போருக்குப் பின் அமைதி

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

சாந்தா ராமநாதன் (மொழிபெயர்ப்பு: பவளமணி பிரகாசம்)


விமானப்படையில் பணி புரிபவரை மணந்து கொண்டு குளுகுளு பெங்களுரை அடைந்து ஜலஹல்லி குடியிருப்பில் நான் புதிதாக குடித்தனம் பண்ண ஆரம்பித்த சமயம் அது. வன்முறை என்றாலே எனக்கு அலர்ஜி. இயல்பாகவே நான் ஒரு அஹிம்சாவாதி- அஹிம்சை என்ற வார்த்தையை அடிகொடிட்டு வாசித்துக் கொள்ள வேண்டிய அளவிற்கு. அப்படிப்பட்ட எனக்கு எல்லை நெடுக படைகள் குவிந்து போர் ஆயத்தங்கள் ஜரூராக நடந்து கொண்டிருப்பதாக செய்தி கிடைத்தவுடன் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். உண்மையிலேயே இது என்னை அதிர வைக்கும் விஷயமாய் இருந்தது; தீவிரமான போர் ஆயத்த நடவடிக்கை பற்றிய செய்தியை செவியுற்றவுடன் என் பயந்த இருதயம் படக்படக் என அடித்துக் கொண்டது.

‘இவ்வளவு பயங்கரமான எதிரியை நாம் எப்படி சமாளிக்கப் போகிறோம் ‘ என்று குரலில் நடுக்கத்துடன் என் கணவரிடம் கேட்டேன். ‘ஓ! அதெல்லாம் பயப்படத் தேவையில்லை. நாம் மிகவும் விழிப்புடன் இருப்போம், நெருக்கடி நிலையை சமாளிக்க நம்மாலான எல்லா முயற்சிகளையும் செய்வோம் ‘ என்று கலங்காமல் பதிலளித்தார்.

ஆனால் என்னால் கலங்காமல் இருக்க முடியவில்லை. எப்படி முடியும் ? அமைதி தவழ்ந்த வீட்டிலே அமளியும், ஆரவாரமும் நிறைந்த பிறகு என்னால் எப்படி கலக்கமடையாமல் இருக்க முடியும் ? எதிரியைக் கண்டு நடுங்கிய நான் கவித்திறன் இல்லாத காரணத்தால் பராக்கிரமம் படைத்த என் எதிரியின் மேல் கலிங்கத்துப்பரணி பாடும் ஆசையையும் கைவிட்டேன்.

எங்களது எச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எதிரிப் படையை அச்சுறுத்தி பின்வாங்கச் செய்ய முடியாததாய் போயின. எதிப்படைகளின் பலமும், எண்ணிக்கையும் நாளுக்குநாள் பெருகிக் கொண்டே போயிற்று. என் முழு பலத்தையும், தைரியத்தையும் திரட்டி எதிரியை துரத்த நான் செய்த யத்தனங்கள் அனைத்தும் வியர்த்தமாயின. மிக அதிக வீரியமுள்ள எலி பாஷாணத்தையும் பரீட்சித்துப் பார்த்துவிட்டேன். அது என்னடாவென்றால் விட்டமின் சாப்பிட்ட மாதிரியான தெம்புடன், முன்பைவிட அதிக பலத்துடன் துணிச்சலுடன் என்னை எதிர்க்கத் துவங்கின.

மிகப் பயங்கரமாக தோற்றமளித்த எலிப்பொறி ஒன்றை வாங்கி வந்து பாலாடைக்கட்டி, மசால் வடை, தேங்காய் எல்லாம் மாட்டி வைத்தேன். என்னுடைய கில்லாடி எதிரிகளோ எப்படியோ பொறியில் மாட்டாமல் உணவை அபகரித்து தந்திரமாக தப்பித்துக் கொண்டிருந்தன.( ஒரு துப்பறியும் நிபுணரை அழைத்து இந்த மர்மத்தை கண்டுபிடிக்கலாமா என்று கூட யோசித்தேன்). எலிதான் பொறியில் மாட்டவில்லையே தவிர என் கை ஓரிருமுறை மாட்டிக் கொண்டதுதான் வாஸ்தவம். நான் அலறி ஓலமிட்ட கூக்குரல் கேட்டு ஓடிவந்த என் கணவர் படாதபாடு பட்டு இழுத்து என் கையை விடுவித்திருக்கிறார். பள்ளிகூடத்தில் நான் படித்த Pied Piper மாதிரி குழலூதும் மாயக்காரன் யாராவது கிடைப்பானா என்று விசாரியுங்கள் என்ற என் கெஞ்சலையும் என் கணவர் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை.

