புளிய மரமும் குரல் சுமந்த பள்ளமும்

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

கே.பாலமுருகன்


1989-ன் தொடக்கத்தில் பள்ளியின் முதல்நாளன்று எல்லாம் முதலாம் ஆண்டு மாணவர்களைப் போலவும் என்னையும் அப்பா அவருடைய சிவப்பு ஆமை காரில் கொண்டு வந்து வகுப்பின் முன் நிற்க வைத்தார். பள்ளியின் முதல்நாளில் அழுது முரடு பிடிப்பது என்பது ஒரு சடங்கு போல வழக்கம் தவறாமல் நிகழும். காரிலிருந்து இறங்கும்வரை உள்ளுக்குள் சேமிக்கப்பட்டிருந்த அலறல், பள்ளியில் நுழைந்தவுடன் பிசிறு தட்டிய சங்கீதம் போல பாதை நெடுக ஒலித்துக் கொண்டே இருந்தது.
“டே! அழுவாதெ. . அங்க பாரு உன்னைப் போல பையனுங்கதானே? எவ்ள அமைதியா உக்காந்துருக்கானுங்க பாரு”
அப்பா விரல் காட்டிய திசையில் பார்த்தபோது சரஸ்வதி தெய்வத்தின் படத்திற்குக் கீழ் மூன்று மாணவர்கள் மட்டும் சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் பள்ளியின் சபை கூடியது.
”கல்விக்கரசி கலைமகளே. . கலைகளுக்கதிபதி ஆனவளே”
பெரிய மாணவர்கள் வரிசை பிடித்து நின்றிருந்தார்கள். அந்த நேர்த்தியைப் பார்த்ததும் அழுகை மேலும் முட்டிக் கொண்டு வந்தது. அப்பா அவருடைய பெருத்த வயிற்றுடன் என்னை அணைத்துக் கொண்டதில் சத்தம் மெல்ல தொலைந்து போனது.
“டே! பாலா! அங்க பாரு எவ்ள பெரிய திடல், அழகான மீன் குலம் இருக்கு, நீ எப்பவும் காலைலே இந்த மீன் குளத்தைப் பார்த்துகிட்டு இருக்கலாம். . அதோ அங்க பாரு! புளிய மரம். எவ்ள பெருசா இருக்கு பாரு. . இந்த மாதிரி வெளையாட இடம் வேறெங்காவது கிடைக்குமாடா? பயப்படாத”
அப்பா ஏற்படுத்திய முதல் தைரியத்தைவிட, பள்ளியின் திடலையொட்டிய தூரத்தில் நின்றிருந்த புளியமரம்தான் சிறு மகிழ்வைக் கிளறிவிட்டது. 20 சொற்க்கூட்டங்களை ஒன்று திரட்டி யாரோ பலர் கொடுத்த நம்பிக்கையைவிட பள்ளத்திலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் புளிய மரம் எனக்குள் இனம் காணா ஒரு சுறுசுறுப்பை உருவாக்கியதை தெளிவாக கிரகித்துக் கொள்ள முடியாமல் தவித்தேன். அதன் அடர்ந்த தோற்றமும் பசுமையான கிளைகளும், ரம்மியமான மனநிலையை ஏற்படுத்தியது. அந்தக் கிளைகளைப் பற்றி, மேலே ஏறி யாருக்கும் எட்டாத ஒரு தூரத்திற்குப் போய்விட வேண்டும் என்று தோன்றியது.
அம்மாவிடம் சண்டை போட்டு, சாப்பாட்டுத் தட்டை சமயலறையில் வீசியெறிந்த சமயங்களிலெல்லாம் அம்மாவிற்கு எட்டாமலிருக்க பக்கத்திலிருக்கும் மாங்காய் மரத்தில்தான் ஏறி அமர்ந்து கொள்வேன். அந்தத் தூரம் எனக்குள் சௌகரிகத்தை உண்டாக்கியது. பயம் வரும் போதெல்லாம் மரம் கொடுக்கக்கூடிய தூரம்தான் மிக ஆறுதல். அதனாலேயே தூரத்தை வெகு இயல்பாகப் பழகியிருந்தேன்.
“அப்பா! அந்த மரத்துக்கிட்டே போலாமா?”
“ஆரம்பிச்சிறாதடா. இங்கயும் மரத்துலே ஏறிகிட்டு. இங்கலாம் கீழ நின்டுதான் பாக்கனும்”
சரஸ்வதி பள்ளியில் பயிலத் தொடங்கிய காலத்தில் வகுப்பின் சன்னலிலிருந்து பார்த்து மகிழக்கூடிய நெருக்கத்தில் புளிய மரம் இருந்ததில் மூன்றாம் ஆண்டுவரை சமாளித்துவிட்டேன். முதல் ஓராண்டு பள்ளியின் புளிய மரத்தைத் தூரத்திலிருந்து பார்த்து இரசிக்க மட்டுமே முடிந்தது. பிறகு எப்பொழுதாவது ஆசிரியையின் கண்கானிப்பையும் மீறி புளிய மரத்தை நோக்கி ஓடுவேன். மேலும் 20 அடியில் புளிய மரம். இராமசந்திரன் ஆசிரியர் முறுக்கு மீசையுடன் புளிய மரத்தையும் மறைத்துக் கொண்டு வந்து நிற்பார். அலறிவிடுவேன்.
“மதிய நேரத்துலெ புளிய மரத்துக்கிட்ட பூச்சாண்டி தொங்கும்டா. போகக்கூடாது” யாரோ யாரையோ பயமுறுத்த படைத்திருந்த பூச்சாண்டி என்கிற கதாபாத்திரம் என் பள்ளியின் புளிய மரத்தையும் விட்டு வைக்கவில்லை. கொஞ்ச காலத்திற்கு புளிய மரத்தைப் பார்த்தாலே பூச்சாண்டி அந்த மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டு சிரிப்பது போலவே தெரியும். பிறகுதான் கோபு வாத்தியார் சொல்லி சமாதனப்படுத்தினார். புளிய மரம் மீண்டும் முளைத்து எனக்குள் அடர்ந்தது.
மூன்றாம் ஆண்டு பயின்று கொண்டிருந்தபோது, பாதி தவணையில் எங்களை வேறு வகுப்பிற்கு மாற்றினார்கள். புளிய மரத்தின் பார்வையிலிருந்து அகன்று ஆசிரியர் அறைக்கு அப்பால் வெறும் வீட்டுப் பகுதியில் தெரியும் கட்டடத்திற்குச் சென்றுவிட்டோம். அந்தச் சூழல் மிகவும் வெறுமையாக இருந்தது. என்னிடமிருந்து இவ்வளவு காலம் என்னைக் கட்டமைத்திருந்த பிடிமானத்தை அபக்கறித்ததைப் போல தோன்றியது. ஓய்வு நேரம் மீண்டும் பழைய வகுப்புப் பக்கமாகச் சென்று புளிய மரத்தைப் பார்ப்பேன். நாளுக்கு நாள் அதன் கிளை விரிப்பு சுற்றியிருக்கும் காட்டை ஊடுருவி விரிவதைப் போல இருக்கும்.
ஒரு புளிய மரம் அப்படி என்ன செய்ய முடியும்? யாரோ முனகுவது கேட்கிறது. பதற்றம் வேண்டாம். என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய பள்ளிப் பருவத்தில் என் பள்ளியிலிருந்த அந்தப் புளிய மரம் கையசைக்கும், தலையை ஆட்டும், காலை மேலே தூக்கி உயர்த்திக் காட்டும், தலையைச் சொரிந்து கொள்ளும், எப்பொழுதாவது இடம் பெயர்ந்து வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போகும்.
நான்காம் ஆண்டிற்குச் சென்ற முதல் நாள். காலையில் பயிலும் மாணவர்கள் ஓய்வு நேரத்தில் புளிய மரத்தினோரமாகப் போய் அமர்ந்து கொண்டு கதையடிப்பார்கள், புளிய மரத்தின் பள்ளத்தில் ஓயாமல் சறுக்கி விளையாடுவர்கள் என்று அன்றுதான் தெரிந்து கொண்டேன். ஓய்வு மணியடித்ததும் எனக்கு சிறகுகள் முளைத்ததைப் பற்றி நான் யாரிடமும் சொல்லவில்லை. புளிய மரத்தை நோக்கிப் பறந்தேன். மூன்று ஆண்டுகள் மனதில் இறுகியிருந்த கட்டளைகள், பயமுறுத்தல்கள் எல்லாவற்றையும் என் சிறகுகள் கிளித்தெறிந்தன.
புளிய மரத்தைத் தொட்டுப் பார்த்தேன். அதன் உடலைத் தடவிக் கொண்டேன். தலைக்கு மேல் விரிந்திருந்த அதன் கிளைகளை வெறித்து நின்றேன். என் உடல் பாகங்கள் மொத்தமாகத் துள்ளிக் குதித்தன. யாராலும் கொண்டு வரமுடியாத பரவசத்தை உணர்ந்தேன். அன்று முதல் புளிய மரமே கதி. அதன் அடியிலிருந்தே என் பள்ளி வாழ்க்கை தொடங்கியது. என்னை அடிப்பதற்காக யார் துரட்டினாலும் புளிய மரத்தை நோக்கி வேகமாக ஓடுவேன். பள்ளம்வரை வந்துவிட்டு, திரும்பிப் பார்க்கும்போது, பலமுறை பாதுக்காப்பான ஒரு எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகவே நினைத்துக் கொள்வேன்.
பெரும்பாலான நேரங்களில் புளிய மரத்தடியில் மன்றத்து மாணவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். அவர்கள்தான் உடைந்த பலகையைக் கொண்டு அந்தப் பள்ளத்தின் சறுக்கி விளையாடுவார்கள். மற்ற மாணவர்களைவிட மன்றத்து மாணவர்களுக்குத்தான் புளிய மரத்தின் மீது அவ்வளவு ஆசை இருந்தது. எப்பொழுதும் புளிய மரத்தைச் சுற்றி அவர்களின் குரல்கள்தான் எதிரொலித்துக் கொண்டிருக்கும். அவர்களுடன் சேர்ந்து கொண்டு நானும் எந்நேரமும் அங்கேயே இருந்ததால் மன்றத்து மாணவர்களைத் தவிர்த்து எனக்கு வேறு நண்பர்களே இல்லாமல் போய்விட்டர்கள். இன்றுவரை எனக்கு நண்பர்கள் குறைவுதான் என்பதற்கு, புளிய மரம்தான் காரணம் என்று குற்றம் சுமத்தவும் முடியவில்லை. எங்கோ ஒரு மூலையில் என் பால்யக் காலத்து புளிய மரமும் இன்னமும் பசுமையுடன் அடர்த்தியுடன் தொங்கிக் கொண்டேயிருக்கிறது.
பள்ளியை விட்டு வந்து 10 வருடத்திற்கு மேலாகிவிட்டது. இன்றும் எப்பொழுதாவது சரவஸ்வதி பள்ளிக்குப் போகும்போது புளிய மரம் இருந்த இடத்தைத் தேடுவேன். அந்தப் பள்ளம் அங்கு இல்லை. திடலில் ஒரு பெரிய மண்டபம் புளிய மரத்தை முற்றிலும் மறைத்துக் கொண்டிருந்தது. புளிய மரம் முகம் தளர்ந்து சொகுசான நிழலில் நாள் முழுக்க நின்று பரிதாபமாக எனக்கு மட்டும் கேட்கும்படி ஏதோ சொல்ல முற்படுகிறது.
மன்றத்து மாணவர்களின் குரல்கள், சப்தங்கள் அவர்கள் சறுக்கி விளையாடிய பலகை, காயங்கள், அவர்களுடைய மகிழ்ச்சிகள் என்று எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு புளிய மரம் பல நெடுங்காலமாக பள்ளியின் சாட்சியாக இன்றளவும் நின்று கொண்டிருக்கிறது.

——
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்