பிதாமகன்: பாலாவின் படங்களும் தனிநபர் வன்முறையும்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

சொ.சங்கரபாண்டி


பிதாமகன் படத்தைப் பற்றிய பெருவாரியான பாராட்டுதல்களுக்குப் பின் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனாலும் ‘சேது ‘வுக்குக் கிடைத்த பாராட்டுதல்களை வைத்து படம் பார்த்து ஏமாந்து போன எனக்கு பாலாவின் படங்கள் மீது அவ்வளவு நாட்டமில்லையாதலால் கொட்டகைக்குப் போய் பார்க்க வேண்டும் என்ற பேராவலில்லை. வீட்டில் நண்பர்களுடனமர்ந்து குறுந்தட்டிலிருந்து தொலைக்காட்சியில்தான் பார்த்தேன். நல்ல வேளையாக குழந்தைகள் தூங்கியபிறகுதான் பார்த்தோம். கொட்டகைக்குப் போயிருந்தால் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு போயிருப்போம், அந்தத் தவறையும் செய்யவில்லை என்று ஆறுதலாயிருக்கிறது. தமிழ்ப்படங்களில் நல்ல படங்கள் என்று பாராட்டப் படுபவற்றைக்கூட குடும்பத்தோடு பார்க்கப் பயமாகிவிட்ட நிலை இன்று. ‘வீடு, ‘அழகி ‘ போன்ற படங்கள் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாகப் பூக்கும் குறிஞ்சிப்பூக்கள்.

கலைஞனும், சமூக அக்கறையும்:

பாலா திறமையான இயக்குனர் என்பதையோ, வசனங்களின் வாயிலல்லாமல் காட்சிகளின் மூலம் திரைப்படத்தை பேச வைத்திருக்கிறார் என்பதையோ அல்லது விக்ரமும், சூர்யாவும் பாத்திரங்களில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்பதையோ நான் மறுக்கவில்லை, முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பாலாவின் படங்கள் தம்ிழ்த்திரையுலகில் கலைத்தன்மையை முன்னெடுத்துச் செல்வதை விட, சமூகத்தில் தனிநபர் வன்முறையையும், மனநோயாளிகளைப் பற்றிய விரக்தியையும், தோல்வி மனநிலையையும் வலுப்படுத்தவே உதவுகின்றன. மஞ்சுளா நவனீதன் குறிப்பிட்டது போல திரைப்படங்களை பொது இடமாக நான் கருதுவதாலும், ஞானி வலியுறுத்தும் சமூக அக்கறையின் அடிப்படையிலும் இதைக் கூறுகிறேன். தமிழ்த்திரைப்படங்கள் மீது யமுனா இராஜேந்திரன் போன்றவர்கள் முன்வைக்கும் கலையம்ச அடிப்படையாலான விமர்சனங்களை பெரிதும் மதிக்கிறேன். அதேசமயம் கலை கலைக்காக மட்டுமல்லாமல், மக்களுக்காகவும்தான் என்கிற வகையைச் சார்ந்தவன் நான். எனவே அந்த அடிப்படையில் வரும் என் கருத்துக்களை வாசகர்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்றெண்ணுகிறேன். பிதாமகன் படத்துக்குக் கிடைத்த பெரும் பாராட்டுதல்களின் அடிப்படையில் அப்படத்தைப் பார்த்தபின் நான் அடைந்த ஏமாற்றத்தின் விளைவே இக்கருத்துக்கள்.

‘சேது ‘வில் மனநோயாளி விடுதியை மிக இயல்பாகப் படம் பிடித்து மனநோயாளிகள் அனுபவிக்கும் துயரங்களை படம் பார்ப்பவர்கள் உணரும் படி செய்தது இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் விக்ரத்துக்கும் கிடைத்த வெற்றி. அதனால் மட்டுமே மனம் உவந்து மனநோயாளி விடுதிகளுக்கும், மனநோயாளிகளுக்கும் பெரிதாக இந்த சமூகம் உதவிவிடப் போவதில்லை. ஆனால் படத்தின் பாதிவரை ‘சீயான் ‘ நடத்தும் தனிநபர் வன்முறையையும், இரவுடித்தனத்தையும் இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் நடைமுறையில் எளிதில் கடைப்பிடிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக பிராமணப் பெண்களின் கலாச்சாரக் கூறுகளை பொது இடங்களில் தரம் தாழ்ந்து கேவலப்படுத்தும் குற்றத்தை அங்கீகரிப்பதாக அமைந்துள்ளது. பகுத்தறிவுக்குப் புறம்பான பிராமணியத்தையும், அதை மற்ற சமூகங்களின் மீது திணிக்கும் பிராமணியவாதிகளின் செயல்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்காமல் அப்பாவி பிராமணர்களை இப்படி துன்புறுத்தி இன்பம் காண்பது ஒரு நல்ல கலைஞனுக்கு அழகல்ல. அரங்கேற்றம் தந்த பாலச்சந்தரும், வேதம் புதிது இயக்கிய பாரதிராஜாவும் சமூகத்தில் அக்கறை கொண்ட கலைஞர்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். சூழ்நிலையால் மனநோயாளியாக்கப் பட்டவன் ‘சீயான் ‘ என்று விளக்கம் கொடுப்பது அபத்தம். அப்படிப்பட்டவனை அந்தப் பெண் காதலிப்பதாகக் காட்டுவது அதை விட அபத்தம். ‘சீயானான ‘ விக்ரத்தின் பாத்திரத்துக்கும், அவர் அண்ணனாக வரும் சிவக்குமாருக்கும் சூழ்நிலையில் எந்த வேறுபாடும் இல்லாத பொழுது சேது மட்டும் எப்படி மன நோயாளியாக மாறினார் ? நம் வீட்டுப் பெண்களை சாலைநடுவில் இழிவு செய்யும் தெருரவுடிகளை மன நோயாளிகளாக நினைத்து மன்னித்து விடுவோமா ? சமுகத்தைச் சீரழிப்பதில் பாய்ஸ் போன்ற படங்களுக்கும், சேதுவுக்கும் என்னைப் பொறுத்தவரை எந்த வேறுபாடும் தெரியவில்லை.

‘நந்தா ‘வைப் பார்த்த சிறிது நேரத்திலேயே தொலைக்காட்சியை நிறுத்தி விட்டேன். கொடூரமான சூழ்நிலைகளினால் மனநோயாளியாக மாறி வன்முறைச் செயல்களில் இறங்கிய ஒருவனைக் காட்டி எல்லாவிதமான தனிநபர் வன்முறைகளையும் நியாயப்படுத்தும் படமாக நான் அதை எதிர்பார்த்ததனால் மேலே பார்க்க மனமில்லை. ‘பிதாமகன் ‘ படம் இதிலிருந்து சற்று மாறுபடுகிறது. ‘பிதாமகன் ‘ படத்தைப் பற்றி என்னுள் எழுந்த கேள்விகளனைத்தையும் ஏற்கனவே வரதன் (http://www.thinnai.com/ar1030033.html) திண்ணையில் எழுப்பியுள்ளார். திரைப்படத்தை கலை வடிவமாக மட்டுமே பார்க்கும் ஒருசில தேர்ந்த பார்வையாளர்களுக்கு வேண்டுமானால் ‘வன்முறைக்குள் தள்ளப்பட்ட ஆனால் வன்முறையைத் துறந்து வாழத்துடிக்கும் விளிம்பு நிலை மனிதர்களின் அன்பையும் ஜீவனையும் ‘ பிதாமகனில் காணமுடியும். ஆனால் பெரும்பாலான பார்வையாளர்கள் திரைப்படத்தை நல்ல பொழுது போக்காக எண்ணிப் பார்ப்பவர்கள். உலகத்துடன் தொடர்பறுந்ததனால் மன நோயாளியாக வளர்ந்த ஒரு வெட்டியானை வைத்து, வெட்டியான் தொழில் செய்யும் எல்லாரையும் பிதாமகனைப் போல மூர்க்கத்தனமாக நடந்து கொள்பவர்களாக நினைக்கச் செய்யும் அபாயம்தான் தெரிகிறது.

கண்டவுடன் காதல், ஆபாசமாக்கப்பட்ட காமம், விரசமான நகைச்சுவை, காலிகளுடன் கட்டிப் புரண்டு சண்டையிடுதல் போன்ற யதார்த்தமற்ற காட்சிகளைப் போல வன்முறைக்காட்சிகளும் இந்தியத் திரைப்படங்களின் சூத்திரமாக மாறிவிட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் வன்முறைக் காட்சிகளை புத்திசாலித்தனமாகப் புகுத்த நினைக்கும் வியாபார நோக்கம்தான் பிதாமகனில் வெளிப்படுகிறது. வன்முறையையும், இரத்தக்களரியையும் காட்சி மாறி காட்சிகளாகக் காண்பிக்காமலே கலைப்படங்களை எடுக்க முடியும் என்பதை பல இந்திய இயக்குனர்கள் நிரூபித்திருக்கிறார்கள். வன்முறைக்காட்சிகளை சிறிதும் காண்பிக்காமலே நாஸிகள் நடத்திய யூத இனப்படுகொலையின் கொடுரத்தை ஆழமாக வெளிப்படுத்திய ‘Life is Beautiful ‘ என்ற ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

பிதாமகனும், நந்தவனத்திலோர் ஆண்டியும்:

ஜெயகாந்தனின் ‘நந்தவனத்திலோர் ஆண்டி ‘ என்ற கதையைத் தழுவியதாக சிலர் கூறியிருந்ததைப் படித்ததனால், ‘பிதாமகன் ‘ படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாயிருந்தது. பார்த்தபின் மகிழ்ந்தேன், நல்ல வேளையாக அப்படியெல்லாம் பாலா எங்கும் குறிப்பிடாதது குறித்து. அது ‘நந்தவனத்திலோர் ஆண்டி ‘ சிறுகதையை சிறுமைப்படுத்துவதாக இருந்திருக்கும். அச்சிறுகதையைப் படித்ததனால் பாலாவுக்கு பிதாமகன் கதைக்கான கரு தோன்றியிருக்கலாம் என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாமே தவிர ஆண்டியையும், சித்தனையும் சித்தரித்த விதத்தில் இரண்டு படைப்புகளும் முற்றிலும் மாறுபடுகின்றன.

ஆண்டியின் மூலமாக வெட்டியான்களும் மற்ற எல்லா மனிதர்களைப் போல மனித அன்பையும், இழப்பின் துயரத்தையும் கொண்டவர்கள்தான் என்ற மென்மையான உணர்வை வெளிப்படுத்தினார் ஜெயகாந்தன். சடலங்களுக்கு தீமூட்டும்பொழுது அருகில் நின்று அழுது புலம்பும் உறவினர்களின் மத்தியில் எந்தவிதச் சலனமுமில்லாமல் நடந்து கொள்ளும் வெட்டியான்களைக் கண்டிருக்கும் ஜெயகாந்தன், அவர்களின் மனநிலையை ஆராய்ச்சிக்குட்படுத்தியதே ஆண்டியின் கதை. குறிப்பாக, மயானத்தில் உடலுக்கு தீமூட்டும் பொழுது பெரும்பாலான வெட்டியான்கள் தங்களுக்குச் சேரவேண்டிய கூலியைக் கறாராகக் கேட்பதுண்டு. அதைப்பற்றிக் குறிப்பிட்டு அவர்களை மனிதத்தன்மையில்லாதவர்களாக மற்றவர்கள் பேசக்கேட்டிருக்கிறேன். ஆனால் அவர்களுக்கு அது தொழில் என்பதையோ, அந்தத் தருணத்தை விட்டால் அவர்களால் அந்தக் கூலியை எளிதில் பெற முடியாது என்பதையும் மற்றவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. வெட்டியான் தொழிலுக்குரிய சரியான கூலியை கொடுக்க மறுக்கும் மேல்சாதியினரின் மனநிலையை ‘சாம்பான் ‘ என்ற புதிய நாடகத்தில் காட்டியுள்ளார் பிரபல நாடக வல்லுனரும் தஞ்சை பல்கலைக்கழக நாடகத்துறைத்தலைவருமான திரு. மு. இராமசாமி (பிதாமகன் படத்தில் முதல் காட்சியில் சித்தனின் வளர்ப்புத்தந்தையாக நடித்துள்ளவர்). அடித்தளத்து தொழிலாளிகளிடமுள்ள நியாயத்தை மிக அழுத்தமாக தன் கதைகளிலும், கட்டுரைகளிலும் கூறி வருபவர் ஜெயகாந்தன். ஆட்டோரிக்ஷா தொழிலாளிகளைப் பற்றி வசைபாடியே பழக்கப்பட்ட சென்னைவாசிகள் மத்தியில், அத்தொழிலாளிகள் தன்னிடம் ஒருபோதும் தவறாக நடந்து கொள்ளாததற்கான காரணத்தை முன்பு ஒரு கட்டுரையில் கூறியிருந்தார்.

