மடியில் நெருப்பு – 4

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

ஜோதிர்லதா கிரிஜா


வண்ண விளக்குகள் விடிவிளக்குகளைப் போல் மங்கலாக ஒளிர்ந்துகொண்டிருந்த ஒதுக்குப் புறமான ஒரு பகுதிக்கு அவன் அவளை அழைத்துச் சென்றான். அவளுடன் ஒட்டி உரசிக்கொண்டு, ‘நாங்கள் காதலர்களாக்கும்!’ என்று பறை சாற்றுகிற பாணியில் அதுகாறும் அவளோடு நடந்துவந்த அவன் இப்போது இன்னும் அதிகத் துணிச்சலுடன் அவள் கையை முழங்கைக்கு மேலே இறுக்கமாய்ப் பற்றிக் கூட்டிச் சென்ற போது அவளுக்கு அந்தக் குளிர்சாதன அமைப்பிலும் வேர்க்கும் போலாயிற்று. அவள் தன்னையும் அறியாது உடம்பைக் குறுக்கிக்கொண்டாள். ஏனென்றால், அவன் அவளது புஜத்தைப் பற்றியிருந்த தினுசில் – முதல் சந்திப்புக்கு ஒவ்வாத – அத்துமீறிய இறுக்கம் – துல்லியமாய்ப் புலப்பட்டுக் கொண்டிருந்தது. இருப்பினும், ‘ஆம்பளைங்க இப்படித்தான்! முன்னே பின்னே தான் இருப்பாங்க’ எனும் எண்ணத்தில், அவள் அவனை மன்னிக்கத் தயாரானாள்.
பக்கத்துப் பக்கத்து இருக்கைகளில் இருவரும் அமர்ந்தார்கள். அவன் தனது கையை அவளது நாற்காலி முதுகு விளிம்பில் வைத்துக்கொண்டான். பிறகு மெல்லத் தன் விரல்களால் அவள் கழுத்தில் வருடினான். அவள் நெளிந்தபடி தன் கழுத்தை நகர்த்தி அவன் புறமாய்ச் சற்றே கோபமாகப் பார்த்தாள். அவன் உடனே புரிந்துகொண்டு தன் கையை அப்புறப்படுத்திக்கொண்டான்.
“சாரி, சூர்யா! அதுக்குள்ளே இந்த அளவுக்கு நான் உரிமை எடுத்துக்கக் கூடாது தான். என்னை மன்னிச்சுடுங்க…”
“பரவால்லே. விடுங்க…ஆனா நாலு பேரு கவனிச்சுட்டிருக்காங்க இல்லே?” என்று அவள் மெல்லிய குரலில் முனகினாள். அவளது குரல் அவளுகே அன்னியமாக ஒலித்தது.
பணியாள் வந்ததும், ராஜாதிராஜன் பாசந்தி, வெங்காய பஜ்ஜி, காப்பி, ஐஸ் கிரீம் ஆகியவற்றுக்குப் பணித்தான். அவர் போன பிறகு, “ஓ! வெரி சாரி. உனக்கு இதெல்லாம் பிடிக்குமா? உன்னை நான் என்ன வேணும்னு கேட்டிருக்கணும்! தப்புப் பண்ணிட்டேன்…” என்றான்.
” நீங்க இப்ப சொன்ன எல்லா அயிட்டங்களும் எனக்கும் பிடிக்கும்ங்க”
“நான் என்ன கேக்குறதுக்கு உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேனோ, அதைக் கேக்குறதுக்கு எந்த அவசியமும் இல்லாத அளவுக்கு நமக்குள்ளே ஒரு நெருக்கம் தானா ஏற்பட்டிடுச்சு, இல்லே? என்ன? நான் சொல்றது சரிதானே?”
அவள் வெட்கத்துடன் மவுனமாயிருந்ததன் மூலம் அவனது கூற்றை ஒப்புக்கொண்டாள்.
” ஒரு ஆம்பளை மேல் நம்பிக்கை ஏற்பட்டாலொழிய, உன்னை மாதிரி ஒரு படிச்ச பொண்ணு அவன் கார்ல ஏற மாட்டா. அவனோட ஓட்டலுக்கு டி·பன் சாப்பிட இது மாதிரி வரமாட்டா! இல்லியா?” என்று அவன் அவள் காதருகே முகம் வைத்துக் கிசுகிசுப்பாய்ச் சொன்ன போதும் அவள் புன்சிரிப்போடு மவுனமாகவே இருந்தாள்.
“சூர்யா! நான் ரொம்ப ரொம்ப அதிருஷ்டசாலின்னு நினைக்கிறேன். நான் தினமும் எட்டு மணிக்கு இங்கே வந்து டி·பன் காப்பி சாப்பிட்டுட்டு என் கம்பெனிக்குப் போவேன். நீ தினமும் நிக்கிற பஸ் ஸ்டாப்புக்குக் கொஞ்சம் தள்ளி என்னோட சினேகிதன் ஒருத்தன் குடி இருக்கான். பாபுன்னு பேரு. ஒரு வாரத்துக்கு முந்தி ஒரு நாள் அவனைப் பார்க்கிறதுக்காக நான் அந்தப் பக்கம் வந்தேன். பஸ் ஸ்டாப்ல நின்னுக்கிட்டிருந்த உன்னை அப்பதான் பார்த்தேன். ஆகா!..பளிச்னு ஒளிவிட்ட உன்னோட அழகைப் பார்த்த அந்தக் கணமே என் மனசு எங்கிட்டேருந்து உங்கிட்டே ஒடிப்போயிடிச்சு!.. சூர்யா! மத்தா நா¡ள்லேருந்து தேவையே இல்லாமதான் நான் தெனமும் அந்தத் தெரு வழியாக் காரை ஒரு பயித்தியக்காரன் மதிரி ஓட்டிக்கிட்டிருக்கேன்! இன்னைக்குக் காலை யிலே ஏற்பட்ட ஒரு திடீர்த் துணிச்சல்லே நான் காரைப் பின்னுக்குத் திருப்பி உன்னைக் கூப்பிட்டேன். நீ மட்டும் தனியா நின்னுக்கிட்டிருந்தது என்னோட துணிச்சலுக்கு ஒரு காரணம். எல்லார் எதிர்லேயும், நீ பாட்டுக்கு, ‘ஏண்டா, பொறுக்கி! என்ன தைரியம் உனக்கு!’ அப்படின்னு எசகு பிசகாப் பேசிட்டியானா, எம்புட்டு அசிங்கமாப் போயிடும்? அதான்!”
அவள் பதைத்துப் போனவளாய், ” சேச்சே! அப்படி யெல்லாம் சொல்லாதீங்க!’ என்றாள்.
பணியாள் சிற்றுண்டித் தட்டுகளை அவர்களுக்கு முன்னால் வைத்துவிட்டுப் போனார்.
“அப்ப, அந்தக் கேள்வியை நான் கேக்கத் தேவையில்லேன்றே!”
“அப்படி இல்லீங்க!”
“அப்ப, கேளுன்றே! சரி, கேக்கறேன்…”
அவன் தொண்டையைக் கனைத்துக்கொண்டான். பிறகு, “மிஸ் சூர்யா! நான் உங்களை நேசிக்கிறேன்… அடச்சீ! காதலிக்கிறேன்! என்னைக் கணவனாக ஏற்றுக் கொள்ளுவீர்களா?” என்று இலக்கணமாய்க் கேட்டுவிட்டு அவளைக் கூர்ந்து பார்த்தான்.
ஆழமான அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவள் தலை கவிழ்ந்தாள். அவனோ அவளது பதிலுக்குக் காத்திருக்கும் தோரணையில் கைகட்டிக் காத்திருந்தான்.
“என்ன, மிஸ் சூர்யா! உங்கள் மவுனமும், தலை கவிழ்ந்த நிலையும் சம்மதத்தின் அறிகுறிகள் என்பதாக நான் எடுத்துக்கொள்ளலாமா?” என்று அவன் சில நொடிகளக்குப் பிறகு கிசுகிசுப்பாய் வினவியபின் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, அவளது முகவாயை அழுத்தமாய்த் தொட்டுத் தன் பக்கம் திருப்பினான். அவள் கணத்துக்கும் குறைவான நேரம் அவனை நோக்கிவிட்டு, அவனது கையை அகற்றினாள். அவளது பார்வை எவரேனும் கவனித்திருப்பார்களோ என்னும் கூச்சத்தில் சுழன்றது.
அவன் வாய்விட்டுச் சிரித்தான்: “யாரும் கவனிக்கல்லே. .. அது சரி, வெறும் சிரிப்பு மட்டுந்தான் உன்னோட பதிலா? ‘எனக்கும் உங்களைக் கல்யாணம் கட்ட ஆசைதான்’ அப்படின்னு உன் செம்பவள வாயைத் திறந்து சொல்ல மாட்டியாக்கும்! சொன்னா, உன்னோட முத்துப் பாற்கள் உதிர்ந்து போயிடுமாக்கும்!”
அவள் இதற்கும் பேசாதிருந்தாள். ஆனால் முகத்தின் சிவப்பு மட்டும் மாறவில்லை.
“அடேய்ங்கப்பா! மொகம் என்னமாச் செவந்து போயிடிச்சு! இன்னும் கொஞ்ச நேரம் நான் இதே பாணியிலே பேசினா, ரத்தமே வந்துடும் போல இருக்கே? வேணாம்ப்பா. அந்தப் பாவம் எனக்கு வேணாம்!… சரி, சரி… சாப்பிடலாம்…” என்ற அவன், பாஸந்தியைக் கரண்டியால் கிளறி எடுத்து, ” எங்கே! வாயைத் தொற. நான் ஒரே ஒரு ஸ்பூன் உனக்கு வாயிலே போட்றேன்…” என்றான்.
அவள் சிரிப்புடன், “வேனாங்க! இதெல்லாம் நாலு பேரு போற வர்ற இடத்துலே வேணாம்!” என்றாள்.
“அப்ப? தனியான இடத்துலே கூடிய சீக்கிரம் சந்திப்போமா?”
“தனியான இடமெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறந்தான்!”
அவன் சட்டென்று சில கணங்களுக்கு மவுனமுற்றான். பிறகு, ” கல்யாணத்துக்கு அப்புறந்தான். யாரு இல்லைன்னாங்க? நான் ஒண்ணும் பொறுக்கி இல்லே!” என்றான்.
வாயருகே கொண்டு சென்ற பாஸந்தியை வழியில் நிறுத்திய அவள், கலவரத்துடன் திகைத்துப் போய் அவனைப் பார்த்தாள்.
“ஐ’ம் சாரி. தப்பா எடுத்துக்கிட்டீங்களா என்ன? நான் அது மாதிரி உங்களைப் பத்தி நினைச்சிருந்தா இப்படி உங்களோட கார்ல ஓட்டலுக்கு வந்து டி·பன் சாப்பிட்டுட்டிருப்பேனா?” என்று கம்மிப் போன குரலில் அவனை முழுவதுமாய்ப் பார்த்தவாறு அவள் வினவினாள்.
“சேச்சே! நான் கோவிச்சுப்பேனா – அதுவும் என் சூர்யாவை!.. அது சரி, உனக்கு சூர்யான்னு பேரு வெச்சது யாரு? உங்க அம்மாவா, அப்பாவா?”
“எங்கப்பாதான் வெச்சதா அம்மா சொல்லியிருகாங்க. ஏங்க?”
“உங்கப்பா புத்திசாலி. பொருத்தமாப் பேரு வெச்சிருக்கரு…இப்ப படுத்த படுக்கையா இருக்காரில்லே?”
“ஆமாங்க. நான் ஒருத்திதான் இப்ப சத்தியா சம்பாதிச்சிட்டிருக்கேன்.”
அவன் சாப்பிடுவதை நிறுத்தி ஆழமாய் அவளைப் பார்த்தான்: “கல்யாணத்துக்குப் பெறகு உன் சம்பளத்தை உங்கம்மா கிட்ட குடுக்கணும். அதுக்கு என்னோட அனுமதி வேணும். அதானே?”
“அதைப் பத்தியெல்லாம் நான் யோசிக்கவே இல்லீங்க. நாங்க ஏழைப்பட்டவங்கன்றதை நீங்க தெரிஞ்சுக்கணும்னுதான் சொன்னேன். எங்களுக்குச் சொத்துபத்துன்னும் எதுவும் கிடையாது நீங்க. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு தீர்மானிக்கிறதுக்கு முந்தி நீங்க இதைப்பத்தி நல்லா யோசிக்கணும்னுதான் சொன்னேன். உங்க வீட்டிலே இதுக்கு முழு மனசோட சம்மதிப்பாங்களா?”
அவன் சிரித்தான்: ” என் கல்யாணம் என் சொந்த விஷயம்! எங்க அப்பாதான் தகராறு பண்ணுவாரு. ஆனா, கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழப் போறது நான். எங்க அப்பா இல்லே!”
“உங்களுக்கு அம்மா இருக்காங்கதானே?”
“இல்லே. எனக்குப் பத்து வயசு ஆனப்போ செத்துப் போயிட்டாங்க.”
“உங்கப்பா மறு கல்யாணம் கட்டலையாங்க?”
“இல்லே…” – பாஸந்தித் தட்டுகளை நகர்த்திவிட்டு இருவரும் பஜ்ஜித் தட்டுகளை இழுத்துக் கொண்டார்கள்.
“நாம ரெண்டு பேரும் ஒரே ஸ்பீட்லே சாப்பிட்றோம்!” என்று அவன் சிரித்தான்.
“உங்கம்மா செத்துப்போனப்போ உங்கப்பாவுக்கு என்ன வயசு?”
“முப்பத்தெட்டு வயசுதான்! சித்தின்னு ஒருத்தி வந்தா அவ என்னைக் கொடுமைப் படுத்துவாளோன்ற பயத்துனாலதான் அவர் மறுகல்யாணம் கட்டல்லே.”
“அப்படின்னா, அவரு ரொம்ப நல்லவராயிருக்கணும். முப்பத்தெட்டுன்றது கல்யாணம் வேண்டாம்னு சொல்ற வயசா!”
அவன் சிரித்தான். அவளுக்கு அரைகுறையாய்ப் புரிந்தது. அவனே முழுவதும் கூறினான்:
“கல்யாணம்னு ஒண்ணைப் பன்ணிக்கல்லையே ஒழிய…தன்கிட்டே ஸ்டெனோவா யிருந்த ஒரு கிறிஸ்துவப் பொண்ணை “கீப்” பா வெச்சுக்கிட்டாரு. அவ வேலையை விட்டுட்டா. ஒரு தனி வீட்டில அவளை வெச்சிருக்காரு. ஒரு பெரிய வீட்டை அவ பேருக்கு எழுதிக் குடுத்துட்டாரு.”
“சின்னவீட்டுக் கார அம்மாவுக்குப் பெரிய வீடா!”
“ஆமா.அதேதான்! குழந்தை பெத்துக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாராம். நாளைக்குச் சொத்து விவகாரத்துலே சிக்கல் வருமில்லே? அதான்…”
“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“எங்கப்பாதான் சொன்னாரு…”
“அவரேயா சொன்னாரு? அதுவும் பெத்த மகன் கிட்டே? ஆச்சரியமா யிருக்கு.” – ஒரு தகப்பன் தன் மகனிடம் அந்த அளவுக்குப் பேசுவார் என்பது அவளை அயர்த்தியது.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா