பிரம்ம புரம்

This entry is part [part not set] of 26 in the series 20020812_Issue

சின்னக் கண்ணன்


உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த விவசாயி என்ன செய்வான் ?. அதிகாலையில் எழுந்து குளித்து விட்டுச் சமர்த்தாய் நிலத்திற்குச் சென்று உழ ஆரம்பித்து மதியம் மிக லேசான உணவு உட்கொண்டு விட்டு, மறுபடியும் வயல் வேலைகளைக் கவனித்து, மாலை மங்கியதும் வீடு திரும்பிக் குளித்து விட்டு இரவு உணவை முடித்து விட்டு உறங்கச் செல்வான்.. அது போலத் தான் சூாியனும். அதி அதிகாலையிலேயே எழுந்து கிழக்குத் திசையில் கடலில் குளித்து எழும்பி, பகல் முழுவதும் வேலை பார்த்து, அவ்வப்போது அபூர்வமாக வரும் மேகச் செயலாளினியைக் கொஞ்சமே கொஞ்சம் கொஞ்சி விட்டு, மாலை வந்ததும் உழைத்த களைப்பினால் கண்கள் சிவந்திருக்க மேற்கில் கடலில் குளித்து வீட்டிற்குச் சென்று விடுவான் போலும்.

இவ்வாறெல்லாம் கதை ஆரம்பத்திற்காகத் தத்துபித்தென்று நினைக்க வைக்கப் பட்ட கருணாகர பல்லவன் அந்த மாலை நேரத்தில், சூாியன் ‘நான்கு நாள் வேலைகளை ஒரே நாளில் முடிக்க வேண்டும் ‘ என எஜமானால் கட்டளையிடப்பட்ட வேலைக்காரன் ‘எதில் ஆரம்பிப்பது ? எப்படி முடிப்பது ? ‘ எனத் தவித்துக் குழம்பி மயங்குவது போல, மயங்கிக் கொண்டிருந்த வேளையில் அந்த நாகைக் கடற்கரையோரம் சற்று வேகமாகவே நடந்தான். அவனை நோக்கி வேகமாக ஆவலுடன் ஓடி வந்து அவன் காலைத் தொட்டு அழகிய வெண்பாவோ,விருத்தமோ படைக்க ஆசைப்பட்ட கடலலைகள் அவனது கால் மற்றும் தளை தட்டியதாலோ என்னவோ, ஏமாற்றத்துடன் மறுபடி திரும்பிச் சென்றன.

கடலலைகள் மறுபடியும் தன்னைத் தொந்தரவு செய்ய வரும் என நினைத்ததாலோ, கொஞ்சம் சற்றே தள்ளி நடக்க ஆரம்பித்தான் கருணாகர பல்லவன். அவனது நரை படர்ந்திருந்த தலைமுடிகளைக் கடற்கரைக் காற்று உாிமையாகக் கலைக்க முயல, தலையைப் பிடித்து அதைத் தடுக்க முயன்ற தருணத்தில் தான் தொலை தூரத்தில் புள்ளியொன்று தொிவதையும் கவனித்தான் அவன்.

அவனது கால்கள் கொஞ்சம் வேக நடை போடவே, தொலைவில் மிக மிகச் சிறிதாகத் தொிந்த புள்ளியானது வர வர பொிதாகிக் கொண்டு வர அங்கு நின்றிருந்தது நிஜமாகவே பொிய புள்ளி எனத் தொிந்தது க.பல்லவனுக்கு.

அங்கு நின்றிருந்தது அவனது வண்டைக் குறுநிலத்து அமைச்சர் வல்லபராயர். அவர் நின்றிருந்த முறையும் விசித்திரமாக இருந்தது. அமைச்சர் இருகைகளையும் விாித்தவண்ணம் நின்றிருக்க, அவர் முன்னால் அரண்மனைக் காவலன் ஒருவன் சில ஏடுகளைப் பிடித்தவண்ணம் நின்றிருந்தான். அமைச்சர் ஓலைச் சுவடிகளை ஊன்றிப் படித்தபடி நின்றிருந்தார்..

கருணாகர பல்லவன் அருகில் வர வர அவனது காலணிகளின் ஓசை கடற்கரை மணலில் மாறி மாறிப் பதியும் போது ஏற்பட்ட சரசர அல்லது கரகர ஒலியினால் கொஞ்சம் கவனம் கலைந்து பார்த்த அமைச்சர் வல்லபராயர், அவனைக் கண்டதும் விாித்து வைத்திருந்த இருகைகளையும் இறக்கிக் குவித்து வைத்தவண்ணம், ‘ வாருங்கள் மன்னா.. என்ன இந்த வேளையில்,அதுவும் இங்கு ? ‘ என முகமன் கூறினார்.

கருணாகர பல்லவனின் விழிகள் குறுகி விாிந்தன. நெற்றியில் சுருக்கம் கோடிட்டாலும் புன்னகை அவன் முகத்தில் விாிந்தது.

‘என்ன அமைச்சரே, கேள்வி கேட்க வேண்டியது நான். நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள் ? ‘

‘என்ன கேள்வி மன்னா ? ‘

‘நான் நாகைக்கு வருவது உங்களுக்கும் தொியும். எனது இரு ராணிகளையும், மகன்களையும் விடுமுறைக்காக ஸ்ரீவிஜயத்திற்கு அனுப்புவதற்காக வந்தேன். இங்கிருந்து இரு கப்பல்கள் அந்த நாட்டிற்குச் செல்கின்றன. அவர்களை அனுப்பி விட்டு சற்று நிம்மதியாக கடற்கரையில் நடக்கலாம் என வந்தால் நீர் இங்கு இருக்கிறீர். நமது நாட்டில் தான் தொந்தரவு செய்கிறீர் எனப் பார்த்தால் என்னை எங்கு போனாலும் விட மாட்டேனென்கிறீரே ‘

வல்லபராயர் சிாித்தார். ‘மன்னா.. உங்களது ஜாதகமே அப்படித் தான் போலும். முன்பெல்லாம் அமைதி நிலவலாம் என நீங்கள் புறப்பட்ட போது அது மறுக்கப் பட்டு பொிய பொிய போர்கள் விளைந்தன. இப்போதோ போர்கள் முடிந்து விட்டது என நினைக்கையில் மறுபடியும் ஆரம்பிக்கின்றதே ‘

‘என்ன சொல்கிறீர்கள் அமைச்சரே.. என்ன யாராவது மறுபடியும் இந்த சோழ சாம்ராஜ்யத்தில் வாலாட்ட ஆரம்பித்து விட்டார்களா.. ? ‘

‘இல்லவே இல்லை மன்னா.. நான் அந்தப் போரைச் சொல்லவில்லை. வாட் போாினும் வலிமையான போர்.. ‘

‘எது.. ? என் மனைவிகளின் விழிப் போரா ? அவர்களைத் தான் கப்பலேற்றி விட்டேனே ‘

‘கருணாகரா ‘ என்றார் வல்லபராயர்..அரசனுடன் தனிமையில் இருக்கும் நேரங்களில் பெயர் சொல்லித் தான் அழைப்பார் அவர்.. க.ப வும் அவரது வயதின் காரணமாகக் கண்டு கொள்வதில்லை..

‘சொற்போர் கருணாகரா. சொற்போர்.. இப்போது படித்துக் கொண்டிருந்தது என்னவென்று நினைக்கிறாய் ? ‘

‘நீரே சொல்லுமேன் ‘

‘பிரும்மபுரத்தில் இருக்கும் வான சாஸ்திாி அழகிய நம்பியைத் தொியுமா உமக்கு ? ‘

‘ஓ தொியுமே. நல்ல வானியல் நிபுணர். ஒரு சில காவியங்களும் எழுதியிருப்பதாகக் கேள்வி.. ‘

‘ஒரே ஒரு காவியம் தான் எழுதியிருக்கிறார். அதுவும் இரண்டாயிரத்து ஐந்நூறு ஓலைகளில். மற்றதெல்லாம் வெண்பாக்களும், சில குறு நாடகங்களும் தான்..மன்னா.. அவர் முதலில் சேர நாட்டில் தான் இருந்து சேரமன்னனின் அரண்மனையில் வானசாஸ்திாியாக இருந்தார். அப்போது அவர் எழுதியது தான் நான் முதலில் சொன்ன பெருங்காயம்.. மன்னிக்க.. பெருங்காவியம்.. ‘

‘தொியுமே.. நான் படித்ததில்லையே தவிர அதைப் பற்றி எனது பாட்டியார் நிறையக் கூறியிருக்கிறார்.. ‘

‘ஓ அப்படியா.. எனக்குத் தொியும் புலியின் பாட்டி புலியாகத் தானே இருக்க முடியும்.. ‘

‘நீங்கள் புகழ்கிறீர்களா இகழ்கிறீர்களா தொியவில்லை.. ‘

‘உங்கள் பாட்டியார் என்ன சொன்னார் ? ‘

‘அந்தப் பெருங்காவியம் மிகச் செளகாியமாக இருக்கிறது எனச் சொன்னார்.. ‘

‘புாியவில்லை கருணாகரா.. காவியம் அழகாக இருக்கிறது, அற்புதமாக இருக்கிறது, நன்றாக இல்லை எனப் பல வித விமர்சனங்களைக் கேள்விப் பட்டிருக்கிறேன். அது என்ன செளகாியமாக இருக்கிறது ? ‘

‘அதொன்றுமில்லை அமைச்சரே. அந்த ஓலைக் கட்டுகளை எடுத்துத் தலைக்கு வைத்துக் கொண்டால் பத்தாவது நிமிடத்தில் அவருக்குத் தூக்கம் வந்து விடுகிறதாம்.. வேறு எந்த சீன,யவனப் பஞ்சணைகளும் செய்ய முடியவில்லையாம் அந்த வேலையை. சாி அமைச்சரே.. அதற்கு என்ன இப்போது..ஏன் திடாரென்று அழகிய நம்பியைப் பற்றிப் பேசுகிறீர்கள் ?

‘மன்னா.. நீங்கள் வரும்போது அழகிய நம்பியின் புதிய காவியத்தைத் தான் படித்துக் கொண்டிருந்தேன்..அதை நம் அவையில் அரங்கேற்றம் செய்ய வேண்டுமாம்.. ‘

‘நல்ல விஷயம் தான். காவியத்தின் தலைப்பு என்ன ? ‘

‘ஒரு மரங்கொத்திப் பறவை மரத்தின் நுனிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு அடிக்கிளையை ‘டொக் டொக் ‘கென்று கொத்திக் கொண்டிருக்கிறது. ‘

‘வல்லபராயரே.. என்ன இது.. நான் தலைப்புத் தானே கேட்டேன்.. ‘

‘நானும் தலைப்பைத் தான் சொன்னேன் மன்னா. அதுவும் சுருக்கிச் சொன்ன தலைப்புதான்.. தலைப்பு இப்படித் தான் ஆரம்பிக்கிறது..கி.பி. நானூற்று எண்பத்து மூன்றாம் வருடம் ஆவணித் திங்கள் பெளர்ணமி இரவில் அந்தப் பலநூற்றாண்டு கண்ட ஆலமரத்தில்..ஒ.ம.கொ.ப… ‘

‘நிறுத்தும் நிறுத்தும்.. ‘ என்றான் கருணாகர பல்லவன். ‘தலைப்பை விடும்.. கதைச் சுருக்கம் சொல்லும் ‘

‘சொல்ல முடியாது மன்னா.. ‘

‘ஏன் ?.. நான் சொல்லி மறுத்துப் பேச உங்களுக்கு எப்படித் துணிவு வந்தது அமைச்சரே ? ‘

