்னகை பரிமாறுவதில்லை.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
இறந்தவரின் மகனோ மகளோ
அனைவராலும்
கூர்ந்து கவனிக்கபடுகிறார்கள்.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
மரணம் நிகழ்ந்த விதம்
விவரிக்கப்பட்டு கொண்டேயிருக்கிறது.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
தொடர்ந்த சில நாட்களுக்கு
மரணம்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

– சசிதரன் தேவேந்திரன்
சென்னை – 92

Series Navigation