புதுக்கவிதைகளில் பெண்ணியம்

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

முனைவர் மு. பழனியப்பன்


புதுக்கவிதைகளில் பெண்ணியம்

முனைவர் மு. பழனியப்பன்

கவிதை என்பது ளசொற்களின் சுருக்கம் என்று கூறுவார் கவிஞர் சுரதா. கவிதை சிறிய வடிவம் உடையது. ஆனால் பொருள் அளவால் விரிந்து பரந்து நிற்கக் கூடியது.

புதுக்கவிதை என்பது நேரடியாக எடுத்துக் கொண்ட பொருள்களை அணுகக் கூடியது. எவ்வித மறைப்பும் இல்லாமல் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் இயல்பான நடையில் இனிமை சேர்ப்பது புதுக்கவிதை. புதுக்கவிதை என்பது சொற்கள் கொண்டாடும் சுதந்திர தின விழா என்து கவிஞர் வைரமுத்துவின் கருத்தாகும். விடுதலையான சிந்தனையும் எளிமையான வடிவமும் புதுக்கவிதையின் தனிச் சிறப்பாகும். இதனாலேயே புதுக்கவிதை பலரால் வாசிக்கப் படுகிறது. பலரால் நேசிக்கப்படுகிறது. இன்னும் பலரால் எழுதப்படுகிறது.

பெண்ணியம் என்பது தற்காலத்தில் வளர்ந்து வரும் ஒரு துறையாகும். பெண்களின் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் துறை பெண்ணியம் ஆகும். பெண்ணியம் பெண்கள் விரும்பும் விடுதலை மிக்க வாழ்வைப் பெற்றுத் தரும் நோக்குடையதாகும். இவ்வகையில் அடங்குதல் அடக்குதல் இன்றி பெண்கள் வாழ்ந்திட இத்துறை பல வழிகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

குறிப்பாக சமு்கவியல் இலக்கியம் கலைத்துறை அரசியல்களம் போன்ற பல துறைகளில் பெண்ணியப் பார்வை வளர்ந்து வருகின்றது.

புதுக்கவிதையும் பெண்ணியமும் விடுதலை நோக்கம் உடையன. சொற்களுக்கான விடுதலை புதுக்கவிதையாகின்றது. பெண்களுக்கான விடுதலை பெண்ணியமாகின்றது. விடுதலை மிக்க புதுக்கவிதைகள் பெண்ணியக் கவிதைகள் ஆகின்றன.

புதுக்கவிதைகள் எழுதும் அனைத்துக் கவிஞர்களும் பெண் விடுதலையை முன்னிறுத்தும் கவிஞர்களாகவே உள்ளனர். பெண்ணின் கண்ணீர் பெருங்கதை என்று பெண்களின் வருத்த அளவை தன் புதுக்கவிதை கொண்டு அளந்து சொல்லுகின்றhர் கவிஞர் மேத்தா. இல்லறக் கிரிக்கெட்டில் கட்டிலறைக்கும் சமையலறைக்கும் ரன்கள் எடுத்தே ரணமாய்ப் போனாள் என்று பெண்களின் ஓயாத உழைப்பு குறித்துக் கவலை கொள்கிறார் கவிஞர் வைரமுத்து. இவ்வாறு ஆண் கவிஞர்கள் பெண்கள் நிலை குறித்து வேதனைப் பட்டுள்ளனர். தற்காலத்தில் அதிக அளவில் பெண்கவிஞர்கள் கவிதை படைக்க முன்வந்துள்ளனர்.

கனிமொழி, தமிழச்சி, சல்மா, சுகிர்தராணி, குட்டிரேவதி, பொன்மணி வைரமுத்து, தாமரை,வெண்ணிலா,செல்வநாயகி, அழகுநிலா, மாலதி மைத்ரி, இளம்பிறை, செல்வகுமாரி, எழிலரசி, வத்சலா, நீலா, பெருந்தேவி எனப் பலப்பல பெண்கவிஞர்கள் தற்போது பெண்ணியம் சார்ந்த புதுக்கவிதைகளைப் படைத்து வருகின்றனர். இவர்களின் அனுபவம் உண்மையோடு உரிமையோடு பெண்ணியமாக கவிதைகளில் வெளிப்பட்டு நிற்கின்றன. இக்கவிதைகளுக்குத் தனி அழுத்தம் கொண்டு கவனிக்க வேண்டி உள்ளது.

பெண்கள் வளர வளர பெண்களுக்கான மரபுகளும் கட்டுப்பாடுகளும் வளர்ந்து கொண்டே வருகின்றன. குழந்தையாய் இருந்தபோது ஒவ்வொரு செயலையும் பாரட்டும் தாய் வளர்ந்த பருவம் வந்ததும் பெண்பிள்ளையை வெளியில் செல்லக் கூட அனுமதிப்பதில்லை.

