பாய்ஸ் -ச்சீ போடா பொறுக்கி ( அல்லது )பின்நவீனத்துவக் குழப்பம்.

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

யமுனா ராஜேந்திரன்


‘சீ போடா பொறுக்கி ‘ என்பது பாய்ஸ் படத்தில் வருகிற வசனம். சங்கரையும் சுஜாதாவையும் யாரும் இன்னும் இவ்வளவு நாகரீகமாக விமர்சிக்கவில்லை எனச் சந்தோசப்படலாம்.

இன்பம் சந்தோசம் பாலுறவுக் கொண்டாட்டம் போன்ற பின்நவீனத்துவம் பேசுகிற வேட்கை என்கிற சமாச்சாரத்தை பாய்ஸ் படம் முன்வைத்திருக்கிறது. என்ன செய்வது எப்படி அணுகுவது என்று வழக்கம் போலவே தமிழக தீவிர இலக்கியவாதிகளுக்குக் குழப்பம் வந்திருக்கிறது. மனுஷ்யபுத்திரன் தன்னுடைய இலக்கிய சாதனையாளர் குறித்த கல்கி கட்டுரைப் பட்டியலில் சுந்ததரராமசாமி ஜெயகாந்தன் போன்றவர்கள் வரிசையில் சுஜாதாவையும் சேர்த்துபின் இன்னும் பலருக்குக் குழப்பம் . ஆனால காலச்சுவட்டில் இருந்தபோது சொல்லாமல் சுஜாதாவினுடைய புத்தகங்களின் உரிமைகிடைத்த பிறகு பதிப்பாளராகத் தனிக்கடை விரித்த பிறகு இதைச் சொல்கிறீர்களே என்று மனுஷ்யபுத்திரனைக் கேட்பதற்கு நிறையச் சங்கடமாக இருக்கிறது. சுஜாதாவின் உரைநடைச் சாமர்த்தியத்தை வெசாவும் அப்புறம் ஜெமோவும் வலியுறுத்தியபிறகு பலருக்கு சுஜாதாவை எப்படி அணுகுவது என அதி குழப்பம். சுஜாதாவின் ஆதர்ஸ் கவி மனுஷ்யபுத்திரனின் உயிர்மையில் சுஜாதா தொடர் கட்டுரை எழுதுவதால் இல்க்கியவாதிகளுக்குக் குழப்பம் இன்னும் கூடிப்போயிற்று. சாநி என்கிற இலக்கியவாதியின் பாலியல் விளையாட்டு பெத்தாம்பெரிய இலக்கியவாதி ஜெமோவுக்கு குறிப்பிட்ட வகை எழுத்தாகத் தெரிவதால் இவர்கையெல்லாம் எப்படி அணுகுவது என்று படு தமிழகத்திலுள்ள பலருவுக்கும் குழப்பம். போதாதற்கு சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஜெமோ-அமா-சாநி என பற்பலரும் பின்நவீனத்துவத்தையும் பூர்வீகத்தினையும் பன்முகத்தவத்தையும் புறநிலைமறுப்பையும் உயரத்திப் பிடிப்பதால் பலருக்குக் குழப்ப்திலிருந்து மீள்வதற்கான வழியே அற்றுப் போயிற்று.

அ.மார்க்சின் பல்வேறு பின்நவீனத்துவக் கருத்தாக்கங்களால் ஆகர்ஷிகப்பட்ட ரோஸா வசந்துக்கு சங்கரின் படத்தைப் பாதுகாத்து நிற்க வேண்டிய நிலை வந்ததில் கொஞ்சமும் ஆச்சர்யமில்லை. அ.மார்க்சுக்கு சாநி. ரோஸா வசந்துக்குச் சங்கர. ஜெயமோகன் நண்பர்களிடம் அபிப்பிராயம் கேட்டு பாய்ஸ் படம் பற்றித் தன் அபிப்பிராயங்களைச் சொல்கிறார். போதாதுக்கு ஜெமோவுக்கு தன் நாவல்களைப் படிக்காமல் பி றர் அபிப்பிராயம் சொல்கிறார்கள் என்று விசனம் வேறு. கிடக்கிட்டும். சினிமா பற்றிய அக்கறைகளும் அப்பிராயங்களின் லட்சணங்களும் இப்படியாகத்தான் இலக்கிய வட்டாரங்களில் உருவாகிறது. குறைந்தபட்சம் படத்தைப் பார்த்தவிட்டுப் பேச வேண்டும் என்ற பொறுப்பு கூட இவர்களுக்கு இல்லை ஜெயமோகனைப் பற்றிப் பேசினால் அவருடைய எல்லா எழுததுக்களையும் படித்துவிட்டுப் பேசுங்கள் என்று அவருக்குப் பந்தம் பிடிப்பவர்கள் அடிக்க வருகிறார்கள். ஜெயமோகன் அபிப்பிராயம் சொல்லாத விசயங்கள் பிஜேபியின் நடைமுறை அரசியல் தவிர வேறேதுமில்லை -கலைஞுரின் இலக்கியத் தகைமை குறித்து ஜெயலிலதா குரலெழுப்பி வருகிற அதே வேளையில் ஜெமோவும் கலைஞுருக்கு எதிரான புனித யுத்தம் துவங்கியிருக்கிறார், திகசி மீதான ஜெமோவின் தாக்குதலை வாங்கிப் போட்ட பரீக்சா ஞுாநி இந்தப் புனித யுத் தத்திலும் பங்கேற்பார் என நம்புவோம் – ஜெமோ பாய்ஸ் பற்றிச் சொல்வதை மறுப்பதற்கு விஷ்னுபரம் படிக்கத் தேவையில்லை. அவர் அரசுத் துறை ஊழியர்கள் பற்றிச் சொல்வதை மறுப்பதற்கு பின் தொடரும் நிழலின் குரல் படிக்கத் தேவையில்லை. ஏனென்றால் இரண்டும் இலக்கிய விமர்சனம் சம்பந்தமான சமாச்சாரங்கள் இல்லை. ஜெயமோகனின் தணிக்கை சம்பந்தமான தாரளவாத அரசியல் மற்றும் இடதுசாரித். தொழிற்சங்கங்கள் சம்பந்தமான அரசியல் அபிப்பிராயங்கள் இவை. ஆகவே ஜெமோவின் புரவிப்படை வீரர்கள் கொஞ்சம் நிதானமாகவும், ஜெமோவுடனான கோட்பாட்டுச் சரச்சைகைளை பொறாமையினால்தான் மேற்கொள்கிறார்கள் எனக் கிறாக்குத்தனமாக எழுதிக்கொண்டிருக்கும் அடிப்பொடிகள் விவரமாகவும் விவாதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நிதானித்துக் கொண்டு பார்க்க ஜெமோ ரோஸா வசந்த நிலைபாடுகள் அரசியல் பாஷையில் தாராளவாத , கருத்தியல் பாஷையில் பின்நவீனத்துவ நிலைபாடுகள் எனப் புரிந்து கொள்வது ரொம்பச் சாதாரணம்.

படம் இயங்குகிற காலத்தைக்கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். தமிழ் ஹாலிவுட் சினிமா இயக்குனர் சங்கர். ஹாலிவுட் சினிமாவுக்கு நேரடி வாரிசு. மக்களின் இயலாமைக்கு அவரது பட நாயகர்கள் ஒரு பிரதி. அதாவது புதிது புதிதாகத் தோன்றுகிற மாதிரியான குட்டிச் சாமியார்களின் சக்தி கொண்டவர்கள் சங்கரின் பட கதாநாயகன்கள். ஜென்டில்மேனிலிருந்து இந்தியன் தாத்தா வரை அவர்கள் இப்படித்தான். சுவார்ஸ்சேக்கர் மாதிரி மோஸ்தர் நாயகன்கன் இவர்கள். இவரது பெண்கள் சார்ந்த சித்திரிப்பை டிக்கிலோனா வியைாட்டிலிருந்து காததாடிக்குத் துாக்குகிற பாவாடைச் சித்தரிப்பு வரை பார்க்கலாம். சுஜாதா வெற்றி பெற்ற கெட்டிக்காரர். வெற்றி பெறுபவன் உழைப்பின் சின்னம். வெற்றி பெறுவதற்கு எவ்வளவு கடினமாக எழைக்க வேண்டியிருக்கிறது என மனுஷ்யபுத்திரன் கூடச் சொல்கிறார். இலக்கியத்தில் கூட வெற்றி பெறுவது தகுதியாகிவிட்டது ரொம்பவும் மெச்சப்பட வேண்டிய விசயம் என்பதில் சந்தேகமில்லை. வெற்றி என்றால் சமூக அங்கீகாரம் மற்றது பொருளாதார வெற்றியைத் தான் குறிப்பிடுகிறார்கள். இதைத்தான் பரீக்சா ஞாநி பிரச்சினையாக எடுத்துக் கொள்கிறார் எதற்கெல்லாமோ நடவடிக்கை எடுக்கிற காவல்துறையினர் பாய்ஸ் படம் அப்பட்டமாகச் சகலவிதமான பெண்களின மீதும் அவமானகரமாக அத்துமீறலைச் செய்திருக்கிறதே, இந்தச் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை இல்லையா என ஞாநி கேட்பதை நேரடியானதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால் அப்படியே நேரடியாக எடுத்துக் கொண்டாலும் தவறில்லை. சரிகாசா சாவுக்குக் காரணமானவனை சமூகவிரோதி என்று தண்டிக்கத்தானே செய்கிறோம்.

பாய்ஸ் படத்தின் கதை என்ன ? நாலு பையன்கள். ஒரு பெண். பட்டபடிப்பின் ஆரம்ப ஆண்டுகளில் இருப்பவர்கள் இவர்கள். இவர்களது ஒரே பிரச்சினை பெண். பெண்குழந்தைகள் மாணவியர் மத்தியதரவயதுப் பெண்கள் வயோதிபப் பெண்கள் தாய்மார்கள் என்று இவர்களுக்கு வித்தியாசமில்லை. எல்லாப் பெண்களுமே சதைப் பிண்டங்கள்தான். ஆனால் இவர்களுக்கு இவர்களது அப்பா அம்மா சகோதரியர் மட்டும் இவ்வாறான பார்வைக்குள் வராத பெண்கள். ஆகவேதான் சுஜாதவினது மனைவி திரையிடலுக்கு வந்து சகிக்க முடியாமல் எழுந்து சென்றுவிட்டார் என்பதற்கு இந்த நாள் வரை சுஜாதா மெளனம் சாதிக்கிறார். இதனால்தான் ரஜினிகாந்த தன்மகள்களோடு இந்தப் படம் பார்க்கவில்லை என சிரமப்பட்டு அறிக்கை விடுகிறார். சிவகுமாரது மகள் படத்தின் இடையிலேயே பாரக்கச் சகிக்காமல் எழுந்து போய்விட்டார் என்ற செய்தி அப்படியே கிடக்கிறது. குஷ்புவின் வியாக்கியானமே தனி. தாங்களே இப்படியான காட்சிகளில் கூச்சப்படாமல் நடிககிறோம, நீங்கள் ஏன் இப்படி ஆத்திரப்படுகிறீர்கள் என்கிறார். அடுத்ததாக வினிதா விசயத்தில் அவர் வைக்கிற கேள்வி இதுதான்: காலையிலிருந்து மாலை வரை வேலை செய்துவிட்டு 5000 ரூபா சம்பளத்தோடு நாங்கள் வீட்டுக்குப் போகமுடியுமா, எங்களுககு நடிப்பபைத் தவிர வேறென்ன தெரியும் என்கிறார். அதாவது அலுவலகங்களுக்கு வேலைக்னுப் போகிற கீழ் மத்தியதரவர்ககப் பெண்களுக்கு குஷ்பு தருகிற மரியாதை இவ்வுளவுதான்.

வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சினிமாக்காரர்கள் பிற சமூகப் பிரிவினரை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்குச் சான்று மேலே கண்ட நிகழ்வுகள்.

பாய்ஸ் படத்தில் பெண்களைச் சித்தரித்ததற்காக எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் சும்மா ஓழுக்கக் கேட்டுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் மட்டுமல்ல. அந்தப் படத்தில் பையன்களின் கவனத்துககுள்ளாகிச் சித்திரிக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பெண்களுமே படுகேவலமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக மத்தியவயதுப் பெண்களும் தாய்மை எய்தியவர்களும் கடை கண்ணிகளுக்குப் போகிற நடுத்தரவர்க்கப் பெண்களும் அவமானகரமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது பிருஷ்டமும் மார்பும் விடலைப் பையன்களின போக்கிடமாகப் படத்தின் சகல காட்சிகளிலும் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. தன்மானமுள்ள எந்தப் பெணணுக்கும் அவர்களது உடலின் மீதான வன்மமான இந்த அத்து மீறல் கோபமூட்டக் கூடியது மட்டுமல்ல எதிர்த்து நிற்கக் கூடியதும்தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச்சார்ந்த மூதாட்டி பாப்பா உமாநாத்தும் பகுத்தறிவுவாதியும் மனிதஉரிமையாளரமான சரஸ்வதியும் இதனை எதிர்த்து செய்திருக்கும் நீதிமன்ற நடவடிக்கை தமது சுயமரியாதையின் பாற்பட்ட நடவடிக்கையாகும்.

