தேசியக் கொடியின் மீது காலடித் தடங்கள்

This entry is part [part not set] of 26 in the series 20011015_Issue

ஆஞ்சீ மின்


செப்டெம்பர் முதல் தேதி 1984-ம் ஆண்டு நான் அமெரிக்கா வந்தேன். என் வயது அப்போது இருபத்தி ஏழு. நான் மனப் பாடம் செய்து வைத்திருந்த சில ஆங்கில வார்த்தைகளை உபயோகித்து , சியாட்டிலில் குடியேற்ற அதிகாரியிடம் கேட்டுக் கொண்டேன்: ‘இன்னும் 3 மாதத்தில் நான் ஆங்கிலம் கற்றுக் கொள்ளவில்லையென்றால நானே முன்வந்து என்னை வெளியேற்றிவிடுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். ‘

என் பாஸ்போர்ர்டில் அவர் முத்திரையிட்டபின்பு சிகாகோவை நோக்கி நான் பறந்தேன். அங்கே சிகாகோ கலைப் பள்ளியில் நான் சேர்த்துக் கொள்ளப் பட்டிருந்தேன். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த என் நண்பருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். எனக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது என்று அறிந்தவுடன் கலைப் பள்ளியினர் என்னை இல்லினாய் பல்கலைக் கழகத்திற்கு மொழி கற்றுக்கொள்ள அனுப்பி வைத்தனர். அதன் பின்பு சில மாதங்களுக்கு நான் ஆங்கிலம் பேசக் கற்றுக் கொண்டேன்- ‘கடுகுத்தெரு ‘ (குழந்தைகள் கார்ட்டூன் படம் – மொ பெ) , ஓப்ரா வின்ஃப்ரீ (விசுவின் அரட்டை அரங்கம் போன்றது. நடத்துபவர் ஒரு கறுப்புப் பெண்மணி – மொ பெ) போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து. பெண்களின் உள்ளாடைகளில் ரோஜாக்களை வரைந்தும், சீன உணவு விடுதி ஒன்றில் பணிப் பெண் வேலை பார்த்தும் நான் சாப்பாட்டுக்குச் சம்பாதித்தேன்.

என்னுடன் அறையில் வசித்தவள் ஆலிஸ் என்ற பெண். மிசிசிபியிலிருந்து வந்தவள். மருத்துவத்துறைக்கு முன்படிப்புப் படித்தாள். நான் பேசாமல் இருப்பதைப் பற்றி அவள் கவலைப் படவில்லை. எனக்கும் சேர்த்து அவளே நிரம்பப் பேசினாள். ஒரு நாள் நான் உள்ளூர் செய்தித்தாளில் குடியரசுத் தலைவர் ரேகனைப் பற்றி படித்துக் கொண்டிருக்கும் போது அவள் அலறினாள்; ‘ரேகன் ஒரு நாய். புரிகிறதா உனக்கு ? ‘ நான் என் நாற்காலியிலிருந்து குதித்து எழுந்து சுற்றுமுற்றும் பார்க்கலானேன். இது மாதிரி சீனாவில் மாவோ பற்றி ஏதும் கூறியிருந்தால் சிறைக்குப் போகவேண்டியிருக்கும்.

மாவோவின் காலாசாரப் புரட்சி சமயத்தில் தான் இளமைப் பருவம் எய்திய காலம். ஒன்பது வயதிலிருந்தே நான் செங்காவலர் படையில் இருந்தேன் – அடி உதைக்குத் தப்பிக்க ஒரே வழி அது தான். என் பெயரை எழுதக் கற்றுக் கொள்ளும் முன்பேயே நான் மாவோவின் பெயரை எழுதக் கற்றுக் கொண்டிருந்தேன். நூற்றுக் கணக்கில் மாவோவின் படங்களையும் நான் ஊர்வலங்களுக்காக வரைந்திருக்கிறேன். மாவோவின் போதனைகளைப் பின்பற்றி, எழுபதுகளில் நான் மூன்று வருடங்கள் உழைப்பு முகாமில் இருந்தேன். அங்கே தான் நான் ஷாங்காய் திரைப் பட ஸ்டுடியோவினரால் கண்டெடுக்கப் பட்டேன். என்னுடைய பாட்டாளித் தோற்றத்தினால் – நைந்த முகமும் , உறுதியான உடம்பும் தான் – மாவோவின் மனைவியின் பிரசாரப் படங்களில் முன்னணி நடிகையானேன். அவளுடைய வீழ்ச்சிக்குப் பிறகு, நான் அரசியல் ரீதியாய்க் குப்பையாகிப் போனேன். ஸ்டுடியோவில் செட் அமைக்கும் வேலையில் தினமும் 14 மணி நேர வேலை. எட்டு வருடங்கள் அதில் கழித்தபின்பு மிகத் தீவிரமாக நான் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

அமெரிக்கா வந்து எட்டு மாதங்களுக்குப் பின்பு நான் கலைப் பள்ளியில் பயிலத் தொடங்கினேன். உணவு விடுதி வேலையும் தொடர்ந்தது. மாணவர் கண்காட்சிச் சாலையிலும் வேலை செய்யலானேன். ஒரு காட்சிப் பொருளாக அமெரிக்கக் கொடி கீழே விரிக்கப் பட்டிருந்தது. அதற்கு மேல் மூன்றடி உயரத்தில் ஒரு குறிப்புப் புத்தகம் வைக்கப் பட்டிருந்தது. அந்தக் குறிப்புப் புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்றால் , பார்வையாளர்கள் கொடியின் மீது நடக்க வேண்டும். கொடியின் மீது காலடிச் சுவடுகள் பதியத் தொடங்கின.

என் வேலையை நான் சரியாகச் செய்யவில்லை என்று எனக்கு உறுத்தல். என் மேல் சட்டையைக் கழற்றி கொடியைத் துப்புரவாகத் துடைத்தேன். அடுத்த பார்வையாளர் வந்த போது, ‘ஜாக்கிரதை, கொடியின் மீது நடக்காதீர்கள் ‘ என்று பணிவாய்த் தெரிவித்தேன்.

இரண்டு வாரம் கழித்து, அந்தக் கலைஞர் தன் படைப்பைப் பார்வையிட வந்தார். கவனமாய் நான் காலடிச் சுவடுகளைத் துடைத்து வைத்திருப்பது பற்றி அவரிடம் தெரிவித்த போது அவருக்கு வந்ததே கோபம். கொடியின் மீது மக்கள் நடக்க வேண்டும் என்பது தான் அவருடைய நோக்கம் என்று தெரிவித்தார். எனக்களுக்குள் வாக்கு வாதம். நான் அமெரிக்காவிற்கு நன்றிக் கடன் பட்டிருப்பதாய்த் தெரிவித்தேன். அமெரிக்கா எனக்கு இடம் அளித்திருக்காவிடில் நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என்று சொன்னேன்.

அமெரிக்கக் கொடி எவ்வளவு மோசமான விஷயங்களின் குறியீடு என்று எனக்குத் தெரியவில்லை என்று அவர் தெரிவித்தார். ஆங்கிலம் சரியாகக் கற்று, இந்த நாடு தன் மக்களுக்கும், மற்ற மக்களுக்கும் என்ன செய்திருக்கிறது என்று புரிந்து கொள்ளுமாறு என்னைக் கேட்டுக் கொண்டார்.

என் மண்டையில் வெள்ளமாய்ப் புரண்டு வரும் சீன மொழி வார்த்தைகளுக்கு இணையான சொற்கள் எனக்கு ஆங்கிலத்தில் அப்போது கிடைக்க வில்லை.இருபது வருடம் முன்பு அவர் இப்போது செய்ததையே நானும் செய்தேன் என்று அவரிடம் சொல்ல விரும்பினேன். அமெரிக்கர்களை வெறுக்க எனக்குக் கற்பிக்கப் பட்டிருந்தது. அமெரிக்கக் கொடியை நான் எரித்திருக்கிறேன். கர்ப்பிணி வியத்நாமியப் பெண்களின் கண்களை அமெரிக்கர்கள் குத்துவது போலத் திரைப்படத்தில் பார்த்திருக்கிறேன். எனக்கு 11 வயதான போது என் அன்பிற்குரிய ஒரு ஆசிரியரை அமெரிக்க உளவாளி என்று குற்றம் சாட்டியிருக்கிறேன். என் இளமை வருடங்களில், ஒரு வைக்கோல் உருவத்திற்கு அமெரிக்க ஹெல்மட் அணிவித்திருக்கிறேன். சீனத்தின் மண்ணில் அமெரிக்கக் காலடி பட்டாற்போல போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தோம்.

என கலைப் பள்ளியில் இருபதாம் நூற்றாண்டு அமெரிக்கக் கலை வகுப்பில் ஆண்டி வார்ஹோல் தீட்டிய மாவோ படங்களைக் காண்பித்த போது நான் யோசித்தேன்: இந்த தேசத்தில் ஏதோ தவறு இருக்கிறது. 100 கோடி சீனர்கள் மாவோ படம் வரைந்த பட்டன்களை சட்டையில் கழற்றிக் கொண்டிருந்தார்கள். மாவோவின் படத்தை சுவர்களிலிருந்து அப்புறப் படுத்திக் கொண்டிருந்தார்கள். தம் பேச்சுகளிலிருந்து மாவோவின் மேற்கோள்களை அப்புறப் படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனல் அமெரிக்கப் பள்ளி ஒன்றில் ஏன் மாவோவின் படங்களை ஸ்லைட் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

வகுப்பு முடிந்தபின்பு பல நாட்கள், நான் உணவு விடுதிக்கு வேலைக்குச் சென்றேன். அதன் உரிமையாளர் , நான் வேகமாய் நடந்தால், ‘இங்கே என்ன நெருப்புப் பிடித்திருக்கிறதா ? ‘ என்பார். மெதுவாய் நடந்தால் ‘சோம்பேறியாய் இருப்பதற்காகவா உன்னை வேலைக்கு வைத்திருக்கிறேன் ? ‘ என்பார். ஒரு நாள் மாலை ‘ நான் வேலையை விட்டு விலகிக் கொள்கிறேன் ‘ என்று சொன்னேன்.

கம்யூனிஸ்ட் இயந்திரத்தில் நான் ஒரு திருகாணி இல்லை என்ற உணர்வு மெதுவாகத் தான் எனக்கு வந்தது. தனி மனுஷியாக என்னைக் காணும் பிரக்ஞை தான் அமெரிக்கக் கலையின் சாராம்சம் என்று நான் உணரத் தொடங்கினேன். வார்ஹோலின் புகழ் பெற்ற மாவோ தொடர் கேள்வி கேட்பதாய் உணர்ந்தேன்: ‘ மாவோவை உருவாக்கியது யார் ? ‘

ஒரு வருடம் முன்பு ‘டைம்ஸ் மேகஸின் ‘ என்னை ஒரு அமெரிக்க எழுத்தாளராய்ச் சித்தரித்தது. என் அப்பாவிடம் அதைக் காட்டிய போது அவர் பிரமாதமாய்ப் புன்னகை செய்தார்.அவரைப் பொறுத்தவரை, தன் மகள் ஒரு வழியாய்க் கடைசியில் பயத்திலிருந்து விடுதலை பெற்றதாய் இது அர்த்தமாயிற்று. அவர் சொன்னார் : ‘ ஆஞ்சீ, நீ இப்போது சீனா பற்றி எழுதத் தயார் ஆகி விட்டாய். ‘

Series Navigation

ஆஞ்சீ மின்

ஆஞ்சீ மின்