புகை

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

அபுல் கலாம் ஆசாத்


நேற்று,
தொலைத்துத் தலை முழுகிவிட்டேன்.

நுரையீரலுக்குள்
நெருப்பு வீசிக்கொண்டிருந்த
உலைக்களத்தை உடைத்துவிட்டேன்.

அது என்ன ஆள்காட்டி விரலா
அறுத்து எறியத் தயங்க ?
விரல்களுக்கிடையில் செருகப்பட்ட
வெள்ளை விஷம்தானே,
பிடுங்கி எறிந்துவிட்டேன்.

எப்போது ஆரம்பித்தேன் என்பது
நினைவுகளின் இடுக்குகளில்
சிக்கிச் சிதைந்து போனது.

ஒன்று மட்டும் நினைவிலிருக்கிறது,
இது
விரல்களில் வீற்றிருந்ததில்
ஓட்டுப்போட வயது வந்துவிட்டதாக உணர்ந்தது.

இதழ்களில் இறுக்கி
விடுதியின் வாசலில்
கனவு மெய்ப்படக் கனவு கண்டு
வானில் வட்டங்கள் விட்டது..
‘வேலைப் பளுவில் வியர்க்காதிருக்க
வெண்சாமரம் இது ‘,
எவனோ சொன்னதில் இன்னமும் தொடர்ந்தது..

இப்படியாக இழுத்து இழுத்து
வாழ்வின் முடிவிற்கு
விண்ணப்பம் எழுதியிருந்தது
தொண்டைக்குழியில்
துரட்டி போட்டுச் சுரண்டியபோதுதான்
புரிந்தது.

அலங்காரமாக விரல்களில் சுழன்று
மெள்ள மெள்ள
ஆலகாலமாகும்
அதிசயப் பொருள் இது.

வீரியம் தெரிந்துமா
விரியனைத் தொடுவது ?

தொட்டவரை போதுமென்று
வெடுக்கென்று கை இழுத்து
விரைந்து நடந்துவிட்டேன்.

அடுத்த தலைமுறைக்கும்
சேர்த்துப் புகைத்தவன்,
சாம்பற்கிண்ணத்தின் சமாதியில் நின்று
சத்தியம் செய்கிறேன்,
“இனித் தொடுவதில்லை இதனை”

——-
அபுல் கலாம் ஆசாத்

azad_ak@yahoo.com

Series Navigation

அபுல் கலாம் ஆசாத்

அபுல் கலாம் ஆசாத்