பெரியபுராணம் – 15 ( இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

பா சத்தியமோகன்


261.
தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருப்புகூர் தலம் அமர்ந்த இறைவரிடம்
உண்டான பேரன்பு மிக உணர்ந்து அடிபணிந்தார் தமிழ் பாடினார்
மானைக் கையில் கொண்ட சிவபெருமான் வீற்றிருக்கும்
திருக்கஞ்சானூர் திருவாரூர் முதலிய பலவும் வணங்கி
மலர்களும் நீர்நிலைகளுமுள்ள காவிரியின் கரை அடைந்தார்.
262.
புதுமையுடைய மலர்களும் மணிகளும் கொண்டுவரும்
வரும் வழியில் இருகரையிலும் பொன்னை ஒதுக்கி வரும்
காவிரியின் நீரில் அடி முழுகி
இறைவன் எழுந்தருளிய திருமயிலாடுதுறை வணங்கி
திருஅம்பர் மாகாளத்தினை அடைந்தார் ஆரூரர்.
263.
மின்னல் போன்ற ஒளியுடைய சிவந்த சடையுடைய
சிவபெருமான் வீற்றிருக்கும்
திருப்புகலூரை முதலில் வணங்கினார். துதித்தார்.
இறைவரின் அருளையே எண்ணி
பொன்னான உத்திரியமும் பூணூலும் உடைய மார்பு கொண்ட
நாவலூரர் எனப்படும் சுந்தரர் அடைந்தார் திருவாரூர்.
264.
அழகுடைய தேர் தெருக்களையுடைய திருவாரூரில் வாழ்வார்க்கு
?மிகுந்த அன்புடைய நம்நம்பி ஆரூரன் நாம் அழைக்க
இங்கு வருகிறான். அவனை நீங்கள் மகிழ்ந்து எதிர்கொண்டு
வரவேற்பீராக ? என கங்கை பொருந்திய சடையில்
பிறைச்சந்திரன் அணிந்த தியாகராசர் அருள் செய்தார்.
265.
தம்பெருமான் தியாகராசர் அருள் செய்ய திருதொண்டர்
தாம் கேட்ட ஆணையை பிறருக்கும் சாற்றினார்
எம்பிரான் அளித்த பரிசு அளித்த அருள் இதுவேயானால்
நம்பிரான் இந்த சுந்தரரே அல்லவோ எனக்கொண்டார்
தேவர் உலகம் பூமியிலோ ! எனும்படித் திரண்டனர் அழைக்க எழுந்தனர்.
266.
மாளிகைகள் மண்டபங்களில் நீண்டு உயர்ந்த பெருங்கொடிகள் கட்டி
மாளிகையின் அடியில் நெடுந்தோரணமும், தழையுள்ள பாக்கு வகைகளும்
மாவிலைத் தழையால் ஆன மாலைகளும் நீள இலையுடைய மரங்களும்
நீர்நிரம்பிய பொன் குடங்களும் வரிசையாய் அமைத்தனர்
மணிகளால் ஆன விளக்குகளை
உயர்ந்த வாயில்கள் தோறும் வைத்தனர் ஒளி நிறைய.
267.
ஒளி பொருந்திய திண்ணைகளை
தூய நறும் சந்தனக் குழம்பால் நீவினர்
குற்றமிலாத நல் மணமுடைய சுண்ணப்பொடியும்
நீர்மையுடைய முத்துகளும் மற்றமணிகளும்
அழகுறப் பரப்பி வைத்து வீதிகளில் தூசிகள் அடங்க
மனங்கமழும் பனிநீர் மிகத்தெளித்தார்.
268.
மங்கலகீதம் பாட
மேகத்தின் கர்ச்சனை போன்ற தூரியங்கள் ஒலிக்க
சிவந்த கடல் போன்ற கண்களுள்ள நல்லணி மங்கையர்
மேடைதோறும் நடனமிட
திருவாரூரில் வாழ்கின்ற அடியார்கள் எதிர்கொண்டு வரவேற்றனர்
உயர்ந்த மதிலுடைய வாயில் வந்து.
269.
தம்மை எதிர் கொண்டு வணங்குவாரை
அஞ்சலி கூப்பி வணங்கினார் வந்தொண்டர்
சிந்தை களிப்புற வீதியுள் செல்லும் சுந்தரர்
தம்மை வரவேற்கும் தொண்டரை நோக்கி
?எம்பெருமான் வீற்றிருப்பதும் ஆரூர்
அவன் எம்மையும் ஆட்கொள்வாரோ கேளீர் ?
எனும் சந்த இசைப் பதிகங்கள் பாடி
தம்பெருமான் திருவாயில் சார்ந்தார்.
270.
வானம் தொடும்படி நீண்ட திருவாயில் நோக்கினார்
ஐந்து உறுப்புகள் மண்தொட வணங்கினார்
தேன் பொருந்திய கற்பகமலர் மாலை வாசம் கமழும்
தேவாசிரிய மண்டபம் தொழுது இறைஞ்சினார்
ஊனும் உயிரும் உருக்கும் அன்பால்
உச்சி குவித்த செங்கைகளோடு
மணமிகு கொன்றை மாலை அணிந்த புற்றிடம் கொண்டாரின்
மூலத்தானத்தை சூழ்ந்த திருமாளிகை அடைந்தார்.
271.
புற்றிடம் கொண்ட புராதனனைப்
பூங்கோயிலில் எழுந்த பெருமானை
எல்லா உயிர்க்கும் பற்றுக்கோடான முழுமுதல் இறைவனை
பார்வதி அம்மையை ஒரு பாகம் கொண்டவனை
தன் தாமரை பாதம் தொழுகின்ற பேறு அளித்தவனை
தரையில் வீழ்ந்து இறைஞ்சினார் நற்றமிழ் நாவலர்
தமிழில் வல்ல சுந்தரர்
உடல் எடுத்ததன் நற்பலனை அடைந்தார்.
272.
அன்பு பெருக உருகியதும் உள்ளம் அலைய
திருமூலத்தானநாதர் முன்பு
எண் உறுப்பாலும் ஐந்து உறுப்பாலும்
விதிமுறைப்படி வணங்கி அளவிலாக் காதல் முதிர
ஐந்து புலன்களும் ஒன்றிய நிலையில்
நாயகன் சேவடி அடைந்த இன்பப்பெருக்கில் மூழ்கி நின்றார்
இன்னிசை வண்டமிழ் தேவாரப் பதிகம்பாட.
273.
உயிர்கள் தம்மை வழிபட்டு வாழ்வடைய
பெரிய வேதவடிவாய் அமைந்த புற்றை இடம் கொண்ட
இறைவனின் நிறை அருளால்
?நம்மையே உமக்குத் தோழனாய் தந்தோம்
நாம் முன்னர் தடுத்தாட் கொண்ட திருமணத்தில்
அன்று நீ கொண்ட மணக்கோலத்தையே
என்றும் கொள்க! வேட்கை தீர இவ்வுலகில் விளையாடுக ! ?
என்றதொரு திருவாக்கு சுந்தரர் திருப்பதிகம்
பாடிய போதே எழுந்ததே.
274.
சுந்தரர் இறைவனின் திருவாக்கைக் கேட்டதும்
எக்காலத்தும் அழியாத புற்றிடம் கொண்டவரை
மிக்க விருப்பத்துடன் வணங்கி நின்று
?அன்று நான் உலகத்துக்கு ஆளாவதைத் தடுத்தாண்ட வேதியரே…
இன்றும் அது போன்றே எனை ஆட்கொள்ள
ஆரூரில் வீற்றிருக்கும் அரிய மணி போன்றவரே!
வானின் இயல்பும் கயல் மீனின் இயல்பும் கொண்ட கண் உடைய உமையை
ஒரு பாகத்தில் கொண்டவரே.. !
நாய் ஒத்த என்னையும் மதித்து உன் கமலப்பாதம் தந்தீரே .. உம்
கருணையன்றோ ? என வணங்கினார்.
275.
என்று பலமுறையால் வணங்கி எய்திய உள்ளக் களிப்புடன்
வெற்றி கொண்ட காளைபோல் நடந்து
வீதிவிடங்கப் பெருமான் முன்பு சென்று
தொழுதார். துதித்தார். வாழ்ந்தார்!
திருமாளிகை வலம் செய்து வெளிவந்தார்
அன்று முதல் அடியாரெல்லாம் தம்பிரான் தோழர் என்றும்
இறைவனின் நண்பர் என்றும் வழங்கினர்.
276.
மைவளர் கண்டர் அருளினாலே
வண்தமிழ் நாவலர் ஆதிசைவருக்குரிய
அழகிய கோலம் கொண்டார்
சந்தனம், மணிமாலை, மலர் மாலை பூண்டு
மெய்வளர் கோலம் பூண்டார்
மிகச்சிறந்த தவத்தவர் இவரே எனக் கூறும்படி
புற்றிடம் கொண்டவரை பாடித் திளைத்து
மகிழ்வோடு நின்றார்.
277.
சுந்தரர் திருவாரூர் வரும் முன்பு
எல்லையிலாச் சிறப்புடைய திருவாரூரில்
கயிலை மலை ஆதி முதல்வர் சிவபெருமானின்
ஒரு பங்கை உடைய உமைக்கு ஏவல் செய்யும்
தோழிப் பெண்களுள் ஒருவரான கமலினியார் அவதரித்தார்.
278.
ஒளியுடைய கதிர்மணி பிறந்ததைப்போல
உருத்திரகணிகைகள் எனப்படும் பதியிலார் குலத்தில் தோன்றி
?பரவையார் ? எனும் நாமம் பெற்று கொண்டு
பிறையணிந்த தூய புனிதரின் நன்னாளில்
மங்கல அணிகள் அணிந்தபடி –
279.
பொருந்திய பெரும் சுற்றத்தார் ஒன்றுகூடி
குழவியைக் காக்கும்படி உரிய தெய்வம் வேண்டி
முதல் மாதம் காப்பு செய்து அதன்பின்
அந்தந்த மாதங்களில் உரிய விழாக்கள் அழகுடன் செய்ய
?அறிவால் மிக்க செந்தாமரை மலர் உறையும் திருமகளே தோன்றினாள் ?
என மனம் மகிழ தளர் நடைப்பருவம் அடைந்தார்.
280.
இளமையுடைய பெண்மானோ
தெய்வப்பூவின் இளைய அரும்போ
வாசத் தேனின் இளம்பதமோ
கடல் அலையின் இளம் பவளக்கொடியோ
சந்திரன் ஒளியின் இளம் கொழுந்தோ
காமன் தன் போர் கற்கும் ஒப்பிலா இளைய வில்லோ
எனும்படி வளர்ந்தார் பரவையார்.
281.
சுற்றமும் மற்றவரும் அறியும்படி இனிய அழகு
நாளும் நாளும் மேலும் மேலும் பெருக
ஆடினாள் விளையாட்டுகள் கழற்சிக் காய்கள்; பந்து; அம்மானை; ஊசல்
அவற்றுடன் பாடினாள் இனிய பாடல்களும்
உமையம்மையின் திருவடி நினைத்து
அன்பினால் உடலும் உயிரும் உருக
பாடல் கேட்பவருக்குப் புரிய.
282.
பிள்ளைப் பருவம் முதல் ஐந்தாண்டு சென்றது
தொடரும் பேதைப் பருவம் சென்றது
அள்ளிக் கொள்ளும் விருப்பம் தரும் அழகுடன்
மன்மதனின் மெய்யாகிய கொங்கைக் குவியலை
ஏற்கும்படி உயர்ந்து வளர்ந்தாள்
அரும்புகளை வென்றன கொங்கைக் கோம்பு
முன்னர் தான் அம்மையாரின் தோழி என்ற மெய்த்தன்மை
உள்ளம் கொள்ள வாழ்ந்தார்.
283.
தோழியர் தம்மைச் சூழ்ந்து வர
கூந்தல் வாசனை அனைத்து திசையும் நிறைய
பூங்கோயிலில் வீற்றிருக்கும் இறைவரை வணங்க
ஒளிமிக்க திருவீதியை சுற்றிச் சென்றார் பரவையார் ஒரு நாள் .
284.
பரவையார் தெருவில் சென்ற போது –
அடிகளில் பூண்ட சிலம்புகள்
இம்மண்ணுலகம் வெற்றி கொண்டு அடிமைப்படுத்தின என்பது போல் ஒலிக்க –
மணியுடன் விளங்கும் காஞ்சி அணியோ
பாம்பு உலவும் கீழ் உலகை வென்றது போல் கிளர்ந்தது.
சுருண்ட கூந்தலால் மேகம் தோற்க
விண்ணுலகமும் தோற்கும் என வண்டுகள் ஒலித்தன.
285.
புற்றைத் தமக்கு இடமாகக்கொண்ட இறைவரைப் போற்றினார் தொழுதார்
சுற்றிய பரிவாரங்கள் சூழ செல்லும் ஆளுடைநம்பி கண்டார் பரவையாரை
நகை பொதிந்த சிவந்த செவ்வாயுடன் வில்நெற்றியுடன் வேல்கண்ணுடன்
ஊழ்வினையின் நற்பெரும்பான்மையால்.

286.
பரவையாரைக் கண்டதும் –
கற்பகமரத்தின் பூங்கொம்போ ! காமன் தன்பெருவாழ்வோ !
அழகு என்ற புண்ணியத்தின் புண்ணியமோ!
மேகத்தை மேலே சுமந்து
வில், நீலோற்பல மலர், பவளம், தாமரை, நிலவு யாவும் பூத்த கொடியோ !
அற்புதமோ ! சிவனருளோ ! அறியேன் என அதிசயித்தார்.
287.
நான்முகனால் இத்தகைய ஓவியம் எழுத ஒண்ணாக் காரணத்தால்
தன் உள்ளவருத்தம் தீர படைத்த விளக்கமோ
தன்முன்தான் நின்றதோ என நின்றார்
மூவுலகின் பயந்தான் தன்முன் நின்றதோ என நினைத்தார்
அவருக்கும் அவரால் காணப்பெற்ற பரவையாருக்கும்
நடுவே காமன் நின்றார்!
288.
குளிர்முத்தும் மணிகளும் பதித்த தோடுகளையும்
தாண்டி ஓடும் இயல்புடைய கெண்டைமீன் வியப்படையும்படி
ஒளி அணிகள் தரித்த நாவலூர் நாயகரை
சிவனருள் அன்றி ஏதும் அறியாதவரை
கயிலாய இறைவர் முன் விதித்த கட்டளையால்
பரவையாரும் அவரைக் கண்டார்.
289.
கண்கொள்ளா கவின் பொழியும் அழகுமேனி அவர் மேனி
அக்கதிர்களின் விரிவால் வானிலும் அடங்காமல் பெருகும்
பேரொளி கொண்ட நாவலூரரை
அவர் கண்ட அதே மெல்லியல் நோக்குடன் பரவையாரும் காண
இதற்குமுன் இவ்வுலகில் எவரும் காணா புதிய விருப்பம்
மண் கொண்டது! நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு வலிந்து எழுந்து –
290.
முன்னே வந்து எதிர் தோன்றும் பேரொளிப் பிழம்பால் இவன் முருகனோ!
தனக்கு ஒப்பிலா மன்மதனோ!
வாடா மாலை சூடிய விஞ்ஞையனோ!
மின்னலென சிவந்த சடை கொண்ட சிவனின் மெய்யருள் பெற்றவனோ
என் மனம் திரிந்ததே! இவன் யாரோ என நினைந்தார்.
( திருவருளால் தொடரும் )

—-
cdl_lavi@sancharnet.in

Series Navigation

author

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்

Similar Posts