பொது இடம், தனிமனித இடம் ,சமூகக் குழுவின் தகுதரங்கள்

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

மஞ்சுளா நவநீதன்


(இந்தக் கட்டுரையை எழுத முனைப்பாக இருந்தது ‘பாய் ? ‘ படம் பற்றிய விவாதங்களும் விமர்சனங்களும். ஆனால் இதில் பாய்ஸ் படம் பற்றிய விமர்சனம் இல்லை. பாய்ஸ் பட விமர்சனங்கள் சுட்டும் சமூகவியல் பரிமாணத்தைப் பற்றியது இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரையின் தலைப்பை ஆங்கிலத்தில் ‘Public space, Private space, Community standards ‘ என்று மொழிபெயர்க்கலாம்.)

ஒவ்வொரு சமூகமும் தன்னுடைய சமூகத்தில் எது பொது இடத்தில் இருக்க வேண்டும், எது தனிமனித இடத்தில் இருக்க வேண்டும் என்று சில நியமங்களைக் கொண்டுள்ளது. இந்த நியமங்கள், விதிமுறைகள் எழுத்திலும் இருக்கலாம். எழுதாமலும் இருக்கலாம். ஆனால் நிச்சயம் நியமங்கள், விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது, சமூகத்தின் அங்கங்கள் என்ற முறையில் நம் எல்லோருடைய கடமை ஆகிறது.

பொது இடம் என்பது என்ன ? தனிமனித இடம் என்பது என்ன ? அந்த இடங்களில் எது ஒப்புக் கொள்ளத்தக்கது, ஒப்புக் கொள்ளத்தகாதது என்பது பற்றிய ஒரு பொது நோக்கு நம்மிடையே உள்ளது. பொது இடம் என்பது என்ன ? ஸ்தூலமான தளத்தில் நமக்கு எளிதாகப் புலனாகக் கூடிய பல விஷயங்கள் உள்ளன, சாலைகள், பொது சுவர்கள், கோவில்கள், கடற்கரை, பூங்காக்கள் என்று பல இடங்களைச் சுட்டலாம். இந்த பொது இடங்களில் எப்படி ஒருவர் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை பொது இடத்தின் நியமங்கள் என்று அழைக்கலாம். இது போல் உருவமாய்த் தெரியாவிடினும், உணரக்கூடிய அளவில் உள்ள பல விஷயங்களைச் சுட்டலாம். உதாரணமாய், பொது சுவரில் வாக்கியங்கள், கட்-அவுட்கள், விளம்பரங்கள் இவையெல்லாம் பொது இடத்தின் உபயோகங்களாய் உள்ளவை. இதனால் இவை பொது இடங்களின் நியமங்களுக்கு உட்பட்டவையே. புத்தகங்கள், நாடகங்கள் போன்றவை தனிமனித இடங்களின் வெளிப்பாடுகளாய் அங்கீகரிக்கப் பட்டவை. சினிமா ? அது பற்றிப் பிறகு பார்க்கலாம்

இந்தியாவில் தனி இடம் பொது இடத்துக்கான வரையறைகள் அவற்றுக்கான நியமங்கள் ஆகியவை மற்ற நாடுகளை ஒப்பிடும்போது வேறுபட்டவை. அது வேறு ஊருக்கும் வேறு நாட்டுக்கும் போகும்போதுதான், அந்த நாடுகளின் பொது இடம் , தனிமனித இடம் எப்படிச் செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்யும்போது தான் புரிபடும்.

தமிழக இந்திய மரபில் தனி இடம் பொது இடம் தவிர இன்னொரு இடமும் உண்டு. அது திண்ணை போன்ற தனியார் இடங்கள் மற்ற மக்களுக்குப் பயன்படும் இடங்கள். ஆக இந்த இடத்துக்கான நியமங்கள் அந்தந்த திண்ணையின் சொந்தக்காரர்கள் வகுப்பவை.

இந்தக் கட்டத்தில் நாம் இந்தியாவின் கலாசார தளத்தில், சமூக தளத்தில் பொது இடம் (Public space), தனிமனித இடம்(Private space) பற்றி ஆராய வேண்டும். நம் இந்திய/தமிழ் மரபில் தனி இடம் என்பதே ஒரு முரணான விஷயம். நமக்கு தனி இடம் என்ற கருத்தாக்கமே இல்லை என்று சொல்லி விடலாம். நமது நீதிமன்றங்களான பஞ்சாயத்துகள் எங்கே கூடுகின்றன ? கிராமத்தின் நடுவில், எல்லோரையும் சாட்சியம் வைத்து. ஆங்கிலேய ஆட்சிக்குப் பிறகு, நீதிமன்றங்கள் தனியறைகளில்கூடின. பஞ்சாயத்து திறந்த வெளியில். இந்த அடிப்படையான வேறுபாடு, இரு கலாசாரங்களின் வேறுபாடுகளைக் குறிப்பதாய்க் கொள்ளலாம். நமக்கு அந்தரங்கம் புனிதமானது போன்ற கருத்தாக்கங்களே இல்லை என்று சொல்லிவிடலாம். தமிழ் சினிமாவின் கிராமியக் காட்சிகள் செந்தில்-கவுண்ட மணி காட்சிகள் வெட்டவெளியில் வீதிகளில், உரத்த குரலில் , நடைபெறுகின்றன, என்பது நம் கலாசார அடையாளமே. கோவில்கள், வீதிகள் போன்ற பொது இடங்களின் நியமங்கள் சாதியம் என்ற கருத்தாக்கத்தில் தோய்ந்தவை. தனிமனித மீட்சியை தத்துவத்தில் வலியுறுத்திய ஒரு கலாசாரத்திலிருந்து, பொது இடம் தனிமனித இடம் என்ற பாகுபாடு இல்லாத சமூகச் செயல்பாடுகள் எழுந்தது ஒரு வினோதமான முரண்.

*********

பொது இடத்தின் பயன்பாடு என்பது பற்றி அடுத்ததாய்ப் பார்க்க வேண்டும். பொது இடத்தின் பயன்பாடு என்ற பெயரில் பொதுக் கூட்டம் என்ற ஒரு வடிவம் சுதந்திரப் போராட்டத்தின் போது ஏற்பட்டது. வெளிநாடுகளில் பொதுக் கூட்டம் என்பது உண்டு என்றாலும், மிக அரிதே அது. டவுன் ஹால் கூட்டம், உள் மன்றக் கூட்டங்கள் போன்றவையே மிக அதிகம், நியதி என்று சொல்லலாம். ஆனால் இந்தியாவில் எழுந்த பொதுக்கூட்டம் என்ற வடிவம் இந்தியாவின் கலாசாரப் பின்னணியில் மிகப் பொருத்தமானதே. அதன் சாதனைகள் குறைத்து மதிப்பிடத் தக்கவை அல்ல. ஆனால் நாம் சுதந்திரத்திற்குப் பின்பு ஜனநாயகம் என்பதைப் பின்பற்றினோம்.

ஜனநாயகம், சுதந்திரம் என்பது தனமனித இடத்தை மிகப் புனிதமான ஒன்றாகக் கணிக்கிறது. நாம் ஏட்டளவில் ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டாலும் , தனிமனித சுதந்திரம், அந்தரங்கம் என்பது நமக்கு இப்போதும் கூடப் புரியாத விஷயமே. இப்போதும் கூட சினிமாவிலும், தொலைக் காட்சிகளிலும் காதலிக்கும் பெண் குடும்பம் அல்லது சாதிக்கு இழுக்கு என்ற பார்வை முன்னிறுத்தப் படுகிறது. அது பெண்ணின் சுதந்திரம் என்ற கருத்தாக்கம் மிக அரிதாகவே கிடைக்கிறது. அதாவது தனிமனித சுதந்திரம் என்பது இல்லை, அந்த சுதந்திரம் குடும்பம், குடும்பத்தின் நீட்சியாய் உள்ள சாதிக்கு அனுசரணையாக குறுக்கப் படவேண்டும் என்பது பொதுக் கருத்தாய் உருவாக இது போன்ற பார்வைகள் வழி வகுக்கின்றன. எனவே நம் பொது இடத்தில் என்ன காணக் கிடைக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் நம் கலாசாரம் அமைகிறது.

பொது இடம் பற்றிய பயன்பாடு பற்றிய விவாதங்கள் ஐரோப்பாவிலே கூட மதச்சார்பின்மை என்ற ஒரு கருத்தாக்கம் வளர்ந்த போது தான் தொடங்கின என்று சொல்லலாம். கிறுஸ்துவ மதம் பொது இடத்தில் தன் மதத்திற்கு எதிரான கோட்பாடுகளை அனுமதிக்காத ஒரு நிலையில் பொது இடத்தை கூடிய மட்டும் மதச்சார்பற்றதாக வைத்திருக்க வேண்டும் என்ற முனைப்பினால் தான் பொது இடம் ஒரு பொதுப் பண்பைக் கொண்ட சார்பற்ற ஒன்றாக உருவாயிற்று என்று சொல்லலாம். அரசுப் பள்ளிகள் பொது இடங்களாகக் கணிக்கப் பட்டு, அங்கு மத அடையாளங்களின் வெளிப்பாடுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் மேலை நாடுகள் குறிப்பாய் உள்ளன. பொது இடங்களை ஒரு சில குறிப்பிட்ட சக்திகள் ஆக்கிரமிப்புச் செய்வதைத் தடுப்பது என்று ஒரு முனை, தனிமனித வெளிப்பாட்டு சுதந்திரத்தைக் காப்பாற்றுவது என்பது இன்னொரு முனை, இந்த இரு முனைகளிடையே சமநிலையை எய்துவது தான் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் வழியாய் இருக்க முடியும்.

இஸ்லாமிய நாடுகளில் மதம் பொது இடத்தில் நிரந்தரமாய் இருந்து வந்திருக்கிறது. ஆனால் மதம் பற்றிய விவாதம் மிகவும் தெளிவாக பொது இடத்திலிருந்து மட்டுமல்ல, தனிமனித இடத்திலிருந்தும் கூட விலக்கப் பட்டு வந்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் மதமும், மதம் பற்றிய விவாதமும் பொது இடத்தில் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இப்படிப்பட்ட விவாதங்கள் பொது தளத்தில் அனுமதிக்கப் பட்டதால் தான், பெளத்தம், ஜைனமத, சீக்கிய மதம் என்று மிக முக்கியமான மத இயக்கங்கள் தொடங்கி வளர்த்து செழித்தன. சங்கரர் இந்தியா முழுதும் சென்று விவாதித்ததும், வடநாட்டில் தோன்றிய ஜைன மதம் தமிழ் நாடு வரை சென்று வேர் பிடித்ததும், இப்படி பொது இடத்தில் மதம் பற்றிய விவாதம் அனுமதிக்கப் பட்டதால் தான் சாத்தியமாயிற்று.

பொதுவாக பொது இடத்தின் விவாதப் பொருள்களை விரிப்பதற்கான முயற்சிகள் தாராளவாதிகளால்(Liberals) மேற்கொள்ளப் படுகின்றன. இப்படி விவாதப் பொருளை விரிப்பதன் மூலம் சமூக மாறுதலுக்கான விவாதங்கள் தூண்டப்பட்டு, சமூகத் தீமைகள் களையப்படும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. அதே காரணத்தால் தான் பொது இடத்தை ஒரு குறிப்பிட்ட மதம் ஆக்கிரமிப்புச் செய்வதையும் அவர்கள் எதிர்க்கிறார்கள். அதேபோல் தனிமனித சுதந்திரத்தைக் குறுக்குவதையும் எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டின் மிக முக்கியமான தாராளவாதி என்று பெரியாரைச் சுட்டலாம். ஆனால் அவருடைய தாராளவாதம் இந்தியாவின் பொது இட விவாதமரபின் நீட்சி என்று தான் சொல்ல வேண்டும். பொது விவாத மரபின் நீட்சியாய் ஒரு புறம் ஜனநாயகத்தன்மையை விரித்த பெரியார், ராமன் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்ததன் மூலம் பொது இடத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்று காண வேண்டும். அந்த துஷ்பிரயோகத்தின் இன்றைய வடிவங்களே வண்ணை ஸ்டெல்லாக்கள், எஸ் எஸ் சந்திரன்கள், ராம கோபாலன்கள், வெற்றி கொண்டான்கள்.

*************

புத்தகங்கள் , கலைப் பொருட்கள் , ஓவியங்கள், செய்தித்தாள்கள் போன்றவை தனிமனித இடத்திற்கானவை என்று சொல்லலாம். புத்தகங்கள் எழுதப் படலாம், யார் விரும்புகிறார்களோ அவர்கள் படிக்கலாம், படிக்க விரும்பாதவர்கள் இதைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை.

பொது இடங்கள் தமிழ் நாட்டில் எப்படிப் பயன்படுத்துகிறது என்று பார்க்கலாம்.

1. பொதுக் கூட்டம் : இது இன்று தேவைதானா ? விருப்பப்படாதவர்களின் கவனத்தையும் ஈர்க்கத் தக்க ஒரு உரத்த குரலில் இது தனிமனித இடத்தின் மீதான ஆக்கிரமிப்பு அல்லவா ? அரசியல் பொதுக்கூட்டங்களை மட்டும் நான் இங்கு குறிப்பிடவில்லை. தெய்வீக சுகமளிக்கும் கூட்டங்கள், மசூதிகளில் எழும் பிரார்த்தனை அழைப்புக் குரல், மார்கழி மாதங்களில் லெளட் ஸ்பீக்கரில் முழங்கும் இந்து கோயில் பாடல்கள் எல்லாவற்றையுமே நான் இங்கு குறிப்பிடுகிறேன். இதை ஒலி மாசு (Noise Pollution) என்று குறிப்பிடுவதுண்டு. இது தவறு. இது பொது இடத்தின்மீதான ஒரு தவறான ஆக்கிரமிப்பு என்றே நாம் கணிக்க வேண்டும்.

2. விளம்பரங்கள் : விளம்பரங்களில் பெண்கள் தவறாகச் சித்தரிக்கப் படுவது பற்றியும், பொது இடத்தில் இருக்கலாகாத பிம்பங்கள் மக்கள் மீது வீசப் படுவது பற்றியும் பெண்களின் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

3. சினிமா சுவரொட்டிகள்/கட் அவுட்கள் : இவையும் பொது இடங்களைத் தவறாய் ஆக்கிரமிக்கும் வெளிப்பாடுகளே.

4. ஊர்வலங்கள் : இந்த வடிவம் ஸ்தூலமாகவும் கருத்தளவிலும் பொது இடத்தை ஆக்கிரமிக்கும் ஒரு முயற்சி.

*****************

ஆக, இந்த நவீன ஜனநாயக இந்தியாவில் நாம் பொது இடம், தனி இடம், பொது இடமாக உபயோகப்படுத்தப்படும் தனி இடம் ஆகியவை குறித்த விவாதத்தினை ஏற்படுத்த வேண்டி நிலையில் இருக்கிறோம்.

பொது இடத்தின் வரையறைகள், தனி இடத்தின் சுதந்திரம், பொது இடமாக உபயோகப்படுத்தப்படும் தனி இடத்தின் வரையறைகள் ஆகியவை இங்கு பேசப்பட வேண்டிய விஷயங்கள். இவைகளின் தொடர்ச்சியாக நாம் பாய்ஸ் போன்ற படங்களை அணுகுவது சரியானதாக இருக்கலாம்.

பொதுமக்கள் பயணம் செய்யும் பஸ்களில் நடைமுறைகள் எல்லோருடைய நலனையும் சார்ந்திருக்கும் விஷயங்கள். உதாரணமாக, புகை பிடித்தல், பஸ்ஸிலிருந்து கொண்டு வெத்திலை எச்சில் துப்புதல், உடை உடுத்தாமல் உடுத்தி தெருவில் விரைந்து செல்லும் பயணிகளின் கவனத்தை சிதறடித்தல் போன்றவை சமூக ஆரோக்கியத்துக்குக் கெடுதியானவை. இவைகளை பொது இடத்தில் தடுப்பது சரியானதாக இருக்கும். ஆனால் தன்னுடைய வீட்டின் உள்ளே வேறு யாரையும் பாதிக்காமல் இவை செய்யப்பட்டால் அது தடுக்கப் படலாகாது.

உதாரணமாக பத்திரிகையில் திருமண விளம்பரங்கள் வெளிவருகின்றன். அந்த விளம்பரங்களில் சாதி குறிப்பிடப் படுகிறது. திருமணம் என்ற தனிமனித உறவிற்கான ஒரு விளம்பரம் தனிமனித இடத்தில் என்பதால் இது சரியே. ஆனால் வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்று ஒரு விளம்பரம் வரும் எனில் , அதில் குறிப்பிட்ட சாதியினர் தான் வேண்டும் என்றால் அது பொது இடத்தின் தவறான உபயோகம்.

தனி இடத்துக்கான சுதந்திரம் எவ்வளவு முக்கியமானதோ அதே போன்றதே பொது இடம் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதும். தனி இடத்தில் இருக்க வேண்டியவை பொது இடத்துக்கு வரும் போதெல்லாம் மக்களிடமிருந்து எதிர்வினை வருகிறது. அது பொது இடம் ஆக்கிரமிக்கப்படுகிறது என்ற அடிப்படையில் வராமல், தனக்கு அரசியல் ரீதியில் பிடிக்காத விஷயம் பொதுவில் வருகிறது என்பதாக வருகிறது. அது பாரபட்சமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வைத்து பிரச்னையை திசை திருப்பி விடுகிறது.

உதாரணமாக, பொது இடத்தில் ஊர்வலம் செல்வது. இது நிறைய இடைஞ்சல்களையும் பொதுமக்களுக்கு கஷ்டத்தையும் கொடுக்கிறது என்பதில் பலர் ஒத்துப் போவார்கள். ஆனால், ஒரு சிலர், தாங்கள் சார்ந்திருக்கிற கட்சி ஊர்வலம் போனால் அதன் நியாயத்தை வலியுறுத்திப் பேசுவார்கள். அதனை எதிர்ப்பவர்களும் யார் ஊர்வலம் போனார்கள் என்பதை வைத்துத்தான் விவாதத்தைக் கட்டமைப்பார்கள். டெலிகிராஃப் பத்திரிக்கையில் படித்தது. சபானா பெர்வீன் என்ற சிறுமி இது போல கம்யூனிஸ்ட் கட்சி திடார் ஊர்வலம் போனதால் தேவையான பொருட்கள் கிடைக்காமல் மருத்துவமனையில் இறந்து போனாள். அந்த ஊர்வலத்தை நடத்திய ஜனநாயக மாதர் சங்கத்தலைவி ‘அந்த செய்தி வருந்தத்தக்கதுதான். ஆனால் பெரும் போராட்டத்தில் அதை விட முக்கியமான விஷயங்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கும்போது இது போன்ற சிறு இழப்புகள் பரவாயில்லைதான் ‘ என்று சொன்னார். அதாவது பொது இடத்தைத் நான் ஆக்கிரமிக்கும்போது அது உன்னத விஷயம். மற்றவர்கள் ஆக்கிரமித்தல் தவறு.