வெறுமனே ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை இல்லை இது. பெண்நிலைவாத உணர்வுள்ளவர்கள் செய்யக் கூடிய சாதாரணமான எதிர்வினை இது.

பெண்களின் மீதான பாலியல் குற்றிச் செயல்கள் அதிகரித்திருக்கிற தமிழ்ச்சூழலில்தான் பாய்ஸ் படம் வந்திக்கிறது. இந்தக் குற்றச் செயல்களுக்கு ஒரு உளவியல் நியாயத்தை இந்தப்படம் வழங்குவது மட்டுமல்ல, இதற்கு தகவல் தொழில்நுட்ப ஊடகக் கலாச்சார உலகமயமாதலின் பின்னணியில் ஒரு தத்துவ விளக்கத்தையும் விவேக்கை விட்டுச் சொல்லியிருக்கிறார்கள் சுஜாதாவும் சங்கரும். மோஸ்தர் இன்டஸ்ட்ரி சேனல்களிலிருந்து நேச்சர் சேனல் வலை புணர்வதையே காண்பிக்கிறார்களாம். அதனால்தான் பையன்கள் கெட்டுப் போகிறார்களாம். படிக்காவிட்டாலும் கொஞ்நசாளில் உணர்ந்து திருந்தி எம்டிவி புண்ணியத்தில் பொளச்குக்குவாங்களாம். இந்த நபர்கள் சொல்கிற விசயத்தில் இந்த வியாபாரிகளே நேர்மையாக இல்லை. எந்த நீலப்படச் சேனல்களிலும் வருகிற காட்சி அசைவுகளையும் விட தீவிர அசைவுடனும் உடையமைப்புடனும் இந்தப் படத்தின் நடனக்காட்சிகள் இருக்கின்றன. குறிப்பாக பாய்ஸ் எம்டிவி பரிசு பெறும் நடனக்காட்சி. விவேக்கின் அட்வைஸ் இந்தக் காட்சிக்கும் பொருந்தும். பின்னே என்னாத்துக்கு பெற்றோர்களுக்கு அட்வைஸ் செய்து புணர்ச்சி பற்றி சுஜாதா அப்படி வனசம் எழுத வேண்டும். சங்கரும் சுஜாதாவும் பிடித்துக் காட்டியிருக்கிற காட்சிகளைப் பாரக்க இரண்டு காமாந்தகாரர்கள் சேர்ந்து நீலப்படம் எடுத்திருக்கிறது மாதிரி இருக்கிறது. இந்த லட்சணத்தில் விவேக்கை விட்டு அட்வைஸ் செய்கிறார்கள்-அட்வைஸ். பன்னாட்டு வங்கியில் வேலை செய்கிற விவேக் பன்னாட்டுக் கம்டபெனியான எம்டிவியில் அந்தப் பையன்களுக்கு எதிர்காலத்தையம் திறந்து விடுகிறார். படிப்புப் போனா மசிறாச்சு- குப்பத்துப் பையானயிருந்தால் என்ன கானாப் பாட்டாயிருந்தால் என்ன கஸ்டம்ஸ் ஆபிசர் பையனாயிந்தால் என்ன எல்லாரும் சேர்ந்து- எல்லாப் பாடல் வடிவங்களையும் சேர்த்து- மியூசிக் டரூப் அமைத்து ஜெயிக்கலாம் என்கிறார்கள் சுஜாதாவும் சங்கருடம். அதாவது பையன்கள் ஜெயிக்கிறதை நீதிபோதனையுடன சொல்லியிருக்கிறோம் என்கிறார்கள். சுஜாதா மாதிரி வர்க் கத்துப் பையனகள் ஐஐடியில் படித்து கம்ப்யூட்டர் இன்ஜினியர்களாக மத்தியதரவர்ககப் பையன்கள் எம்டிவியால் பலன் பெறுவார்கள் எனக் கதை விடுகிறார்கள்.

படம் சந்தேகமில்லாமல் ஸ்பைஸ் கேர்ள்ஸ், பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் என்று கீழ்மத்தியதரவர்க்க்திலிருந்து வந்து பணம் குவித்த பலரது திரைப்படப் பிரதிகளை கவனமாகப் பாரத்துப் பிரதி செய்திருக்கிறது.

ஆப்ரிக்க மக்களின் எதிர்ப்பிசையையும் ஹெர்லம் பாஷையையும் ஹாலிவுட் திருடி நீர்த் துப் போகச் செய்தமாதிரி, குப்பத்து மக்கள்ின் பாசையை அவர்களது இசையைத் திருடி சங்கரும் சுஜாதாவும் அதனை நீர்த்துப் போகச்செய்திருக்கிறாரகள் . ஐயப்பன் பாட்டும் நக்ஸலைட்டுகளுக்குப் பாட்டுப் போட்டுத் தருவதும் ஒன்றுதான் இவர்களுக்கு.. அதாவது கெரில்லாஸ் இன்த மிஸ்ட் பாடகர்களும் எமினமும் ஸ்பைஸ் கேர்ஸ்சும் ஒன்றுதான் என்கிறார்கள். கெரில்லாஸ் இன் த மிஸ்ட் பாடகர்கள் நிறவாதம் பற்றிப் பாடுகிறார்கள். எமினம் எழுதுகிற வார்த்தைகள் கவித்துவம் வாய்ந்தவை என்கிறார் அயர்லாந் தின் நோபல் பரிசுக் கவிஞுர் ஸீமஸ் ஹீனி. ஸ்பைஸ் கேர்ல்ஸ் உருவாக்கபட்ட பண்ட இசைச்குழு என்கின்றன அசலான பிரித்தானிய இசை விமர்சனங்கள். இவர்களுக்கிடையில் குண வித்தியாசங்கள் இல்லை என்கிறார்கள் சுஜாதாவும் சங்கரும் – சரியான வியாபாரிகள். பேட்டல் அட்ராக்ஸன் என்றொரு படம்வந்தது. அதில் குழந்தை ஆசை கொண்ட ஒரு விலைமாது குடும்பத்தைக் குலைக்கிறாள், கொலைகாரியாகிறாள் என்றொரு பாத்திரம் இருந்தது, இதனை எதிர்த்து பெண்நிலைவாதிகள் பேசினார்கள். விலைமகளிர் அமைப்புச் சேர்ந்தவர்கள் கண்டனக் குரல் எழுப்பினார்கள். ஆனால் புவனேசுவரி கேரக்டர் சித்திரிக்கப்பட்ட விதம் பற்றி தமிழகத்தில் யாரும் பேசமாட்டாரகள் என்று தைரியத்துடன் இறங்கியிருக்கிறாரகள் சங்கரும் சுஜாதாவும். புவனேசுவரி மீதான விபச்சாரத் தடுப்பு வழுக்கு இன்னும் தமிழக மக்களின் நினைவுகளில் இருக்கிறது. சமயோசிதமாக புவனேசுவரியை அந்தப் பாத்திரத்துக்குப் போட்டாருக்கிறார்கள். அதாவது விடலைப் பையன்கள் கூப்பிட்டனுப்ப கைக் குழந்தையுடன் வந்து அவர்களுடன் 10க்கும் 15க்கும் உடலுறவு கொள்ள பிரகாசமான உடையுடன் எந்தவிதமான குறைந்தபட்ச சங்கடமுமற்று விலைமாது வருகிறாராம். வுிலைமாதர்கள் குறித்த பார்வையென்பது இன்று மிகுந்த மனிதாபிமான உள்ளடக்கம் கொண்டதாக மாறிவருகிற காலத்தில் எத்துனை அறுவறுப்பாக அக்காட்சி சித்திரிக்கப்பட்டாருக்கிறது என்று பாருங்கள்.

இந்தப்படத்தின் மிகப்பெரிய பிரச்சினையே இப்படம் ஒற்றைப் பரிமாணம் கொண்ட வெகுதட்டையான படம் என்பதுதுான்.

எந்தவிதமான படைப்புத்தன்மையுமற்ற ஒற்றைத்தனமை கொண்ட சுஜாதா மற்றும் சங்கர் என்கிற இரண்டு உலகவயமாதல் பிரகிருதிகளின் நோக்கில் பையன்களள காமாந்தகாரர்கள் என மட்டுமே சித்தரித்த, அவர்களது நடவடிக்கைக்கு எதிர்வினைகளே காட்டாத பெண் கூட்டம் தமிழ் சமூகம் என்று சித்தரி த்த திமிர் கொண்ட படம்தான் இது. இவ்வளவு அயோக்கியத்தனங்கள் செய்கிறவர்கள் தமிழகத்தில் நிஜவாழ்வில் போலீஸ்காரர்களால் முட்டிக்கு முட்டி தட்டப்பட்டிருப்பாரகள். அல்லது அங்கங்கே பெண்களிடம் செருப்படியாவது வாங்கியிருப்பாரகள். அல்லது இவர்களில் சில அப்பாவிகளின் படங்கள் பத்தரிக்கைளில் வந்து நாறியிருக்கும். இத்தகைய பிற பரிமாணக்காட்சிகள் எதுவுமே இந்தப் படத்தில் இல்லை. ஏனெனில் இப்படியான எதிர்வினைகளுக்கு அவர்கள் உட்பட்டிருந்தால் இந்தப் பொடிப் பையன்கள் கதாநாயகன்கள் ஆகியிருக்க முடியாது. யோக்கியர்கள் ஆகியிருக்க முடியாது.

பொதுவாக அது பெத்தாம் பெரிய இலக்கியப் படைப்புக்கள் ஆனாலும் சரி ஐம்பது பைசாப் பத்திரிக்கையில் சுஜாதா எழுதி வெளிவந்த செக்ஸ் கதைகளேயானாலும் சரி அல்லது சின்னக்கதையாடல் எனும் பெயரில் வருகிற சாநியின் உன்னத சங்கீதம் மாதிரியான எழக்கியமும் சரி- பிரச்சினை என்று வந்து இவைகளை அணுகும்போது அந்தக் கதை நிகழும் காலத்திலும் புவிப்பரப்பிலும் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று பார்ப்பது மிக முக்கியமாகும். அமெரிக்கன் பை1- அமெரிக்கன் பை2- க்கு வைக்கிற மாதிரியான விவாதங்களை, அமெரிக்க விடலைப்பையன்கள் பால் வைக்கிற கண்ணோட்டங்களை ஒருவர் தமிழகத்து பாய்ஸ்சுக்கு வைத்துக்கொண்டு பேசமுடியாது. லோலிடாவை உல்ட்டா பண்ணிவிட்டு, ஈழப்பிரச்சனை பற்றி தத்துப்பித்தென்று உளறிவிட்டு சாநி மாதிரி சும்மாக் கதையடித்துக் கொணடிருக்கமுடியாது. தமிழ்நாட்டில் பொதுவாக பெண்களின் மீதான அணுகுமுறை அல்லது குறிப்பாக இளம்பெண்கள் மீதான புறவுலக நடவடிக்கைகள் எவ்வாறாக இருக்கிறது என்பதை வைத்துத்தான் பாய்ஸ் படத்தை அணுக வேண்டும்.

கொஞ்சும் திரும்பிப் பாருங்கள். சரிகா சா பிரச்சினை. அப்புறம ஈவ் டாசிங் தடைச் சட்டம். தமிழ் சினிமாப் பாடல்களில் இளம்பெண்களின் மீதான வன்முறை. இதுதான் நிகழ்கால தமிழ் நாடு.

ஓரே சமயத்தில் நடந்த நான்கு நிகழ்வுகளைப் பாருங்கள். முதலாவது சம்பவம் : சென்னை நகரத்தில் மாணவர்கள் பள்ளிக்கூட மைதானத்தில் குடித்தார்கள் அடாவடி செய்தார்கள் என பள்ளி நிர்வாகத்தினரால் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள். பள்ளியில் கழிபபறை வசதி கேட்டோம், ஊழலைத் தட்டிக் கேட்டு இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்தோம், அதனால்தான் எங்கள் மீது இந்த நடவடிக்கை என்கிறாா கள் மாணவர்கள். எக்காரணம் கொண்டும் பள்ளி நிர்வாகம் மாணவர்களை போலீசிடம் ஒப்படைக்க கூடாது என்கிறார்கள் கல்வியாளர்கள் வசந்தி தேவி , கோவை சர்வஜன உயர்நிலைப்பிள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியரும் ( என்து தலைமையாசிரியரும்) மேதையுமான எஸ்.எஸ்.ராஜகோபாலன் போன்றவர்கள். இரண்டாவது சம்பவம் : சென்னையில் பூங்காவில் உட்காரந்திருந்த மாணவியரும் அவர்களது ஆண் நண்பர்களும் போலீசினால் கைது செய்யப்பட்டு, பொது இடத்தில் அசிங்கமாக நடந்து கொண்டார்கள் என பத்திரி க்கையில் படம் போடப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறார்கள். இதற்கு எதிராக வழக்குரைஞுர்களும் பழைய போலீஸ் அதிகாரிகளும் சினிமாக் கவிஞுர்களும் பேசுகிறார்கள்.

மூன்றாவதாக ஒரு சம்பவம் : அவள் விகடன் (10 அக்டோபர் 2003 ) பத்திரிக்கையில் கல்லுாரி மாணவிகள் பாய்ஸ் பட சர்ச்சை தொடர்பாகத் தமிழக தணிக்கை அதிகாரியைச் சந்தித்து, சினிமாவில் தங்கள் மீதான பாலியல் வன்முறையை ஏன் மட்டற்று அனுமதிக்கிறீர்கள் எனக் கேள்வி கேட்கிறார்கள்.

தமிழக தணிக்கை அதிபாரியுடனான உரையாடல் இப்படித் தொடங்குகிறது : சாதி மதம் மொழி எதிலேயும் ( சமூகம்) எதிரப்புத் தெரிவிக்கத் தயங்குவதில்லை. ஆனால் சினிமா பெண்களை எவ்வளவு எவ்வளவு இழிவு படுத்தினாலும் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது அதே சமூகம். மூன்று மாணவிகளின் அபிப்பிராயங்களில் இருந்து மேற்கோள்கள்: (1).எந்த காலேஜில கதாநாயகனும் கதாநாயகியும் செஞ்சோடு நெஞ்சு இடிக்கிறாங் க ? யாரு தாவணியை உருவுறான் ? உருவிப் பாரக்கச் சொல்லுங்க. கை இருக்காது. சுினமாவில காலேஜ் ஸ்ரூடன்டுன்னா பொறுக்கியாதா இருக்கனுமா ? யாருமே ஒழுங்கா படிக்கமாட்டாங்களா ? (2). படம் எடுத்தவங்க தன்னோட அம்மா மகள் அக்கா தங்கச்சியோட படத்தப் பாரக்கணும். அப்புறம் படத்த ரிலீஸ் பண்ணட்டுமே. எத்தனை பொண்ணுங்க செத்தாலும் சமாதி கட்டி அது மேல உக்காந்து ஈவ்டாசிங் செய்வாங்க. இதையெல்லாம் அனுமதிக்கிறதுக்கு எதுக்கு சென்ஸார் போர்டு ? (3).பையன் பண்ணாமட்டும் ஈவ்டாசிங் இல்லை. அதைச் செய்யத் துாண்டுற மாதிரி படம் எடுத்தாலும் குற்றம்தான். வெளிநாட்டுல படம் பாரக்கிறது பாக்கெட் மணி. அங்க படம் பாக்கறது ஒரு குடும்பத்தோட சோறு. இதுவும் திருட்டுத்தான். கடுமையான சட்டம் போடனும். அதைக் கடைப்பிடிக்கனும். மனசுவலி சம்பந்தப்பட்ட விஷயம் இது.

நான்காவது நிகழ்வு: போடா சட்டம் எனும் பெயரில் அதனை ஆதரித்து இப்போது அதனால் நொந்து போயிருக்கும் வைகோ அப்புறமாகச் சொஞ்சம் தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழர் விடுதலை அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைது செய்திருக்கிறார்கள். நக்ஸலைட்டுகளை ஒடுக்க அத்வானி 2000 கோடி ருபாவில் திட்டம் போட்டிருக்கிறார். நக்ஸலைட் அரசியல்கொண்டவர்கள் அதியற்புதமான கலைஞர்களாகப் பாடகர்களாக இருந்து தாங்களே காஸட் போட்டு குறைந்த விலையில் விற்கிறார்கள். தாங்களே அதற்காள போலீசின் அடக்குமுறையையும் எதிர்கொள்கிறார்கள்.

பாய்ஸ் படத்திலும் கல்லுாரிப் பையன்கள் வருகிறார்கள். கல்லுாரி மாணவிகள் வருகிறார்கள். நக்ஸலைட்டுகள் வருகிறார்கள். போலீஸ்கள் வருகிறார்கள். ஈவ் டாசிங் வருகிறது. ஆனால் காணாமல் போயிருப்பது குறைந்தபட்ச வாழ்க்கையின் யதார்த்தம்.

இந்தப்படத்தில் சித்தரிக்கிற யதார்த்தத்தை எவரேனும் அதி யதார்த்தமென்றோ மாயா யதார்த்தமென்றோ கயிறு திரிக்கலாம். தளயசிங்கம்- ராஜநாயகம் பிரச்சனையில் கச்சை கட்டிக் கொண்டு தார்மீக நெறி பேசியவர்கள் தணிக்கை விதி பற்றிய விவாதங்களில் இங்கு அமெரிக்க தாராளவாதச் சர்ச்சைகளை இ டம் பெயர்த்து வைக்கலாம். ஹெரால்ட ராபின்ஸ் – சால் பெல்லோ என்று ஜல்லியடிக்கலாம். ஆனால் கல்லுாரி மாணவிகளும் பாப்பா உமாநாத் போன்ற மூதாட்டிகளும் வாசுகி போன்ற போராட்ட குணமுள்ள பெண்களும் சரஸ்வதியும் தங்களது வலியினின்று சீற்றம் கொள்கிறார்கள். வெளியிடத்தில் தங்களது உடல் மீது தொடர்ந்து இருந்து வரும் வன்முறைக்கு ஒரு தொடர் விளக்கமாகவும் கருத்துருவாகவும் இந்தக் குப்பைப் படம் அமைந்து விடுமோ எனப் பயம் கொள்கிறார்கள். ஆகவேதான் இந்தப் படத்திற்கு அவர்கள் எதிரப்புத் தெரிவித்திருக்கிறார்கள். உடல் மீதான வன்முறை சம்பந்தமான பிரச்சனையை வெறுமனே ஒழுக்கப் பிரச்சனையாகப் பாரக்கிறவர்களும் இருக்கிறார்கள். மதவழிப் பின்நவீனத்துவவாதிகளும் சின்னக்கதையாடல் பின்நவீனத்துவவாதிகளும் இப்படத்தை வெறுமனே ஒழுக்கம் சார்ந்த விவாதத்துக்கான பிரதேசமாப் பாரக்கிறார்கள். செக்ஸ் கல்விக்கரரர் மாத்ருபூதம் ஒரு பிஜேபிக்காரர் என்பது அதிகம் அறியப்படாத செய்தி. அவர் காமசூத்ரா நுால் வெளியீட்டு விழாவுக்குச் சென்றபோது பிஜேபி அரசியல்வாதிகள் காமாசூத்திராவைப் பரவலாக்க வேண்டும் என்றிருக்கிறார்கள். சமகாலத்தில் எய்ட்ஸ் வியாதியிலிருந்து விலைமாதர்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக யோனிப் புணர்ச்சி தவிர்த்து பிற வழிகளில் உச்ச இன்பம் அடைவது தொடர்பாக காமசூத்ரா நுாலை முன்வைத்து வகுப்பொன்றை கல்கத்தா விலைமாதர்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். எய்ட்ஸ் தடுப்பு காமசூத்ரா தொடர்பைக் கேள்விப்பட்ட அதே காலகட்டத்தில் ஸோர்போன் பல்கலைக் கழகத்தில் பின்நவீனத்துவ சிந்தனையின் அடிப்படையில் ஒரு பெண்மணி ஜோசியத்திற்காகக் கலாநிதிப்பட்டமும் பெற்றிருந்தார. சின்னக்கருப்பன் ரோஸா வசந்த் ஜெமோ போன்றவர்களின் பாய்ஸ் பட அபிப்பிராயங்களைப் பார்க்க இந்தச் செய்திகள் எல்லாமும் ஏனோ ஞுாபகம் வருகின்றது. பாமியன் புத்தர் சிலை உடைப்பிலிருந்து பூர்வீக இந்திய பாலுறவுப்பார்வை வரை கலாச்சாரச் சார்புடன் நியாயப்படுத்தத் தெரிந்த புத்திசாலி சின்னக்கருப்பனுக்கு இந்தப் பிரச்சனையை மனித உரிமைப் பிரச்சனையாக எடுத்தக்கொணடு பெண் சார்பு நிலையினி ன்று பாரக்கமுடியாமல் ஜூடோ கிறிஸ்டியன் மதிப்பீடுகள் என்று கதையடிப்பது அப்பட்டமான மோசடி.

கலாச்சாரச் சார்புவாதம் இவ்வகையில்தான் இடது வலது வித்தியாசங்களை இல்லாமலாக்குகிறது போலும்.

ஓரு மிக முக்கியமான கேள்வி : மற்ற தமிழ் படங்களில் இல்லாத விசயமா சங்கர் படத்தில் இருக்கிறது. ஏன் இவ்வளவு அலட்டிக்கொள்ள வேண்டும் என்றொரு கேள்வி. காதல் கொண்டேன் துள்ளுவதோ இளமை பட இயக்குளர் செல்வராகவன் ஒரு படி கொஞ்சம்மேலே போய், பையன்களின் பாலுறவு வேட்கை வெளிப்படையாக இருப்பதால்தான் அமெரிக்காவில் பாலியல் பலாத்காரமும் விபச்சாரமும் இல்லை என்று தத்துவமொன்று எடுத்து விடுகிறார். இந்த மாதிரி அறிவிலிகளை நினைக்க வேதனையாக இருக்கிறது. அமெரிக்க சர்ச்சுகளில் இருக்கிற கன்னியாஸ்திரிகளில் 90 சதமானவர்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் விபச்சாரமும் நீலப்பட வியாபாரமும் நிறுவனமயப்பட்டிருக்கிறது. அதிகமான இளவயதுக் குற்றவாளிகள் அந்த நாட்டிலேயே இருக்கிறார்கள். சிறுவர்கள் தண்டனையில் கொல்லப்படும் நாடாக அமெரிக்காதான் இருக்கிறது. தமிழ்ப்படங்களின் பிரச்சினையென்னவென்றால் பெற்றோர்களைவிட்டு அட்வைஸ் செய்கிற மாதிரிக் காட்சிகளை எடுத்துவிட்டு குடும்பப்படம் என்று சென்சாரை ஏமாற்றிச் சர்ட்டிபிகேட் வாங்கிவிட்டு எல்லோரையும் பார்க்க அழைக்கிற கயமைத்தனம்தான். இந்த கயமைத்தனத்தை திரைக்கதையமைத்த சுஜாதாவும் செய்திருக்கிறார். தமிழ் தெரியாத ஆந்திர சென்சார் போர்டுக்குப் படத்தைக் கொண்டு சென்ற சங்கரும் தாயரிப்பாளர் ரத்தினமும் செய்திருக்கிறாரகள். இந்தப்படத்தின் துணைத் தலைப்பாக பாய்ஸ் பர் கேள்ஸ் என்று இருக்கிறது. அப்படியானால் 18 வயதுக்கு மேலே இருக்கிற வாலிபப் பையன்களும் பெண்பிள்ளைகளும் பார்க்கிற மாதிரி வயது வந்தோர் சர்ட்டிபிகேட் வாங்கியிருக்கலாம். அதுதான் படைப்பாளிக்குரிய நேர்மையாக இருந்திருக்கும்.

லண்டனில் இந்தப் படத்தை விநியோகித்தவரகள் குடும்பத்துடன் வருகிற குழந்தைகளுக்கு இலவசம் என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள்.

இந்தமாதிரிப்படத்தை உங்களது மனைவியரும் மகள்களுமே பாரக்க முடியவில்லையென்றால் என்னத்துக்காக் குடும்பத்தவர்கள் அனைவரையும் காண அழைக்கிறீர்கள் என்பதுதான் கேள்வி. புவனேசுவரி சம்பந்தமான நீண்ட காட்சிகளில் வருகிற அனத்தல் சத்தங்களுக்கு ஒரு குழந்தை அர்த்தம் கேட்டால் குழந்தைகளை இலவசமாக அழைத்துவந்த விநியோகஸ்தருக்கு என்ன கேவலமான அனுபவம் கிடைக்கும் என நினைக்கவே அறுவறுப்பாக இருக்கிறது.

சில அபிப்பிரயாங்கள் பொருட்டுத்திப் பதில் தரத்தக்கவை. பக்கிங் என்ற சொல் நிக்கர் என்ற சொல் போன்றன சினிமாவில் பாவிக்கப்பட வேண்டும். அதன் மூலமே யதார்த்தம் கட்டமைக்கப்படமுடியும் என ஹாலிவுட்டில் ரொம்ப காலங்களுக்கு முன்பே ஒப்புக்கொண்டுவட்டார்கள். பல்ப் பிக்ஸன் ரிசர்வ் வயர் டாக்ஸ் போன்ற குவின்டன் டரான்டினோவின் படவசனங்கள் அதற்கு மிகச்சிறந்த உதாரணம். தமிழ் சினிமாவிலும் வக்கா தாயளி போன்ற சொற்கள் சத்யராஜ் படவசனங்களை கூர்ந்து கேட்பவர்கள் அறிந்திருகக் கூடியவை. பிராமணரான விஜயகுமாரின் மருமகனான ஹரி இயக்கிய சாமியில் விக்ரம் பேச ங்கோத்தா எனும் வசனம் வருகிறது. பாய்சிலும் சுஜாதா எழுதியிருக்கிறார். இந்த மாதிரி வசனங்களில் ஒரு புரட்சியும் இல்லை. பெரிய யதார்த்தமும் சித்திரிக்கப்படப் போவதில்லை. இந்த மாதிரியான வார்த்தைகளை வைத்துக்கொண்டு இவர்கள் உருவாக்குவதாகக் கதைகட்டுகிற யதாரத்தம் வியாபாரிகளின் யதார்த்தம். காசுபண்ணத்தெரிந்த புத்திசாலிகளின் யதார்த்தம் என்பதுதான் நாம் இங்கு சுட்டிக்காட்டுவது. தமிழகத்தில் தலித் பிரச்சனை இருக்கிறது. சினிமாவில் ஒரு தலித்தின் மீதான வன்முறையைக் காண்பிப்பதற்காக, ஒரு பிரக்ஞைபூர்வமான பிராமிணிய கருத்தியல் கொணட இயக்குனரின் படத்தில் வருகிற பிராமணப்பாத்திரமொன்று குறிப்பிட்ட தலித்தின் குறிப்பிட்ட சாதியின் பெரைச் சொல்லி துவேஷமான சொற்பிரயோகத்தை பாவிக்குமானால் அதனை மதிப்பிடுகளற்று அணுக நிச்சயமாகவே முடியாது. இதைப் போலத்தான் மின நீண்ட் வரலாறு கொண்ட சதை வியாபாரிகளான சங்கருடையதும் சுஜாதாவினதும் பெண் சித்திரிப்பை நாம் மதிப்பீடுகளற்று அணுகமுடியாது.

இதைப்போலவே பாலுறவும் வன்முறையும் சினிமாவில் வெளிப்படையாகச் சித்தரிக்கலாமா கூடாதா எனும் விவாதமும் இந்தப் படத்தைச்சுற்றி எழுந்திருக்கிறது. சித்தரிக்க வேண்டும். அதுவும் பொறுப்புடன் சித்தரிக்க வேண்டும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இருக்கமுடியாது.

உலக சினிமாவின் மேதைகள் ஒஸிமா, பெரட்டுலுாஸி, கென்லோச் போன்றவர்கள் வன்முறையையும் காதலையும் அதியற்புதமாகச் சித்தரித்திருக்கிறார்கள். பாலுறவில் சாசம் புரிந்த டா சேட் பற்றி குவில் என்றொரு படம் அழகியல் உணர்வுடன் தத்துவார்த்தக் கேள்விகளுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய சினிமாவில் கோவிந்த் நிஹ்லானியின் ஆக்ரோஷ் வன்முறையையும் பாலுறவையும் சித்தரித்திருக்கிறது. கேதன் மேத்தாவின் மாயா பாலுறலை நிர்வாணக் காட்சிகளுடனேயே சித்தரித்திருக்கிறது. மணிகெளலின் இந்தியன் எரோடிக் டேல் நிர்வாணத்தைச் சித்தரித்திருக்கிறது. ஆனால் அவை பாலுறவு, ஆதாரமாக எழுப்புகிற உளவியல் அறவியல் வேட்கை சார்நத விசயங்களை மிகமிக நேர்மையுடன் அலசுகிறது. இவர்கள் யாரும் சங்கர் சுஜாதா மாதிரி தமிழகத் தணிக்கைக் குழுவுக்குத தண்ணிகாட்டிவிட்டு, குடும்பத்தவர்களே வாருங்கள் என அழைக்கிற கயமைத்தனத்தைச் செய்யவில்லை. பாய்ஸ் படத்திற்குக் குறைந்தபட்சம் வயதுவந்தோர்க்கான சான்றிதழ் வாங்கியிருந்தால் எவரும் இந்த அளவுக்கு அலட்டிக்கொள்ளவே போவதில்லை. ஏனென்றால் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் ஓடிக்கொணடிருக்கிற மலையாள பலான படங்களுக்கு எதிராக யாரும் வழக்கும் தொடுக்காமலே வருசக்கணக்கில் அவைகள் ஓடிக்கொண்டிருக்கிறதை யோசித்துப் பார்த்தால் போதும், நாம் சொல்வது விளங்கும்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் பா.கிருஷ் ணசாமி அங்கீகரிக்கப்பட்ட தணிக்கை நிறுவனங்களுக்கு வெளியில் மககள் தணிக்கை அமைப்பை உருவாக்கப் போகிறேன். என்று சொல்வது சிலருக்குச் சட்டமீறலாகவும் தானே தான்றித்தனமாகவும் தெரிகிறது. படத்தை தமிழே தெரியாத ஆந்திரக் குழவினரைப் பார்க்கச் செய்து தணிக்கையாளர்களை புத்திசாலித்தனமாக ஏமாற்றிச் சான்றிதழ் பெறத் தெரிந்த சங்கரும் சுஜாதாவும் கணவான்களாகச் சமூகத்தில் திரிகிறபோது எவரிடம் சென்றுதான் மக்கள் முறையிடமுடியும். தணிக்கைக் குழவிற்குள்ளும் அரசியல் செல்வாக்குகள் மலிந்த சூழ்நிழலையில் தொடர்ந்து விகாரமாக-அவமானகரமாகச் சித்திரிககப்படும் சமூகப் பகுதிகள் குறித்த ஆட்சேபத்தை எந்த வழியில்தான் வெளிப்படுத்த முடியும் ? தேவர் சமூகத்தின் உடல் திமிரை பரவசத்துடன் திவான் படத்தில் சித்திரிக்கும் சரத்குமார் உடனடியாகவே கிருஷ்ணசாமிக்கு அதிரடியாப் பதில் தருகிறாரே அதில் அரசியல் இல்லையா ? பாய்ஸ் படத்தில் தணிக்கையின் போது வெட்டப்பட்ட காட்சிகள் மறுபடி தியேட்டர்களில் ஓடுவதைத் தடுக்க மாவட்ட போலீஸ் அதிகாரிகளால் முடியவில்லை. தணிக்கை அதிகாரிகளால் முடியவில்லை.அதாவது சமூகத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய மத்திய அரசினாலும் அது முடியவில்லை.மாநில் அரசினாலும் அது முடியவில்லை. இவ்வேளையில் விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகப் பேசுகிற ஒரு கட்சியின் தலைவர் ஏன் மககள் தணிக்கை அமைப்புகளைக் குறித்துப் பேசக்கூடாது. பா.கிருஷ்ணசாமி தொடங்கியிருக்கும் கலகம் மிகச் சரியான கலகம். அவரது அரசியல் குறித்த விமர்சனங்களைத் தண்டியம் அவரது நடவடிக்கை கலகத்தின் பின் பிறக்கும் நீதி நடவடிக்கையேயாகும். ஓரு வெகுஜன விவாதத்தைத் துாண்ட அவர் முயல்கிறார். ஒரு வெகுஜன ஊடகம் சார்ந்தவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பணர்வ குறத்து அவர் பேசுகிறார். ஆவரது செயல் காலம் கருதிய ஒரு செயலாகும்.

சங்கர் படங்களில் காமெரா கோணங்களும் பாடல் காட்சிகளும் பிரம்மாண்டமாக இருக்கும். அந்தப்பிரம்மாணடம் கூட இந்தப்படத்தின் காட்சிகளில் இல்லை. சங்கரினுடைய சில படங்களில் தனித்தனிக்காட்சிகள் சில பார்க்கத் தக்கதாக இருக்கும். உதாரணம் இந்தியன் படத்தில் வரகிற பச்சைச்கிளிகள் தோளோடு பாடல் காட்சி. அப்படியான காடசிகள் கூட இப்படத்தில் இல்லை. ரவி கே.சந்திரனின் கேமரா இருக்கிறது என யாரேனும் வலியுறுத்திச் சொன்னால் தான் ஞாபகம் வரும். சாபு சிரிலின் டப்பாக் குப்பைக் காட்சியும் அப்படித்தான். ரஜினிகாந்த்தை ஏன் குழந்தைகளுக்குப் பிடிக்கிறது என்றால் அவர் செய்கிற சேட்டைகள் கார்ட்டுன் பாத்திரம் போல இருக்கிறது என்று ஒரு நண்பர் விளகக்ம் சொன்னார். பொறுத்தமான பதில் என்றுதான் படுகிறது. அது போலவே சங்கர் படப் பாடல்களும் குழந்தைகளுக்குப் பிடிக்கிறது. ஏனென்றால் அமெரிக்க டாய்ஸ் வகைப்படங்களில் வருகிற மாதிரி யானை புலி சிங்கமெல்லாம் அவர் படங்களில் வரும. அப்படியான மிருகங்கள் இந்தப்படத்தில் குறைவு என்பது சோகம். அதற்குப் பதிலாகத்தான் பாய்சின் சேட்டைகளே இருக்கிறது என சங்கர் விட்டு விட்டார் எனவும் கொள்ளலாம். சாதாரணமாக சங்கர் படங்களுக்கு இந்தச் சரக்குகளை எதிர்பார்த்துச் செல்கிறவர்கள் கூட ஏமாந்து போயிருக்கிறார்கள். சங்கர் படத்திற்கு 18 கோடி செலவு செய்திருக்கிறார் என்கிறார்கள். தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம் பாவம் என்று சொல்கிற சினிமா பட்ஜெட் சூட்சமம் தெரிந்தவர்களை இப்போது நிறையப் பார்க்க முடிகிறது.

ஜனநாயக மாதர்சங்கச் செயலாளரும் பாய்ஸ் படத்தின் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறவருமான வாசுகி- சமூகப்பொறுப்புள்ள இயக்குனர் சங்கர் இந்தமாதிரிப் படமெடுத்திருக்கிறரே என அங்கலாயத்திருப்பதில் அர்த்தமேயில்லை. தமிழ்சினிமாவில் கொஞ்சமும் பொறுப்பேயில்லாத சிரழிவுச்சினிமாக்காரர் ஒருவர் இருக்கிறரென்றால் அவர் சங்கர்தான். ஜென்டில்மேனில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பிராமணப்பார்வை,இந்தியனில் பிரபல அரசியல்வாதிகள் தவிர்த்த நடுத்தரவர்க்க அதிகாரிகளைக் கொல்லும் தனிநபர் பாசிசம்,முதல்வனில் பாமரமனிதனின் கனவு நிசைவேற்றக் கூத்து என அர்த்தமற்ற குப்பைகளே அவர் படங்கள். ஆசான் எஸ்ஏ.சந்திரசேகரனிடம் கற்றுக்கொண்ட குப்பகைளை அகன்ற திரையில் பிரம்மாண்டமாகச் சொன்னவைதான் சங்கரின் படங்கள். சந்திரசேகரனின் சட்டம் ஒரு இருட்டறையின் நீட்சியானதுதான் சங்கரின் போலி அரசியல் படஙுகள்.

சங்கரின் ஆசான் சந்திரசேகருக்கு சுஜாதா போன்ற தொழில்நுட்பம் மற்றும் வரலாறு தெரிந்து சுத்துமாத்துச்செய்யும் புத்திசாலி அருகில் இல்லை என்பதுதான் வித்தியாசம்.

இறுதியாக மக்கள்-அரசியல்வாதிகள்-தணிக்கைநெறிகள்-படைப்புச் சுதந்திரம் போன்று விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் நமக்கு முன் இருக்கிறது.

==

yamunarn@hotmail.com

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்