குருதிவடியும் கிறிஸ்து

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

ஹெச்.ஜி.ரசூல்


வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்கள்
இளைப்பாற நிழல் வெளிஉலகம்
கடவுள் வார்த்தையாக
வார்த்தை உடலாக
உடல் ஆன்மாவாக
உருமாறியதொரு காட்சிக் கோலம்
விரல்களின் மிருதுவான தீண்டலில்
குருடர்கள் பார்க்கத் தொடங்கினார்கள்
புறந்தள்ளப்பட்டு மிதிக்கப்பட்டவர்கள்
நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்
துயரங்கள் எழுதிய வரிகளிலிருந்து
விடுதலையை சுவாசிக்க உதடுகள் எத்தனித்தன
ஒதுக்கப்பட்டவர்களுக்கும்
ஒடுக்கப்பட்டவர்களுக்கும்
ஒரு கடவுள் கிடைத்துவிட்டார்.

2)தன்னை வெளிப்படுத்திக் கொண்ட
இரட்சிப்பின் தூதுத்துவம்
அந்தக் கரங்களில் அலையடித்தது
மண்ணில் புதையுண்டுகிடந்த
ஆதரவற்ற உடல்களை கைதூக்கிவிட்டப் பின்புதான்
பரிசுத்த ஆவியின் அர்த்தம்
தன்னை புதுப்பித்துக் கொண்டது.
தாயின் வயிற்றில் பிறந்து
சப்பாணியாய் கிடந்த கால்கள்
அதிசயமாய் எழுந்து நடந்தன.
வலுவற்றவர்கள்
வலிமை பெற்றதின் சரித்திரமது.
ஒரு படகு பயணத்தில்
கொந்தளிக்கும் கடலையும்
ஆர்ப்பரித்த காற்றையும்
விரித்த கரங்களால் அமைதிப்படுத்திய
அன்பின் வலையில் விழாதவர் யார்

3)உறைந்த கனவுகள் வெட்டுப் பட்டு சாக
விதவைத்தாயின் கண்ணீருக்கு இரங்கி
மரித்துப் போன மகனின் சடலத்தை
உயிரோடு எழுப்பிக் காட்டின
அற்புதத்தின் கரங்கள் கணங்கள்
புனிதங்களை மிதிபடச் செய்து
உருமாற்றிய உடல்களை வெளியே துரத்தியடித்தன.
இன்னொரு தரிசனத்தில்
காசுக்காரர்களின் பலகைகளையும்
புறாவிற்கிறவர்களின் ஆசனங்களையும்
கவிழ்த்துப் போட்டு நொறுக்கிய பின்னும்
வாசல்தோறும் மிச்சமிருக்கிறார்கள்
மரண வாள்களோடு பிலாத்துகள்

4)சிலுவைமரணத்தின் வேதனைத் துளிகளால்
வரையப்பட்ட ரத்த ஒவியமொன்று
ஈரம் உலராமல் ஒட்டிக் கொண்டிருக்கிறது
குருதி வடியும் இயேசு கிறிஸ்து
விரித்த கரங்களை கீழிறக்காமல்
யாரின் பாவ மன்னிப்பிற்காய்
இன்னும் இந்த மன்றாட்டம்..


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்