திரு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும்’

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

சு.கோவிந்தசாமி


திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் February 8 ம் தேதி எழுதிய புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும் என்ற ஆய்வுக்கட்டுரையில் எனவே அந்தணர்கள் திட்டமிட்டு பௌத்தத்தை ஒழித்தனர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை’ என்று முடிவைக் கூறியுள்ளார். சமணம் மற்றும் புத்தமதங்களை அந்தணர்கள் திட்டமிட்டு அழித்தனரா என்ற ஜாதி அடிப்படையிலான குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்காது, இந்து மதத்தினர் அழித்தனரா என்று நோக்குவோம்.

வளர்ந்து வந்த புத்த சமண மதங்களுடைய ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக குப்தப் பேரரசுக் காலத்தே எழுதப்பட்டவை பதினெட்டுப்புராணங்கள்.

வேதவியாஸர் வேதங்களைத்தொகுத்தவர், திருதராஷ்டிரர், பாண்டு, மற்றும் விதுரர்களின் தந்தை, மகாபாரதத்தை எழுதியவர் மற்றும் பதினெட்டு புராணங்களையும் எழுதியவர் என்பவற்றை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து அக்னிபுராணத்தில் கூறப்பட்டுள்ள கீழ்க் காணும் பகுதியை நோக்குவோம்.

“தேவர்களைக் காப்பாற்ற பகவான் சுத்தோதனன் என்பவருக்குப் புத்திரனாகத் தோன்றினார். புத்தன் என்று அழைக்கப்பட்ட அவர் அசுரர்களுடைய மனத்தைக் கவரும் வகையில் வேதங்கள் கூறுவது அனைத்தும் தவறு என்று போதித்தார். அவர்களுடைய குணவிசேஷங்களுக்கு ஏற்ப சாஸ்திரங்களை அர்த்தம் சொல்லி, அவர்களைத் தருமத்துக்கு விரோதமாக நடக்கச் செய்தார். அவரால் உபதேசிக்கப்பட்ட அனாசாரங்களில் விருப்பம் கொண்டு, அசுரர்கள் அவற்றைக் கடைபிடித்து, அவருக்கு சிஷ்யர்களாகி விளங்கினார்கள். அதன் காரணமாக அவர்கள் பாஷாண்டிகளாகி பெரும் பாபங்களைப் புரியலானார்கள். அவர்கள் கடுமையான தவத்தைச் செய்து பெற்ற பலன்கள் மெல்ல அவர்களை விட்டு நீங்கின. அதன் பின்னர், அவர்களைத் தேவர்கள் சுலபத்தில் வெற்றி கொள்ள முடிந்தது”

புத்தரே மஹாவிஷ்ணுவின் அவதாரமென்றும் அசுரர்களை அழிக்க அவதாரமெடுத்தாரென்றும் கட்டுக்கதை கூறப்பட்டுள்ளது. புத்தமதத்தைப் பின் பற்றுபவரைக் கொல்வதை நியாயப்படுத்துவதற்காக இது எழுதப்பட்டதாகத் தோன்றுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அசுரர்கள் யார்? தேவர்கள் யார்? அந்தணர்கள் தங்களை உலகிலுள்ள தேவர்கள் (பூஸ¤ரர்) என்று கூறிக்கொள்ளுவர். அவ்வாறாயின் அவர்கள் அஸ¤ரர்களைக் (புத்தமதத்தினரை) கொன்றதாகப் பொருள் கொள்ளலாமே.

திருநாவுக்கரசருடன் வாதத்தில் தோற்ற சமண முனிவர்கள் கழுவிலேற்றப்படவில்லையா?

புத்த சமண மதங்களுக்கு எதிரான எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் உதாரணத்திற்கு ஒன்றைக்கொடுத்துள்ளேன்,

திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் : திருத்துருத்தி
பண் : நட்டராகம்
இரண்டாம் திருமுறை

திருவிராகம்

புத்தர் தத்துவமிலாச் சமண் உரைத்த பொய் தனை
உத்தமம் எனக்கொளாது உகந்தெழுந்து வண்டினம்
துத்த நின்று பண் செயுஞ் சூழ் பொழில் துருத்தி எம்
பித்தர் பித்தனைத் தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே.

ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசி என்னும் சமண மதம் சார்ந்த நூலின் பெரும்பகுதியைஅந்தணர்கள் அழித்துவிடவில்லையா?

தமிழ் நாட்டிலே செய்யப்பட்ட கொடுமைகளுக்கு அஞ்சித்தானே சமணர்கள் பெருமளவில் எருமை நாட்டிற்குக் (கர்நாடகம்) குடிபெயர்ந்தனர்.

புத்த சமண மதங்களுக்கு எதிராகக் கொடுமைகள் இழைக்கப் பட்டன என்பதை மறைக்கமுடியாது.

சு.கோவிந்தசாமி


sgovindaswamy@gmail.com

Series Navigation

சு.கோவிந்தசாமி

சு.கோவிந்தசாமி