பி.ச.குப்புசாமி கவிதைகள்

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

பி. ச. குப்புசாமி


சந்திரிகை:

இந்த முகம் அன்றொருநாள்
……என்னருகே வந்தமுகம்
மந்தநகை யோடென்றன்
……மார்பினில்பு தைந்தமுகம் !

இந்த முகம் நான்சொன்ன
……இன்மொழிகள் கேட்டமுகம்
சிந்தனைகள் பிறிதின்றிச்
……சிரித்தருகி ருந்தமுகம் !

இந்தமுகம் காதலெனும்
…..எழில் வானம் கண்டமுகம்
நொந்தமனம் அன்றாடம்
……நூறுதரம் எண்ணும்முகம் !

இந்தமுகம் பேரன்பின்
……இன்பங்கள் கொண்டமுகம்
முந்தியொரு நாளென்னை
……முத்தங்கள் இட்டமுகம் !

இந்தமுகம் பிரிவாகி
……எனைவிட்டுச் சென்றமுகம்
விந்தைமுகம் காலத்தை
……வென்றுதினம் நின்றமுகம் !

* * *
வான்விளிம்பில் சந்திரிகை
……வந்தொளிசெய் கின்றாள்
நான்விரும்பும் முகமொன்றை
……நனவிற்கொணர்கின்றாள்

*****************************
காலடிகள்:

காலமெனும் பெரும்பரப்பில்
……காதல்மகள் நடக்கின்றாள்
கோலமெலாம் தனதாகக்
……கொண்டமகள் நடக்கின்றாள்!

ஞாலமெனும் பெரும்பரப்பில்
……ஞானமகள் நடக்கின்றாள்
மூலமெனும் பொருளறிய
……முனைந்தமகள் நடக்கின்றாள்!

அளவில்லாப் பெரும்பரப்பில்
……ஆசைமகள் நடக்கின்றாள்
வளர்கின்ற துன்பமெலாம்
……மறந்தமகள் நடக்கின்றாள்!

உள்ளமெனும் பெரும்பரப்பில்
……உணர்வுமகள் நடக்கின்றாள்
வெள்ளமெனப் பிரவாகம்
……விந்தைமகள் நடக்கின்றாள்!

விதியென்னும் பெரும்பரப்பில்
……விட்டமகள் நடக்கின்றாள்
எதிர்காலம் குறிக்கோளாய்
……இந்தமகள் நடக்கின்றாள்!

* * *
நடந்துசெல்லும் மகளிர்தம்
……நடையழகே என்வாழ்க்கை
கடந்து செலும் அவர்தமது
…..காலடிகள் என்கவிதை!

***************************
பொய்…பொய்…பொய்:

நின்றதுபொய் பார்த்ததுபொய் நெஞ்சைமெலத் தொட்டுவிட்டுச்
சென்றதுபொய் ஆனால் செகமும்பொய் – இன்றுமுதல்
தெய்வமும் பொய்யாம் தெரிந்துகொண் டேனெல்லாம்
பொய்யிலும் பொய்யாகும் போ!

சொன்னவை பொய்உன் சுடர்விழி வீசிய
மின்னலும் பொய்உன்றன் மென்னடை – இன்முகம்
கன்னிகை நாணம் கருத்தை அறிவித்த
புன்னகை யாவுமே பொய்!

வாழ்வுபொய் நீயதில் வந்ததுபொய் நம்பிய
ஊழ்வினைப் புண்ணியம் ஓர்பொய்யே – ஏழேழ்
பிறவிக்கும் பற்றாகும் பேரன் பெனும்சொல்
வெறும்பொய்யே அன்றிவேறு என் ?

நன்றி: பல பத்து ஆண்டுகளுக்கு முன் பத்திரிகைகளில் பிரசுரமான இக்கவிதைகளைப் பத்திரமாய் வைத்திருந்து தந்துதவிய சபா என்கிற வே.சபாநாயகம் அவர்களுக்கு.

Series Navigation

author

பி.ச. குப்புசாமி

பி.ச. குப்புசாமி

Similar Posts