மனித வதை!

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

ப.வி.ஸ்ரீரங்கன்


ஒரு கெடுதியான காலத்துக்குள் தமிழ்ச் சமூகம் மூழ்கியுள்ளது.இந்தச் சமுதாயமானது எந்தவொரு தர்க்க நியாயத்துக்கும் இடம் கொடுக்காது தன்னைத் தக்கவைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது.இதன் எந்த நகர்வும் அறிவார்ந்த மக்கள் பிரிவால் அங்கீகரிக்க முடியாதவொரு இடர் நிறைந்த,முட்டுக்கட்டையிடும் செயலூக்கமாக மாற்றப்படுகிறது.

இங்கே பொய்மையையும்,கயமையையும் கலந்து அரசியல் செய்யும் ஆயுதக் குழுக்களும் அவைகளின் அரசியல் எதிர்பார்ப்பும் மக்களை,மக்கள் நலனைப் புறந்தள்ளிய நோக்கு நிலையோடு ‘அரசியல் ‘செய்கின்றன.இந்த மக்கள் நலன் மறுத்த குழுக்கள் தமக்குள் முட்டிமோதும் ‘அரசியல் இலாபத்துக்குள் ‘மூழ்கிப் பதவி ஆசையால் வெறிகொண்ட கொலைகளைச் செய்து தமிழ் மக்கள் சமுதாயத்தைக் காட்டுமிராண்டிச் சமுதாயமாகக் காட்டி நிற்கிறது. எந்தக் காரணத்தையும் கொலைகளுக்குச் சொல்ல முடியாது.மனிதவுள்ளம்கொண்ட ஒரு தனிநபர் தனது விருப்பு வெறுப்புக்காக எந்தக் கொலைகளையும் ஏதோவொரு காரணத்தை முன் வைத்துத் ‘திருத்திய ‘நேர்த்தியான-அவசியமான கொலையென்றாரானால்,அவர் கடைந்தெடுத்த ‘கொலைக் கிரிமனல் ‘என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளும் தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ‘மக்களை ‘மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பில்லை.இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிகத் தயாராகிறது.இது எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது.இங்கேதாம் நமது மரபு ரீதியான கட்சியரசியல் புரிவானதின் இயலாமை நம்மைப் போட்டுக் குழப்பிக் கொள்வதை நாம் அநுமதிக்கிறோம்.இத்தகையவொரு விருப்புறுதியானது நம்மால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘எதிர்பார்ப்புகளால் ‘ஆனதாகா! இது காலாகாலமாக நமது அரசியல் பண்பாட்டுத் தகவமைபு;புகளால் வார்க்கப்பட்டவொரு வடிவமாக நம்முன் வேறொரு மனிதனை இனம் காணத்தக்கக் கலவையைத் தயார்ப்படுத்தி நமது நோக்கத்தையே திசை திருப்புகிறது.

இங்கே மொழிக்காக,இனத்துக்காக,தேசத்துக்காக ‘உயிர்ப்பலிசெய்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு ‘எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டே மனித ஆளுமையைக் காவு கொள்கிறது.இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற ‘வர்க்க ‘அரசியலானது மண்ணையும்,மொழியையும் முதன்மைப்படுத்தும் அளவுக்கு மனித விழுமியத்தை ஒருநாளும் முதன்மைப் படுத்துவதில்லை.இது இந்தச் சிந்தனையை உயர்வாகவெண்ணுவதுமில்லை.வடிவமைக்கப்பட்ட நெகிழ்வுத் தன்மையற்ற ஒரு மனிதவடிவைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கும் இந்தத் ‘தேசிய ‘ அனுமானங்கள் மக்களின் உரிமைகளின் எல்லையில் தனது வலுக்கரத்தைப் பதிக்கிறபோது அங்கு அராஜகத்துக்கான முளை முகிழ்க்கிறது.இது எதனை முதன்மைப் படுத்த முனைகிறதென்ற புரிதலற்ற சாதாரணக் குடிமக்கள் தமது வாழ்வாதாரத்தைத் தொலைப்பதற்கானவொரு சூழலை, இங்ஙனம் இழப்பதைக்கூட ஒரு கட்டத்தில் ‘வடிவ மனிதர்களாகி ‘பற்பல கதைகளைப் பேசிக்கொள்ளும் தியாகியாக(ஆற்றலுற்ற மனிதவுறுதி) மாறிப் போகிறார்கள்.இந்த ஆற்றலைப் பிழிந்தெடுக்கக் காத்திருக்கும் அதிகாரத்துவத்தின் கனவானது அந்தத் திசையை மிக ஆழமாகப் புரிந்து கொண்டு மக்களின் -இனத்தின் புற வாழ்வைப் பற்றியவொரு ‘பொற்காலக் கற்பனைகளைத் ‘தயாhப்படுத்திக் கைவசம் வைத்துக் கொள்கிறது. இது மனித இயக்கத்தையே கட்டுப்படுத்தும் அல்லது அவர்களது சிந்தனையைப் பிம்பங்களின்(தேசம்,தேசியம்,இனம்,பண்பாடு,மொழி) பண்புக்கமையத் தயார்ப்படுத்தும் கருத்தியல் மனதை அவர்களிடம் தோற்றுகிறது.உண்மையான ‘இருப்பானது ‘நிசத்தில் அழிக்கப்பட்டபின் எஞ்சுவது சுமைகாவும் ஒரு ஜந்திரமே,இந்த ஜந்திரமானது பல வர்ணக் கனவுகளோடு,பெருமிதங்களோடு உயிர் வாழக் கற்றுக் கொண்ட சூழலுக்குள் வந்துவிடும்போது இதன் ‘வியாபித்த ‘மனிதமற்ற சமூகப்பங்களிப்பானது ‘வர்க்க ‘அரசியலுக்கும் அதன் மிதமான எதிர் பார்ப்புகளுக்கும் எந்தப் பங்கமும் விளைவிக்காத பாதகமற்ற சமூக நிர்ணயத்தைக் உள்வாங்கிக் கொள்கிறது.

இங்கே எது நடந்தாலும் ‘தப்பித்தல் ‘சாத்தியமாகிறது.அல்லது ஏலவே ‘தீர்மானிக்கப்பட்ட ‘அனுமானங்களுக்காகச் சகிப்புத் தன்மையை(ஜால்றா)மனமுவந்து ஏற்றுக் கொள்கிறது.இது புத்திஜீவிகளிடம் மிகுதியாகக் காணக்கூடியது.எது நடந்தாலும் இந்த மனம் மெளனித்துக்கிடக்கிறது.அல்லதுகவனத்தைத் திசை திருப்பி வேறுபக்கம் தன் ஆற்றலைத் திருப்புகிறது.இதுதாம் நடப்புப் பிரச்சனைகளைப் புறந்தள்ளிவிட்டு உலகக் கலைகளையும்,அவர்களின் உன்னதங்களையும் பேசுகிறது.தன்வீட்டில் சாக்கடை வழிந்து உட்புகப் போகும்போதுகூட இவர்கள் மாற்றானின் மகிமை பேசுவார்கள்.கிட்லார் காலத்தில் கூட அறிஞர்கள் இவ்வளவு கேவலமாகக் காயடிக்கப்படவில்லை. அந்தக்காலத்தில் ஐயன் ஸ்ரையின்(Albert EINSTEIN)

இப்படிக் கூறுகிறான்:

>>Die Welt ist

viel zu gefaehrlich,

um darin zu leben-

nicht wegen

der Menschen,

die Boeses tun,

sondern wegen

der Menschen,

die daneben stehen und

sie gewaehren lassen.<< -Albert EINSTEIN

‘இவ்வுலகமானது

ரொம்ப அபாயகரமானது,

அதற்குள் வாழ்வதற்கு-

இந்நிலை

மனிதர்களாலோ,

போக்கிரிகளாலோ அல்ல,

மாறாக,

மனிதர்கள்

அருகினிலிருந்து

அவர்களை அநுமதித்து விடுவதாலேயே. ‘ -அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்

நம்ம சமூகத்தில் இன்று நிகழும் ‘வன் கொடுமைகளை ‘இந்த ஸ்த்தானத்தில் இருக்கும் மனிதவுள்ளத்திடம் ஆப்பு வைத்தும் எடுத்துரைக்க முடியாது.இந்த வன்கொடுமை தவிர்க்க முடியாத ‘அத்துமீறிய ‘அறமாகப் பண்பாக எடுத்துரைக்கக் காத்திருக்கும் இந்த மனித மனம்.

இன நலனுக்குக்காக எதுவும் செய்யலாம் எனும் ஒரு ‘மொன்னைப் பேச்சு ‘அறிவுத்தளத்தைக் காவுகொண்ட பின் இந்தக் கோசங்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் அதிகார வர்க்கமானது தன்னைச் சமுதாயத்தின் அதீதமேய்ப்பானாக சமூகத்தின் உள்ளரங்குக்குள் எதுவிதத் தடையுமின்றி உட்பிரவேசிக்கின்றது.இத்தகைய வாசல் திறந்த பின் இது கட்டமைக்கும் அரசியலானது பாசிசத்தை நோக்கியதாகும்.சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் அது சுருட்டி வைத்துக் கொள்கிறது.சமூகத்தின் மிக முக்கியமான மனிதவளத்தையே அது தனது காலடியில் கிடத்தி வைக்கும்போது மற்றெல்லாம் இங்கே வெறும் துகள்களாகவே இருக்கிறது!இந்த ஸ்த்தானத்தை அது எந்நேரமும் வைத்திருக்க விரும்புகிறது,அதற்காகத் தன்னைத் தியாகத்திலும்,வீரத்திலும் ஒரு அவதாரமாக்க முனைந்து கொண்டே தனக்கு நிகரான வேறொரு ஆற்றலில்லையென்று ‘ஒளிவட்டம் ‘கட்டிக் கொண்டிருக்கிறது.இதை வாழ்வுக்கான வியூகமாக அது புரிந்து வைத்திருப்பதால் இதைச் சுற்றிய எண்ணவோட்டத்தை மிகையான அளவுகளில் சமூகத்தில் திணிக்கிறது.அதுவே ‘எழுக தமிழ் ‘ என்ற கோதாவில் தினம் மக்களைத் திணித்தெடுத்தபடி தன்னைத் தினம் புனரமைக்கிறது.

இந்தக் கோதாக்களுக்குமுன் எந்தப் பெரிய புரிதலும் ஈடு கொடுக்க முடியாது சேடம் இழுக்கிறது.இதை ஒப்பேற்றுபவர்கள் வெறும் சாதாரண மனித நடவடிக்கையில் ஈடுபடவில்லை மாறாக ஒரு இனத்தைச் சீரழிக்கும் ‘கிரிமனல்கள் ‘எனும் படி சொல்லலாம்.அந்தளவுக்கு மக்களைத் தமக்கேற்ற முறைமையில் தயார்ப்படுத்தி அவர்களை உளவியல் ரீதியாகவும்,உடல் ரீதியாகவும் வருத்துவதை எந்தத் தளத்திலும் எவரும் நியாயமெனச் சொல்லமுடியாது.இது திட்மிட்ட சதி,மக்களைக் காவுகொள்ளும் மனிதவிரோதச் செயல் முறை.

ப.வி.ஸ்ரீரங்கன்

19.11.2005

Series Navigation

ப.வி.ஸ்ரீரங்கன்

ப.வி.ஸ்ரீரங்கன்