பெரியபுராணம்-51 – திருநாவுக்கரசர் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 25 in the series 20050812_Issue

பா. சத்தியமோகன்


1359.

ஆளுடைய அரசு உரைத்ததைச் செய்வதற்கு வந்த அமைச்சர்கள்

கொண்டு செல்ல அவரது அடி வணங்கி வேண்டினர்

காளைக்கொடி உயர்த்திய சிவனாரின் திருத்தொண்டரோ

“இங்கு வரும் வினைகளுக்கு எம்பிரான் துணையாக உள்ளான்”

என இசைவுடன் இருந்தார்.

சினம் மூண்ட போர் வல்ல மன்னன்

முன் இதனைச் சென்று அறிவித்தனர்.

1360.

அது கேட்ட பல்லவ மன்னன்

அருகில் அங்கு பாய் உடுக்கையுடைய

வலிய சமண அடிகளாரை நோக்கி

“இனி அவனை என்ன செய்வது! சொல் என்றதும்

அறம் துறந்து

தமக்கு உறுதி அறியாத

புன்மை அறிவுடைய அந்தச் சமணர்கள்

அஞ்சாமல் கூறினர்:

“ நீற்றறையில் அவனை இடுக “ என்று.

1361.

அருகிலிருந்தவரை நோக்கி அப்படியே செய்க என

பெருகும் சினமுடைய மன்னன் மொழிந்ததும்

உருகச் செய்யும் பெருவெப்பமும் வெம்மையும்

நதியெனப் பாயும் நீற்றறையுள்

இருக்கச் செய்தனர் பெரும்தகையாரை

கதவைத் தாளிட்டுக் காவலும் அமைத்தனர்.

1362.

ஆட்சி செய்யும் அரசு நீற்றறையுள் தள்ளிய போதும்

அம்பலத்தில் தாண்டவம் புரிந்து அருளும் தாள் நிழலையே

தம் தலை மேற்கொண்டார்

இங்கு வரும் துயரமும் உளவோ ஈசன் அடியார்க்கு என்று

திருப்பதிகம் பாடி மூண்ட மனதால் நேர் நோக்கி

முதல்வனையே தொழுதிருந்தார்.

1363.

உருக்குமளவு வெப்பமுடைய அந்த நீற்றறை

மிக்க இளவேனில் பருவத்தின் குளிர் தென்றல்தழுவும்

குளிர் கழுநீர் தடம் போல இருந்தது

வெண்ணிலாவின் மெய்யொளி வளர்ந்து விரிந்து ஒலிக்கின்ற

யாழின் ஒலியுடன் கூடியாத இருந்தது

இறைவர் திருவடி நிழலின் அருள்மயமாகிக் குளிர்ந்தது.

(நாவுக்கரசர் இங்கு பாடியது “மாசில் வீணையும்”என்ற
பதிகம்)

1364.

மாசில்லாத நிலவும் நீண்ட கங்கையும்

பொருந்தி வளரும் சென்னி உடையவனை

பேசுவதற்கு இனியானை உலகங்களெல்லாம் ஆளுகின்ற பிஞ்ஞகனை

ஈசனை பெருமானை எவ்வுயிர்க்கும் உயிர் தருவானை

ஆசையில் விளையும் ஆராவமுதை

அடி வணங்கி இனிதே இருந்தார் திருநாவுக்கர்.

1365.

ஓர் ஏழு நாட்கள் கழிந்தபின் நல் உணர்விலாத சமணரை அழைத்து

பாருங்கள் இனி நீற்றறையை என பல்லவன் உரைத்தான்

கடுமையான செறிந்த இருண்ட குழாம் போன்ற வடிவுடைய சமணர்

அறிவு நிலை இல்லாதவராய் நீற்றறையைத் திறந்தார்.

1366.

சிவனாந்த வெள்ளத்தில் மூழ்கி

அம்பலவாணரது தேன் மலர்ப் பாதத்து

அமுதம் உண்டு தெளிவடைந்து

ஊனம் இல்லாதவராகி

மகிழ்வுடன் இருந்தவர் தமைக் கண்டே

கெடுதி சிறிதும் அடையவில்லையே

என்ன அதிசயம் என்றார் சமணர்.

1367.

இஃது அதிசயமல்ல!

முன்பு சமணச் சமயம் சார்ந்திருந்த சாதகத்தால்

இதை செய்து பிழைத்திருந்தான் என மன்னனிடம் உரை செய்தனர்.

மதியால் இனி நாம் செய்யகடவது வலிய விஷமூட்டுவதே ஆகும்

என்று நாற்றமெடுத்த வாயால் உரைத்தார்கள்

பாதகத்தால் முதிர்வடைந்தவர்கள்.

1368.

அங்கு அதனைக் கேட்ட மன்னன்

கொடிய சமணர்களின் சார்பினாலும்

ஓங்கு பெரும் மையலினாலும்

நஞ்சை ஊட்டுங்கள் என உரைத்தான்

பகை பூண்ட சமணர்கள் தீய விஷம் கலந்த பால்சோற்றை

உண்ணுமாறு செய்தனர் திருநாவுக்கரசரை.

