‘திண்ணை ‘க்கு ஒரு குறிப்பு.

This entry is part [part not set] of 26 in the series 20020812_Issue

சுந்தர ராமசாமி.


இணையத்தில் ‘திண்ணை ‘யைப் பார்க்கச் சமீப காலத்தில்தான் எனக்குச் சந்தர்ப்பம் வாய்த்தது. ஆகவே இக்குறிப்பை சற்றுத் தாமதமாக எழுதியிருக்கிறேனோ என்று சந்தேகப்படுகிறேன். அவ்வாறாயின் தாமதத்தைப் பொருட்படுத்த வேண்டாம் என வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

‘திண்ணை ‘யில் தொடர்ந்து நடந்து வரும், மு. தளையசிங்கம் பற்றிய விவாதத்தில், என் நிலையை முன் வைக்கும் பொருட்டு இதை எழுதுகிறேன்:

திரு ஆர்.பி. ராஜநாயஹம், ‘திண்ணை ‘யில் ‘ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை ‘ என்ற தன் கட்டுரையில், ‘சொல் புதிது 8 இல் சாருநிவேதிகாவுக்கு எச்சாிக்கை செய்து, சாரு தொடங்க வேண்டிய புள்ளி தளையசிங்கத்தின் தொழுகை கதைதான். ஆனால் அபாயமிருக்கிறது. தளையசிங்கம் அவசரமாக அடித்துக் கொல்லப்பட்டார் என்று ஜெயமோகன் எழுதியதைப் படித்தபோது அதிர்ச்சி ஏற்பட்டது ‘ என்று எழுதியிருக்கிறார். அத்துடன் சென்ற காலச்சுவடு (எண் 42) இதழில் ராஜநாயஹகம் எழுதிய கட்டுரையில், என் ‘தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம் ‘ ( ‘காற்றில் கலந்த பேரோசை ‘, பக் 100) என்ற கட்டுரையைப் பற்றி திரு ஜெயமோகன் இரண்டு கருத்துகளைப் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவை:

1.மேற்படி என் கட்டுரை, ‘இலக்கிய வம்புகளின் அடிப்படையில் மதிப்பிடும் முயற்சி ‘.

2. அக்கட்டுரை, ‘செயற்கை இறுக்கம் கொண்ட நடையைக் கொண்டது ‘.

இவற்றில் இரண்டாவது கருத்து, ஒரு விமர்சன அபிப்பிராயம். ஒரு படைப்பைப் பற்றி மாறுபட்ட பல கருத்துகள் ஒரு மொழியில் உருவாவது இயற்கை. ஜெயமோகன், என் கட்டுரை பற்றிய தன் முடிவை மொட்டையாகக் கூறியிருக்கிறார். தன் கூற்றுக்கு விளக்கம் தர அவர் முற்பட்டால், நானும், வாசகர்களும், அவர் முடிவுக்கான காரணங்களைப் புாிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்.

ஆனால் அவர் முன் வைத்துள்ள முதல் கருத்து அபிப்பிராயம் சார்ந்தது அல்ல. தரவுகள் சார்ந்தது. மிகக் கடுமையான ஒரு குற்றச்சாட்டு அது. மு. தளையசிங்கம் போல் மதிக்கத் தகுந்த ஒரு படைப்பாளியை, வதந்ததிகளின் அடிப்படையில் மதிப்பிடுவது, அந்தப் படைப்பாளிக்குத் துரோகம் இழைப்பதுடன், வாசகர்களையும் திட்டமிட்டு ஏமாற்றுவதாகும். இந்தக் கடுமையான குற்றச்சாட்டிற்கும், ஜெயமோகன், ஆதாரங்கள் எதுவும் தரவில்லை. முடிவை மட்மே கூறுகிறார்.

இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன்.

மு.த பற்றிய என் கட்டுரையில், நான் அவரைப் பற்றித் தந்துள்ள வாழ்க்கைக் குறிப்பிலிருந்து ஒரு பகுதியைத் தருகிறேன்:

‘1971 இல் புங்குடுதீவு கண்ணகியம்மன் கோயிலில் நன்னீர்க் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் அளிக்கும்படி போராடியபோது போலீசாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 1972 இல் ‘மெய்யுள் ‘ என்ற இலக்கிய உருவம் போடப்பட்டது. 1973 இல் இரண்டு மாதம் நோய்வாய்ப்பட்டு ஏப்ரல் 2ஆம் தேதி மறைந்தார் ‘.

இப்போது ஜெயமோகனில் கூற்றுகளை முன் வைத்து, திண்ணையில் நடந்து வரும் சர்ச்சையில், திரு மாலனும், ராஜநாயஹமும், நான் தளையசிங்கத்தின் மறைவு பற்றி எழுதியிருப்பதுதான் உண்மை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் எழுதியிருந்தாலும் உண்மை நான் கூறுவதா, அல்லது ஜெயமோகன் கூறுவதா என்பதை என்னால் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. அத்துடன், மு.த பற்றி நான் எழுதியுள்ள கட்டுரையை, ஜெயமோகன், ‘வதந்திகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை ‘ என்று மொத்தமாக தூக்கியெறிந்திருக்கும் நிலையில், தீர்மானமாகச் சொல்லப் பயமாகவும் இருக்கிறது. அசுர முயற்சி மூலம் புதைந்து கிடந்த பல உண்மைகளை, அவர் தோண்டி எடுத்திருப்பாரோ என்று சந்தேகமாகவும் இருக்கிறது.

இந்நிலையில், மு.தவின் வாழ்க்கைக் குறிப்பை எழுதும் போது, தவறு நேர்ந்து விடக் கூடாது என்ற கவனத்தில், நான் மேற்கொண்ட எளிய முயற்சிகளைப் பற்றிய விபரங்களை மட்டும் தருகிறேன்:

மு.த பற்றிய குறிப்பை எழுத, 1982 இல் எனக்கு ஆதாரமாக இருந்தவை, இலங்கையில் பதிப்பிக்கப்பட்டிருந்த அவரது நூல்கள் மட்டுமே. அவை மு. பொவின் மேற்பார்வையையும் ஆமோதிப்பையும் பெற்றவை. நான் புங்குடு தீவுக்கு நேராகப் புறப்பட்டுப் போகவோ, அங்கு தங்கியிருந்து, மு.தவின் முடிவைப் பற்றி, என் சுதந்திர ஆராய்ச்சியை மேற்கொள்ளவோ இல்லை.

இன்று நான் அறிந்த வரையிலும், இருவர்தான் மு.த பற்றிய தகவல்களைச் சாிவரச் சொல்லும் வாய்ப்புப் பெற்றிருப்பவர்கள். ஒருவர், மு. தவின் சகோதரரான திரு. மு.பென்னம்பலம். மற்றொருவர், நண்பர், என்.கே. மகாலிங்கம். (கனடா) இவர்கள் மு.தவுடன் கூடி வாழ்ந்தவர்கள். அவர் மீதும், அவரது சிந்தனைகள் மீதும் பெருமதிப்பு வைத்திருப்பவர்கள். இருவருமே படைப்பாளிகள்.

மு.பொவும் எனக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கடிதத் தொடர்பு இருந்திருக்கிறது. சுமார் இருபது வருடங்களுக்கு முன், மு.த பற்றிய என் கட்டுரை வெளிவந்த நேரத்தில், மு.பொ எனக்கு எழுதியிருந்த கடிதத்தில், என் கட்டுரையை வெகுவாகப் பாராட்டி (செயற்கை இறுக்கம் கொண்ட நடையும் சிலருக்குப் புாிந்துவிடுகிறது!) எழுதியிருந்ததோடு, மு.தவின் இலக்கியப் பார்வை மீது, நான் என் கட்டுரையில் கூறியிருந்த விமர்சனத்திற்கு, மாறுபட்ட தன் கருத்துகளையும் தொிவிாித்திருந்தார். இந்தக் கடிதப் போக்குவரத்துகளிலும் சாி, நானும் மு.பொவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், காலச்சுவடு பங்குபெற்று நடத்திய சென்னை இலக்கிய மாநாட்டில் நேராகச் சந்தித்துக் கொண்டபோதும் சாி, மு.த பற்றி நாங்கள் பேச நேர்ந்த தருணங்களில்கூட, அவரது வாழ்க்கைக் குறிப்பில் எந்தச் சிறு பிழையையும் மு.பொ என்னிடம் சுட்டிக் காட்டவில்லை.

என். கே. மகாலிங்கத்துடன், கனடாவில், இலக்கியம் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றிப் பேச, நான் நிறையவே சந்தர்ப்பம் பெற்றிருக்கிறேன். அப்போது அவர், மு.த பற்றிய என் கட்டுரை மீது, மிகுந்த மதிப்புக் கொண்டிருப்பது, ( என் கட்டுரை புாிந்து விட்ட மற்றொரு வாசகர்! ) தொிந்தது. இந்த ஆண்டு, மகாலிங்கம், நாகர்கோவிலில் என் வீட்டிற்கு வந்திருந்த போது, நான் எழுதிய கட்டுரை வழியாகத்தான், மறைந்தும், மறந்தும் போய்விட்டிருந்த மு.த மறு வாழ்வு கண்டதாகச் சொன்னார். எந்த நேரத்திலும் மு.தவின் வாழ்க்கைக் குறிப்பில் தவறு நேர்ந்து விட்டதாக அவரும் சொன்னதில்லை. இவை என் தரப்பு நியாயங்கள்.

இந்த நியாயங்களை முன் வைத்து, மு.பொ, மகாலிங்கம் ஆகியோாின் ஆமோதிப்பையும் இங்கு பதிவு செய்து விட்டதாலேயே, நான் கூறுவதுதான் உண்மை என்று ஆகிவிட்டாது. கடும் உழைப்பும், ஆற்றலும், கட்டுக்கு அடங்காத உண்மை வேட்கையும் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், மேல் நாடுகளில், மறைந்து போன எழுத்தாளனைப் பற்றி, அவனது சுற்றம், உறவினர், அவனே எழுதிவைத்திருக்கும் சுய சாிதம் ஆகியவற்றில் கூறியிருக்கும் தரவுகளைக் கூட, தாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி மூலம் அடித்து நொறுக்கிவிட்டு, முற்றிலும் புதிய உண்மைகளை நிலைநாட்டி இருக்கிறார்கள். கவிதை நீங்கலாக எல்லா படைப்பு வடிவங்களிலும், உலகச் சிகரங்களை நாம் தாண்டிவிட்டதாகக் கூறப்படும் இந்நேரத்தில், ஆராய்ச்சியிலும் உலகச் சிகரத்தை தாண்டியிருக்கப் கூடாது என்பது இல்லை.

மு.தவின் மறைவு பற்றி ‘திண்ணை ‘யில் விவாதம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், மு.பொவும், மகாலிங்கமும் அவர்களது தரப்பை முன் வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மு.த பற்றி நான் எழுதியிருந்த குறிப்பில் பிழையிருந்தால், குறிப்பிட்ட என் கட்டுரையை மீண்டும் அச்சேற்றும் போது, உாிய திருத்தம் செய்வதோடு, தவறான செய்தியைத் தந்ததற்காக வாசகர்களிடம் வருத்தம் தொிவித்துக் கொள்ள வேண்டியவனாகவும் இருக்கிறேன். ஆனால், துரதிருஷ்டமாக, வதந்தியின் அடிப்படையிலேயே என் கட்டுரை எழுதப்பட்டுள்ளதாக நிரூபிக்கப்படும் என்றால், அது என் வீழ்ச்சியையே குறிக்கும்.

***

TRamanujam@aol.com

Series Navigation

சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி