This entry is in the series 20021124_Issue

புகாரி, கனடா


அன்பே…
உன் விழிகளில் விளக்கேற்றி
என் இதய அறைக்குள்
வெளிச்சமிடு…!

சிறு இதழ்களில் பூப்பூத்து
என் எண்ணங்களை
மணக்க விடு…!

தினம்
வெட்கப்பட்டு… வெட்கப்பட்டு…
என் விழிகளுக்குள்
கனவுகளைத் தூவிவிடு…!

உன்
மருதாணி விரல்களை
என் மேனியில் படரவிட்டு
என் உணர்வுகளைச்
சிவக்க விடு….

உன்
கருங்கூந்தல் மேகங்களை
என் மார்பினில் அலைய விட்டு
மழை பொழியச் செய்…!

உன்
சந்தனப் பாதங்களின்
பிஞ்சு விரல்களால்
ஈர நிலத்தினில் கீறலிட்டு
என் பருவத்தை
உன்னுடன் இணைத்துக் கொள்ள
ஒரு கோலம் போடு…!

பேரன்பே….
இத்தனைக்கும் காணிக்கையாய்
இப்பிறவி மட்டுமின்றி
இனி வரும் என்
அத்தனைப் பிறவிகளிலும்…
எனக்குள்
இன்று போலவே
துடித்துக் கொண்டிருக்கப் போகும்
என் உயிரணுக்கள் அத்தனையையும்
உனக்கு நான்
இன்றே
எழுதிக் கொடுத்து விடுகிறேன்.

புகாரி, கனடா

buhari2000@hotmail.com

Series Navigation