1369.

சிவந்த சடையுடைய சிவனாரின் சீர் விளக்கும்

திறல் உடைய நாயனார்

வஞ்சனை மிகு நெஞ்சு கொண்ட வஞ்சனைச் செயலை அறிந்தே

எம் இறைவரின் அடியார்க்கு நஞ்சும் அமுதாம் என்ற உறுதியுடன்

கொடிய சமணர் இட்டுச் செய்த பால்சோறு உண்டு ஊனமிலாதிருந்தார்.

1370.

திருநீற்றுப் பொடி விளங்கும் திருமேனி புனிதரான இறைவருக்கு

புவனங்கள் யாவும் அழிக்கவல்ல துயர் நீங்குவதற்காக

முன்பு நஞ்சானாது அமுதாகியது என்றால்

யாவர்க்கும் அறிவரிய பசுபதியார் தமது அடியார்க்கு

நஞ்சு அமுதம் ஆவது என்பது அற்புதமோ.

1371.

அந்த விஷத்தை உண்டும் அவர் முன்போலவே

துன்பமற்று முன்னிருக்கக் கண்டு

கொடிய விஷமும் அமுதாயிற்றே என சமணர் அச்சம் கொண்டே

இவ்விடத்தில் இவன் பிழைத்தால்

எமக்கெல்லாம் இறுதி நேரும் என

எவ்விடத்தும் செயல்புரியும் மன்னர்க்கு செப்பியதாவது:-

1372.

நஞ்சு கலந்து ஊட்டியும்

நம் சமயத்தின் விஷம் தீர்க்கும் மந்திரத்தால்

பயன் விளையாத வகையில் தடுத்தான்

அவனைத் தொலைக்கும் வகை இல்லையேல்

எங்கள் உயிரும் உன் ஆட்சியும் நிச்சயம் அழியும்

என்றனர் வஞ்சத் தொழிலின் வழியில் நின்றவர்கள்.

1373.

அவர்களின் மொழிகேட்டு மதி கெட்ட மன்னவன்

செற்றவனாகிய இவனை இனித் தண்டிப்பது எவ்வாறு ? எனச் செப்ப

அச்சமணர்கள்-

மந்திர சாதகங்களை நாங்கள் ஒழித்திட

உன் வெற்றியுடைய யானையை விட்டு

இடறச் செய்வதே வழி என்றார்கள்.

1374.

மகா பாவிகளுக்குள்ளும் கீழான சமணர்

வாகீசத் திருவடியாகிய காபாலி அடியவர் மீது

மதயானையை ஏவிவிடு என்றதும்

உலகைக் காக்க வேண்டிய செயல் மேற்கொண்டும்

புலைத் தொழில் புரிவோனான மன்னன்

அவர் தம் மேல் சினம் மிக்க கொலை யானை விடச் சொன்னான்.

1375.

வன்மையுடைய அந்த யானை மலை போலப் புறப்பட்டு

மாடங்களை இடித்திட்டு மண்டபங்களை அழித்தபடி

குத்துகோல்காரரின் தலைகளை இடறியபடி வருகின்ற

மதயானையின் வடிவம்

விதியை விட வலிதாயிருந்தது.

1376.

கயிற்றுப்புரியும் சங்கிலித் தொடரும் முறியும்படி

மேலே வட்டமிடும் பறவைக்குலமும் அஞ்ச

தடைக்கு சற்றும் விலகாத

துதிக்கை ஊசலாடும் கரமாக சுற்றிட

கர்ச்சனை செய்து ஓடிக்கலக்கி

மணம் கமழும் மதநீரான மழைபட மதயானை எதிர் வந்தது.

1377.

இடிபோல எழும் ஓசையால் திக்கு யானைகள் அஞ்ச

காலில் மிதித்த சுவடால் பூமி நெளிய

ஓடும் காற்றின் விசையோடு விரைந்து

அழிப்பதற்காக பொங்கும் கடலுள்

யுக முடிவில் தோன்றும் வடவைத் தீயைப் போல

சினம் கொண்டு வேகத்துடன் அந்த யானை வந்தது.

1378.

கொலை செய்யும் கையுடைய மலை போன்ற யானை

அருகில் வருகின்ற குதிரை கூட்டங்கள் அழியும்படி

திணிந்த வயிரம் வாய்ந்த கொம்புகளால் இருபிளவாக்கிச் சரித்து

மதிலும் திண்ணையும் அழித்து

அழகுடைய அங்கங்கள் முறித்து

வெளியிடத்திற்கு வந்து சேர்ந்தது.

1379.

பாவக் கொடுவினை முதிரும்படி

வஞ்சனை கொண்ட கொடியோர்

நாவுக்கரசருக்கு எதிராக அணுகி வந்து

பகைவரைப் போரிட்டுக் கொல்லும் துதிக்கையுடைய யானையை

கரிய மலைபோல ஏவிடச்சற்றும்

அஞ்சாமல் சேவித்தார் தெளிவாக

காளை ஊர்தியின்மேல் விளங்கும் சிவபெருமான்

பொன் போன்ற திருவடிகளையே.

1380.

அண்ணல் அருந்தவ வேந்தர் நாவுக்கரசர்

அந்த யானை தம்மீது வருவதைப் பார்த்து

விண்ணவர்களின் பெருமானை

விடை உகந்தோறும் பிரானைத் துதித்து

சுண்ண வெண் சந்தனச் சாந்து எனும்

திருப்பதிகம் எடுத்துப் பாடுகின்றார்

மண்ணுலகு உய்வதற்காக மகிழ்வுடனே.

( விடை – காளை)

1381.

வஞ்சகர் ஏவிவிட்ட மதமும் சினமும் உடைய மதவெங்களிறு நோக்கி

செஞ்சடை நீள் முடிக்கூத்தர் தேவர்க்கும் தேவர்பிரானார்

வெஞ்சுடரும் மூவிலையும் உடைய

சூலம் கொண்ட வீரட்டனாரின் அடியோம் நாம்

அஞ்சுவதில்லை என்றென்றே அருந்தமிழ்பாடி உறைந்தார்.

(இங்கு பாடியது “சுண்ண வெண்” எனத் தொடங்கும் பதிகம்)

1382.

குளிர்ந்த தமிழ்மாலைகள் பாடி

தம் பெருமானையே சரணாகக் கொண்ட

கருத்தில் இருந்து குலாவி அன்புறும்

கொள்கைத் தொண்டர் முன் வலமாகச் சூழ்ந்தது யானை

அவர் எதிரே தாழ்ந்து நிலத்தில்

எண்திசையோர்களும் காண விழுந்து வணங்கி எழுந்தது வேழம்.

1383.

ஆண்ட அரசை வணக்கி அஞ்சி

அவ்வேழம் அங்கேயே நின்று பெயர்ந்ததும்

தூண்டிக் கொண்டிருந்த பாகர்கள் தொடங்கியும் அடர்ந்தும் திரித்தும்

மீண்டும் அதனை அவர் மேல் ஏவமுயல

நெருங்கிய சமணர்களையே கொன்றது ஓடி எதிர்த்தது.

1384.

ஓடி சமணர்கள் தம்மை உழறி மிதித்தும் பிளந்தது

நாடிப் பலரையும் கொன்றது

அந்நகரமே கலங்கி வருந்துமாறு

அழிக்கும் தன்மை பூண்ட அந்த அரசனுக்கு

துன்பத்தை அப்போதே உண்டாக்கி விட்டது யானை.

1385.

யானையின் கையிலிருந்து தப்பிய தீவினை அமணர்கள் எல்லாம்

மானம் அழிந்து மயங்கி வருந்திய சிந்தையராயினர்

படை கொண்டு உலகம் காக்கும் மன்னவன் காலில்

தனித்தனியாக விழுந்து புலம்பினர்

மேலான நெறி விட்ட வேந்தன் சினந்து

இனி என்ன செய்வது ? என்றான்.

1386.

நம் சமயத்திலிருந்து அறிந்து கொண்ட மந்திரப் பயிற்சியால்

ஏவுதல் கெடுமாறு செய்தான்

இவ்வண்ணம் நின்புகழை அழித்தவன் இறந்தால்தான்

பொங்கும் தீ போனதும் அதன்பின் புகை நீங்குவதுபோல

அவமானம் நீங்கும் என்றனர்.

1387.

இரவின் இருள் போன்றவர்கள் இவ்வாறு கூறியதும்

அரும் பெரும் பாவச் செயலுடைய மன்னன்

தொன்மையான நம் சமயம் அழித்து துயரம் விளைவித்தவனை

இனி என்ன செய்வது ? எனச் சொல்வீர் என்றதும்

வஞ்சனையை முடிப்பதையே தொழிலாகக் கொண்டவர் சொன்னார்

“கல்லுடன் பிணைத்துக்கட்டி கடலிடை வீசலாம் இவனை”

1388.

அவர்கள் சொன்னது கேட்ட அரசன்

அத்தகு தொழில் செய்யும் மாக்களைப் பார்த்து:-

தீமை செய்த தருமசேனனை தப்பவிடாமல் கொண்டு சென்று

பக்கத்தில் ஒரு கல்லுடன் சேர்த்துக் கயிற்றால் கட்டுக

படகில் ஏற்றிக் கொண்டு சென்று

ஒலிக்கின்ற கடலில் வீசி வீழ்த்துக என அனுப்பினான்.

1389.

அச்செயல் செய்திடப் போகும் அவர்களுடன்

சமணர்களான கொடுவினையாளரும் சென்றுசேர

நாவுக்கரசர் செம்மையான தம் திருவுள்ளம் சிறப்படைய அவருடன் சென்றார்

மன்னவன் சொன்னபடி அச்செயல் செய்து முடித்தனர் கடலில்.

( இறையருளால் தொடரும் )

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation