மடியில் நெருப்பு – 27

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

ஜோதிர்லதா கிரிஜா


பக்கத்து வீட்டுக்கு வம்படிக்கப் போயிருந்த அனந்தநாயகி எந்நேரமும் திரும்பக்கூடும் என்கிற பயத்தாலேயே சூர்யா மயக்க மடையாதிருந்தாள் என்று சொல்லிவிடலாம். சுகன்யா சொன்ன செய்தி அவளுள் அத்தகைய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

“என்னக்கா, அப்படியே உக்காந்துட்டே? தலை சுத்துதா? வருத்தப் படாதேக்கா. நல்லா நாலு பேரு கிட்ட விசாரிச்சுடலாம். அது சரி, அவரோட ஆ·பீஸ் எந்த இடத்துலே இருக்காம்? தெரியுமா?”

“ஒரே ஒரு நாள்தானேடி சந்திச்சுப் பேசியிருக்கோம்? இன்னும் அதையெல்லாம் நான் கேட்டுத் தெரிஞ்சுக்கல்லே. டெலி·போன் டிரெக்டரியைப் பாத்தாத் தெரிஞ்சு போகுது! . . . நம்ம அம்மா அப்பா கையிலே நிறையப் பணம் குடுத்துட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதாச் சொன்னாரு. கல்யாணம் ஆகாதவங்கதானே அது மாதிரிப் பேசுவாங்க? . . நீ இப்ப சொன்னது எனக்கு அதிர்ச்சியா யிருந்தாலும், நம்பிக்கை வர மாட்டேங்குது. எதுக்கும் அவர் கிட்டவே விசாரிக்கிறேன். அவர் ஊர்லேர்ந்து திரும்பி வரட்டும்.” – தன்னிடம் காட்டிவிட்டு உடனேயே தனது முகவரி அட்டையை அவன் திரும்பவும் வாங்கிக் கொண்டுவிட்டது அந்நேரத்தில் அவளுக்கு ஞாபகம் வந்தது.

அன்றிரவு முழுவதும் சூர்யா தூங்கவே இல்லை. ‘இன்னும் ஒரு வாரம் கழித்துத்தான் வருவாரோ என்னவோ! அது வரைக்கும் சந்தேகத்தில் உழல வேண்டியதுதானா? பால் வடிகிற அந்த முகத்தைப் பார்த்தால் அப்ப்டித் தெரியவில்லை. ஆனால், அந்தக் கைகள்தான் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமானவை. என் மனசுக்குப் பிடித்தவர் என்கிற நிலையிலும், கார்க்கதவைச் சாத்துகிற சாக்கில் என்மேல் தேவை யற்று உரசிய போதும், ஒட்டலில் ஒரு கணவன் மாதிரி நெருக்கிக்கொண்டு நடந்த போதும் எனக்கு அருவருப்பாகத்தான் இருந்தது. . . .சாவித்திரி சொன்னது உண்மையாக இருந்தால்? . . . அய்யோ! யாராவது எனக்குத் தெரிந்தவர்கள் நாஙகள் ஒட்டி உரசிக்கொண்டு நடந்ததைப் பார்த்திருந்தால்? . . . வரட்டும். நேருக்கு நேர் கேட்டுவிருகிறேன்!. . .’ – கடைசியில் சுவர்க் கெடியாரம் நான்கு முறை அடித்த பிறகு அவள் உறங்க முயன்றாள். முடியவில்லை. . .

. . .திங்கள் கிழமை காலையில் படுக்கையை விட்டு எழுந்த போது சத்தியானந்தத்துக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அளவுக்கு மீறி இழுத்துப் போட்டுக்கொண்டு அலுவலகத்தில் வேலை செய்வதாலேயே அவருக்குக் களைப்பு வருகிறது என்று ரமா குற்றம் சாட்டினாள்.

