பக்கத்து வீட்டு ப்ளாண்டும், பத்மாவும் :

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

கே ஆர் விஜய்


அமெரிக்க ப்ளாண்டு(blonde) பெண்கள் பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம் இரண்டே இரண்டு விஷயங்களே. ஒன்று பார்ப்பதற்கு மிக மிக அழகாக இருப்பார்கள். இன்னும் ஒருபடி மேலே சொல்வதென்றால் – பிரம்மன் சிரமப்பட்டு செதுக்கிய சிலை. இரண்டாவது – வேகமாக கார் ஓட்டி போலீஸிடம் அதிகமாக மாட்டிக் கொள்வது ப்ளாண்ட் பெண்களே.

அது சரி ப்ளாண்ட் பெண்கள் என்று எப்படி அடையாளம் காண்பது ? ரொம்ப சிம்பிள்! தலைமுடி கோல்டன் கலரில்(ப்ளாண்ட் ஹேர்) இருக்கும். அவ்வளவே.

இப்படிப்பட்ட அழகான ஒரு ப்ளாண்ட் பெண் என் அபார்ட்மென்ட் அருகிலே வசித்து வந்தது நான் செய்த – அல்லது என் தாத்தாவோ , கொள்ளுத்தாத்தாவோ, எள்ளுத்தாத்தாவோ செய்த புண்ணியத்தின் பூரண பலன் என்று தான் சொல்ல வேண்டும்.

பெயர் – ஜெசிகா. வயது – 22. படிப்பு – 8 வது கிரேடு தாண்டவில்லை. அழகு – கொள்ளை அழகு. ஆண் தோழர்கள் – சனிக்கிழமைக்கு மட்டுமே.

ஒவ்வொருமுறை பக்கத்துவீட்டு ப்ளாண்ட் பெண்ணைப் பார்க்கும் போதும் எனக்கு பத்மாவின் நினைவு தான் வரும். அதே நடை, அதே சிரிப்பு, அதே வசீகர பார்வை எல்லாம் பத்மாவைப் போலவே இவளுக்கும்… சின்ன வித்தியாசம் என்னவென்றால் பத்மா என்னிடம் வழிய வழிய வந்து பேசுவாள் – ஜெசிகாவோ என்னைப் பார்த்தால் ஒரு சின்ன புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு உடனே மறைந்துவிடுவாள்

முதல் ஒரு மாதம் முழுவதும் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டாலும் எங்கள் சந்திப்பு ஒரு சின்ன புன்னகைக்கான அந்த ஒரு சில வினாடித்துளிகளுக்கு மேல் நீடித்ததில்லை. ஒருநாள் ஜெசிகா உடற்பயிற்சி செய்வதற்காக ‘ஜிம் ‘ போவதைப் பார்த்தபின் அன்றிலிருந்து நானும் வழக்கமாக ‘ஜிம் ‘ செல்ல ஆரம்பித்தேன். முதலில் டிரட் மில்-லில் 10 நிமிடம் ஓடிவிட்டு பெஞ்ச் பிரஸோடு சேர்த்து மொத்தம் 20 நிமிடத்தில் என் உடற்பயிற்சி முடிந்துவிடும். அன்று அவள் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்க.. நான் ‘சானா பாத் ‘ எடுப்பதற்காக அந்த மரப் பெட்டி அறைக்குள் சென்றேன். சானா பாத் – கூலாங்கற்களை சூடுபடுத்தி அதிலிருந்து வரும் நீராவியில் குளிப்பது. ஸ்டாம் பாத்தின் ஒரு வகை. அறிவியல் பூர்வமாகச் சொல்வதானால் வியர்வைச் சுரப்பிகளின் வேலைத் திறனை அதிகரித்து உடம்பிலிருந்து அதிகபட்ச வியர்வையை வெளியேற்றும் ஒரு வகைக் குளியல்.

ஐந்து நிமிடத்திற்கு மேலாகக் கண் மூடி உட்கார்ந்திருக்க அந்த அறைக்குள் ஜெசிகாவும் நுழைந்தாள். இருவரும் தனித்தனியே ஒவ்வொரு மூலையில் உட்கார்ந்திருந்தோம். அந்தத் தனிமையை போக்குவதற்காக மெல்ல அவளிடம் பேச்சுக் கொடுத்தேன்.

எக்ஸ்க்யூஸ்மீ ! நம்ம அபார்ட்மென்ட்ல இருக்க நீச்சல்குளம் எப்ப திறப்பாங்க ?

பொதுவாக ‘மெமோரியல் டே ‘ அன்று திறப்பாங்க என்று அவள் சொன்ன பதிலின் ஒரு வார்த்தை கூட என் காதில் விழவில்லை என்றால் அதில் கொஞ்சம் கூட மிகையில்லை. அத்தோடு நிறுத்தாமல் அவள் மேலும் இந்த வருடம் குளிர் காலம் அதிக நாட்கள் தொல்லைப் படுத்திவிட்டது. இன்னும் ஆங்காங்கே பனி பெய்து கொண்டிருக்கிறது. ஏதோ ஓரிரண்டு தினம் மட்டும் தான் சூரியன் வந்து போகிறது என்று சொல்லிக் கொண்டே போக அவள் உதட்டசவை மட்டும் உற்று நோக்கிக் கொண்டிருந்தேன்.

புன்னகைத்து மட்டுமே வந்த அந்த வசீகர சுந்தரி என்னிடம் முதன் முறையாக பேசியது என்னை மிகவும் பரவசப்படுத்தியது. அன்று வீட்டிற்கு வந்து பால் பாயாசம் செய்து நான் மட்டும் தனியே சாப்பிட்டேன். நீண்ட நாட்களாக புத்தக அலமாரியின் ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்த என் டைரியின் ஒரு பக்கத்தை முழுக்க எழுத்துகளால் நிரப்பினேன்.

அடுத்த நாள் – அதே மாலை வேளை – அதே ஜிம் – ஆனால் இன்று ஜிம் முடித்து திரும்பி வரும் போது நானும் ஜெசிகாவும் பேசிக் கொண்டே வந்தோம். இந்திய அமெரிக்க கலாச்சாரங்கள் – உறவுமுறைகள் – பேஸ்பால் – கிரிக்கெட் – ஹாலிவுட் – மனோஜ் நைட் சியாமாளன் – அழகான அபார்ட்மெண்ட் – எதிரில் இருக்கும் ஓக்லாண்ட் யுனிவர்சிட்டி – அவளது வங்கி வேலை என்று …

******

ஜெசிகா என் அறைக்கு வருவாள் என்று கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கவில்லை. வந்ததும் அவளை ஒரு ஓரமாக உட்கார வைத்துவிட்டு ஆங்காங்கே சிதறிக் கிடந்த என் அழுக்குத் துணிகளை எடுத்து வாஷிங் மெஷினில் போட்டேன். என் படுக்கையை மடித்து வைத்துவிட்டு மெல்ல அவளிடம் பேச ஆரம்பித்தேன்.

என்ன ஜெசிகா வீடு வரை ..

என்ன பண்றதுன்னு தெரியலை… ரொம்ப போர் அடிச்சது.. அதான் அப்படியே வாக்கிங் போனேன்… அப்படியே உன் வீட்டுக்கு…

ஓ.கே.. நோ ப்ராப்ஸ் … ஆனால் பேச்சிலர் வீடு. அதான் ஒரே குப்பையா ? ?

இட்ஸ் ஓ.கே.

அப்படியே மெல்ல பேசிக் கொண்டிருந்த என்னிடம் ஜெசிகா இன்றிரவு பக்கத்திலிருக்கும் ‘TGIF ‘ ரெஸ்டாண்டுக்குப் போவோமா என்று கேட்டாள். ஒரு வினாடி கூட யோசிக்காமல் சரி என்ற வண்ணம் மேலும் கீழும் தலையை ஆட்டினேன்.

ஜெசிக்கா வீட்டிலிருந்து போனதிலிருந்து என்ன செய்வதென்றே தெரியவில்லை… நீல நிற சட்டை கறுப்பு வண்ண பேண்ட்டுக்கு இஸ்திரி போட்டேன். அறையை சுத்தம் செய்தேன். கொஞ்ச நேரம் அப்படியே டி.வி.யில் ‘American Pie ‘ படம் பார்த்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட ஏழு மணி போல் ஜெசிகா வருவதை சன்னல் வழியே பார்த்ததும் செண்டை உடம்பு முழுவதும் அடித்துக் கொண்டு அவளை வரவேற்றேன்.

அதே புன்னகையுடன் வாசலில் ஜெசிகா.

TGIF – தேங்க் காட் இட் ஈஸ் ப்ரைடே (வெள்ளிக்கிழமைக்கு நன்றி கடவுளே) என்பதன் சுருக்கம் தான் இது. ஒரு ரெஸ்டாரண்டுக்கு இப்படியெல்லாம் கூடவா பெயரை வைப்பார்கள் என்று எண்ணியவாறே நுழைந்தேன். முதலில் ப்ளூ மார்டினியில் ஆரம்பித்தது எங்களின் ஆர்டர். இரண்டு சுற்று வரை எங்கள் பேச்சு பொதுப்படையிலேயே இருந்தது. டெட்ராய்ட் பிஸ்டன் சிக்ஸர்ஸ்(76ers) உடன் பேஸ்கட் பாலில் தோற்றது, எமினெமை ஒரு தடவை ஜெசிகா 8 மைலில் நேராகவே பார்த்தது என்று சுவாரசியமான நிகழ்ச்சிகளால் நகர்ந்தது அந்த முதல் இரண்டு சுற்றுகள். மூன்றாவது சுற்று முடிந்ததும் ஜெசிகாவின் முகத்தில் சின்ன மாற்றம். வார்த்தைகள் மெல்ல புரள ஆரம்பித்தது. ஏதோ சொல்ல நினைக்கிறாள் என்பது மட்டும் தெரிந்ததே தவிர என்னவென்று எனக்குத் தெரியவில்லை ?

அவளே மெல்ல என்னிடம் யாரையாவது காதலித்திருக்கியா என்றாள் ….

இல்லை என்றேன் மெல்லிய குரலில்

யூ மீன் .. கடந்த 24 வருஷமா யாரையும் காதலிக்கலைன்னு சொல்றியா ? என்னை ஏமாற்றாதே ?

பதிலேதும் சொல்லத் தெரியாமல் வாட் அபெளட் யூ என்றேன்

பில்லி(Billy) என்னை ரொம்ப ஏமாத்திட்டான். அதனால தான் இவ்வளவு சோகமா இருக்கேன். 2 வருஷமா நானும் பில்லியும் டேட் பண்றோம். அடிக்கடி சந்திப்போம். எனக்கு அவனோட உண்மையா நடந்துக்கற விதம், எனக்காக அக்கறை காட்டுறது எல்லாம் பிடித்திருந்தது. ஆனால் திடார்ன்னு ..

என்ன ஆச்சு ?

பில்லியுடன் அறிமுகமானது முதல் போனவாரம் பில்லியுடன் சுற்றிய இடங்கள் வரை ஒன்று விடாமல் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஜெசிகா பில்லி-புராணம் பாடினாள். பாடி முடித்ததும் ..

ஏமாத்திட்டான்னு சொன்னயே, அது …

ரெண்டு வாரமா பில்லி எனக்கு போன் பண்ணவே இல்லை. ஒரு தடவை நான் பண்ணினதுக்கு கூட ‘ப்ளீஸ்,டோண்ட் டிஸ்டர்ப் மீ ‘ ன்னு சொல்லிட்டான். என்ன காரணம்னு எனக்குப் புரியலை ?

ஆம்! ஐ பிரட்டி(pretty) ? என்று ஜெசிகா அப்பாவியாய்க் கேட்டாள்.

ப்ளூமார்ட்டினியின் வேலை இதெல்லாம்.. என்று நினைத்துக் கொண்டே ! யெஸ் பேபி ! யூ ஆர் டூ பிரட்டி என்றேன்! அது தான் உண்மையும் கூட !

அன்றைய TGIF டின்னர் இவ்வாறாக முடிந்தது. அதற்குப் பிறகு நானும் ஜெசிகாவும் இந்த இரண்டு மாதத்தில் இரண்டு வெவ்வேறு ரெஸ்டாரண்டுகளுக்கு சென்றோம். ஒவ்வொரு முறையும் குடித்த பிறகு ஒவ்வொரு ஆணைப் பற்றிப் பேச ஜெசிகாவும் தவறவில்லை. ஒருமுறை அருகிலிருக்கும் ஸ்டார் தியேட்டருக்குப் போய் ‘ சிகாகோ ‘ படம் பார்த்தோம். ஆனால் படம் பார்க்கும் போது ஏனோ ஜெசிகா யாரைப் பற்றியும் பேசவில்லை. படத்தினுள் மூழ்கிவிட்டதால் தன்னை மறந்துவிட்டாள் போல.

ஒரு பெண்ணின் அழகு, குணாதிசயம் பற்றி மற்றொரு பெண்ணிடம் பேசக் கூடாது என்று சொல்வார்கள் .. அது எந்தளவு உண்மை என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு ஜெசிகா மூலம் புரிந்தது எல்லாம் ஒரு பெண் ஒரு ஆணைப் பற்றி இன்னொரு ஆணிடம் சொன்னால் எவ்வளவு எரிச்சல் வரும் என்பது தான். பில்லி மீதும் ஜாக்கி மீதும் எனக்கு அப்படியொரு வெறுப்பு. இப்படிப்பட்ட அழகான பெண்ணைத் தவறவிடுகிறார்களே படுபாவிகள் என்று இரக்கம் ஒருபுறம்.

இன்றும் ஜெசிகாவுடன் வெளியே சென்றிருந்தேன். நாங்கள் இருவரும் எந்தவொரு மதுபானம் குடிக்கவில்லை. காரணம் நாளை நான் இந்தியா செல்ல வேண்டும் என்பதால். ஜெசிக்கா குடிக்காததற்கானக் காரணம் எதுவும் எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை எவனாது ஏமாற்றினால் மட்டும் தான் குடிப்பாளோ என்னவோ ?

ஆரத் தழுவி எனக்கு விடை கொடுத்தனுப்பினாள். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நாங்கள் இருவரும் பேசியது பழகியது எல்லாம் வேகமாக மனத்திரையில் ஒரு ஓட்டம் ஓடியது. அவளது இ-மெயில் முகவரி மட்டும் வாங்கிக் கொண்டு விடைபெற்றேன்.

*****

அலுவலகத்திற்கு இரண்டு நாள் விடுப்பு எடுத்து விமானப் பயணத்தால் வரும் ஜெட் லாக்கை உடைத்தேன்.

அலுவலகம் செல்லும் போது அமெரிக்கவிலிருந்து வாங்கிவந்த kisses என்ற சின்ன சாக்லெட் பாக்கெட் ஒன்றை நண்பர்களுக்காக எடுத்துச் சென்றேன். எனது கம்ப்யூட்டர் மாயமாக மறைந்திருந்ததால் நேராக பத்மாவின் இடத்திற்குச் சென்றேன்.

பத்மா – அலுவலகத்தில் என் நெருங்கிய தோழி. நெருக்கம் என்றால் அவ்வளவு நெருக்கமெல்லாம் இல்லை – இருவரும் மதியம் ஒன்றாக கதையடித்துக் கெண்டே சாப்பிடுவது வழக்கம். அவ்வளவே.

பத்மா ரொம்ப அலட்டிக் கொள்ளாத பேர்வழி. யார் வந்து பேசினாலும் அவர்களுடன் நன்றாக சிரித்துப் பேசுவது வழக்கம்.

ஆறு மாதத்தில் கொஞ்சம் குண்டாகிவிட்டதாகவும் – ஆங்கிலம் பேசும் போது கொஞ்சம் அமெரிக்க வாடை வருவதாகவும் சொல்லி என்னைக் கிண்டல் செய்து கொண்டிருந்தாள். நானும அவளிடம் என் ஆறு மாத ராஜபோக வாழ்க்கையைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஜெசிகா உட்பட.

அன்று வழக்கம் போல் அலுவலகத்திலிருந்து வீடு வந்ததும் கொஞ்சம் நேரம் டி.வி. பார்த்துவிட்டு தூங்குவதற்கு முன் விபரிதமான அந்த ஆசை வந்தது. பத்மா-வையே கல்யாணம் செய்துகிட்டா என்ன ? என்ற அந்த விபரீத ஆசை என்னைத் தூங்க விடாமல் தடுத்தது. ஒருவித பரவசநிலைக்குத் தள்ளப் பட்டேன். இரண்டு மாதத்திற்கு முன் ஜெசிகா என்னிடம் பேசிய போது – என்னை ரெஸ்டாரண்டுக்கு அழைத்த போது ஏற்பட்ட அதே பரவச நிலை – மனது முழுக்க பஞ்சால் அடைத்தது போல திரும்ப திரும்ப ஒரேவித எண்ணங்கள்.

அமெரிக்க பெண்ணாயிருந்தாலும் ஜெசிகாவைத் துணையாக்கிக் கொள்ளலாமா என்றெல்லாம் நினைத்த என் மனது – இன்று பத்மாவின் மேல் ஆசை கொண்டிருக்கிறதே ? இதற்கு என்ன காரணம். பத்மாவின் ஜோவியலாக பழகும் தன்மையா ? என்னைத் தூக்கி வைத்துப் பேசுவதாலா ? இல்லை.. ஜெசிகாவிற்கு இவள் ஆயிரம் மடங்கு மேல் என்ற ஒப்பீடா .. என்ன காரணமென்றெல்லாம் தெரியவில்லை… கொஞ்ச நாட்களாகவே பத்மாவின் துணை மனதுக்கு இதமாக இருந்தது. நாளை சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்து தூங்கச் சென்றேன்.

*******

பத்மா! இன்னைக்கு சாயந்திரம் செளத் கார்டன் ரெஸ்டாண்ட் போகலாமா ?

மாலை ஆறு மணிக்கு சரியாக பத்மா ஆஜர். பத்மாவிடம் எனக்குப் பிடித்தது இதுதான். என்னை மதிக்கும் இந்தத் தன்மை தான். ஆறு மணி என்றால் ஏழு மணிக்கு வந்து, சாரி ! அது அப்படி ? இது இப்படி ? என்றெல்லாம் நொண்டி சாக்கு சொல்லாமல், சொன்னால் சொன்னபடிக்கு வந்து மற்றவர்களை மதிக்கும் இந்தக் குணம் தான்.

சாப்பிட ஆரம்பித்து அரை மணி நேரம் ஆகியிருந்தது. வெஜிடபிள் சூப், ஆனியன் ரிங்க்ஸ், ஆலு பரோட்டா என்று ….

பத்மா ! இந்த ஆறு மாசத்துல நீ ரொம்ப மாறின மாதிரி இருக்கே ?

அப்படியா ! நீயும் கண்டுபிடிச்சிட்டியா ! உங்கிட்ட ஒரு விஷயம் நானே சொல்லணும்னு நினைச்சுட்டிருந்தேன்..

நீ போன ஒரு மாசம் கழிச்சு என்னோட தூரத்து உறவுப் பையன் ஒருத்தன் வீட்டுக்கு வந்திருந்தான். ராஜீவ்ன்னு பேரு. படு ஸ்மார்ட். மும்பை எஸ்.பி.ஜெயின் காலேஜ்ல எம்.பி.ஏ பண்ணிட்டு இருக்கானாம். அவனும் நானும் ஒரு மாசமா அவனோட ‘சம்மர் ஹாலிடேஸ் ‘ முழுக்க சுத்தினோம். எனக்கு அவனை ரொம்ப பிடிச்சிருந்தது. அவன் என்கிட்ட ‘ப்ரொபோஸ் ‘ பண்ணினான். நானும் ஒத்துக்கிட்டேன்.

அப்புறம் ஒரு மாசம் தினமும் போன் பண்றது.. மெயில் பண்றதுன்னு போயிட்டு இருந்தது. திடார்ன்னு ஒருநாள் சாரி… உனக்கு கொஞ்சம் கூட ‘பொஸஸிவ்னஸ் ‘ இல்லை.. அது சரியில்லை.. இது சரியில்லைன்னு சொன்னான். என்னடான்னு பார்த்தா காலேஜ்ல வேற ஒருத்தியை லவ் பண்றானாம்.

சரி போடா ! நானும் வேற ஒருத்தனைத் தேடிக்கிறேன்னு சொல்லிட்டேன்.

அது சரி உன்னோட வாழ்க்கைல எந்த தேவதைக்கும் இடமில்லையா ?

பத்மா பேசிக் கொண்டே இருந்தாள். அவளது உதடுகளின் அசைவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேனே தவிர ஒரு கேள்விக்கும் பதில் பேசவில்லை. என் நீண்ட மெளனத்தால் பத்மாவும் கொஞ்ச நேரத்திற்குப் பின் பேசுவதை நிறுத்திவிட்டாள். ஒன்பது மணியளவில் இருவரும் வீட்டிற்குத் திரும்பினோம்.

இப்போதெல்லாம் பத்மாவைப் பார்க்கும் போது பக்கத்துவீட்டு ஜெசிக்காவின் ஞாபகம் தான் வரும். அதே நடை – அதே சிரிப்பு – அதே வசீகரிக்கும் பார்வை…

கே ஆர் விஜய்

vijaygct@yahoo.com

Series Navigation