பழைய இலைகள்…

This entry is part [part not set] of 26 in the series 20011015_Issue

சேவியர்.


ஏதேனும் வேண்டும் என்றால்
என் கரம் கோர்த்து
புருவங்களைப் பிதுக்கி கண்களால் கேட்பாய்…
உன் உதட்டில்
பிரமிப்பின் புன்னகையைப் பிடித்து வைக்க
எனக்குப் பிடிக்காததையும் வாங்கித்தருவேன்…

யாருமே இல்லாத மாலைப்பொழுதுகளில்
சீண்டாதீர்கள் என்று சிணுங்குவாய்…
முரணாய் பேசி முரண்டு பிடிப்பாய்,
புாிந்துகொண்டு
முத்தமிட்டு மூச்சுப்பெறுவேன்.

கால்வலிக்கிறது என்பாய்…
கண்ணில் தூசி என்பாய்…
புதிதாய் வாங்கிய மாலையைப் பார் என்பாய்…
நமக்கிடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்க
நீ இடும் அறிக்கைகள் இவையென்றறிந்து…
காற்று காயம் படும் இறுக்கத்தில்
கட்டிக் கொள்வேன்…

இப்போதும்
மங்கலாய்க் கசியும் நினைவிடுக்குகளில்
உன் குரல் கேட்காமலில்லை…
‘மாறிவிட்டேன் ‘ என்ற ஒற்றைச்சொல்லில் என்னை
தூக்கிலிடும் முன், என்
கடைசி ஆசையை மட்டும்
நீ கேட்கவேயில்லை.

கேட்டாலும் சொல்வதற்கு என்ன இருக்கிறது
நீ – எனும் சொல்லைத் தவிர.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்