‘இல்லை மன்னா. நானும் இன்னும் முழுமையாக அதைப் படிக்கவில்லை.. அதைத் தான் நீர் வரும் போது படித்துக் கொண்டிருந்தேன் ‘

‘படித்துக் கொண் டிருந்தீர்கள் சாி.. அது என்ன கைகளை விாித்தபடி வைத்திருந்தீர்.. ‘

‘மன்னா. அழகிய நம்பியின் காவியத்தை எல்லாம் சாதாரணமாகப் படிக்க முடியாது. எனவே நான் எனது கற்பனைச் சிறகை விாித்து வைத்துக் கொண்டு அதைப் பயின்று கொண்டிருந்தேன்..! ‘

‘படித்த வரை தான் சொல்லுமேன் ‘

‘சொல்லும் படியாக ஒன்றும் இல்லை.. ஆனால் ஒன்று சொல்லலாம்.. மற்ற எல்லாப் புலவர்களையும் சகட்டுமேனிக்கு நையாண்டி, ஏளனம் செய்து எழுதியிருக்கிறார். அந்தக் காலத்துத் திருவள்ளுவர் முதல் நம் காலத்து ‘பரணி ‘ பாடிய ஜயங்கொண்டார் வரை எவரையும் விட்டு வைக்கவில்லை..இதில் இன்னொன்றும் இருக்கிறது. தவறாமல் தான் மற்ற எல்லோரையும் விட ஒரு சிறந்த படைப்பாளி என்பதை மறக்காமல் எழுதியிருக்கிறார்.. ‘

‘என்ன பண்ணலாம் இவரை அமைச்சரே ? ‘

‘ஒன்றும் செய்ய வேண்டாம்.. இந்தாருங்கள்.. முன்னுரையில் உங்களைப் புகழ்ந்து சில விருத்தங்களை எழுதி உங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.. ‘

வல்லபராயர் கொடுத்த ஓலைகளைப் படித்த கருணாகர பல்லவனின் முகம் மலர்ந்தது.. ‘அடடா.. என்ன அழகாக,சிறப்பாக என்னைப் புகழ்ந்திருக்கிறார் அமைச்சரே ‘

‘உங்களை மட்டுமல்ல.. முதல் முதலில் சேரமன்னர், பின்னர் நமது சோழச் சக்கரவர்த்தி. நமது சோழச் சக்கரவர்த்தி தம்மிடம் வந்து சேரும் காப்பியங்களைப் படிக்க முடியாததாலும், அவை நிறையச் சேர்ந்து விட்டதாலும் அவற்றுக்காகவே தனது அரண்மனைக்குப் பக்கத்திலேயே ஒரு சின்ன அரண்மனை கட்டி வைத்திருப்பது தான் உங்களுக்குத் தொியுமே.. எனில் அவாிடம் சென்றால் காவியம் உடனே அரங்கேறாது என்பதால் உங்களைப் போன்ற குறு நில மன்னர்களுக்கெல்லாம் காவியம் எழுதி மறக்காமல் புகழ்பாடி அனுப்பிக் கொண்டிருக்கிறார் இந்த அழகிய நம்பி.அவையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ‘

‘என்ன தான் சொல்லுங்கள்.. இவர் என்னை நன்றாகவே புகழ்ந்திருக்கிறார் அல்லவா.எனில் இந்தக் காவியத்தை விரைவில் படித்து நமது அரண்மனையில் அடுத்த மாதம் அரங்கேற்றம் செய்யுங்கள் .. ‘

‘அடுத்த மாதமா மன்னா.. நீங்கள் தான் ஸ்ரீவிஜயம் செல்வதாக இருக்கிறீரே.. ‘

‘அதனால் தான் சொன்னேன். பேசாமல் நீரே இதைப் படித்து அரங்கேற்றி விடும்..சமர்த்தல்லவா நீர்.. உம்மைப் போல் பொறுமையுடையவர் என்றால் அந்தப் பூமாதேவியைத் தான் சொல்ல முடியும்.. ‘

‘மன்னா.. இது தானே வேண்டாம் என்கிறது..நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்.. என்னைப் போய் இப்படி மாட்டி விடலாமா ? ‘

‘அமைச்சரே, இது என் கட்டளை ‘ என மொழிந்து விட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தான் கருணாகர பல்லவன்.

***************************

நாகப் பட்டினத்திலிருந்து பத்துக் காதத் தொலைவில் இருந்தது பிரம்ம புரம். அதை சற்றே பொிதான கிராமம் எனலாம்.

அந்தக் கிராமத்திலிருந்ததே ஒரே ஒரு பொிய மாளிகை தான். அது எங்கிருக்கிறது என பிரம்ம புரத்திற்குச் சற்றுத்தொலைவிலேயே சென்று கொண்டிருக்கும் சின்ன எறும்பைக் கேட்டாலும் வழி சொல்லும்.. அப்படிப் பிரபலமான ஒன்றாக இருந்தது அந்த மாளிகை. அந்த மாளிகையிலிருந்து தான் தனது வானியல் ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருந்தார் அழகிய நம்பி.

அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டதாலோ என்னவோ, அவருக்கு வேலை என்பது கொஞ்சமாகத் தான் இருந்தது- இங்கு மட்டுமல்ல.. சேரன் தலைநகரான வஞ்சி மாநகரத்திலும் தான்.. மாலை மங்கி இரவு வந்ததும், ஓாிரு ஜாமங்கள் அந்த மாளிகையின் மொட்டை மாடிக்குச் சென்று ஆராய்ச்சி செய்துவிட்டு, அவற்றை ஓலையில் குறிப்பெழுதிவிட்டு உறங்கி விடுவார். மறுபடியும் மறு நாள் இரவு தான் வேலை என்பதால், பகல் பொழுதுகளைக் கழிப்பது மிகச் சிரமமாக இருந்தது அவருக்கு.. அப்படிப் பட்ட பொழுதில் தான் ஏதாவது எழுதிப் பார்க்கலாம் எனத் தோன்றியது அவருக்கு..

அப்படி முதலில் சில குறு நாடகங்களை எழுதி விட்டு அதை மாநக்காவரத்திலிருந்து வந்திருந்த தனது உறவினர் ஒருவாிடம் படிக்கக் கொடுத்தார். அவர் அதைக் கன்னாபின்னாவென்று பாராட்டி விடவே, அழகிய நம்பியுள் புதைந்திருந்த எழுத்தார்வம் விழித்தெழுந்தது-கூடவே அகந்தையும். அவற்றின் காரணமாக காவியங்கள், குறுங்காப்பியங்கள் என எழுதிக் கொண்டே போனார்.

அவரது படைப்புகளைப் பாராட்டி ஸ்ரீவிஜயம், சாவகம், சீனா போன்ற நாடுகளிலிருந்த தமிழர்கள் சில பல ஓலைகளை நோிலும், புறாக்கள் மூலமாகவும் அனுப்பி வந்தனர்..பறவைத் தீவு என்ற இடத்தில் இருந்த சில தமிழர்களும் அவரது படைப்புகளைப் புகழ்ந்து அந்தத் தீவில் தின்று நன்றாகக் கொழுத்திருந்த மிகப் பொிய ஈக்களைப் பழக்கி அவற்றின் கால்களிலும் ஓலையைக் கட்டி அவருக்கு அவ்வப்போது ஈ-ஓலை அனுப்பி வந்தனர். உள்ளூாில் இருப்பவர்களும் ‘ஓ இவரது காவியங்கள் கடல் கடந்து புகழ் பெற்றிருக்கிறதே.. எனில் நாமும் படித்துப் பார்ப்போம் ‘ என்று ஆசைப்பட்டு வாங்கிப் படித்த பின் ஒன்றும் புாியாததால் தம்மைத் தாமே நொந்து கொண்டு, மற்றவர்களிடம் பேசும் போது மட்டும் ‘ஓ அழகிய நம்பியின் காவியமா..மிக நன்றாக இருக்கிறதே.. நானும் ஒரு ஓலைப் பிரதி வாங்கி விட்டேன் ‘ எனச் சொல்லிக் கொண்டு, வீட்டின் பரணின் மேல் அந்தக் காவியத்தைத் தூங்கப் பண்ணியும் செய்து வந்தனர்.

அன்று நாகையிலிருந்து திரும்பி வந்த அழகிய நம்பி மிக மகிழ்வோடு இருந்தார்.. தனது மரங்கொத்திக் காவியத்தை வண்டை மன்னன் அங்கீகாித்தது பெரு மகிழ்வாயிருந்தது அவருக்கு. அப்படி மனதெல்லாம் நிறைந்திருக்க தனது அறையுள் நுழைந்த போது அந்தக் காட்சியைக் கண்டார் அவர்.

அறையுள் அவரது ஒரே வாாிசும் பிறரால் குட்டிக் கிருஷ்ணன் என்று அழைக்கப் படும் நவநீதக் கிருஷ்ணன் அங்கிருந்த கட்டிலில் இருந்த பஞ்சணையின் மேல் அமர்ந்திருக்க அருகில் அவனது தோழன் ஒருவன் உட்கார்ந்திருந்தான். தோழன் கையில் ஓலைகள்..

அழகிய நம்பியைக் கண்டதும் படித்துக் கொண்டிருந்ததை நிறுத்தினான் குட்டிக் கிருஷ்ணனின் தோழன். அவர் வந்ததை அறியாத குட்டிக் கிருஷ்ணன் ‘ஏன் நிறுத்தி விட்டாய் சாம்பு ? ‘. சாம்பு ‘கிருஷ்ணா..உனது தந்தையார் வந்திருக்கிறார்கள். நான் அப்புறம் வருகிறேன் ‘ என்று சொல்லி வேகமாய் வெளியே சென்று விட்டான்.

குட்டிக் கிருஷ்ணன் தட்டுத் தடுமாறி எழ முயற்சிக்க, அழகிய நம்பி விரைந்து சென்று அவனைத் தடுத்தார். ‘பார்த்து கிருஷ்ணா.. என்ன அவசரம் ? ‘

குட்டிக் கிருஷ்ணனின் உயிரற்ற விழிகள் அவர் மீது நிலைத்தன.. ‘ தந்தையே அவசரமொன்றுமில்லை.. நீங்கள் சமீபத்தில் எழுதிய மரங்கொத்திக் காவியத்தைத் தான் கேட்டுக் கொண்டிருந்தேன் ‘

மகனின் முகத்தைப் பார்த்த அழகிய நம்பியின் அடிவயிற்றில் ஏதோ புரண்டது. அழகிய துறுதுறு முகம். பார்வை மட்டும் சில வருடங்களுக்கு முன்னால் தாழம்பூக் காட்டில் பூநாகம் தீண்டியதால் போய்விட எவ்வளவு முயற்சி, வைத்தியம் பண்ணியும் திரும்ப வரவில்லை.. இருந்தாலும் குட்டிக் கிருஷ்ணனின் முகத்தில் எப்போதும் சிாிப்பு நிறைந்திருக்கும்.. தனது குறையைப் பொிதாகவே நினைப்பதில்லை அவன்.

காவியம் என்றவுடனே சிலிர்த்துக் கொண்டார் அழகிய நம்பி. ‘படித்தாயா கிருஷ்ணா.. எப்படி இருக்கிறது ? ‘

‘சொல்வதற்கொன்றுமில்லை தந்தையே.. உங்கள் வழக்கமான அழகிய நடை அப்படியே வந்திருக்கிறது ‘

‘நன்றி கிருஷ்ணா ‘

‘ஆனால் உங்கள் எழுத்துக்களின் வர்ணனைகளையும், கருக்களையும் மீறி ஒன்று தொிகிறது தந்தையே ‘

‘என்ன அது ? ‘

‘அகங்காரம், கர்வம் தந்தையே.. தவறாக நினைக்கமாட்டார்கள் என்றால் சொல்கிறேன். எந்த ஒரு தொழிலையும் சிறப்பாகச் செய்பவனுக்கு கர்வம் இருப்பது அவசியம் தான். ஆனால் அவன் தனது தொழிலில் அதைக் காட்டிக்கொள்ளக் கூடாது. உங்களது காவியத்தில் தொிவது ஒன்றே ஒன்று தான். அது தான் ‘தான் ‘. நீங்கள் உயர்ந்தவர்கள், உங்கள் எழுத்து மட்டும் உயர்ந்தது, மற்றவர்களெல்லாம் மடையர்கள் என்ற அகங்காரம் மிக உரக்கவே ஒலிக்கிறது தந்தையே..உங்கள் எழுத்து எல்லோரையும் நெற்றிச் சுருக்கி, ஒருமுறைக்கு இருமுறை படிக்க வைத்து யோசிக்க வைக்கிறது என்றால் அது உங்கள் எழுத்தின் நடை. அதற்காக அது புாியாதவர்கள் எல்லாம் மடையர்கள், மற்ற நல்ல காவியங்கள் எழுதியவர்கள் எல்லாம் புத்தியில்லாதவர்கள் என்றெல்லாம் நீங்கள் உங்கள் எழுத்தில் சொல்லக் கூடாது என நினைக்கிறேன். ‘

‘நீயும் ரொம்ப யோசித்திருக்கிறாய் கிருஷ்ணா ‘

‘இல்லை தந்தையே. இந்த எழுத்து எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.. அகங்காரம் ஏன் அனாவசியமாகக் கொள்கிறீர்கள் தந்தையே..வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல என்பது தொியாதா உங்களுக்கு.. என்னைப் பார்த்த பிறகும் அதை மாற்றிக் கொள்ளக் கூடாதா..பல வண்ணங்களை உணர்ந்த எனக்குத் தொிவது ஒன்றே ஒன்று தான்..அது தான் இருட்டு..உங்களுக்குக் கண் இருக்கிறது.. ஆனால் அதை உங்களுக்குள் பொங்கித் ததும்பும் ஆணவம் திரைபோட்டு மறைக்கிறது..அதனால் தான் பிறர் புண்படும்படி நீங்கள் காவியம் படைக்கிறீர்கள். எழுதுகிறீர்கள். அதனால் அல்ப பெருமிதமும் கொள்கிறீர்கள்..இவையெல்லாம் எத்தனை நாளைக்கு ? ‘

‘சூாியர் சந்திரர் உள்ளவரையில் எனது எழுத்துக்களும் பேசப்படும் குட்டிக் கிருஷ்ணா.. நீயென்ன அந்த பாரதக் கிருஷ்ணனா..இன்று உபதேசமெல்லாம் செய்கிறாயே.. ‘

‘இல்லை தந்தையே.. நெடு நாட்களாகச் சொல்ல வேண்டுமென்று எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது. இன்று சொல்லி விட்டேன். அவ்வளவு தான். தவறு என்றால் என்னை மன்னியுங்கள் என்று நான் சொல்லப் போவதில்லை ‘

குட்டிக் கிருஷ்ணனை அப்படியே விட்டு விட்டு வெளியில் வந்து தான் வழக்கமாக எழுதும் அறையில் நுழைந்தார் அழகிய நம்பி..அவருக்குக் கோபம் மிக வந்தாலும் கூட ‘சாி கிடக்கிறான் பொடிப்பயல்.. நாம் மறுபடியும் ஏதாவது எழுதலாம் ‘ எனத் தோன்ற கீழே இருந்த ஓலை ஒன்றை எடுத்தார்.

**************************

E-mail – kan_lakk@hotmail.com

Series Navigation