மத விவாதம் – ஒரு கோரிக்கை

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

பாபுஜி



முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை மற்ற உலகத் தலைவர்களின் வாழ்விலிருந்து வேறுபட்டு இருப்பது அதன் ‘திறந்த புத்தகம்’ போன்ற தன்மையினாலாகும். வேறெந்த தலைவருக்கும் இல்லாத சிறப்பு இது. இதன் விளைவுகளாக மர்மடியூக் பிக்தால், மாரீஸ் புகைல், தொடங்கி எண்ணற்ற சிந்தனையாளர்களை இஸ்லாத்தின் பால் ஈர்க்கவும், இன்றைக்கும் அதிகமாகப் பரவும் நெறியாக இஸ்லாம் திகழவும் முடிகிறது.

அதுபோல, இஸ்லாம் மீதான தங்கள் காழ்ப்புணர்வையும் அடிமனவெறுப்பையும் நேச குமார் போன்ற ஜீவிகள் தொடர்ந்து பரப்பிவருவதையும் காலந்தோறும் பார்க்க முடிகிறது. (Reverse Engineering).

அண்மையில் கூட, கேரள சிந்தனையாளர் கமலா சுரைய்யா இஸ்லாம் பற்றி தவறாக சொன்னதாக கேள்விபட்டு, மிகுந்த புளகாங்கிதமுற்று இதே திண்ணையில் நேச குமார் அவதூறு எழுதி பின் மூக்குடைப்பட்டதும் கவனிக்கத்தக்கது.

நேச குமார் தொடர்ந்து இஸ்லாம் பற்றி தரக்குறைவாக எழுதிவருவதன் பின்னணி ஆராயப்படவேண்டியது. பொதுவாக தமிழ்நாட்டின் மத அரசியலை கவனித்து வருபவர்களுக்குத் தெரியும், எப்போதெல்லாம் தி.க போன்ற பகுத்தறிவு கழகங்கள் கருத்துக்களால் ஹிந்து மதத்தைத் தாக்கி வருகின்றவோ, அப்போதெல்லாம் ஹிந்து மதத்தை காப்பதற்காக அவதாரமெடுத்துள்ள ‘முன்னணி’ ஹிந்துத்துவ ‘நேசர்’கள் பதிலுக்கு எந்த சம்பந்தமுமில்லாத சிறுபான்மையினரை கன்னாபின்னாவென்று தாக்கி தம்மை ஆறுதல்படுத்திக்கொள்கின்றனர்.

“உங்கள்மார்க்கம் உங்களுக்கு, அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு” “அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் ஏசாதீர்கள்” என்று குர்ஆன் குறிப்பிடுவதால், முஸ்லிம்கள் எவரும் பதிலுக்கு ஹிந்துமதப் புனிதங்களை இழிவுப்படுத்தி எழுதுவதில்லை. பச்சையாகச் சொல்வதென்றால் ‘என் மதமா? உன் மதமா?’ என்று நடக்கிற ‘ஈகோ’ யுத்தத்தில் நேச குமார் போல அவதூறுகளால் தாக்குதல் செய்ய முஸ்லிம்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள நெறி அனுமதி தரவில்லை. ஆக, இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் எப்போதும் ‘தற்காப்பு’ தான்.

கருத்துச் சுதந்திரத்தை சாக்காக வைத்துக்கொண்டு எழுதும் ‘நேச குமார்’ போன்ற ஜீவிகளை, அவர்கள் மூட்டும் அவதூறு ஆத்திரத்தால் உந்தப்பட்டு தனி மனித தாக்குதல் செய்து சில முஸ்லிம்கள் எழுதுவதுண்டு எனினும், அவ்வாறு நல்லிணக்கக் கேட்டை உண்டாக்குவதே ‘நேச குமார்’களின் நோக்கமாக இருக்கும் என்பதால் அதையும் சிறந்த முஸ்லிம்கள் அங்கீகரிப்பதில்லை. உதாரணமாக, இணையத்தில் வலைப்பூக்களில் நேச குமாரின் அவதூறுகளை பொறுமையாகவும் சிறப்பாகவும் நிதானமாகவும் எதிர்கொள்கிற அபூ முஹை, அப்துல்லா போன்றோரைச் சொல்லலாம். (இன்றைக்கும், அபூ முஹை வைத்த ஏராள விளக்கங்களையோ, எதிர்கேள்விகளையோ நேச குமார் எதிர்கொள்ள தயாராக இல்லை, ஏனெனில் அவருடைய நோக்கம் ‘விளக்கம்’ பெறுவதோ, விவாதம் புரிவதோ அல்ல). குர்ஆனையும் நபிவழியையும் சார்ந்துள்ள முஸ்லிம்கள் எப்போதும் விவாதத்துக்கு ஆயத்தமாகவே உள்ளனர்.

வலைப்பூக்களில், ஹிந்துத்துவா கடுமையாகத் தாக்கப்படும் போதெல்லாம் ஒரு கவன உத்தியாகவோ, திசை திருப்பலாகவோ ஹிந்துத்துவத்தின் வக்கீல்களான நேச குமார்கள் இஸ்லாம் பற்றி ‘தங்கள் கோணத்தில்” எழுதத் தலைப்படுகிறார்கள். (இப்போதும், வலைப்பூக்களில் ஹிந்துத்துவம் கடும் கேள்விகளால் துளைக்கப்படுவது கவனிக்கத்தக்கது).

எனவே, ஒரு திண்ணை தொடர் வாசகனாக நான் கோருவது, மத விவாதம் எனில் சான்றாதாரங்களுடனும், திரிப்புகள் இல்லாமலும், சம வாய்ப்புடனும் நேச குமார், அபூ முஹை போன்றோரை விவாதிக்கச் செய்வதாகும். இல்லையெனில், ‘நீக்கங்கள் உண்டு’ என்று திண்ணை அறிவித்து வெளியிடுகிற நேச குமார் கட்டுரையே கோடானுகோடி முஸ்லிம்களை புண்படுத்துவதாக இருப்பது நல்லிணக்கத்துக்கும் இதழியல் தர்மத்துக்கும் வலுசேர்க்காது என்பதை ‘திண்ணை’யும் உணரவேண்டும்.


babuto@gmail.com

Series Navigation

பாபுஜி

பாபுஜி