“ரம்மி! இன்னைக்கு நான் லீவ் போட்டுடலாமான்னு பாக்கறேன். . .கொஞ்சம் ரெஸ்ட்லே இருக்காலாமேன்னு,” என்று சத்தியானந்தம் சொன்னதும் ரமாவுக்கு வாயெல்லாம் பல்லாயிற்று. வியப்பான விஷயத்துக்கு எதிரொலிப்பது போல் இரண்டு கைகளையும் கொட்டி ஆர்ப்பரித்தாள்.

“அப்ப, இன்னைக்குக் கண்டிப்பா மழை வரும்!” என்று சிரித்து மகிழ்ந்தவள் உடனேயே முகம் மாறி, “ஆமா? நீங்க அப்படி யெல்லாம் சட்னு லீவ் போட்ற ஆளு இல்லையே! அப்படின்னா உங்களுக்கு ரொம்பவே அலுப்பா யிருக்குன்னு நினைக்கிறேன்.” – – – அவரது கழுத்தில் கை வைத்துக் காயச்சல் அடித்ததா என்று சோதித்தாள்.

“காய்ச்சல்லாம் எதுவும் இல்லே, ரம்மி. வெறும் அலுப்பு மட்டுந்தான்.. . . இன்னைக்கு நான் ஸ்டேஷனுக்குப் போகாததாலே, அந்தக் கமலா தற்கொலை பத்தி யாரும் அலட்டிக்க மாட்டாங்க. அதனால கமலா வீட்டுக்கும் போலீஸ்காரங்க யாரும் போக மாட்டாங்க. நான் மறுபடியும் போய் அந்தப் பையன் விஜயகுமரை விசாரிக்கலாமான்னு பாக்கறேன்.”

“ஓகோன்னானாம்! அதான் அய்யாவுக்குக் களைப்பா யிருக்கா? என்னடான்னு பாத்தேன்! எப்படியும் என் பேச்சை நீங்க கேக்கப்போறதில்லே. போயிட்டு, போனேன் வந்தேன்னு வந்து சேருங்க. இன்னைக்கும் ம·ப்டியிலதானே போறீங்க?”

“ஆமா.”

“அந்த வரைக்கும் உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்! ‘போலீஸ் யூனி·பார்ம்லேதான் போவேன், நாலு பெருக்குத் தெரியத்தான் எதுவும் செய்வேன். என்ன வேணா நடக்கட்டும்’ னெல்லாம் அசட்டுப் பிடிவாதம் பிடிக்காம ம·ப்டியிலே போறீங்களே, அதுக்கு!”

“மத்த போலீஸ்காரங்களுக்கு பயந்துக்கிட்டா ம·ப்டியிலே போறேன்னு நினைக்கிறே? அதில்லேம்மா. என் போக்குவரத்துத் தெரிஞ்சா குறுக்கே வந்து ஏதாச்சும் சதி பண்ணி என் காரியத்தைக் கெடுத்துடுவாங்க. அதுக்குத்தான்.”

“உங்களைத் தெரியாதா எனக்கு? பயம்குற உணர்ச்சிக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? எப்படியோ! நீங்க ம·ப்டியிலே போறதுலே எனக்குக் கொஞ்சம் நிம்மதி!”

சத்தியானந்தம் பத்து மணிக்குக் கமலாவின் வீட்டை யடைந்தார். கச்சம் வைத்து ஒரு தெலுங்கரின் பாணியில் வேட்டி கட்டியிருந்தார். கறுப்புக் கண்ணாடியும் பெரிய சிவப்புத் தலைப்பாகையும் அணிந்திருந்தார். விஜயகுமாருக்கு அடையாளம் தெரியவில்லை. அவர் தம்மை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டியதிருந்தது.

“தம்பி! தேடிப் பாத்தியாப்பா? லெட்டர் ஏதாச்சும் கிடைச்சுதா? உன் அக்காவுடைய சாவுக்குக் காரணமானவனைக் கண்டு பிடிச்சுத் தண்டிக்க வந்திருக்கிறவ்ன்பா நான்! அதனாலே எதையும் மறைக்காதேப்பா!”

“லெட்டர் எதுவும் கிடைக்கல்லே, இன்ஸ்பெக்டர் சார்!”

“சரி. ஆனா, மறுபடியும் நல்லா, அலசி, ஒரு இண்டு இடுக்கு கூட விடாம, தேடிப்பாரு, எதுக்கும்.. . சரி.. . இப்ப இன்னொரு விஷயம் தெரிஞ்சுக்கிறதுக்காக வந்திருக்கேன். போன மாசம் ஒரு ஞாயித்துக் கிழமையன்னிக்கு காலையிலேயோ இல்லாட்டி ராத்திரியிலேயோ உங்க அக்கா எங்கேயாச்சும் வெளியிலே புறப்பட்டுப் போச்சா?”

விஜயகுமாரின் விழிகள் வியப்பில் உடனே விரிந்தன: “ஆமா, சார்! ராத்திரி ஒம்பதரை மணிப் புறப்பட்டுப் போச்சு. யாரோ ·ப்ரண்டோட அம்மா செத்துட்டாங்கன்னும், அவங்களுக்கு யாருமே இல்லாததாலே துணைக்குப் படுத்துக்கப் போறதாகவும் சொல்லிட்டுப் போச்சு. காலையிலே ஏழுமணிக்குத் திரும்பி வந்திச்சு.”

“முகத்திலே ஏதாச்சும் மாறுதல் தெரிஞ்சிச்சா?”

“ரொம்ப சோர்வா தெரிஞ்சிச்சு.”

“அந்த ·ப்ரண்ட் வீடு எங்கேன்னு சொல்லிச்சா?”

“மயிலாப்பூர்னு சொல்லிச்சு. ராத்திரி ஒம்பதரை மணிக்கு நான்தான் ஆட்டோ ஸ்டாண்ட் வரைக்கும் அக்காவுக்குத் துணைக்குப் போனேன். துணைக்குப் போய் இருக்கிறதுன்னா, ஆறு மணிக்கே கிளம்பிப் போயிருக்கலாமேன்னு அக்காவைக் கோவிச்சுக்கிட்டேன். நான் அக்காவுக்குத் துணையா மயிலாப்பூர் வரைக்கும் வந்துட்டுத் திரும்புறதாச் சொன்னேன். ஆனா அக்கா கேக்கல்லே. ‘ இந்த ஸ்டண்டிலே இருக்கிற ஆட்டோ டிரைவருங்க எல்லாருமே நமக்குத் தெரிஞ்சவங்கதானே? துணை என்னத்துக்கு? நீ போய் உன் பாடத்தைப் படி’ அப்படின்னுடிச்சு. . .”

“எந்த ஆட்டோவிலே ஏறிச்சு? அந்த டிரைவரைக் காட்ட முடியுமா?”

“ முடியும், சார். “

இருவரும் புறப்பட்டார்கள். தாம் ஏறி வந்திருந்த சைக்கிளில் அவர் அவனை ஏற்றிக் கொண்டார். வழியில், “என்னை யாருக்கு முன்னாலேயும் இன்ஸ்பெக்டர சார்னு சொல்லிடாதேப்பா! சித்தப்பான்னு கூப்பிடு. என்ன?”

“சரி, சார். . .”

“ஆங்! என்னது! இப்பதானே சொன்னேன் சித்தப்பான்னு சொல்லணும்னு?”

“சரி, சித்தப்பா!”

“உங்க அகாவுடைய ·பொட்டோ இருந்தா எடுத்துக்கிட்டு வான்னு சொல்ல நெனச்சேன். ஆனா நீ பர்ஸைத் திறந்தப்போ அதுலே அவங்க ·போட்டோ இருந்ததைக் கவனிச்சேன். அவசியப் பட்டா அதைக் காட்டி விசாரிக்கலாம்.”

இருவரும் சைக்கிளிலிருந்து இறங்கிய நேரத்தில் அந்த ஆட்டோ நிறுத்தம் காலியாக இருந்தது.

“இத பாரு, விஜயகுமார்! நீ எதுவும் பேசாதே, நானே பேசறேன்.”

“சரி, சார்!”

“ஆ. . .ங்!?”

“சரி, சித்தப்பா.”

ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த ஆட்டோ வந்து நின்றது. விஜயகுமார் அதை அவருக்குக் காட்டி, “இதுதான் சா. . . சித்தப்பா!” என்றான்.

“அப்பா, டிரைவர்! போன ஞாயித்துக் கிழமை யன்னைக்கு ராத்திரி ஒம்பதரை மணிக்கு இந்தப் பையனோட அக்காவை உங்க ஆட்டோவிலே மயிலாப்பூருக்கு இட்டுட்டுப் போனீங்கல்லே?”

“ஆமாங்கய்யா. நெனப்பு இருக்கு. எங்க ஏரியாப் பொண்ணாச்சே? அதனால!”

“அவங்க எங்கே இறங்கினாங்கன்னு சொல்ல முடியுமா? . . . நான் அவங்களுக்குச் சித்தப்பா முறை!”

“லஸ்ஸாண்ட எறங்கினாங்கய்யா.”

“அதுக்குப் பெறகு எங்கேயாச்சும் நடந்து போனாங்களா? இல்லாட்டி, யாருக்காச்சும் காத்துக்கிட்டிருக்க்கிற மாதிரி பஸ் ஸ்டாப்லேயோ ஏதாச்சும் கடைகண்ணிக்குப் பக்கத்திலேயோ நின்னாங்களா? தெரியுமா?”

“ராத்திரி நேரத்துலே வந்து யாருக்காகவோ காத்துட்டிருக்கிற மாதிரி நிக்கிறாங்களேன்றதுக்காக – நம்ம ஏரியாப் பொண்ணாச்சேன்றதாலே – எதிர்த்தாப்போலவே ஆட்டோவை நிப்பாட்டிக்கிட்டேன். அதுவும் இல்லாம, ‘தனியாப் போறியேக்கா’ன்னு இந்தத் தம்பி கவலைப் பட்டிச்சு. அதான் எதிர்த்தாப்போலவே நின்னேன். . . ரெண்டே நிமிசத்துலே ஒரு செவப்பு மாருதி கார் வந்திச்சு. அதிலே ஏறிக்கிட்டுப் போயிட்டாங்க. . .”

:கார் நம்பரைக் கவனிச்சீங்களா?”

“இல்லீங்கய்யா. கவனிக்கணும்னு தோணல்லீங்க.”

“காரை ஓட்டிக்கிட்டு வந்த ஆளையாச்சும் கவனிச்சீங்களா?”

“இல்லீங்க. இருட்டிலே சரியாத் தெரியல்லீங்க. ஆனா பெரிய தொங்கு மீசை வச்சிட்டிருந்தாரு அந்த ஆளு. “

“சரி. இந்தாங்க. செலவுக்கு வச்சுக்குங்க. இது மாதிரி நான் வந்து விசாரிச்சது பத்தி யாருக்கும் சொல்லக் கூடாது. சத்தியமா சொல்லக் கூடது.”

“நன்றிங்க, அய்யா. யாருக்கும் சொல்ல மாட்டேன். எம் பிள்ளைங்க மேல ஆணயா! பாவம்ங்க! குனிஞ்ச தலை நிமிராது. நல்ல பொண்ணு. எத்தினி நாளா நாங்க பாத்துக்கிட்டிருக்கோம்! அதுக்கு இப்பிடி ஒரு சாவான்னு நெனச்சாவே தாங்க முடியல்லீங்க!”

“என்னப்பா செய்யிறது? எல்லாம் விதி!” என்ற சத்தியானந்தம் விடை பெற்றுப் புறப்பட்டார்.

வீட்டு வாசலில் சைக்கிளிலிருந்து இறங்கிக்கொண்ட விஜயகுமார், “உள்ளே வந்துட்டுப் போங்க, சார். உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்,” என்றான்.

சத்தியானந்தம் அவனை வியப்பாகப் பார்த்தார்.

“என்னை மன்னிசிச்சிடுங்க, சார். அக்கா ஒரு லெட்டர் எழுதிவச்சிருந்திச்சு!” என்ற விஜயகுமார் கண் கலங்கினான்.

jothigirija@vsnl.net

தொடரும்

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா