படைப்பின் வன்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue


சொல்புதிது (ஏப்ரல்-ஜூன், 2003) இதழில் எம். வேதா என்பவர் எழுதியதாகப் பிரசுரிக்கப்பட்டுள்ள ‘நாச்சார் மட விவகாரங்கள்’ என்ற ‘சிறுகதை’ மிக மோசமான தனிமனித அவதூறாக உள்ளது. கீழே கையொப்பமிட்டுள்ள எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களாகிய நாங்கள் அதைக் கண்டிக்கிறோம்.

படைப்பைத் தனிமனிதத் தாக்குதல்களுக்கான ஆயுதமாகப் பாவிப்பது மிகவும் கண்டனத்துக்குரியதொரு வன்முறை. தனிமனிதர்களை இழிவுபடுத்த படைப்பிலக்கிய வடிவங்களைப் பயன்படுத்துவது அரசியல் நடவடிக்கையல்ல, அது பயங்கரவாத நடவடிக்கையே என்பதை இலக்கியத்தின் அரசியல் குறித்து அறிந்துள்ள நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஒருவரை விமர்சனம் செய்ய எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. விமர்சிக்கப்படும் அந்த நபர் தனது தரப்பு விவாதங்களை முன்வைக்கும் வாய்ப்பை மறுத்து அவரைக் கேவலப்படுத்துவதொன்றையே குறிக்கோளாகக் கொண்டு அதற்குப் புனைவு வடிவைக் கைக்கொள்வது ஜனநாயகப் பண்பாகாது.

புனைவின் வழி ஒருவரை விமர்சிக்கும்போது அதனால் பாதிக்கப்படுகிறவர் சட்டபூர்வமாகத் தனக்கான பரிகாரங்களைத் தேடுவதிலிருந்து தடுக்கப்படுகிறார்.

சட்டத்துக்குப் புறம்பான, சட்டத்துக்கு அப்பாற்பட்ட (புனைவு) வடிவத்தைத் தனது வன்முறை நடவடிக்கைக்குப் பயன்படுத்தும் ஒருவர் எதிராளியையும் அதேவிதமான சட்டத்தை மீறிய வன்முறையில் ஈடுபடும்படி நிர்ப்பந்திக்கிறார். இதுதான் பயங்கரவாதத்தின் அடிப்படை.

தனிநபர்களை விமர்சிக்க, பழித்துரைக்க கவிதை, சிறுகதை வடிவங்களைப் பயன்படுத்தும் போக்கு தமிழில் இருந்தேவந்துள்ளது. அவ்வப்போது அது விமர்சிக்கவும்பட்டுள்ளது. ஆனால் எல்லை மீறிய வக்கிரமும், மன விகாரமும் சொல்புதிது ‘சிறுகதை’யில் வெளிப்பட்டுள்ளன. சிறுகதை என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள அது படைப்பிலக்கியத் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் அவமானப்படுத்துவதாக உள்ளது.

சொல்புதிது ‘சிறுகதை’ யாரைத் தனது பயங்கரவாதத்தின் இலக்காகக் கொண்டுள்ளது என்பதோ அதை எழுதியது யாரென்பதோ முக்கியமல்ல. அதில் வெளிப்படும் வெறுப்பும் வன்மமும் ஆபாசமும் அது ஒரு இலக்கியப் படைப்பு அல்ல என்பதைத் தெளிவுபடுத்திவிடுகின்றன என்பதும்கூட இங்கு முக்கியமல்ல. எழுத்தைப் பயங்கரவாதத்திற்கான கருவியாகக் கொள்வது இனிமேலும் அனுமதிக்கப்படக்கூடாது என்பதே முக்கியம். இதுவே நாங்கள் வலியுறுத்த விரும்புவதாகும்.

இலக்கியத்தின் தார்மீகங்களும் நெறிமுறைகளும் ஜனநாயகப் பண்புகளும் காப்பாற்றப்படுவதன் வாயிலாகவே இலக்கியவாதிகள் தம்மைக் காத்துக்கொள்ள முடியும். விமர்சனத்தின் இடத்தில் பயங்கரவாதத்தை வைக்க ஒருபோதும் நாம் இடந்தரலாகாது. எனவே, சொல்புதிது தனது செயலுக்குப் பகிரங்கமாக, உடனடியாக, எழுத்துபூர்வமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்கள்:

1. பிரபஞ்சன்

2. ஞானக்கூத்தன்

3. ஆர். ராஜகோபால்

4. ஆ. ராஜமார்த்தாண்டன்

5. அழகியசிங்கர்

6. பெருமாள் முருகன்

7. சிபிச்செல்வன்

8. க.வை. பழனிச்சாமி

9. பி. எழிலரசி

10. சே. பிருந்தா

11. ரவிசுப்பிரமணியன்

12. தேவி பாரதி

13. ஆ. சுகுமார்

14. சக்தி அருளானந்தம்

15. அ.மு. கான்

16. சி. கணபதி சுப்ரமணியன்

17. பிரம்மராஜன்

18. பி.ஏ. கிருஷ்ணன்

19. சத்தியப்பிரியன்

20. யூ. தங்கராஜ்

21. சூரியநிலா

22. பெ. அய்யனார்

23. களந்தை பீர் முகம்மது

24. ந. முருகேச பாண்டியன்

25. சல்மா

26. கவிதா

27. அரவிந்தன்

28. கனிமொழி

29. மு. முகம்மது சிராஜுதீன்

30. ராஜ்கெளதமன்

31. தோப்பில் முகம்மது மீரான்

32. மாலதி மைத்ரி

33. யூமா வாசுகி

34. க. பஞ்சாங்கம்

35. சிபி சரவண குமார்

36. மகுடேசுவரன்

37. ஆர்.பி. சக்ரபாணி

38. நஞ்சுண்டன்

39. ரோஜா குமார்

40. உமா மகேஸ்வரி

***

காலச்சுவடு அனுப்பிய சுற்றறிக்கை.

***

Series Navigation

செய்தி

செய்தி