பெண்ணலம் பேசுதல் காண்மின்

This entry is part [part not set] of 30 in the series 20090423_Issue

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, கல்கியின் சிவகாமியின் சபதம், காலம் வரை தமிழுக்கு அருந்தொண்டாற்றி, 115 நாவல்களை எழுதி,னாவல் இலக்கியத்துக்கு உரம்கூட்டி, மர்மனாவல் துறையிலும், புதிய ஒளியை அறிமுகப்படுத்திய ஒரே பெண்
எழுத்தாளர், வை.மு. கோதைனாயகி அம்மாள் மட்டுமே. பெண்கல்வி கடும் எதிர்ப்பிலிருந்த காலத்
திலேயே,26 ஆண்டுகட்கும் மேலாக எழுத்துப்பணி, 10,000பிரதிகட்குமேல் விற்ற ஜெகன்மோகினி பத்திரிகையை 34 ஆண்டுகளாக, நடத்திவந்தவர், 1937லிருந்து சொந்த அச்சகமும் வைத்திருந்த பெருமையாளர், சுதந்திரப்போராட்டத்தில் 1932ல்
சிறைசென்றவர், சங்கீத அகடெமியில் இசைக்கச்சேரி நடத்தியவர்,என இவ்வளவு சிறப்பும் பெற்ற, ஏன்,
பெண்கள் மறுமலர்ச்சிக்கே முன்னோடியாகத் திகழ்ந்த இப்பெண்மணியை, இலக்கிய உலகம் இருட்டடிப்பு செய்தே இவ்வளவுகாலமும் இருந்திருக்கிறது.

அண்மையில்தான் இவருக்கு ஏதோ விருதுகொடுக்க அரசு மனம் கனிந்ததாம். பல ஆய்வாளர்களின் கட்டுரையில் கோதை நாயகி அம்மாவின் பெயரைக்காணவே முடியவில்லை. எந்த அரசியல்வாதியும் பெண்விடுதலைக்காகப் போராடிய,இந்த அம்மையாரின் பெயரை நினைவுகூர்ந்ததுகூட இல்லை. இலக்கியவாதிகளிடையே உள்ள காழ்ப்புணர்ச்சியும், அரசியல்வாதிகளுக்கே இயல்பான, சுயனலத்தாலேயே இவரது தியாகம் கூடப் பேசப்படாமல் போய்விட்டது தான் நெஞ்சில் உறையும் சோகம்.

டாக்டர் ல்க்‌ஷ்மி– இந்தப்பெயர் கூட தமிழிலக்கியத்தில் தவிர்க்க இயலாத பெயரே.சுயசரிதம் எழுதிய எழுத்தாளர்களில்,
கமலாதாஸ்,அம்ருதாப்ரீதம்,போன்று,லக்‌ஷ்மியின் சத்தியசோதனை கவனிக்கப்படவேண்டிய நூல்.இன்றைய அம்பை, காவேரி, சிவகாமி, பாமாவின் வீச்சுபோல அன்றைய லக்‌ஷ்மியின் எழுத்தின் வீர்யம் ,ஆண், பெண், என்றபாகுபாடே இன்றி,வாசகர்களை ஈர்த்துள்ளது. 100க்கும் மேற்பட்ட நாவல்கள்,ஆயிரத்துக்கும் மேற்பாட்ட சிறுகதைகள், , சில மருத்துவ நூல்களும் கூட எழுதியுள்ள,லக்‌ஷ்மியின் ஒரு காவிரியைப்போல், நாவலுக்கு,சாகித்ய அக்டெமி பரிசு கிடைத்துள்ளது.

இன்றைய அசுர இலக்கிய வளர்ச்சிக்கு முன்னேயும், அப்படியொன்றும் இவரது எழுத்துக்கள் மங்கிவிடவில்லை.இன்றும் சிங்கை நூலகங்களில் பல இல்லத்தரசிப்பெண்களால்,இவரது நூல்கள், விரும்பிப்படிக்கப்படுவதே கூட இவரது எழுத்தின் ஈர்ப்புக்கு, ஒரு சான்று.