எலிகள் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து பெருகின. மிக அழகான சேலைகள், அருமையான டெரிலின் சட்டைகள், வாசனை சோப்புகள், மின்சார வயர்கள் என இன்னதான் என்றில்லாமல் அனைத்துப் பொருட்களும் நாசமாகிக் கொண்டிருந்தன. நான் கைப்பை பின்ன வாங்கி வைத்திருந்த வண்ண நைலான் வயர்கள் ஆயிரமாயிரம் துண்டுகளாக வெட்டப்பட்டன. மைதா, ரவை டப்பாக்களிலிருந்து வயிறு புடைக்க தின்று விட்டு மூடியை திறந்தே போட்டுவிட்டுச் சென்றன. தேங்காயும், பழுத்த தக்காளியும் அவைகளுக்கு பிடித்த உணவாயிருந்தது.(எனக்கென்னவோ இவையிரண்டையும் சேர்த்துத் தின்ன பிடிப்பதில்லை. அவற்றின் ரசனையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை). பாத்திரங்களை சாய்த்து, எண்ணெய் புட்டியை கவிழ்த்து, என் குத்துவிளக்கிலிருக்கும் திரியை இழுத்துக் கொண்டு போய், தங்கள் மீசையையும், வாலையும் முக்க முடிந்த அத்தனைக்குள்ளும் முக்கி எடுத்து – அப்பப்பா, அவற்றின் அட்டகாசத்தை என்னால் தாங்கவே முடியவில்லை!

ஒரு நாள் அர்த்த ராத்திரியில் ஏதேதோ விநோத சப்தங்கள் கேட்டு திடுக்கிட்டு விழித்த நான் காதை தீட்டிக் கொண்டு கூர்ந்து கேட்கலானேன். அந்த இரைச்சல் என்னவென்றே விளங்கவில்லை. சத்தம் அதிகமாகிக் கொண்டே போகவே அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அது என்ன என்று ஆராய்ந்தே தீருவது என்ற தீர்மானத்துடன் எழுந்து உட்கார்ந்தேன். கட்டிலை விட்டு காலை கீழே வைத்ததுதான் தாமதம், ‘கீச் ‘ என்ற சத்தத்துடன் என் காலுக்கடியிலிருந்து தப்பியோடியது ஒரு சின்ன எலி. ஊரை எழுப்பும் ‘வீல் ‘என்ர அலறலுடன் திரும்ப கட்டிலில் ஏறிக் கொண்டேன். யாரை யார் கொலை செய்துகொண்டிருக்கிறார்களோ என்று ஊர் முழுக்க யோசிக்க ஆரம்பித்திருக்கும். உடனேயே கொட்டாவியுடன் ‘என்னவாயிருந்தாலும் காலை பேப்பரைப் பார்த்து தெரிந்து கொள்ளலாமே ‘ என்று தேற்றிக் கொண்டு திரும்பி தூங்கப் போயிருக்கும். என் அருமை கணவருக்கு இந்த விசாரமேயில்லை! அவர்தான் விழிக்கவேயில்லையே! பிரளயமே வந்தாலும் அவர் தூக்கம் கலையாது. இது உறுதி. ஆனால் நான் அவரை விடுவதாயில்லை. ‘எழுந்திருங்கள்! என்னவோ சத்தம் கேட்கிறது! ‘ என்று அவரை உலுக்கினேன். அதற்கு பலன் – தூக்கக் கலக்கத்தில் ‘உஷ் ‘ என்ற ஒற்றை ஒலி மட்டுமே அவரிடமிருந்து வந்தது. பிறகு திரும்பவும் குறட்டையை ஸ்டெடியான முதல் கியரில் தொடர ஆரம்பித்துவிட்டார்…கர்…கர்…கர். விடாமல் தொடர்ந்து முயன்று அவருடைய கும்பகர்ண தூக்கத்தைக் கலைத்தேன். நிலைமையை விவரித்து என்னுடன் துணைக்கு வருவதற்கு இணங்க வைத்தேன். இந்த முறை காலை கீழே வைக்குமுன் மீசை, வாலுடன் உருண்டையான ஜந்து எதுவும் இல்லை என்று சரிபார்த்துக் கொண்டு கட்டிலை விட்டு இறங்கினேன். அடுத்த கட்ட நடவடிக்கையாக இருவரும் ஆளுக்கொரு திரைச்சீலை கம்பியை எடுத்துக் கொண்டு வீட்டின் எதிர்கோடியிலிருக்கும் எதிரியின் முகாமான எங்கள் டைனிங் ஹாலுக்குச் சென்றோம். விளக்கு ஸ்விட்ச்சை போட்டோமோ இல்லையோ எங்கள் கையிலுள்ள பயங்கரமாக தோன்றும் போர்த் தளவாடங்களை (அவை ஒன்றும் இறக்குமதி செய்யப்பட்டவை அல்ல) கண்டு அஞ்சி பெரியதும், சின்னதுமாக கருப்பு, உருண்டை ஜந்துக்கள் மூலைக்கு மூலை ஓடிய வேகத்தில் கணிசமான எண்ணிக்கையில் பாத்திரங்கள், பாட்டில்கள், டப்பாக்கள் எல்லாம் கீழே சரிந்து விழுந்தன. எதிரிகள் இப்படி பயந்து ஓடியதில் ஏற்பட்ட வெற்றிக்களிப்பில் நாங்கள் எங்கள் கையிலுள்ள கம்பிகளை பலமாக நாலாபுறமும் சுழற்றிக்கொண்டு புறமுதுகிட்டு ஓடும் எதிரியின் மேல் ஒரு அடியாவது விழவேண்டும் என்ற வேகத்தோடு அவற்றை துரத்திக் கொண்டு ஓடினோம். கம்பிகளை ஆக்ரோஷமாக எதிரிகளின் மேல் இறக்கினோம். ஆனால் அடியை வாங்கியது எலிகளல்ல. சுக்கு நூறாக உடைந்த என் அழகான பீங்கான் பாத்திர செட்டுகளின் சில்லுகள் நாலாதிசையிலும் பறந்தன. அவசரமாக தலையை கவிழ்த்து தரையில் படுத்து அந்த பறக்கும் சில்லுகள் எங்களை சிராய்க்காமல் தப்பினோம். பீங்கான் இடிபாடுகளின் நடுவே சிக்கியபடி ஒருவரை ஒருவர் பரிதாபமாக பார்த்துக் கொண்டோம். அதே நேரத்தில் எங்கள் தலைக்கு மேலேயிருந்த துணி உலர்த்தும் கொடி லேசாக ஆடுவது தெரிந்தது. இருவர் பார்வையும் ஒரே நேரத்தில் கயிற்றின் மேல் சர்க்கஸ் செய்து கொண்டிருந்த ஒரு பருத்த எதிரியின் மேல் விழுந்தது. மறுபடியும் கம்பிகளை தூக்கிக் கொண்டோம். ஓடி ஒளிய எண்ணாத அந்த திமிர் பிடித்த எலியை குறி வைத்தோம். எங்கள் கம்பியின் குறி கச்சிதமாய் தவறியது மட்டுமல்லாமல் துணி உலர்த்தும் கொடியின் மேல் கனமாக விழவும் செய்தது. அந்தரத்தில் குட்டிகரணம் போட்ட எலியோ தப்பி ஓடியே போனது; துணிகளோடு மொத்தமாய் கொடி தொம்மென்று அருகிலிருந்த ஷெல்ஃபையும் இழுத்துக் கொண்டு விழுந்தது. ஷெல்ஃபில் ஏற்கெனவே நுனியில் தொடுத்துக் கொண்டிருந்த மிச்சம் மீதி பாத்திரங்களும், பாட்டில்களும் தரைக்கு வந்து சேர்ந்தன.

மிகுந்த பிரயாசையுடனும், பெருமூச்சுக்களுடனும் அந்த குவியலிலிருந்து எங்களை மெல்ல விடுவித்துக் கொண்டு படுக்கையறையை நோக்கி நடக்கலானோம். கட்டிலை அடைந்து போர்வைக்குள் நுழைந்து கொண்டே என் கணவர், ‘உன் அணி சேரா கொள்கையை நீ கைவிட்டால் என்ன ? பார்க்கப் போனால் அவை சாதாரண எலிகள் தானே, தீ கக்கும் பூதங்கள் அல்லவே ? இங்க பாரு, கண்ணம்மா, நீ சமத்து பொண்ணில்லையோ, இனிமே சமரசமா சேர்ந்து வாழும் கலையை கத்துக்கப் போறியாம், என்ன சரியா ? ‘ என்று நைசாக தாஜா பண்ணினார். அவர் சொல்வதிலுள்ள விவேகம் புரியவே நானும் சரியென்று தலையை ஆட்டினேன்.

போர்வைக்குள் சுருண்டு தூங்க ஆரம்பிக்கும் தருணத்தில் டைனிங் ஹாலிலிருந்து நானாவிதமான சத்தங்கள் புறப்பட்டு வந்து என்னை தாலாட்டின – எலிகள் தங்கள் வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருந்தனவோ ?

***

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation