பரிமளவல்லி 25. திருத்தங்கள்

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

அமர்நாத்


25. திருத்தங்கள்

வெள்ளிக்கிழமை காலை நான்குமணிக்கே சோமசுந்தரம் எழுந்தார். கிளம்புவதற்குமுன் கண்ணாடியில் பார்த்துக்கொண்டார். பிரும்மசாரியான வாழ்க்கையிலும், அளவான சாப்பாட்டிலும் பருக்காத உடல். இருந்தாலும், பொதுமக்கள் நலத்தில் நிபுணரான அவர், மனிதனுக்கு நோய் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று அறிவார். அதற்காக அவர் கவலைப்பட்டது இல்லை. இதயத்தாக்குதலிலோ, கார்விபத்திலோ, பறவைகள் அல்லது கால்நடைகளிடம் இருந்து மனிதனுக்குத் தாவிய வைரஸினாலோ பட்டென்று வாழ்க்கை முடிந்தால் நல்லதுதான் என நினைத்திருக்கிறார். ஒருவாரமாக, அரசின் அட்டவணைகளில் சிகரெட் குடிக்காத, குண்டுபோடாத ஒருஆணுக்குத் தரப்படும் எண்பத்திஇரண்டு ஆண்டுகளையும் தாண்டி வாழ்ந்தால் தவறில்லை என மனதை மாற்றிக்கொண்டார். அப்படி வாழ்வதற்கு சரவணப்ரியாவின் உதவி இருந்தால் எவ்வளவு நல்லது? அது எதுவானாலும் சரி, அவள் ஒருத்தி உலகில் இருப்பதே அவருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
வீட்டிலிருந்து கார் நகர்ந்ததும் அவர் சிந்தனைகள் பின்னோக்கிச் சென்றதால் அவர் செல்லவேண்டிய இடத்திற்கு அது தானாகவே செல்வதுபோல் தோன்றியது. சரவணப்ரியாவுக்கு அகல்விளக்கின் ஆங்கில எழுத்துப்படியை அனுப்பியபிறகு அவளிடமிருந்து மின்-தபால் வருகிறவரையில் அவருக்கு தவிப்பு அடங்கவில்லை. என்ன வேலையற்ற வேலை என்று தள்ளிவிடுவாளோ என்ற அச்சம் ஒருபக்கம். படித்துவிட்டு சரி என்றால் அதைசாக்கிட்டு அவளுடன் தொடர்பை வளர்க்கலாம் என்ற நம்பிக்கை மறுபக்கம். ஒருவாரம் வேறெதிலும் மனம் படியவில்லை.

காலை எட்டுமணிக்குள் வீட்டுவேலைகள் முடிந்து பரிமளாவும் சரவணப்ரியாவும் வெளியேசெல்லத் தயாரானார்கள்.
மாடியின் நடைவழியில் புடவையணிந்த சரவணப்ரியா. ஆதை கவனித்த பரிமளா, “உனக்கு ஜோடியா நானும் கட்டிக்கலாம்னா, நான் புடவை எடுத்துண்டு வரலை” என்றாள்.
தன்அறைக்குள் சென்று சரவணப்ரியா ஒரு அலங்காரப்பையுடன் வந்தாள். “நீ இங்கே வந்ததுக்கு ஞாபகார்த்தம். நாளைக்கு நீ கிளம்பறதுக்கு முன்னே குடுக்கணும்னு இருந்தோம். இன்னைக்கும் நல்லநாள்தான்.”
அதில் ஒருபுடவையும், அதற்கேற்ற ஒருரவிக்கையும், பாவாடையும். புடவையை எடுத்துப் பிரித்தாள் பரிமளா. செந்தூரச் சிவப்புப்பட்டு. மெல்லிய கோடுகளும் பார்டரும் கடல்வண்ணனின் நீலத்தில். பார்க்கும் இடமெங்கும் நவீனபாணி கிளிகளும் மயில்களும் ஜரிகையில் கொஞ்சிவிளையாடின. “புது டிசைன்லே நன்னா இருக்கு.”
“போன வருஷம் வாங்கிட்டு வந்தது.”
“கட்டிண்டதும் நான் பெருமாளை சேவிக்கணும்.”
“நான் எங்கவீட்டு சன்னதிலே விளக்கேத்தறேன்” என்று சரவணப்ரியா கீழே சென்றாள்.
புதுப்புடவையில் பரிமளா சேவித்ததும் சரவணப்ரியா, “புடவை உனக்கு நல்லா இருக்கு” என்றாள்.
“தாங்க்ஸ். புடவையைக் கட்டிக்கறப்போ மட்டுமில்லை, எப்பவுமே எனக்கு உங்க ஞாபகம் இருக்கும்” என்று அவளைக் கட்டிக்கொண்டாள்.
“ஆயிஷாவை ஏர்போர்ட்லேர்ந்து அழைச்சிட்டுவர இன்னும் ரெண்டுமணி இருக்கு. அதுவரைக்கும் என்ன செய்யலாம்?” என்ற சரவணப்ரியாவின் கேள்விக்கு பதில்சொல்வது போல் அவள் அலைபேசி ஒலித்தது. அதை எடுத்துப் பிரித்தாள்.
“ஹலோ சோமசுந்தரம்! நீங்க எழுதினதைப் படிச்சுப் பாத்திட்டேன்னு உங்களுக்கு நேத்து ஈ-மெயில் அனுப்பியிருந்தேனே.”
“வந்துது, சரவணப்ரியா. அதுக்குத்தான் இப்போ கூப்பிட்டேன்.”
“என் கருத்துகளை எழுதி வச்சிருக்கேன். உங்களுக்கு அனுப்பறதுக்கு முன்னாடி கொஞ்சம் விளக்கம் தந்தா நல்லதுன்னு தோணிச்சு. இப்போ சொல்லலாமா?”
“Nஃபான்லே எதுக்குங்க? நேராகவே சொல்லலாம்.” ‘நேராகவே’ என்பதற்கு விளக்கம் தொடர்ந்தது. “நான் காலைலே நாஷ்வில் வந்து ‘செவன்த் இன்’லே தங்கியிருக்கேன். உங்க இடம்தான் எனக்குத் தெரியுமே. அங்கே வந்து பாக்கறேன். பேசினபிறகு மதியம் வெளியே சாப்பிடப் போகலாம்.”
“வெள்ளிக்கிழமை நான் வேலைக்குப் போறது இல்லையே.”
“அப்படியா?” என்று ஏமாற்றத்தில் குழம்பினார்.
“நான் எப்படியும் வெளியே போகணும்னு இருக்கேன். இன்னும் அரைமணிலே ஹோட்டல் வாசலுக்கு வரேன். பத்தரைக்குள்ள பேசி முடிச்சிட்டா சரி.”
“தாங்க்ஸ், சரவணப்ரியா!”

செவன்த் இன் நுழைவாயிலைப் பார்த்தபடி கார் நின்றது.
“நீங்க ரெண்டுபேரும் சுத்தத்தமிழ்லே உரையாடும்போது சமஸ்க்ருதத்துக்கு என்ன வேலை? கார்லியே உக்காண்டிருக்கேன்” என்று பரிமளா விலகிக்கொண்டாள்.
“தனியாவா?”
“என்ன பயம்? போரடிச்சா ஒரு சுடோகு.”
பரிமளா முன்-இருக்கையின் முதுகை சாய்த்து கால்களை நீட்டினாள். பலநாட்களுக்குப் பிறகு இன்றுதான் அவள் வெளியே காலடிவைக்கிறாள். புதிதாகப் பார்ப்பதுபோல் எல்லாம் எத்தனை அழகு! ஒருசில மரங்களில் ஏற்கனவே புது இலைகளும், புது மொட்டுக்களும். அவளைப்போல இயற்கையும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. சரவணப்ரியா காரில் இருந்து இறங்கி நடக்கிறாள். சூரியன் பிரகாசமான ஒளிக்கதிர்களை அவள்மேல் வீசுகிறான். பாதங்களை ஊன்றி உடலை வீணாகக் குலுக்காத நேரான நடை. கல்லூரியில் அவள் நடையைப் பார்த்து ‘ஷீ வாக்ஸ் இன் பியுடி’ என்று சாமி மயங்கிப்போயிருப்பான். விடுதியின் முகப்பைத் தாண்டியதும் அவளுக்காக பிரிந்த கதவுகளுக்கிடையே நுழைகிறாள். அவளைப் பார்த்ததும் சோஃபாவில் அமர்ந்திருந்த சோமசுந்தரம் எழுந்துவந்து கைகூப்புகிறார். சரவணப்ரியாவும் மறுவணக்கம் செய்திருக்க வேண்டும். ஜன்னலை ஒட்டிய மேஜையில் அமர்கிறார்கள்.
சரவணப்ரியா கைப்பையிலிருந்து ஒரு காகிதக் கற்றையை எடுத்து மேஜைமேல் வைக்கிறாள். அதை விவாதிக்கப் போகிறார்கள். ஆனால், சோமசுந்தரம் அதற்காக மட்டும் வந்ததாகத் தோன்றவில்லை. மெனக்கெட்டு ஷிகாகோவிலிருந்து இவ்வளவு தூரம் வருவதற்கு வேறொரு நோக்கம் இருக்கவேண்டும். அவளிடம் எதையோ எதிர்பார்க்கிறார். பத்தூ என்னிடம் வாடகைக்கு அறை கேட்கவில்லையா? அதுமாதிரி இருக்கும். இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தாள், வேடிக்கையாக இருந்தது. பத்தூவுக்கு அதிகாரம் செய்யும் ஒருமனைவி. சோமசுந்தரம் தனிக்கட்டை. பத்தூவை என்வாழ்வில் சேர்ப்பதற்கு நான் யோசிக்க வேண்டாம். ப்ரியாவுக்கு அன்பான கணவன். அவள் என்ன சொல்வாள்?
பத்தூவின் புதுப்பிக்கப்பட்ட உறவு அவள் வாழ்வில் ஒரு திருப்பம். அன்பைப் பகிர்ந்துகொள்ள ஒரு உயிர். அவள் புளியோதரையை அனுபவித்துசாப்பிட ஒரு ரசிகன். தொலைக்காட்சியில் விளையாட்டுகள் பார்க்கும்போது ‘கோச்’சின் உத்தி சரியில்லை என்று குறைசொன்னால் அதை மறுப்பதற்கு இன்னொரு குரல். முதல்புத்தகம் எழுதியபோது ஸ்ரீஹரிராவுடன் அவள் பலமுறை விவாதித்தது உண்டு. அவருக்கு நேரப் பற்றாக்குறை, காத்திருந்து குறிப்பிட்ட நேரத்தில்தான் அவருடன் பேசமுடியும். அதுவும் தொலைபேசியில், அது நேரில் பேசுவதுபோல் ஆகுமா? சந்தேகங்களை உருவாக்க புள்ளியியலைத் தவறாகப் பிரயோகிப்பது பற்றி அடுத்த புத்தகம் எழுதும்போது பத்தூவின் உதவி கிடைக்கும். பத்தூ பக்கத்தில் இருந்தால் பத்து வருஷம் வேண்டாம், இரண்டுமூன்றிலேயே முடித்துவிடலாம்.
நாஷ்வில்லில் இன்னும் ஒருநாள்தான். அவள் எண்ணங்கள் சான்டா க்ளாராவிற்குத் தாவின. அவளை அழைத்துப்போக அனிடா விமானநிலையத்திற்கு வருவதாகத் தெரிவித்தபோது பரிமளா தன்னுடைய காரையே எடுத்துவரச் சொன்னாள். போகும்வழியிலேயே கடையில் நிறுத்தி அனிடாவின் உதவியுடன் வீட்டிற்கு வேண்டிய பால், காய், பழங்கள் வாங்கலாம். அவளிடம் விவரிக்க ஏகப்பட்ட விஷயங்கள் சேர்ந்துவிட்டன. முக்கியமாக அவளுக்கு பத்தூவைப்பற்றிச் சொல்லவேண்டும். பத்தூ ஞாயிறுமாலை சாக்ரமென்ட்டோவிலிருந்து வந்தால் வீட்டிற்கு அழைத்து அனிடாவுக்கு அறிமுகம் செய்யலாம்.
சோமசுந்தரமும் ப்ரியாவும் பேசி முடித்துவிட்டார்கள். செவன்த் இன்னிலிருந்து வெளியே வந்த அவள்முகத்தில் சிந்தனையின் ஆழம். பரிமளா தான் எதிர்பார்த்தது நடந்தது என நினைத்தாள். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை.

இருவர் தோற்றங்களிலும் மாறுதல்கள். சோமசுந்தரத்தின் ஜெனிவா பல்கலைக்கழகம் பெயரிட்ட காலர்வைத்த சாதாரண வெள்ளைச்சட்டையில் அதிகார தோரணை இல்லை. முன்பு காட்டிய மரியாதையை இனி தரவேண்டாம் என்று அவர் சொல்வதுபோல் சரவணப்ரியாவுக்குத் தோன்றியது. தலைக்குக்குளித்து இலேசாகக்கட்டிய கூந்தல். இலைப்பச்சை பார்டருடன் செந்தாமரையின் சிவப்பில் பட்டுப்புடவை. சரவணப்ரியா ரவிவர்மாவின் ஓவியத்தை நினைவுக்குக் கொண்டுவந்தாலும் படங்களில் இருப்பதைவிட அவளுக்குத் திட்டமான உருவமென்று சோமசுந்தரம் நினைத்தார்.
“எப்படி இருக்கீங்க? சரவணப்ரியா! முன்னே பாத்ததுக்கு இளைச்சிட்ட மாதிரி தெரியுது.”
“நான் சொல்லப்போறது தெரிஞ்சா, என்னை இப்படி அக்கறையா கேக்கமாட்டீங்க” என்று அவள் சிரித்தாள். “வேடிக்கை பாத்தீங்களா? ரெண்டு வாரத்துக்கு முன்னே நான் எழுதின க்ரான்ட் அப்ளிகேஷனை நீங்க மதிப்பிட்டீங்க. இப்போ நம்ம ரோல் மாறிட்டுது.”
“நீங்க சொல்றது ரொம்ப சரி.”
உரையாடலில் கனம் சேர்க்க சரவணப்ரியா முகத்தை ‘சீரியஸாக’ வைத்தாள்.
“எப்படி சொல்றதுன்னு தெரியலை. மனசிலே பட்டதைச் சொல்லலாமா?”
“நமக்குள்ள ஒளிவுமறைவு என்னத்துக்கு?”
“அமெரிக்க ஆசிரியைகள் சொல்றமாதிரி உங்க முயற்சிலே நீங்க முன்னேற இடமிருக்கு.” அவர் அந்த வார்த்தைகளை ஜீரணிக்குமுன், “நிறையவே இடமிருக்கு” என்று சேர்த்தாள். தன்முன்னிருந்த காகிதங்களைப் பார்த்துப் படிப்பதுபோல் பேசினாள்.
“வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்த்திருக்கீங்க. மு.வ.வை ஆங்கிலத்திலே படிக்கிறமாதிரி இருக்கு. அகல்விளக்கு அவரோட சுயசரிதைன்னு நினைக்கிறேன், அடர்த்தி அதிகம். கதையோட்டத்திற்காக பொருள்செறிந்த இடங்களை தெளிவுபடுத்தறதிலே தப்பு இல்லை. வேலய்யன் மாதிரி நீங்களும் வாழ்க்கைலே உழைச்சு முன்னேறினதா சொன்னீங்க. உங்க சொந்தஅனுபவம் அதிலே வெளிப்படணும். அப்பத்தான் புதியபடைப்பைப் படிக்கிற உணர்வு வரும்.
“முக்கியமா நீங்க வாக்கிய அமைப்பிலேயும், பொதுவா பேச்சுவழக்கிலே பயன்படுத்தற சொற்றொடர்களிலேயும் கவனம் செலுத்தணும். முதல் நாலுபக்கங்களை கொஞ்சம் மாத்தி எழுதியிருக்கேன். அதைக் கவனத்திலே வச்சிட்டு மத்ததையும் பலமுறை திருத்தியெழுதினா உங்களுக்கே படிக்க சுலபமா இருக்கும். ஆறுமாசம் கழிச்சுப் பாத்தீங்கன்னா இவ்வளவு முன்னேற்றமான்னு பிரமிப்பா இருக்கும்.”
கடுமையான விமரிசனத்தைச் சொல்லியாகி விட்டதென அவரை ஏறிட்டுப்பார்த்தாள். அவர் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டோமா என்று சந்தேகத்தில், “நான் வெளிப்படையா சொன்னதிலே ஏமாத்தம் இல்லையே?” என்று கேட்டாள்.
“நீங்க வழிகாட்டினா ஆறுமாசம் என்ன? ஆறுவருஷம்கூட முயற்சி செய்வேன்.”
அந்த வார்த்தைகளில் ஏதோ மறைபொருள் இருந்ததாக சரவணப்ரியாவுக்கு உறைத்தது. அது என்னவென்று அவள் மேலும் யோசிப்பதற்குள், “நான் சொல்லப்போறதை நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீங்க. இருந்தாலும் அதிர்ச்சியா இருக்காதுன்னு எனக்கொரு நம்பிக்கை” என்ற முன்னுரையுடன் ஆரம்பித்தார்.
“சுத்திவளைக்காம கேட்டுடறேன். என்னுடைய வாழ்க்கையின் கடைசி கட்டத்துக்கு நீங்க வழிகாட்டியா இருக்கமுடியுமா? அப்படியொரு கட்டத்தை, உங்களை நேர்ல பாக்கறவரைக்கும், யோசிச்சது இல்லை. தெம்பு இருக்குறவரைக்கும் ஜெனிவா காலேஜ்லே இருந்துட்டுப் போயிடலாம்னுதான் நினைச்சிட்டிருந்தேன். உங்களை சந்திச்சதிலேர்ந்து வாழ்க்கைலே வேற ஒண்ணு மிச்சமிருக்குன்னு நினைக்க ஆரம்பிச்சிருக்கேன். நீங்க தவறா நினைக்கக் கூடாது. உங்க பேரை க்ரான்ட் அப்ளிகேஷன்லே பாத்து கூப்பிட்டதிலும், கண்ணப்பனாருக்கும் எனக்கும் இருந்த நெருக்கத்தை உங்ககிட்ட சொன்னதிலும், அவர் படத்தை உங்ககிட்ட கொடுக்க காபி எடுத்ததிலும் எனக்கு உள்ளர்த்தம் எதுவும் கிடையாது. அவர்மேலே எனக்கிருந்த மரியாதைனாலேதான் செய்தேன். உங்களை நேர்லே பாத்ததும், எப்பவோ ஒருதடவை பேச்சுவாக்கிலே, ‘நீதான் என்னோட ரெண்டாவது பொண்ணுக்கேத்தவன்’னு கண்ணப்பனார் சொன்னது ஞாபகம் வந்தது. அதிலேர்ந்து கண்ணப்பனார் சொன்னதைக் கேக்காமே வாழ்க்கையை வீணடிச்சிட்டோமேன்னு ஒரே வருத்தம். நான் என்ன செய்யறது, சொல்லுங்க!”
தவிப்பு அவர்சக்திக்கு மீறியது என்பதுபோல் சொன்னார்.
அவர் பேசியபோது ஜன்னலுக்கு வெளியே பார்வையை வைத்திருந்த சரவணப்ரியா அவர்பக்கம் திரும்பினாள். “இப்படி திடீர்னு நீங்க கேக்கறதுக்கு என்னபதில் சொல்றதுன்னு தெரியலை.”
“எனக்கு சொல்லணும்னு தோணித்து, சொல்லிட்டேன். சொல்றதுக்கு எனக்கு நெருங்கினவங்கன்னு யாருமில்லை. இருபது வருஷத்துக்கு முந்தி இந்தியாவிலே மனiவியைப் பிரிஞ்சு இங்கே வந்தேன். பையங்க ரெண்டுபேருக்கும் அவங்க சொந்த வாழ்க்கை. மனசிலே வச்சிட்டு ஆற்றாமைப்படறதுக்கு பதிலா நேர்லியே சொல்லிட்டேன். நீங்க என்ன நினைச்சாலும் சரி. இனிமே உங்களை சந்திக்கக் கூடாதுன்னு சொன்னாலும் ஏத்துக்கறேன். உங்க வார்த்தைக்கு மதிப்பு தர்றது என்கடமை.”
“நீங்க இவ்வளவு மனப்பூர்வமா சொன்னதை மறுக்கத் தோணலை. யோசிக்க நேரம் வேணும்.”
“நிச்சயமா. ஒருநாளிலே எடுக்கற முடிவு இல்லை இது.”
“எப்போ திரும்பிப் போறீங்க?”
“ஞாயிறு மதியம் ஃப்ளைட்.”
“அதுக்குமுன்னே நான் கூப்பிடறேன்.”
“நானும் நீங்க சொன்னபடி எழுத முயற்சி செய்யறேன்” என்று அவள் மேஜைமேல் வைத்த காகிதங்களை எடுத்துவைத்துக் கொண்டார்.
மெதுவாக எழுந்தார்கள். சோமசுந்தரம் சரவணப்ரியாவுடன் வாசல்வரை வந்தார். இனி பேசுவது எதிரான பலனை விளைவிக்கும் என மௌனமாக கையசைத்தார். அவள் கதவைத்தாண்டிச் சென்றதும் அவருக்கு சொல்ல விழைந்ததை சொல்லிவிட்ட நிம்மதி. ஒரேயடியாக, இந்தவயசிலே இதெல்லாம் என்ன வேண்டாத விருப்பம் என்று அவள் அலட்சியம் செய்யாததால் அவர் நம்பிக்கை இழக்கவில்லை.

வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆயிஷாவுக்காகக் காத்திருப்பது ஹிக்கரிக்கு பழகிவிட்டது. இந்தமுறை உயர்மாடிக் கட்டடத்தின் வாசலில் அல்ல, மிசஸ் நாதன் இல்லத்தின் வரவேற்பறையில். நான்குமணிக்கு ஆயிஷா மாடியிலிருந்து இறங்கிவர காத்திருந்தான். அங்கிருந்த சோஃபாவில் உடலைக் குறுக்கிக்கொண்டு எத்தனையோ தடவை சூரனுடன் அரட்டை அடித்தது நினைவுக்கு வந்தது.
அவன் புதன்கிழமை இரவே நாஷ்வில் வந்துவிட்டான். நல்ல செய்தியை நேரில் சொல்லவேண்டாமா?
“நீங்கள் கோர்ட்டுக்கு வரவேண்டாம், மிசஸ் நாதன்! எதிர்க்கட்சி வக்கீல்கள் சமரசமாகப் போய்விட்டார்கள்.”
“கேட்க சந்தோஷம். ஏன்?”
“காரணம் எதுவானால் என்ன? அவர்களோடு பேரம்பேச நான்தான் சென்றேன். வேலையில் நீக்கப்பட்ட எட்டுபேரையும் திரும்ப எடுத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் நூற்றைம்பதாயிரம் டாலர் சன்மானம் தரவேண்டும். அத்துடன் வேலைநடக்கும் இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட மாறுதல்களையும் செய்ய உடன்பட்டார்கள்.”
“உனக்கு வெற்றிதான். ஆனால் ப்ரூவர் பாட்ஸ{க்கு திருப்தியா?”
“அவர்களை விட்டிருந்தால் முடிவு வேறாக இருந்திருக்கும். நான் உங்கள் விருப்பப்படிதான் வழக்கை முடிக்கவேண்டும் என்று கண்டிப்பாகச் சொன்னேன்.”
“தாங்க்ஸ், ஹிக்!”
படியில் காலடிச்சத்தங்கள் கேட்டு ஹிக்கரி எழுந்து நின்றான். முதலில் சரவணப்ரியாவும், பரிமளாவும் வந்து நின்றார்கள். பிறகு, விலகி பின்னால் மறைந்திருந்த ஆயிஷாவை வெளிப்படுத்தினார்கள். ஹிக்கரி வைத்தகண் வாங்காமல் அவளைப் பார்த்தான். அவள் கூந்தலை இரு கூறுகளாக்கிப் பின்னியிருந்தார்கள். முகத்தின் அலங்காரத்தை வெட்கம் மிகைப்படுத்தியது. ரோஜாவின் நிறத்தில் பட்டு சல்வார் கமீஸ். அதன் உடலெங்கும் நூலிழையில் வேலைப்பாடு. பாதங்களில் ஜரிகைவைத்த செருப்புகள்.
ஹிக்கரி அருகில்சென்று அவள் கையைப்பற்றி அதில் முத்தமிட்டான். “நாம் இதுவரை சந்தித்ததாக நினைவில்லை. என் பெயர் ஹிக். இன்றைய மாலைப்பொழுதுக்கு வேறுதிட்டம் இல்லையென்றால் உன்னை என்வீட்டிற்கு அழைத்துப்போக விரும்புகிறேன்” என்றான்.
“நான் எங்கும் செல்வதாக இல்லை. உன்னுடைய அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன்.”
“ஹிக்! இப்படிப்பட்ட அழகான பெண் கிடைப்பதற்கு நீ நிறைய அதிருஷ்டம் செய்திருக்க வேண்டும்.”
“அதில் உங்கள் உதவியும் அடங்கி யிருக்கிறது, மிசஸ் நாதன்!”
ஆயிஷாவிடம், “தைரியமா போ! ஹிக்கரியின் அம்மாவுக்கு சூரனைப் பிடிக்கும். அவனோட போட்டி போட்டதாலேதான் ஹிக்கரி நல்லாப் படிச்சான்னு சொல்வாங்க. அவன்மாதிரி தான் நீயும்னு சொல்லியிருக்கேன். உன்னைப் பாத்ததும் அவங்களுக்கு பிடிச்சுடும்” என்றாள்.
“ரொம்ப தாங்க்ஸ், ஆன்ட்டி!”
ஆயிஷாவின் கரத்தைப்பற்றி ஹிக்கரி காருக்கு அழைத்துச் சென்றான்.
“என்ன பொருத்தமான ஜோடி! உங்களுக்கெல்லாம் ஹியுஸ்டனுக்கு ஒரு ட்ரிப் இருக்கு” என்றாள் பரிமளா.
சரவணப்ரியா ஓய்வுக்காக அங்கிருந்த சோஃபாவில் சாய்ந்தாள். கண்கள் சிலநிமிடங்கள் மூடின. திறந்தபோது, “ஏன் என்னமோமாதிரி இருக்கே? எங்கிட்டேர்ந்து எதாவது தொத்திண்டிருக்கப் போறது” என்றாள் பரிமளா அக்கறையாக.
“உன்கிட்டேர்ந்து தொத்திண்டிருக்கேன். வியாதியையில்லை. எதிர்காலத்திலே என்ன செய்யறதுங்கற கேள்வியை.”
அதற்கு அவள் விளக்கம் சொல்லுமுன் தொலைபேசி விட்டு விட்டு அடித்தது. அலுவலக அறைக்கு விரைந்தாள்.
“ஹாய், சாரா! நான் லிசா க்ராஃப்ட். எப்படி இருக்கிறாய்?”
“மிக நன்றாக. நீ?”
“ஆயிஷாவைப் பார்த்ததும் மயங்கிவிட்டேன். ராஜகுமாரி மாதிரி அத்தனை அழகு!”
“ராஜகுமாரனுக்கேற்ற இளவரசி.”
அந்தப் புகழ்ச்சியில் லிசாவுக்கு வாயடைத்துவிட்டது. சிறு யோசனைக்குப் பிறகு, “இன்றுமாலை, நாங்கள் ஆயிஷாவை இந்திய உணவகத்துக்கு அழைத்துச்செல்ல விரும்புகிறோம். உன் சிபாரிசு என்ன?” என்றாள்.
“ஆயிஷாவுக்கு ஷாலிமார் உணவகம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.”
“சாம், நீ, இருவரும் கூடவந்தால் எங்களுக்கு இன்னும் சந்தோஷமாக இருக்கும். முன்னறிவிப்பு இல்லாமல் அழைப்பதற்கு நீ மன்னிக்கவேண்டும்.”
“பரவாயில்லை. எங்களுடன் இன்னொருவர் வரலாமா?”
“தாராளமாக. நான் ஆறரைக்கு உங்கள் வீட்டிற்கு ‘சியரா’ வானில் வருகிறேன். அதில் ஏழுபேர் தாராளமாக உட்காரலாம்.”
“தாங்க்ஸ் லிசா! பை!”

ஷாலிமாரிலிருந்து வீடுதிரும்ப ஒன்பதரை ஆகிவிட்டது. ஐந்துசுற்று சாப்பாட்டிலும், ஆயிஷாவுக்குக் கண்ணீர் வரும்வரை செய்த கேலியிலும் நேரம்போனதே தெரியவில்லை. “இன்றே கடைசி” என்று சொல்லியபடி மிச்சமிருந்த கிளின்டாமைசினை பரிமளாவிடம் ஊற்றிக்கொடுத்தான் சாமி.
குடித்துமுடித்து, “அப்பாடா!” என்று பெருமூச்சுவிட்டாள்.
பரிமளாவின் இலேசான கைப்பை தவிர, கணினி உள்பட கையில் எடுத்துவந்த எல்லா சாமான்களையும் இரண்டு பெட்டிகளிலே நிரப்பி சாமி கீழே எடுத்துச்சென்றான்.
பத்தூ அழைத்தபோது, “வெள்ளிக்கிழமையாச்சே. இப்போ நீ சாக்ரமென்ட்டோ போகவேண்டாமோ?” என்று ஞாபகம்வைத்து பரிமளா கேட்டாள்.
“அங்கேர்ந்துதான் கூப்பிடறேன். இன்னிக்கி மூணுமணிக்கே வேலைலேர்ந்து கிளம்பிட்டேன். எல்லாம் ரெடி பண்ணியாச்சா?”
“ம்ம். நான் கனமா எதையும் தூக்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார். அதனாலே, இந்த தடவை சாமியே ‘பேக்’ பண்ணினான்.”
“நாளைக்கு எத்தனை மணிக்கு வரே?”
“பத்தே முக்கால்.”
“நான் கார்த்தாலே இங்கேர்ந்து கிளம்பி ஏர்போர்ட்டுக்கு வரேன்.”
“நீ எதுக்கு அனாவசியமா அலையணும்? அனிடாவே என்னை அழைச்சிண்டு போறேன்னு சொல்லியிருக்கா.”
“அட்டைமாதிரி ஒட்டிண்டு அவ உன்னை விடமாட்டா போல இருக்கு.”
“ஆச்சரியமா இல்லை? என் ஸ்டூடன்ட்ஸ்லே ஒருத்தியா இருந்தவ ஒரேநாளிலே அந்தரங்க சினேகிதி ஆயிட்டா.”
“பாய்-ஃப்ரென்ட் கிடைச்சதும் உன்னை அம்போன்னு விட்டுடுவோ. அவ கிடக்கட்டும். உன்னைப் பாக்க வர்றது எனக்கொரு அலைச்சலா? நான் கட்டாயம் வரேன். அனிடாவைக் கூப்பிட்டு வராதேன்னு சொல்லிடு!”
“சொல்றேன். உன்னை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கறது? பெரிசா பூச்செண்டு எடுத்துண்டு வரப்போறியா?” என்று கேலியாகச் சிரித்தாள்.
“உன்னை சமாதானப்படுத்த வாங்கிண்டுவந்தேன். இப்போ எதுக்கு?”
“உன் படத்தை ஈ-மெயில்லே அனுப்பேன்!”
“அதுக்கு நேரமில்லை. நான் கோர்னேல் டி-சட்டைலே வரேன். என்னைத்தவிர ஒருத்தனும் அதைப் போட்டுண்டு அங்கே வரமாட்டான்.”
“அங்கே இருக்கறச்சே ‘ஸ்மால்’லேர்ந்து ‘மீடியம்’ போனே? இப்போ என்ன சைஸ்?” என்றாள் அக்கறையாக.
“கேக்காதே! எக்ஸ்ட்ரா லார்ஜ். பாதிநாள் வெளிலே சாப்பாடு. என்ன கிடைக்கிறதோ அதைத் திங்கணும். காலோரி கணக்கெல்லாம் பாக்கமுடியாது. சரி, எந்த ஏர்லைன்?”
“சௌத்வெஸ்ட்.”
“செகுரிடியைத் தாண்டினதும் ஒரு புக்-ஷாப். அங்கே காத்திண்டிருக்கேன். ஏர்போர்ட்லேர்ந்து அப்படியே லஞ்ச் சாப்பிடப்போவோம். பக்கத்திலே எந்த ரெஸ்டாரன்ட் நன்னா இருக்கும்?”
“லோடஸ்-ஈடர்ஸ்.”
“ட்ரிங்க்ஸ் கிடைக்குமா?”
“நான் வாங்கினதில்லை. மத்தவா குடிக்கறதைப் பாத்திருக்கேன்.”
“உனக்கொரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்.”
“என்ன சர்ப்ரைஸ்?”
“சொல்லிட்டா அப்புறம் எப்படி சர்ப்ரைஸ்? உன்வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி.”
“ஹின்ட் கொடு!”
“இருபது வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை ஞாபகப்படுத்தும்.”
படுத்ததும் பின்னுக்கும் முன்னுக்குமாக பரிமளாவின் மனம் அலைந்தது. பழக்கப்பட்டுவிட்ட அறை. நோயிலும் பிறகு உடல் தேறியபோதும் சாட்சியாக நின்ற அதன் சுவர்கள். க்ளின்டாமைசினைக் கஷ்டப்பட்டு முகத்தைச் சுளித்து தினமும் மூன்றுதடவை குடித்ததை வேடிக்கை பார்த்த ஜன்னல்கள். மறுநாள் எல்லாவற்றையும்விட்டு விலகிச்செல்ல வேண்டுமா என்றிருந்தது. அதே சமயத்தில் இருபது நாட்களாகப் பார்க்காத தன் வீட்டிற்குள் உடனே நுழையவேண்டுமென்ற ஆவல் மேலிட்டது. விரைவிலேயே மனம் அமைதியடைந்தது. இரண்டு வாரங்களுக்கு முன் தூக்கத்திற்குத் தவமிருந்ததுபோல் இந்தமுறை தவிக்கவில்லை.

Series Navigation