கடந்த நூற்றாண்டில், 1960களில் பெண்ணின் பால்விழைவு குறித்து, அன்றைய வாழ்வியலின் கண்ணோட்டத்தில், தேர்ந்த புனைவோடு கதை சொல்பவர் அண்மையில் மறைந்த கிருத்திகா அம்மா. இவரது மற்ற நூல்களை விட,வாசவேஸ்வரம் அன்று பேசப்பட்ட நாவல் என்பதில் ஐயமேயில்லை. பின் நவீனத்துவம் அன்று அதிகம் அறிமுகமாகாத காலகட்டத்தில், பழுக்கக் காய்ச்சிய உரைவடிவமாக கருவூலத்தை எதிர் பார்க்கமுடியவில்லை., எனினும் மணமான பெண்ணின், உணர்வுகளுக்குக் கொஞ்சமும் மதிப்பு கொடுக்காத கணவன்மார்களாக வரும் சந்திரசேகர அய்யர் ஒருபுறம், காலையிலிருந்து மாலைவரை தூங்கி , இரவில் படு சுறுசுறுப்பாய், சீட்டாடவும் ,ஊர்சுற்றவும், கிளம்பும் சுப்பையா மறுபுறம், என ஊரே ரத்தம் உறிஞ்சப்பட்ட ஆண்களாய், மந்தபுத்தி மக்காளர்களாய், ரோகிணிக்கு தோன்றுகிறது . பிச்சாண்டி மட்டும் வாட்டசாட்டமாய், கரணை, கரணையாய் காலும் கையுமாய் ,னடமாடும் போக்கிரி. ஆனாலும் இவன்தான், ரோகிணியின் உள்ளம் கவர் கள்வன் .கற்புனெறிக்கு மட்டுமே
பாஸ்மார்க் போடும் கதைசொல்லிகள் வாழ்ந்த காலகட்டத்தில், கிருத்திகா அம்மா துணிகரமாக எடுத்தாண்ட உத்தி அசர வைக்கிறது.

கதைபேசவில்லை.தொட்டுத்தழுவவில்லை. மனதால், கண்களால் , மட்டுமே இருவரும் உருகி வழிகிறார்கள். சந்திர சேகர அய்யரை, சுப்பையாவே கொலை செய்தாலும் ,பழி பிச்சாண்டிபேரில் விழ, கொலையுண்டுகிடக்கும் கணவனையும் மறந்து, பாட்டாவிடம் பிச்சாண்டிக்காகப் பேசவரும் ரோகிணியின் பரிதவிப்பில், அலக்க,
மலக்க, கதை சுவாரஸ்யமாகவே போகிறது. இன்னாவலில் கதாகாலக்‌ஷேப தாத்தா சுப்புக்குட்டியும், நள்ளிரவில் சுண்டலோடு சின்னப்பெண் ஆனந்தாவைத் தேடிப்போவதும் அதுக்குக்கூட, மனைவியை தைரியமாக ஆளத்தெரியாமல், பயந்து, பயந்து , தொட்டு, சட்டென்று திரும்பிக் கொள்ளும் சுப்பையாவை,சீ, தூ, என வெறுப்பை உமிழும் விச்சு,என, ——-இப்படி, இப்படியாய், கதை ——–ம் ம் ம் ம், ஆச்சர்யம் தரும் ஒரே விஷயம், இன்னாவல் கடந்த நூற்றாண்டில் எழுதப்பட்டாலும், இன்றும் வாசிக்க முடிகிறது என்பதே, நாவலின் இருத்தல்தானே?

காவேரியின் “ இந்தியாகேட், ”பிராமண சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கத்தை அப்பட்டமாய் தோலுரித்துக்காட்டும் , புனைவு. பெண்ணடிமைத்தனத்தை மெளனமாக வாள் கொண்டு வெட்டும் இக்கதையை பெண்கள் மிகவும் நேசிப்பர். படித்து, கணவனைப்போலவே
பாங்கில் உத்தியோகம் பார்க்கும் பெண்ணை , புகுந்த வீட்டினர் செய்யும் அதிகாரமும், படிப்பறிவில்லா, மற்ற மருமகள்களைப்போலவே, ஆண்கள் சாப்பிட்ட மிச்ச எச்சிலும்,பானையின் அடி வண்டலையும், வழித்துப்போட்டு சாப்பிட வேண்டிய
கண்றாவியில், வாயிலெடுக்கவருகிறது, என்ற கதாசிரியரின் வரிகளில், நமக்கும் குமட்டிக்கொண்டு வருகிறது. இருண்ட குக்கிராமத்தில் புக்கக வீட்டின் , ஆணாதிக்கம் இப்படியென்றால், வாழ்க்கைத்துணைவனாக வந்தவனோ, டில்லியில் அவளுடன்
வீட்டுவேலையிலோ,மன ஆறுதலிலோகூட, எதிலுமே பட்டுக்கொள்ளாமல்,அவள் வாங்கும் சம்பளத்துக்கும், அவள் உடலுக்கும் மட்டுமே, உரிமை கொண்டாடும் ,வெட்கம் கெட்ட ஒரு பேடியிடமிருந்து, துணிகரமாக பிரிந்து போக முடிவெடுக்கிறாள். தனிவீடு வாங்கி
சுதந்திரமாய் வாழும் முடிவை, அவள் தீர்மானிப்பதிலிருந்து,இன்றைய பெண்களை, கல்வியும் உத்தியோகமும், மரபு பேசும் மெளடீகத்திலிருந்து, எப்படிக் காப்பாற்றுகிறது,என்பதை விளக்கும் அருமையான கதை இது. விறு விறுப்பும்,
சுவாரஸ்யமும் , பக்கத்துவீட்டு சம்பாஷணையை, சர்வ சாதரணமாய் சுவைப்பதுபோல்,கதையை கொண்டுபோகும் இயல்பு இக்கதையின் சிறப்பு.

இதுவே கதாசிரியையின் வெற்றியும் கூட.

கன்னடத்தில் வெளிவந்த ’செளகந்தியின் சுவகதங்கள்” எனும் சிறுகதை , அண்மையில் படித்ததில் என்னை மிகவும் கவர்ந்த கதை. சுவகதம் என்றால் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பேச்சு, என்று கன்னடத்தில் விளக்கம் தருகிறார் ஆசிரியை வைதேகி.
தங்கைகளுக்குத் திருமணமாகியும், செளகந்திக்கு மட்டும் திருமணமாகாமல் நின்றுபோக, யாரையும் காதலிக்கவும் தெரியாமல், வாழ்ந்து தொலைக்கும் அவள், உணர்வுகளைக் கொஞ்சம் கூடப் புரிந்து கொள்ளாமல்,வியூகம் அமைத்து தாக்கும்
சமுதாயக்கூட்டிலிருந்து, மூச்சுமுட்டிவெளியேறி, தனித்து வாழப்போகுமிடத்தும், கொண்டுவிடவரும் தந்தை,செளகந்தியை வாயில் விரலை வைத்தால்கூட கடிக்கத்தெரியாது, எனும் பாணியில் வீட்டுக்காரியிடம் அறிமுகப்படுத்திவிட்டுப்போக,தனித்துக்கிடக்கும் இரவுகளில் எல்லாம்
காத்திருக்கிறாள் செளகந்தி உறங்காது., —
இன்றாவது ஏதாவது நடக்குமா? வீட்டுக்காரியும் ஒருனாள் மகள் வீட்டுக்குப்
போய்விட,படப்டப்போடு காத்திருக்கிறாள். நள்ளிரவு, பின்னிரவும் கழிந்து, விடியல் ஜாமம் 5 மணிக்குக் கதவு தட்டும் சத்தம் கேட்டு, போதையோடு கதவைத் திறக்கிறாள் செளகந்தி. வாசலில் நிற்பது அப்பா. பின்னால் அம்மா.எதிரில் சாலை
கறுப்பாக நஞ்சேறிக்கிடப்பதாய் கதை முடிகிறது. மரபு ரீதியிலான வாழ்க்கையில் அமிழ்ந்து, சுய தாபத்தையும் இச்சையையும் கூட அடக்கி,அந்த சிக்கலிலிருந்து விடுபட முயலும், யதார்த்தத்தை, துளிகூடப் பிசிறாமல், வெகு நுட்பமாய் சித்தரிக்கும் இச்சிறுகதையை எழுதியவர், வைதேகி எனும் பெயரில் எழுதும் ஜானகி ஸ்ரீனிவாசமூர்த்தி. குடும்பத்தின் ஆணாதிக்க சூழலில் சிக்கி, வெளியேற முடியாமல் தவிக்கும் பெண்களின் மன உளைச்சலை, சின்ன சிடுக்கும் இன்றி , மிக அழகாய் எழுதியுள்ளார் வைதேகி , கன்னடத்தில் , மலயாளத்தில், என எந்த மொழியில் எழுதினாலும் தரமான எழுத்தை வெண்சாமரம் வீசி வரவேற்கவேண்டாமா? ஒவ்வொரு எழுத்தாளரும் தடவிப்பெண்
நலம் பேசுதல் காண்மின்!!!

By Kamaladevi Aravindan

Series Navigation

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்