மழலையாய்த் தவழ்கையில்
நாலெட்டு வைக்கையில்
கைதட்டி ஆர்ப்பரித்தாள் அம்மா.
வளர்ந்த பருவம் தாண்டுகையில்
விளையாடி முடித்து வீடு நுழைந்தவளை
வெளியில் போனால்
காலை உடைப்பேன் என்கிறhள்
மலரத் துடிக்கையில்
வேரில் வெந்நீர்.

என்ற பரமேசுவரியின் கவிதை பெண் பிள்ளை வளர்ந்தபோது ஏற்படும் கட்டுப்பாடுகளைக் காட்டுவதாக உள்ளது. ஆண்பிள்ளைகளுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இடப்படுவதில்லை. இட்டாலும் அவர்கள் அதனைப் பொருட்படுத்தப் போவதும் இல்லை.

ஆண்களும் பெண்களும் அறிவால் மனதால் சமமானவர்கள். இருந்தாலும் பெண்களை ஆண்களுக்கு அடுத்த நிலையில் வைக்கும் முறைமைதான் இன்னும் சமுதாயத்தில் கடைபிடிக்கப் பெற்று வருகிறது. இவ்வாறு பெண்கள் இரண்டாம் தரத்தில் வைக்கப் பெறுவது என்பது பெண்களைப் பின்தள்ளுவதாக உள்ளது.

என்றோ ஒருநாள்
அருகருகே அமர்ந்து
அவசரமில்லாமல் சாப்பிட்டுவர
விருந்துக்கு வந்தால்
ஆண் பந்தி முந்தி என்று
அங்கேயும்
காத்திருக்கச் சொல்கிறீர்கள்.

என்ற வெண்ணிலாவின் கவிதை கவனிக்கத்தக்கது. விழாவிற்கு ஆணும் பெண்ணுமாக ஒருசேரச் செல்கிறhர்கள். என்றாலும் உணவுக் கூடத்தில் ஆண்களுக்கு முதலாவதாக உணவு பரிமாறப்படுகிறது. அதன்பின் பெண்களுக்கு உணவு என்ற நிலையில் எழுதாத சட்டம் இருக்கிறது. மிச்சம் மீதி இருந்தால் பெண்கள் சகிப்புத்தன்மையுடன் இருந்து உணவருந்த வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு சமு்கம் செயல்படுவதை எண்ணி இக்கவிஞர் வருத்தப் படுகிறhர்.

அலுவலகப் பெண்கள் படும் மன உடல் வேதனைகளைப் பல பெண்கவிஞர்கள் எடுத்துரைத்துள்ளனர். ஆண்டாள் பிரியதர்சினியின் கவிதைப் பகுதி ஒன்றைக் கேளுங்கள்.

பசிக்கும் வயிற்றில் தண்ணீர் நிறைத்து
பிதுங்கும் பஸ்ஸில் பாய்ந்து் ஏறி
நசுங்கிக் கசங்கிக் கூழாகிக் கரைந்தால்
ஐந்தரை வரைக்கும் ஆபீஸ் நரகம்

மறுபடி பஸ்ஸில் மாஜிக் பயணம்
மறுபடி வீட்டில் காபி சமையல்
வீடு பெருக்குதல் துணியை மடித்தல்
பசங்களின் வேடம் பலப்பல வேடம்

என்று பெண்களின் இன்னல் பட்டியல் இக்கவிதையில் எடுத்துரைக்கப்படுகிறது. வீட்டிலும் உழைத்து அலுவலகத்திலும் உழைத்து இரட்டைப் பணிப் பளுவைப் பெறும் இப்பெண்களுக்கு விடுமுறைகளே கிடையாது.

இவ்வகையில் பெண்ணியச் சிந்தனைகள் வளர்ந்து இருந்தாலும் இன்றைய பெண்கள் பெண்ணியச் சிந்தனைகளைச் செயல்படுத்தாமல் சொல் அளவிலேயே கைக் கொண்டு வருகிறார்கள். இது குறித்து கனிமொழியின் ஒரு கவிதை விமர்சனம் செய்கின்றது.

புதுயுகப் பெண்கள் நாங்கள்
கேள்விகள் கேட்போம்
கொடி பிடிப்போம்
கோமூம் போடுவோம்
வலித்துக் கதறுவோம்
புன்னகையோடு
கீழ்ப்படிவோம்

என்ற கவிதையில் பெண்களின் கீழ்படியும் தன்மை தெரியவருகின்றது. இச்சார்புத் தன்மை நீங்கி பெண்கள் தங்களின் சுயமான காலில் சுயமான சிந்தனையில் சுயமான வாழ்வில் இயங்கும் காலம் வெகு விரைவில் வரவேண்டும். அதனை எதிர்நோக்கியே பெண்ணியப் புதுக்கவிதைகள் எழுதப்பட்டு வருகின்றன.


M.Palaniappanmuppalam2006@gmail.com
manidal.blogspot.com
puduvayalpalaniappan.blogspot.com ReplyReply All Move…AraichiPublishedRejectedReserveSerialsspamaaTamilInfoThisweekthuka

Series Navigation

author

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts