3-D

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

லலிதா


அண்ணா நகர் ரவுண்டானாவைத் தாண்டி அந்த கருப்பு யமாஹா பைக் பறந்து கொண்டிருந்தது.சரவண பவன் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு கணேஷும் நாணா என்கிற நாராயணனும் இறங்கினார்கள்.வண்டியைப் பூட்டிவிட்டு ஹோட்டலுக்குள் நுழைய எத்தனித்த போது,அந்த பச்சை நிற உடை அணிந்த ஆள் கையில் ஒரு சீட்டுடன் ‘சார்,பார்க்கிங் டிக்கெட் ‘ என்றான்.ஏற்கனவே கடுப்பில் இருந்த கணேஷுக்கும் கோபத்திற்கு வடிகால் கிடைக்க இந்த ஒரு வாக்கியம் போதுமானதாய் இருந்தது.

‘என்னய்யா அநியாயம் பண்றீங்க.உங்க கடைல சாப்பிடத்தான் வரோம்.400% லாபம் உங்களுக்கு வரா மாதிரி தண்டம் அழறோம்.அப்புறம் என்னய்யா பார்க்கிங்க் டிக்கெட் ? ‘ என்று பொறிந்து தள்ளினான் கணேஷ்.

‘என்ன சார்,இதே வேற ஹோட்டலா இருந்தா சாப்டுட்டு டிப்ஸுனு 5 ரூபா வெப்பீங்க,இங்க ஒத்த ரூபா டிக்கெடுக்கு ஆயிரம் கணக்கு பார்ப்பீங்க.உங்க ஒரு ரூபால என்ன கோட்டையா கட்ட முடியும் ? ‘

கணேஷுக்கு வந்த கோவத்திற்கு அடிக்கவே போயிருப்பான். நல்ல காலம், நணா குறுக்கிட்டுத் அவனை வேறு பக்கம் தள்ளிப் போனான்.

‘டேய் கணேஷ்,கூல் டவுன் மேன்,நீ போய் ஒரு நல்ல இடமா போடு,நான் பின்னாலேயே வரேன் ‘,என்று அவனை ஒருவாறு அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்திவிட்டு பார்க்கிங்க் டிக்கெட் வாங்கினான் நாணா.

ஹோட்டலுக்குள் நுழைந்து முதலாவது மாடியிலிருந்த சிற்றுண்டி பகுதிக்குள் நுழையும் நேரத்தில்,எடைகாட்டும் கருவிக்கருகே இருந்த ஜன்னல் வழியாக வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த கணேஷை கவனித்தான் நாணா.

இவன் வந்ததைப் பார்த்து உள்ளே செல்ல முனைந்த கணேஷின் தோளில் ஆதராவாய் கைப்போட்டு, ‘உள்ள போய் சீட் போடுடானா இங்க நின்னு என்னடா செஞ்சுகிட்டு இருக்க ? ‘,என்றான்

பதிலேதும் சொல்லாது உள்ளே நுழைந்த கணேஷைத் தொடர்ந்து நாணாவும் செல்ல,மூலையில் லாமினேடெட் செய்த திருச்செந்தூர் முருகன் படத்தின் கீழ் இருந்த டேபிளில் அமர்ந்தனர்.

‘கணேஷ்,உனக்கு நியாபகம் இருக்கா,நம்ப 12-ஆவது படிக்கும்போது புதுசா ESPN சேனல் வந்தது.அப்பொ நடந்த இந்தியா-இங்கிலாண்ட் டெஸ்ட் சீரீஸ் எங்க வீட்டு பக்கம் வரலை,அதுக்காக கெமிஸ்ட்ரி படிக்கறேன் பேர்வழினு பெரம்பூர்ல இருந்து அண்ணா நகர் வரை டெய்லி சைக்கிள்ல வருவேன் உங்க வீட்டுக்கு.சாய்ங்காலம் 5.30 மணி வாக்குல மேட்ச் லன்ச் ப்ரேக்ல இங்க வந்து ஒரு கப் காபி சாப்டுட்டு பாலிடிக்ஸ்ல இருந்து பாலியல் வரைக்கும் பேசிகிட்டு இருப்போம்.அப்படி ஆரம்பிச்சு கடைசில அந்த அரட்டையடிக்கிற சுகத்துக்காகவே இங்க தொடர்ந்து வந்துகிட்டு இருக்கோம்.எனக்கு தெரிஞ்சு நம்ப வேற ஹோட்டலுக்கு போனதில்லை. ‘

‘ஏன் போனதில்லை ?2 மாசம் முன்னாலதானே அதுக்கு பிறந்த நாள் வந்தபோது ஜெமினி கிட்ட பாலிமார் ஹோட்டல் போனோமே ‘

‘ஆமாம்!மறந்தே போயிட்டேன் ‘

‘தண்டம் அழுதது நானாச்சே,உனக்கெப்படி நியாபகம் இருக்கும் ‘என்றவாறு ஒரு நக்கல் புன்னகை உதிர்த்தான். ‘அதுக்கு ‘ என்று பல்லை கடித்த வண்ணம் சொல்லும்போதே அவன் கோபம் இன்னும் தணியவில்லை என்று புரிந்துவிட்டது நாணாவுக்கு.

‘கடந்த 3 மணி நேரத்துல இப்பொதான் உன் மூஞ்சில வழக்கமா வழியற அசட்டு சிரிப்பு தெரியுது ‘ என்றவாறு சற்று சூழலின் இறுக்கத்தை தளர்த்தப் பார்த்தான் நாணா.

அந்த கிண்டலை சற்றும் ரசிக்காத கணேஷ்,ஏதோ சொல்ல ஆரம்பித்த போது வெய்ட்டர் வந்துவிட,அவர்கள் வழக்கமாக சாப்பிடும் சாம்பாரில் ஊரிய மினி-இட்லியை ஆர்டர் செய்தான்.

‘என்னடா ஆச்சு, ஏன் இப்படி கோவப்படற ? ‘

‘என்னத்த புதுசா, எல்லாம் சுத்தி சுத்தி சீரங்கம்தான். வழக்கம்போல சண்டை ‘

‘முந்தா நாள் ராத்திரிதானேடா உங்க வீட்டுல சக்கரைப் பொங்கல் சாப்பிட்டேன் ‘

‘டேய்!தெரியலைனா உளராதே!அதுக்கு பேரு அக்கார வடிசல். ‘

‘சரி சரி,இப்பொ அதுவா முக்கியம்! அன்னிக்கு கூட ஒழுங்காதானே இருந்தீங்க,திடார்னு என்ன ஆச்சு ‘

‘அன்னிக்கு வேதாளம் தரைல இருந்துது.நேத்திக்கு மரத்துல ஏறிக்கிச்சு ‘

‘ஆமாம் இவரு விக்கிரமாதித்யன்,வேதாளம் மரத்து மேல இருந்து கதை சொல்லுது இவர்கிட்ட!போடாங்க…நேரம் போறதே தெரியாம அர்ச்சனாவோட கடலை போட்டுகிட்டு இருந்தவன,இப்பவே கெளம்பி வாடானு சொல்லிட்டு,ஹிந்தி கமெண்ட்ரி கணக்கா ஒண்ணுமே புரியாத மாதிரி பேசினா என்ன அர்த்தம். ? ‘

‘பிரச்சனை இதுதாண்டா!எதுக்கெடுத்தாலும் நான் நான்-னு பறக்கறாடா.வேணும்னே நம்மள அபிப்ராயம் கேட்க வேண்டியது.நம்ம ஏதானும் சொன்னா,அது தப்புனு ஆர்க்யூ பண்ண வேண்டியது.இன்னிக்கு என்ன சமைக்கட்டும்னு கேட்பா, கத்திரிக்காய் வேணா பண்ணேன்னு எதாவது சொல்லி வெச்சா, போறுமே நீங்கலும் உங்க ரசனையும்பா, நமக்குனு வந்து வாய்க்குது பாரு. ‘

‘உனக்கு கல்யாணம் ஆகி எவ்வளோ நாள் ஆச்சு ? ‘

‘3 வருஷமாச்சு ‘

‘சரி,உனக்கு வித்யாவுக்கு என்ன சமையல் பிடிக்கும்னு தெரியுமா ? ‘

‘இப்பொ என்ன ? அவள சமாதானப் படுத்த நான் போய் சமைச்சு போடணும்ங்கறியா ? ‘

‘அது கூட நல்ல ஐடியாவாத்தான் இருக்கு,ஆனா நான் சொல்ல வந்தது வேற. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா ‘

‘புடலங்காய் பொறிச்ச கூட்டுனா ரொம்ப பிடிக்கும். அப்புறம் அந்த சனியன் பிடிச்ச பாகற்காய் பிட்லானா உசுரு. ஒவ்வொரு தடவை அவங்க அப்பா வீட்டுக்குப் போயிட்டு வரும்போதும், என்ன வெறுப்பேத்தனும்னே அங்க சாப்பிட்ட பாகற்காய பத்தி ஒரு லெக்ச்சர் அடிப்பா. ‘

‘சரி, அவளுக்கு என்ன சமையல் பிடிக்காது ‘

‘டேய் நீ வேற ஏண்டா கழுத்தறுக்கற ‘

‘சொல்லுடானா…ரொம்பதான்….. ‘

‘கத்திரிக்காய் ஆகாது ‘

‘ கணேஷ், உனக்கு பாகற்காய் பிடிக்காதுனு அவ அதை சமைக்காம அப்பா வீட்டுக்குப் போய் சாப்பிடறா. அதே மாதிரி, அவளும் எப்பவுமே நீ அவளுக்கு பிடிச்சதையே செய்யாட்டியும், அவளுக்கு பிடிக்காததை செய்யாம இருக்கணும்னு நினைப்பா இல்லையே. அவளுக்கு கத்திரிக்காய் பிடிக்காதுனு தெரிஞ்சும் நீ அதை சமைக்க சொன்னா, கோபம் வரத்தானே செய்யும். ‘

‘டேய், இது ஒரு சின்ன உதாரணம்டா.இதுல வேணா நீ சொல்றது சரியா இருக்கலாம். அவளுக்கு என்னை பத்தி நல்லாத் தெரியும்டா. இந்த கேள்வி கேட்டா இந்த பதில்தான் வரும்னு நல்லாத் தெரியும். அப்படி இருந்தும் என் வாயப் புடுங்க வேண்டியது, நான் எதாவது சொன்னா எதிர்த்து சொல்ல வேண்டியது. என்னை நிம்மதியா இருக்கவிடக்கூடாதுன்னே கங்கணம் கட்டிண்டு இருக்கா அவ. ‘

‘ கணேஷ், கொஞ்சம் பதட்டப் படாம நான் சொல்றதை கேளு. நீ மெக்கானிக்கல் இஞ்சினியர்தானே ? 4 மாசம் முன்னாடி ஜெர்மனி போனியே எதுக்கு ? ‘

‘இவ்வளவு நாளா பேப்பர்ல வரைஞ்சி இருந்ததையெல்லாம் கம்ப்யூட்டர்ல மாடல் பண்ண ட்ரெய்னிங்க்கு போய் இருந்தேன் ‘

‘ இவ்வளவு நாளா வரைஞ்சா மாதிரியே பேப்பர்லையே இன்னும் ஏன் வரையக் கூடாது ? ‘

‘பேப்பர்ல நீளம்,அகலம் 2-டைமென்ஷன்தான் தெரியும். கம்ப்யூட்டர்-ல மூணாவது டைமென்ஷனும் தெரியறாப் போல வரையலாம். நமக்கு தேவையான கோணத்துல ரொடேட் பண்ணலாம், இப்படி பல வசதிகள் இருக்கு. சுருக்கமா சொன்னா, குறைஞ்ச நேரத்துல சரியான படங்கள் வரையலாம். ‘

‘இப்பொ நீ சொன்னியே 3-D மாடெலிங், அதையே உன் வாழ்கைக்கும் அப்ளை பண்ணிப் பாரேன் ? ‘ என்றான் நாணா.

‘என்னடா சொல்ற ? ‘ என்று புருவத்தை சுருக்கினான் கணேஷ்.

‘ டேய், உண்மையில எப்பவுமே மூணு விதமான உண்மை உண்டு. ஒண்ணு உன்னோட உண்மை, ரெண்டு உன்னை எதிர்க்கறவனோட உண்மை, மூணாவது உண்மையான உண்மை.. நீ இப்போ உன் கோணத்துல இருந்து ஒரு உண்மையை பார்க்கிற, அதை அடிப்படையா வெச்சு வித்யா ஏன் அப்படி பண்றானு ஒரு காரணம் சொல்ற. இது ரெண்டுமே உண்மையான உண்மை கிடையாது. 3-ஆவது மனுஷனா 3-ஆவது டைமென்ஷனிலிருந்து பாரு. அப்பொதான் உனக்கு புரியும். ‘

‘டேய் உன் கூட பேசறத்துக்கு வித்யாவே பரவாயில்லை போல இருக்கே ‘

‘பொறுமையாய் கேள் மகனே! வித்யாவுக்கு உன்னை நல்லாத் தெரியும்னு சொன்னியா இல்லையா ? அப்படியும் அவ திரும்ப திரும்ப உன்னை ஏன் கேட்கறானு யோசிச்சியா ? உனக்கு அவளோட எண்ணங்களொட உடன்பாடு இல்லைங்கறது முதல் டைமென்ஷன், அவ அது தெரிஞ்சும் உன்னை வந்து கேட்கறாங்கறது ரெண்டாவது, ஆனா ஏன் கேட்கறா ? அதுதான் மூணாவது ‘

கன்னத்தில் தடவிய படி யோசிக்க ஆரம்பித்த கணேஷை பார்த்து புன்னகைத்த படி மேலும் தொடர்ந்தான் நாணா.

‘ நாம இவ்வளவு விட்டுக் கொடுக்கறமே, என்னிக்காவது நம்ம இஷ்டப் படி கணேஷ் நடக்க மாட்டானானு வித்யாவுக்கு தோணலாம் இல்லையா ?.

நீ அப்படி நடக்காதது, நாளடைவுல ஒரு ஏக்கமாவே மாறி இருக்கலாம். அவ எதிர்பார்க்கறதை நீ கொடுக்காமே நீயே அவ ஈகோ-க்கு மேல மேல தீனி போடற. அதுக்காக அவ என்ன சொன்னாலும் கேளுனு சொல்லலை. ரெண்டு பேர் சேர்ந்து இருக்கும்போது, 100% எல்லாமே ஒத்து போகும்னு சொல்ல முடியாது. அப்பொ அப்பொ மாத்தி மாத்தி விட்டு கொடுத்துண்டாதான் adjustment, ஒருத்தரே விட்டு கொடுத்துண்டு இருந்தா கொஞ்ச நாள்ல punishment–னு தோணிடும்.. உனக்கு பிடிக்காததை நீ அவளுக்காகச் செய்ய வேண்டாம். ஆனா அவளுக்கு பிடிக்காததை நீ செய்யாம இருக்கலாம் இல்லையா ? ‘

‘ நீ சொல்றதுல கொஞ்சம் உண்மை இருக்கு. பரவாயில்லை கல்யாணத்துக்கு முன்னாலையே நல்லா தெளிவாதான் இருக்க ‘

‘ அப்படி இல்லை கணேஷ், இதுவே எனக்கு நடந்து இருந்தா நானும் உன்னை மாதிரித்தான் நினைச்சு இருப்பேன். யார் கண்ட அடுத்த வருஷ இதே நேரம், இதே இடத்துல, நான் இன்னிக்கு உனக்கு சொன்னதையெல்லாம் நீ எனக்கு சொல்லுவியோ என்னமோ ‘ என்று கண்ணடித்தான் நாணா.

நாணா சொன்னதையெல்லாம் அசைப்போட்டபடி வீட்டை நோக்கிச் சென்றான் கணேஷ். வீட்டு வாசலில் காய்கறிகாரனுடன் கத்திரிக்காய்க்கு விலை பேசிக் கொண்டிருந்தாள் வித்யா.

அவர்களை நெருங்கிய கணேஷ், ‘இந்தாப்பா, பாகற்காய் 2 கிலோ போடு, நல்லா பிஞ்சா பார்த்துக் குடு ‘ என்று வித்யாவைப் பார்த்து புன்னகைத்தான்.

***

ram_tm@rediffmail.com

Series Navigation

லலிதா

லலிதா