மணியரசனின் சங்கர மட வெறுப்பும், சம்ஸ்கிருத வெறுப்பும்

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

மஞ்சுளா நவநீதன்


சங்கராச்சாரியார் மீது மணியரசன் வைக்கும் விமர்சனங்களையும் அதற்கு முன் ஞாநி தீம் தரிகிடவில் வைத்த விமர்சனத்தையும் படித்திருக்கிறேன். தி மு க – திக வினர் சங்கரமடத்தின் மீது வைக்கும் தாக்குதல்கள் கடந்த எழுபது வருடங்களாக நடந்து வருபவை. அந்த விமர்சனங்களில் மிகப்பலவும் எனக்கு உடன்பாடே. அதனால் அந்த விமர்சனங்களைப் பற்றியல்ல, அந்த விமர்சனங்களின் அடிப்படை பற்றிய விவாதம் நடத்தப் படவேண்டும். திராவிடக் கட்சிகளின் பிராமண எதிர்ப்பு அரசியலின் ஓர் அங்கமாக சஙகராசாரியார் மீதான விமர்சனம் எழுப்பப் படுகிறது.

சங்கராசாரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. விமர்சிக்க வேண்டிய பல தேவைகள் இன்று உள்ளன. ஆனால் எந்த அடிப்படையில் ? பிராமண நலன்களைப் பாதுகாப்பவர் என்பதாலா ? ஜகத்குரு என்ற பெயர் வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் ஒரு சிறுபான்மை மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்தி, ஆனால் தன்னை முழு இந்து சமூகத்தின் பிரதிநிதியாகக் காட்டிக் கொள்ளும் ஒரு ஆபத்தான வேலையை அவர் செய்து வருகிறார். பாபரி மசூதி விவகாரத்தில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் எப்படி பாரபட்சமானவை என்று எல்லோரும் அறிவார்கள்.

ஒரு இனக்குழுவின் முன்னேற்றத்திற்கு உழைப்பது இன்றைய ஜனநாயக உலகில் தவறென்று சொல்ல முடியாது. ராம்தாஸ் வன்னியர்களுக்காக, திருமாவளவன் , கிருஷ்ணசாமி ஆகியோர் தாழ்த்தப் பட்ட மக்களுக்காக பாடுபட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்றோ, இந்து மதத்தின் பாதுகாவலன் என்றோ வேடமிடுவதில்லை. அவரகள் தம்முடைய கட்சிப் பெயர்களாக பொதுத் தன்மையுள்ள புதிய தமிழகம், பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயர்களை இட்டிருந்தாலும், எல்லோருக்கும் அவர்கள் யார் நலனை முன்னிறுத்திச் செயல் படுகிறார்கள் என்பது தெரியும். ஆனால் சங்கராசாரியார் இந்து மதத்தின் ஒரே பிரதிநிதி என்று வேடமிட்டு பண்ணும் அரசியல் நாடகங்கள் மிக ஆபத்தானவை. அவருடைய யோசனையின் பேரில் தான் தமிழ் நாட்டு முதல்வர் ஆடு-கோழி பலியிடுவதைத்தடுக்க சட்டம் இயற்றினார் என்றும், மதமாற்றத் தடைச் சட்டம் போன்ற உணர்வுகளை மதிக்காத தான்தோன்றிச் சட்டங்களை இயற்றினார் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் அது மிகவும் கண்டிக்கத் தக்கது. சங்கராசாரியாரை விமர்சிக்க அவர் பிராமணர் நலம் பேணுகின்றார் என்ற அடிப்படையல்ல, இது போன்ற தலையீடுகள் தான் அடிப்படையாய் இருக்க வேண்டும்.

இந்திரா காந்தி காலத்தில் சஞ்சய் காந்தி, ஜெயலலிதா ஆட்சியில் உடன் பிறவா சகோதரி, கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஸ்டாலின் போன்றவர்கள் , இப்படி பொறுப்பேற்க வேண்டாத அதிகாரத்தைப் பெற்றிருந்தனர் என்று சொல்கிறார்கள். இது தான் விரும்பத்தகாத விஷயம். ஜனநாயக ஆட்சியில் அழுத்தம் தரும் குழுக்கள் இருக்கலாமே தவிர , பொஇறுப்பேற்காத வகையில் அதிகாரம்(Extra constitutional authority) மேற்கொள்பவர்கள் இருப்பதும், அவர்கள் சொஇல்லுக்கு ஆட்சியாளர்கள் , தலைகுனிந்து ஏற்றுக் கொள்வதும் தான் மிக ஆபத்தான விஷயம்.

தமிழ்ப் பத்திரிகைகள் ஏகமாக நடமாடும் தெய்வம், ஜகத்குரு என்று தீபாவளி மலரில் நிரந்தர முதல் பக்கத்தை இவருக்கு அளித்து வேறு மேலே தூக்கி வைத்துவிட்டார்கள். இது ஏற்பட்ட விதம் மிக விசித்திரமானது. தமிழ் நாட்டில் ஏற்பட்ட அமைச்சரவைகளில் ஆர் வெங்கட்ராமன் போன்ற ஒரு சிலர் தவிர அரசாங்கப் பொறுப்பில் இருந்த பிராமணரல்லாதவர் யாரும் சங்கராசாரியார் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர்கள் அல்ல. ஆனால் அதிகார வர்க்கத்தினரில் பொறுப்பில் இருந்தவர்களில் பலரும் பிராமணர்களாயி இருந்த காரணத்தால், சங்கராசாரியார் இந்த நபர்களிடையே கொண்டிருந்த செல்வாக்கு அரசாங்க ஆதரவு அவருக்கு இருப்பது போன்ற ஒரு பிரமையை உருவாக்கி விட்டது. அதில்லாமல் இந்த இனக்குழுவைச் சேர்ந்த பலரும் தில்லியிலும் கணிசமாக அதிகார வர்க்கத்திடையே இருந்தனர். இவர்களில் விடாமுயற்சியால், தமிழ் நாட்டின் ஆன்மீகப் பிரதி நிதி என்ற ஒரு தவறான அபிப்பிராயம் தில்லியில் திட்டமிட்டே உருவாக்கப் பட்டது. இந்திரா காந்தி போன்றோர் சங்கராசாரியாரைச் சந்திக்க நேர்ந்ததன் பின்னணி இது தான். தில்லியில் தமிழ் நாட்டின் அரசியல் புரிந்து கொள்ளப்படவே இல்லை என்று சொல்லலாம். தி மு க ஆட்சிப் பொறுப்பேற்றிருந்தபோதும் அதன் முக்கியத்துவத்தை மிகக் குறைத்து தில்லியில் பிரசாரம் செய்ததும், அதில்லாமல் தி மு க ஒரு முக்கிய நிகழ்வல்ல என்பது போன்ற ஒரு பிரசாரம் வலுப் பெற்றதும் அதற்கிணையாகவே சங்கராசாரியாரின் முக்கியத்துவம் ஊதிப் பெருக்கப் பட்டதும் இப்படித் தான் நடந்தது. சங்கராசாரியார் மீது தி மு கவின் விமர்சனமும் கூட ஒரு எதிர்மறை விதத்தில் அவர் முக்கியத்துவத்தை வளர்த்து விட்டது என்று சொல்லலாம்.

பா ஜ க ஆட்சிக்கு வந்ததும் அந்தக் கட்சியில் பொறுப்பில் இருந்தவர்களும் சரி, இந்து நலன்களைப் பாதுகாப்பவர்கள் என்று தம்மை முன்னிறுத்தி அரசியல் செய்தவர்களும் கூட சங்கராசாரியாரின் இனக்குழுவினர் என்பதால் , அயோத்தி பிரசினையைத் தீர்க்கப் போகிறேன் என்று அவர் கிளம்பி, முழுக்க முழுக்க இந்து அரசியல் சார்ந்த அமைப்புகளின் நலனை முன்னிறுத்தி செயல்பட்டதும் மறக்க முடியாத சறுக்கல். சங்கராசாரியாரிடம் இதற்கு மாறான சார்பற்ற நிலையை எதிர்பார்க்க முடியாது.

***********

ஆனால் என் கேள்வி வேறு . இது மணியரசனின் வார்த்தைகள் : ‘திருவாரூர் மாவட்டம் கோட்டூர்க்கருகில் உள்ளே இருள் நீக்கி கிராமத்தைச் சுப்பிரமணியன் என்பவர் தாம் ஜெயேந்திர சரஸ்வதி, பார்ப்பனியத்தின் ஆன்மீக – அரசியல் தளபதி. மனித நேயர்களும், தமிழர்களாய்ப் பிறந்தோரும் சங்கராசாரியார் மாயையிலிருந்து எந்த அளவு மீள்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் பொதுத் தொண்டு செய்தவர்கள் ஆவார்கள் . இறைப் பற்றாளர்கள், குடமுழுக்குச் செய்வோர் சங்கராசாரியையும் சமஸ்கிருதத்தையும் புறக்கணிப்பது சிறந்த பொதுத் தொண்டாகும் ‘.

குடமுழுக்குச் செய்வோர் சமஸ்கிருதத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று மணியரசன் சொன்னாலும் அவர் துணை நூற்பட்டியல், மற்றும் பொதுப்போக்கில் சமஸ்கிருதத்தை பிராமணியத்துடன் இணைத்துக் குற்றம் சாட்டும் பாணியும் இருக்கிறது. சமஸ்கிருத வெறுப்பு என்பதை பிராமண வெறுப்பின் ஓர் அங்கமாக வைத்துக் கொண்டு அரசியல் பண்ணும் திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மொழி அரசியலின் ஓர் அங்கமாக இதைப் பார்க்கலாம். இது தான் விமர்சனத்துக்கு உரியது.

இந்தியை தாடகை போல் அரக்கியாக தினத்தந்தி கேலிச்சித்திரத்தில் பார்த்துவிட்டு, இந்தி என்பது தமிழ் போன்றே ஒரு மொழி என்று தெரியாமல் இருந்தவர்கள் அனேகம். இந்தி ஆதிக்கம் என்பதாவது ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் சமஸ்கிருத ஆதிக்கம் என்பது ஓர் அர்த்தமற்ற பயமுறுத்தல். இன்று சமஸ்கிருதம் யாராலும் பேசப் படுவதில்லை. சமஸ்கிருதம் தேவ பாஷை என்று சொல்பவர்களு கூட அதைக் கற்றுக் கொள்வதில்லை. சமஸ்கிருதம் ஆதிக்க மொழி என்றால் இந்தியாவில் 28 மொழிகள் செழித்து வளர்ந்திருக்க எந்த சாத்தியமும் இல்லை.

ஆதிக்கக் காரர்களான பிராமணர்களின் மொழி என்பதால் சமஸ்கிருதம் வெறுக்கப் படவேண்டும் என்பது போன்ற ஒரு பகுத்தறிவற்ற வாதம் இருக்க முடியாது. பகுத்தறிவின் பெயரால் பரப்பப் படும் அஞ்ஞானம் இது. சமஸ்கிருதம் இந்திய மொஇழிகளின் உருவாக்கத்தில் ஒரு இன்றியமையாத பங்கு வகித்தது.

மொழி அரசியலின் உச்சம் சமஸ்கிருதம் வடமொழி என்று அழைக்கப்பட்டது தான்.அது எப்படி வடமொழி ஆயிற்று என்று யாருமே கேட்கவில்லை. அல்லது தி க-தி மு க கூச்சலில் அந்தக் குரல் அமுங்கிப் போயிற்று. வங்காளி மொழி, டோக்ரி மொழி, காஷ்மீரி மொழி எல்லாம் வடமொழியாய் இருக்கலாம், சமஸ்கிருதம் எப்படி வடமொழியாகும் ? அது இந்தியா முழுவதும் பயிலப்பட்டு , இலக்கியம் இயற்றப் பட்டு வந்த மொழி. தென் இந்தியாவி மொழிகளில் தமிழ் உட்பட பிற மொழிகளுக்குப் பங்களிப்புச் செய்த மொழி. எல்லா இந்திய மொழிகளிலும் உருவாகியிருக்கும் காப்பியங்களுக்கு மூல நூல்களைத் தந்த மொழி. உலக இலக்கியப் பரப்பில் உள்ள எந்த செவ்விலக்கியத்துடனும் ஒப்பிடத் தக்க தத்துவ, சிந்தனை, புனைவுகளைத் தந்த மொஇழி. சமஸ்கிருதத்தைப் பழிப்பதன் மூலம் தமிழின் சிறப்பை நிறுவிவிடலாம் என்ற அஞ்ஞானம் திக தி மு க இயக்கங்கள் நமக்குத் தந்த பகுத்தறிவு ஆகும். சமஸ்கிருதத்தில் இலக்கியம் படைத்தவர்கள் மிகப் பலரும் பிராமணர்கள் அல்ல என்பதும் பேசப் பட்டவில்லை.

பழம் இலக்கியங்களில் சமஸ்கிருதம் வடமொழி என்று பேசப் படுவது உண்மைதான். ஆனால் அது சமஸ்கிருதத்தை இழிவு படுத்தும் நோக்கத்தில் செய்யப் பட்டதல்ல. சமஸ்கிருதத்தின் பாதிப்பு தமிழ் உட்பட எல்லா மொழிகளிலும் உண்டு என்று ஒப்புக் கொள்ளப் பட்டு அந்த பாதிப்புகளைத் தமிழ்ப் படுத்தும் விதமாக வடமொழி சுட்டப் பட்டதே தவிர சமஸ்கிருதம் ஆதிக்க மொழி என்றோ, அது அழிக்கப் படவேண்டும் என்றோ, அதுதான் இந்துமதத்தின் சாராம்சம் என்றோ, தமிழுக்கு அதனால் கேடு என்றோ எங்குமே பேசப் படவில்லை.

பிராமணர்கள் மற்றும் அவர்களுடைய குருமார்கள் தேவபாஷை என்று சமஸ்கிருதத்தைக் கொண்டாடுவது தமிழ்ப் பற்றாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு எரிச்சல் மூட்டியிருக்கலாம். ஒரு மொழியை வியந்தேத்தும் முறையில் மற்ற மொழிகளின் மீது கறை எதுவும் படிவதில்லை. மதச் சார்பாளர்கள் சில காரணங்களுக்காக தம்முடைய புனித நூல்கள் எழுதப்பட்ட காரணத்துக்காக, ஒரு மொழியைச் சிறப்புச் செய்வது வரலாற்றில் நடந்து வருவது தான். முஸ்லிம்களின் குரான் எழுதப் பட்டதால் அராபிய மொழியை புனித மொழி என்று சொல்கிறார்கள். கிறுஸ்துவர்கள் அராமிக் மொழியைக் கொண்டாடுகிறார்கள். யூதர்கள் யித்திஷ் மொழியைக் கொண்டாடுகிறார்கள்.

ஜெர்மன் மொழியில் ஹிட்லரின் ‘மெயின் காம்ப் ‘ எழுதப்பட்டதால் எல்லா யூதர்களும் ஜெர்மன் மொழியை வெறுக்க வேண்டும். இஸ்லாமிய மதத்தின் கோட்பாடுகளை ஒப்புக் கொள்ளாதவர்கள் அராபிய மொழியினை வெறுக்க வேண்டும். இது எப்படிப் பட்ட அபத்தமாய் இருக்கும் ? எந்த யூத அமைப்பும் இப்படிக் கோரியது கிடையாது. அப்படிக் கோருமென்றால் அது உலகமே திரண்டு கண்டனத்துக்கு உள்ளாகும்.

ஜெர்மன் மொழி ஹிட்லருக்குச் சொந்தமல்ல. கதேயும், தாமஸ் மானும், காஃப்காவும் ஜெர்மன் மொழியை வளர்த்து எடுப்பவர்கள். ஜெர்மன் மொழியை வெறுப்பவர்கள் ஹிட்லரை அல்ல, ஜெர்மானிய மொழியின் சிறப்பான எல்லா மரபுகளையும் வெறுப்பவர்கள். சமஸ்கிருதம் மனுநீதியினால் கறைப் பட்டது என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், ராமாயணமும், மகாபாரதமும் தந்த சிறப்பு சமஸ்கிருதத்தை விட்டுப் போய் விடுமா ?

ஆனால், உருது மொழி முஸ்லீம்களுக்குச் சொந்தம் என்று ஒரு வெறிக்குழு , உருது மீது வெறுப்புக் கக்கும் அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த அரசியலை விமர்சிக்கும் இன்னொரு வெறிக்குழு சமஸ்கிருதம் வடமொழி என்று வெறுப்புக் கக்கும் அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறது.

சமஸ்கிருதம் வடமொழியான அரசியலின் இன்னொரு பகுதி தான் தமிழ் தென்மொழியானது. 2000 வருடச் சரித்திரத்தில் இது போன்ற ஒரு கோணல் பார்வையை எங்குமே பார்க்க முடியாது. ஒரு தமிழறிஞர் தென்மொழி என்ற பெயரில் ஒரு பத்திரிகையும் நடத்தினார். இந்த அபத்தத்தைச் சுட்டிக் காட்ட வேண்டியவர்களே அவரைப் பாராட்டி தமிழ்ப் போராளி என்று பாராட்டி புகழ் மாலை சூட்டினார்கள். தமிழ் தென் மொழி என்றால் மலையாளம், தெலுங்கு எல்லாம் என்ன தென்மேற்கு, தென்கிழக்கு மொழியா ? இந்த உளறலை இன்னும் நீட்டிப் பார்த்தால், உண்மையான தென்மொழி என்று சிங்களத்தைத் தான் சொல்லவேண்டும். தமிழ் நாட்டிற்கும் தெற்கே,மிகவும் தென் கோடியில் இருப்பவர்களின் மொழி அது தானே ? இந்த அபத்தத்தின் இன்னொரு முனை தென்னிந்திய மொழிகளை திராவிட மொழிகள் என்று அழைத்து ஒரு குழுவில் இணைத்தது. இந்த மொழிகள் எந்த அளவு தமிழுக்குக் கடப்பாடு கொண்டனவோ அதே அளவு , சமஸ்கிருதத்துக்கும் கடப்பாடு கொண்டவையே. அவை ஆரிய மொழிகளும் கூட (இந்தப் பகுப்பை நான் ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் கூட.)

******

இந்த மொழி வெறுப்பு, பிராமண வெறுப்பு அரசியலினால் தான் சங்கராசாரியார் மீது வைக்கும் சரியான விமர்சனங்களும் முனை மழுங்கிப் போகின்றன என்பதை இவர்கள் உணர்வதில்லை. யாரை விமர்சிக்கிறோம் ஏன் விமர்சிக்கிறோம் என்பதைக் காட்டிலும் முக்கியம் எந்த அடிப்படையிலிருந்து விமர்சனங்கள் எழுகின்றன என்பதாகும்.

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்