சடலங்களை எரிப்பதையே தொழிலாகக் கொண்டதால் சடலம் என்பது ஆண்டிக்கு ஒரு தொழிற் பொருளாக இருந்து வந்திருக்கிறது. இந்த உணர்வற்ற நிலைக்குக் காரணம் அவன் அந்த சடலங்களுக்குள் இருந்த உயிரையும் பார்த்ததில்லை, தான் அன்பு செய்த ஒரு உயிர் சடலமாக மாறியதையும் பார்த்ததில்லை. சாதாரணமாக எல்லா மனிதர்களும் இதில் ஒன்றும் பெரிதும் மாறுபட்டவர்களல்ல. நாம் அறியாதவர்களின் சடலங்களை, அதுவும் நாடு, மொழி, மத, இன, சாதிவெறி போன்றவற்றினால் விழுந்த சடலங்களை நம் வாழ்க்கையிலும், தொலைக்காட்சி செய்திகளிலும், பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பார்த்த மாத்திரத்தில் அம்மரணங்களின் காரணத்தால் எழும் பயமும், இரக்கமும், கோபமும் வேண்டுமானால் வருவது இயல்பு. மற்றபடி அதை நினைத்து அழுது ஆர்ப்பரிப்பு செய்வதல்லாம் கிடையாது. ஆனால் நாம் அன்பு செலுத்தும் ஒருவர் இறந்தால் அந்தத் துயரம் நம்மை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. அதன் பின் வேறு சடலத்தையோ, மரணத்தையோ பார்க்கும் பொழுது கூட, நாம் சந்தித்த இழப்போடு நம் மனம் தொடர்பு படுத்திப் பார்க்கிறது. எனவே அடிப்படையில் வெட்டியான்களும் மனிதத்தன்மையுள்ளவர்கள்தான், முன்பின் அறியாத மற்றவர்களின் இழப்புக்களுக்காக வருந்தும் தெய்வீகக் குணத்தையும் அடையக் கூடியவர்கள்தான் என்று கூறுவதுதான் ‘நந்தவனத்திலோர் ஆண்டி ‘.

வன்முறையும், தமிழ்ச் சமூகத்தின் இரட்டைவேடமும்:

எனக்கு பல ஆண்டுகளாக வியப்பையளித்து வருவது வன்முறையைப் பற்றிய இரட்டை வேடந்தான். சமுதாய கட்டுமானத்தால் ஒடுக்கப்பட்ட சாதியினருக்காகவும், அரசியல், பொருளாதார ஆதிக்கத்தால் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காகவும், அரசாங்கத்தை எதிர்த்து அம்மக்கள் மத்தியிலே உருவான நக்ஸலைட்டுகள் வன்முறையில் ஈடுபடுகிற ஒரே காரணத்தால் பயங்கரவாதிகள் என்று தூற்றுகிறோம். ஈழத்தில் ஐம்பது ஆண்டுகளாக இனவாத அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கும், வன்முறைக்கும் எதிராக அம்மக்கள் மத்தியிலே உருவான இயக்கம், தன்னுடைய எதிரிகளான அரசியல் தலைவர்களை கோரமாகக் கொலை செய்ததனால் பயங்கரவாதிகள் என்று எதிர்க்கிறோம். இதை நான் கூறும் பொழுது கூட அவர்களின் வன்முறையையும், பயங்கரவாதத்தையும் நான் நியாயப்படுத்துவதாக என்னைக் குறைகூற முற்படுவர். ஆனால், பெருவாரியான தமிழ்ப்படங்களில் வேண்டுமென்றே திணிக்கப்படும் தனிநபர் வன்முறைக்காட்சிகளையும், சிதையுண்ட உடல்களையும், சிந்தியோடும் இரத்த வெள்ளத்தையும் குடும்பத்தோடும், குழந்தைகளோடும் முகம் சுளிக்காமல் எப்படித்தான் பார்த்து மகிழ்கின்றனரோ தமிழ் மக்கள். நக்ஸலைட்டுகளையும், ஈழப்போராளி இயக்கங்களையும் தடை செய்யும் அரசாங்கங்களும், அவற்றுக்கு உறுதுணையாக இருக்கும் செல்வாக்கு மிகுந்த அறிவாளர்களும், தனிநபர் வன்முறையை நியாயப்படுத்தி இளந்தலைமுறையினரிடம் வன்முறையை மிகச் சாதாரணமாக்கி வரும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு எதிராக எதுவும் செய்ய முன்வரவில்லை என்பது வருந்தத்தக்கது.

sankarpost@hotmail.com

Series Navigation

சொ.சங்கரபாண்டி

சொ.சங்கரபாண்டி