சுதந்திர இந்தியாவில் பொது இடத்தின் மிக ஆபத்தான துஷ்பிரயோகம் நடந்தது அத்வானியின் ரதயாத்திரையினால். ஒரு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் தீர்ந்திருக்க வேண்டிய மசூதி விவகாரத்தை , இந்து மக்கள் அனைவருக்குமான ஒரு பிரசினையாய் எழுப்பி பொது இடத்தைத் ஆக்கிரமித்ததன் விளைவு பா ஜ க ஆட்சிக்கு வந்தது மட்டுமல்ல, நிரந்த மதப் பிளவு ஒன்றை நம் நாட்டில் ஏற்படுத்தியது.

ஊர்வலம், கோஷம், ஆகியவை நடத்த ஒரு (ஹைட் பார்க் போல) திறந்த மைதானத்தை ஏற்படுத்தி அங்கு அரசியல் பொதுக்கூட்டங்கள், நடக்கலாம் என்று பொது அனுமதி அளித்து அங்கு வரக்கூடிய மக்களுக்கு நெரிசல், சுகாதாரப் பாதுகாப்பு போன்றவற்றை வழங்குவதுதான் சரியானதாக ருக்கும். இது அமைதியான கூட்டம் கூடும் உரிமையை மதிப்பதோடு, மற்றவர்களுக்கு இடைஞ்சலின்றி செயல்படும் உரிமையையும் வழங்குகிறது.

சமூகக்குழுவின் தகுதரங்கள் என்று கூறக்கூடிய community standards என்பது ஒவ்வொரு சமூகக்குழுவுக்கும் வித்தியாசமானது. ஒரே ஆள் வெவ்வேறு சூழ்நிலைகளில் கடைப்பிடிக்கும் வெவ்வேறு உடைகள் வெவ்வேறு பழக்கங்கள் என்பது தன் அடிப்படையில்தான். பீச்சில் இருக்கும் போது ஒரு உடை என்றும், பாஸ்கெட் பால் விளையாடும்போது ஒரு உடை என்றும் இருப்பது இதனால்தான். அதற்கு ஆள் ஹிப்போகிரைட் என்று அர்த்தமல்ல. அந்தந்த சமூக தகுதரங்களின் பொருட்டு அவன் இருக்கிறான். ஒவ்வொரு சூழ்நிலையிலும் இயைந்து வாழ வேண்டிய மனிதன் அந்தந்த சமூக தகுதரங்களைப் பின் பற்ற வேண்டியவனாக இருக்கிறான். அந்த சமூகம் நியமித்த தகுதரங்களை மதிப்பதே அழகு. அந்த தகுதரங்கள் மாற்றப்பட வேண்டியவை என்ற உணர்வு பல மனிதர்களுக்கு வரலாம். அது பரவலான ஒரு அங்கீகாரத்தைப் பெறும்போது அதுவும் மாற்றப்படும். தகுதரங்கள் விலங்குகளாகும் சூழ்நிலை உண்டு. அதனை மாற்ற இருக்கும் வழிமுறை ஜனநாயகம். தொடர்ந்த விவாதங்கள். பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மூலம் கருத்து உருவாக்குதல்.

தனி இடத்துக்கான உரிமையை நம் நகரத்தில் இருக்கும் குடியிருப்புகளிலும், கட்டப்படும் அமைப்புகளிலும் தொடர்ந்து இழந்து கொண்டிருக்கிறோம். அது ஒரு தனி கட்டுரை. இந்தக் கட்டுரையை பொது இடம் பற்றிய குரலாக மட்டும் பதிவு செய்கிறேன்.

***

இன்னமும் நாம் சினிமா பற்றிப் பேசவில்லை.

சினிமா பொதுவாக தனிமனித இடத்திற்கான வெளிப்பாடு என்று தான் உலகு முழுதுமான சமூகவியல் நிபுணர்களால் கணிக்கப் படுகிறது. அதனால் தான் சினிமாவின் மூலம் மதம், இனவாதம் பற்றி பலவான விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏசுவின் திருமண வாழ்க்கையைச் சுட்டிக் காட்டும் படமும் வெளிவந்ததுண்டு. அவை விமர்சிக்கப்பட்டதும் உண்டு. ஆனால் ஒரு தனிமனிதனின் தேர்வு என்ற முறையில் அதை விருப்பப்பட்டவர்கள் பார்க்கலாம், மற்றவர்கள் பார்க்க வேண்டிய கட்டாயமில்லை என்ற அடிப்படையிலேயே விமர்சனங்கள் அமைகின்றன. மதவாதிகள் தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் கோரினாலும் அந்தக் குரல்கள் அலட்சியப் படுத்தப்படுகின்றன. அப்படி தடை நேர்ந்தால் , அதுவும் இந்தியாவின் ஏதாவது அரைவேக்காடு அரசியல்வாதி கோரித் தான் இந்தியாவில் நிறைவேற்றப் படும். இது கூட இந்தியாவில் தனிமனித சுதந்திரம், தனிமனித இடம் என்ற கருத்தாக்கம் புரிந்து கொள்ளப் படாததால் என்று சொல்லலாம்.

ஆனால் தமிழ் நாட்டில் சினிமா தனிமனித இடத்திற்கான வெளியீடு அல்ல. இது மிக முக்கியமான வேறுபாடு. அண்ணா தன் பேச்சில் , எம் ஜி ஆர் முகத்தைக் காட்டினால் முப்பதாயிரம் வாக்குகள் கிடைக்கும் என்று பேசிய பேச்சு வெறும் வாக்குகளைப் பற்றியதல்லாமல், தமிழ்க் கலாசாரத்தில் சினிமாவை தனிமனித இடத்திலிருந்து பொது இடத்திற்குத் தள்ளியது என்று சொல்லலாம். அண்ணா ஆட்சிக்கு வந்தது, பின்பு கருணாநிதி ஆட்சிக்கு வந்தது, பின்பு எம் ஜி ஆர் ஆட்சிக்கு வந்தது, பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது என்று இந்தத் தொடர்ச்சியில் ஒரு வலுவான சங்கிலித் தொடர் உள்ளது. சினிமா தமிழ்நாட்டின் கலாசார அடையாளமாக மாறியுள்ளது. பொது இடத்திற்கு சினிமா தள்ளப்பட்டுவிட்டது.

உதாரணமாக, எம் ஜி ஆரை வலுவிழக்கச் செய்ய கருணாநிதிக்குத் தோன்றிய வழி, மு க முத்துவை கதாநாயகனாய்ப் போட்டு படம் ஏடுப்பது தான்.

கூத்தாடிகள் நாடாளக் கூடாது என்ற வாதமல்ல இது. சினிமாவின் வலிமையை சமூகத்தின் மாறுதலுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற வாதமல்ல இது. சினிமாவை தனிமனிதத் தேர்விற்கான ஒரு முனையிலிருந்து, பொது இடத்தின் மையத்திற்கு நகர்த்துவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய சிந்தனை இது. சினிமாவை முன்னிறுத்தி ஒரு கலாசாரம் கட்டுவிக்கப் படுவது பற்றிய பார்வை இது.

மற்ற நாடுகளில், மானிலங்களில் சினிமாத் துறையினர் ஆட்சிக்கு வரவில்லையா என்று கேட்கலாம். என் டி ராமராவ் ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தார். ரொனால்ட் ரேகன் அமெரிக்காவில் அதிபராய் இருந்தார் என்று வாதிடலாம். ஆனால் சினிமா என்ற அடையாளத்தினால் ஏற்பட்ட கலாசார நிகழ்வுகள் அல்ல அவை. என் டி ஆர் ஆட்சிக்கு வந்ததும், இந்திரா காந்தி ஆந்திர முதல்வரை அவமானப்படுத்திய ஒரு அரசியல் நிகழ்வினால் நடந்தது. ஆனால் அதன் பின்பு கூட ஆந்திராவில் சினிமா கலாசாரமையத்திற்கு வரவில்லை. இத்தனைக்கும் சினிமா தமிழ் நாட்டைக் காட்டிலும் கூட மிகத் தீவிரமாக ஆந்திராவில் பார்க்கப் படுகிறது.

மலையாளப் படங்களை எடுத்துக்கொள்வோம். காமத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாதிரியான மலையாளப் படங்கள் இந்தியா முழுதும் வினியோகம் பெறுகின்றன. ஆனால் காமத்தை மையப் படுத்திய மலையாளப்படங்கள் தான் மலையாளக் கலாசாரத்தின் அடையாளம் என்று யாரும் சொல்ல முற்படமாட்டார்கள். ஆனால், ஜெயலலிதா, கருணாநிதி, எம் ஜி ஆர் தான் தமிழ்நாட்டின் கலாசார அடையாளங்கள் என்பதில் மாறுபாடு இருக்க முடியாது. ஏன் ?

திரைப்படங்கள் மலையாளக் கலாச்சாரத்தின் உயிர்நாடி அல்ல. தமிழ்ப்படங்கள் தமிழ்க் கலாச்சாரத்தின் உயிர்நாடி. இவையே தமிழ்க் கலாச்சாரத்தை நிர்ணயிக்கின்றன. தமிழ் திரைப்படங்கள் தமிழர் வாழ்வோடு இணைந்து தமிழர்களின் உயிரைவிடவும் முக்கியமான இடத்தைத் வகிக்கின்றன. அதைவிட முக்கியமானது அவை தமிழ்நாட்டின் பொது இடமாக ஆகி விட்டன என்பது. திரைப்படத்துறையில் வெற்றி பெற்ற, அதில் முக்கியமான பங்கு வகிப்பவர்கள் தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளங்களாக ஆகி தமிழ்நாட்டின் பொது இடத்துக்கான இடத்தைத் அடைந்து விடுகிறார்கள். சமூகமையங்களில் நிறுவப்பட்டுள்ள தொலைக் காட்சிப் பெட்டிகள் இந்த சினிமா மையத்தினை இன்னமும் வலுப்பெறச் செய்து விட்டன.

ஆகவே, ‘அந்த ஏழு நாட்கள் ‘ எடுக்கும் பாக்கியராஜ் அந்தப் படத்தில் தரும் முடிவு தமிழரின் கலாச்சார அடையாளமாக பொதுத்தளத்தில் விவாதிக்கப்படுகிறது. தமிழ்க் கலாச்சாரத்தின் பொது இடமாக இருக்கும் சினிமா, அந்தப் பொது இடத்துக்கு என்று சில வரை முறைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. தாலி, குங்குமம், கற்பழிப்பு, வில்லன், காதல் என்று கலவையான ஒரு கலவைக் கலாசாரம் தமிழ்க் கலாசாரத்தின் அடையாளம் என்று உருவாகிக் கொண்டு வருகிறது. ரஜனியின் வளர்ச்சி சாதகமாகவும் பாதகமாகவும் விமர்சனத்துக்குள்ளாகிறது.

யூ படம், ஏ படம் என்று ஏன் பிரித்துப் பார்க்கிறோம் ? யு படம் என்ற பொது இடத்தில், இன்ன இன்னவைகளைத்தான் பேசலாம், இன்ன இன்ன கதைகளைத்தான் சொல்லலாம் என்ற நியமத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அந்த இடத்துக்குப் பொருத்தமில்லாத விஷயங்கள் பேசப்படும்போது, தெருவில் போகும்போது எச்சில் துப்புபவனைப் பார்க்கும் போது அடையும் அசூசையை அடைகிறோம். இதுவே நமது கோபமான வெளிப்பாடாக வருகிறது. ( அவை நாகரிகம் என்பது வேறு; சனாதன சிந்தனை என்பது வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்வதுதான் நம் அறிவுஜீவிகள் செய்துவரும் பணி. எச்சில் துப்புவதைக் கலகம் என்று சொல்லும் மேதாவிகள் தாராளமாக தம்முடைய வீட்டின் உள்ளே துப்பிக் கொள்ளலாம்.)

**************

பாய்ஸ் படத்துக்கு வருவோம்.

பாய்ஸ் போன்ற படங்கள் வேறு வரவே இல்லையா ? ஏன் பாய்ஸ் படம் விமர்சிக்கப் படுகிறது ? புத்தகக் கடையிலும், பத்திரிகை விற்பனை நிலையத்திலும் இதை விட மோசமான சித்தரிப்புகள் கொண்ட படைப்புகள் விற்பனைக்கு உள்ளன. ஆனால் அதைத் தாக்கி யாரும் எழுதுகிறார்களா ? ஏன் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை ? பாய்ஸ் ஏன் விமர்ச்னத்துக்கு உள்ளாக வேண்டும். ஷங்கரும், சுஜாதாவும் இணைந்து வழங்கியிருப்பதாலா ? மலையாளப் படங்களும், ஆங்கில மொழிமாற்றப் படங்களில் இடைச் செருகல்களும் இருக்கவே ருக்கின்றன. ஏன் பாய்ஸ் இலக்காக வேண்டும் ? இதற்கு ஓர் ஆழ்ந்த காரணம் இருக்கிறது. இந்தக் காரணத்தை ஆராய வேண்டுமென்றால், நாம் இந்திய/தமிழ் சமூகத்தையும் புரிந்து கொள்ள முயலவேண்டும். அதற்கு மேற்கண்ட கருத்துகள் உதவும். தனிமனித இடத்தில் பாய்ஸ் போன்ற படம் இருந்திருக்கும் பட்சத்தில் இது பற்றி ஏதும் விமர்சனங்கள் எழாது. ஆனால் தமிழ்க் கலாசாரத்தின் மையத்தில் உள்ளதாக சினிமா மாறிவிட்ட நிலையில் பாய்ஸ் வெறும் படமல்ல, கலாசார நிகழ்வு. பாய்ஸ் மட்டுமல்ல, பாபா, படையப்பா, திருடா திருடி எல்லாமே மையக் கலாசார நிகழ்வுகள் இது தான் அச்சம் தர வேண்டிய ஒன்றாய் இருக்க வேண்டும்.

*****************

தமிழ்க் கலாச்சாரத்தின் பொது இடமாக இருக்கும் சினிமா, அந்தப் பொது இடத்துக்கு என்று சில வரை முறைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. (ஏ படம் பொது இடமல்ல. யு படம் பொது இடத்தில் நிகழ்த்தக் கூடியது என்று சொல்லலாம். தன் அர்த்தம் பொது இடத்திற்குத் தகுதியானது என்பதே தவிர பொது இடத்தில் ஆக்கிரமிக்க அனுமதிக்கலாம் என்பதல்ல.)

யு படம் என்ற பொது இடத்தில், இன்ன இன்னவைகளைத்தான் பேசலாம், இன்ன இன்ன கதைகளைத்தான் சொல்லலாம் என்ற நியமத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அந்த இடத்துக்குப் பொருத்தமில்லாத விஷயங்கள் பேசப்படும்போது, தெருவில் போகும்போது எச்சில் துப்புபவனைப் பார்க்கும் போது, குப்பையை அண்டை அயலார் பற்றிக் கருதாமல் தெருவில் வீசும் போது அடையும் அசூசையை அடைகிறோம். இதுவே நமது கோபமான வெளிப்பாடாக வருகிறது.

அதே போல, எது ஏ படத்துக்கான விஷயங்கள் உள்ள மஞ்சள் பத்திரிகைகளை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும்படியான சூழ்நிலையை உருவாக்குவதுதான், நமது பொது இடத்தையும் மீட்கும். உதாரணமாக, டாக்கடைகளில் பெட்டிக்கடைகளில் தொங்கும் காமப்பத்திரிக்கைகள், ஜன சந்தடி மிகுந்த நகரத்தெருக்களில் கடை விரிக்கப்பட்டிருக்கும் காமப்பத்திரிக்கைகள், காமப்பட போஸ்டர்கள் போன்றவைகள் இருக்க வேண்டிய இடம் 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் நடமாடக்கூடிய பொது இடம் அல்ல. அவைகள் இருக்க வேண்டிய இடம், புத்தகக் கடைகளில் 18 வயதுக்கு மேல் அனுமதி என்ற அறிவிப்போடு இருக்கும் தனி அறைகள். கவனியுங்கள். நான் காமப்பத்திரிக்கைகளை எதிர்க்கவில்லை. அதற்கான தனி இடத்தை மீட்கவேண்டும். அது இன்று ஆக்கிரமித்திருக்கும் பொது இடத்திலிருந்து விலகவேண்டும் என்று சொல்கிறேன்.

*****************

பல பொது இடங்களை மீட்கவேண்டிய நிலையில் இருக்கிறோம். தெருக்கள் முழுவதும் எழுதித் தெளித்திருக்கும் வாசகங்கள். பிரம்மாண்டமான கட் அவுட்டுகள். (ஒரு முறை அண்ணா சாலையில் பிரம்மாண்டமான கட் அவுட். இடுப்பில் உண்மையான துணியுடன் ஒரு பெண்ணின் கட் அவுட். அந்த இடத்தில் அன்றைக்கு காலையில் மட்டுமே 10 விபத்துக்கள். விபத்துகள் காரணமாக அந்த கட் அவுட் நீக்கப்பட்டது) அம்மா அம்மா என்று கதறும் சுவரொட்டிகள். திடார் ஊர்வலங்கள். தெருக்களில் ஒண்ணுக்குப் போகும் ஆண்கள். சாலையோரத்தில் நடக்க இடம் கொடாத டாக்கடைகள் குடிசைகள் நடைபாதை வியாபாரிகள் என்று நம் பொது இடம் நம் அனுமதி இன்றியே தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இத்தோடு கூடவே தான் யூ பட பாய்ஸும். நேர்மையின்மை இதுதான். தெருவில் சென்று கொண்டிருக்கும் ஒருவனை திடாரென்று நிறுத்தி அவனிடம் மஞ்சள் புத்தகத்தை திணிப்பது போன்ற அநாகரிகம்தான் யூ பட பிராண்டோடு வந்த பாய்ஸ் படமும்.

பொது இடத்தில் மஞ்சள் பத்திரிகை மட்டுமல்ல, நிறுத்தி விபூதியை நெற்றியில் பூசுவதும், பாவிகளே மனம் திரும்புங்கள் என்று கையில் திணிப்பதும் – இது போன்ற அத்துமீறல்கள் எல்லாமே, பொது இடத்தைத் தவறாக ஆக்கிரமிப்புச் செய்யும் செயல்களே.

பொது இடம், அதனை மீட்கும் விவாதம் இல்லாமல் இந்த விமர்சனம் சாத்தியமில்லை. அந்த விவாதம் ஏற்படாமல், வெறும் பாய்ஸ் பற்றியதாக மட்டும் இந்தப் பிரசினை பார்க்கப்பட்டால் அதில் ஏதும் பயனில்லை.

********************

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation