பகட்டு

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


சும்மா இலேசாகத்தான் தொடங்கியது தலையிடி. ஒரு அஸ்பிரின் விழுங்க நின்று போயிற்று. அடுத்த நாளும் அதே நேரத்தில் எங்கள் பக்கத்து வாடிக்கை மரக்கறிக்காரன் வருகிற வாக்கில் திரும்பி வந்தது. இடது பக்கம் சுள் சுள்ளென ஆரம்பித்து கொஞ்சத்தில் நெற்றி முழுக்க நீக்கமற நிறைந்து விண் விண்ணென்று நரம்பு தெறிக்க ஆக்கினைப் படுத்தியது. அரத்தால் உராய்ந்தது போல் அப்படியொரு கபாலக் குத்து. தாங்கவொன்னாத வேதனை. ஒன்றுக்கு மூன்று அஸ்பிரின் விழுங்க ஒருமாதிரி அடங்கிப் போயிற்று.

பேதிக்குக் குடித்து கன காலமாச்சு, செல்லக்கண்டு பரியாரியாரிடம் குளுசை வாங்கியாரன் என்று அப்பா சொன்னார். அந்த வேதனைக்குள்ளும் சிரிப்புத்தான் வந்தது. உலகம் எவ்வளவோ வளர்ந்து போச்சு. இன்னமும் செல்லக்கண்டு வைத்தியரின் ஓங்காளம் உண்டாக்குகிற குளுசைகளை விழுங்கிக் கொண்டிருக்க முடியாது. நாளுக்கு நாள் வளர்கிற நாகரிகத்தோடு சரிக்குச் சரி நாங்களும் வளர வேண்டும்.

உடல் உபாதைகளில் தலையிடியை எதுவும் முந்த முடிவதில்லை என்பது உண்மைதான். சாதாரணத் தடிமனுக்கு மூக்கை இழுத்துக் கொண்டு ‘தாங்க முடியேல்லை’ என்று அனுங்குவது போல அல்ல இது. ஆளை உண்டு இல்லை என்று ஆட்டி உலுப்பிவிடும். இந்த சென்மமே வேண்டாம் போல வெறுப்பு சூழ்ந்து விடுகிறது. நித்திரைக் குளுசையை போத்தலோடு விழுங்கிச் செத்துப் போவோமா என்று கூடத் தோன்றிவிடுகிறது.

சொல்லியும் கேளாமல், திரணை மாத்திரையோடு வந்தார் அப்பா. இஞ்சி தட்டி கறண்டியில் அரைக்கவே வாடை வயிற்றைப் புரட்டியது. வருத்தக்காரனைப் பாராமலே மருந்து கொடுத்து பச்சைத்தண்ணீர் பாவிக்கக்கூடாது என்ற பத்தியமும் சொல்லி அனுப்புகிற பத்தாம்பசலிப் பரியாரியார் செல்லக்கண்டு. நவீன மருத்துவ வளர்ச்சியை புரிந்து கொள்ளாத அப்பா.

அப்பா படித்தது வெறும் எட்டாந்தரம். நான் பீ.ஏ. சொந்தத் தொழிலில் பேரும் புகழும் ஆதன பாதனங்களும் கண்டவன். என்னைச் சொன்னால்தான் அவரை இன்னார் என்று ஆருக்கும் தெரியும். பெற்றவர் என்பதற்காக அவர் உளறுவதையெல்லாம் ஏற்றுக் கொள்ள என்னால் முடிவதில்லை.

சரி அப்ப இங்கிலிசு வைத்தியரிடம் போய்க் காட்டுவோம் வா என்றார் அப்பா. முதுகுத்தண்டில் கொஞ்ச நாளாகவே ஒரு உளைவு இருப்பதை அவரிடம் சொன்னால் அதோ கதிதான். மனுசன் ஒப்பாரி வைக்கத் தொடங்கி விடுவார். கொழும்பில் ஸ்பெஷலிஸ்ட்டிடம் காட்டுவதுதான் நல்லது. உள்ளுருக்குள் தெரிந்தால் ஏதோ வித்தியாசமான வருத்தம் என்று கதை கட்டி விடுவார்கள்.

காலையில் கொழும்புக்குப் புறப்படுவதற்கு காரை றெடி பண்ணச் சொல்லி விட்டேன். எந்தக் காரை என்று கேட்டான் டிரைவர். டொயாட்டா கம்றியில்தான் ஆறஅமரப் போகலாம். ஒன்பது லட்சத்திற்கு ஒரே செக் கிழித்து வாங்கியது. அப்பா தானும் வருகிறேன் என்று அடம் பிடித்தார். போனால் போகட்டும் என்று வரச் சொல்ல, பின்னேரமாய் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வந்து அருந்தவம் மாமாவையும் கூட்டிப் போவோம், சும்மா போகிற கார் தானே என்றார். எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

எங்க போறதென்றாலும் உங்களுக்கு ஒரு ‘சின்’ வேனும். என்னைக் கேளாமல் அதற்குள் ஏன் அவரிடம் பறை தட்டினீர்கள் என்று நான் கத்த, அவருடைய சொந்தக்காரப் பொடியன் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் டாக்டராக இருக்கிறான். காட்ட வசதியாயிருக்கும் என்றார்.

அருந்தவம் மாமாவை வேண்டாம் என்றதில் அப்பாவின் முகம் தொட்டாச் சுருங்கியாய் கூம்பிப் போயிற்று. சரி சரி வரச் சொல்லுங்க. ஆனால் தன்னை விட்டா ஆளில்லை என்கிற மாதிரி கதைத்து என்னுடைய கோபத்தைக் கிளப்பக்கூடாது என்று சொல்லி வையுங்க என்றேன். அருந்தவம் எனக்கு ஒன்றும் மாமா முறையில்லை. அயலில் எல்லோருக்கும் அவர் மாமாவானது எப்படியென்றும் எனக்குத் தெரியாது. ஏனோ எனக்கு அவரைப் பிடிப்பதில்லை. அதிகப் பிரசங்கி.

விடிந்ததும் குளித்துத் துடைத்து பவுடர் போட்டது போல் முழிப்பாக நின்றது கார். எனக்கு எல்லாம் நேரப் பிரகாரம் அச்சொட்டாயிருக்க வேண்டும். உடுத்துகிற அண்டர்வெயர் கூட உடம்பை பிடித்துக் கொண்டு இறுக்கமாயிருக்க வேண்டும். தொழ தொழ என்றிருந்தால் பிடிக்காது. தொண தொணக்கிற மனிதரென்றாலும் அப்படித்தான்.

அருந்தவம் மாமா வாசலில் காத்து நின்று ஏறும் போதே போகிற வழிதானே வைத்தியரிடம் ஒருதரம் காட்டிவிட்டுப் போவோமா என்றார். வாயைப் பொத்திக் கொண்டு வரச் சொன்னதை அப்பா அவரிடம் சொல்லவில்லை எனப் புரிந்தது. காளி கோயிலடியில் நிற்பாட்டச் சொன்னார் அப்பா. இறங்கி தேங்காய் உடைத்து கற்பூரம் கொழுத்தி வீதி சுற்றி வர பதினைந்து நிமிடமாயிற்று. பாலம்போட்டாறு பிள்ளையாரடியிலும் அதுவே நடந்தது. எனக்கு விசர் வந்தது.

“இப்ப என்னத்துக்கு வழி முழுக்க தேங்காய் உடைச்சு நேரத்தை மினக்கெடுத்திறீங்க. கடவுள் எல்லாந் தெரிஞ்சவர் என்று சொல்றீங்க, அழுதாலும் புரண்டாலும் நடக்கிறதுதானே நடக்கும். ஏன் இந்த ஏமாத்து வியாபாரம் எல்லாம்” என்று நான் அப்பாவிடம் கேட்க, முந்திரிக்கொட்டை மாதிரி அருந்தவம் மாமாதான் முந்தினார்.

“சர்வ லோகத்தையும் படைத்து நிர்வாகம் செய்கிற பகவானுக்கு நாமெல்லாரும் குழந்தைகள். அவர் தாய்க்குத் தாயானவர். தந்தைக்கும் தந்தையானவர். எங்கள் பசி பட்டினி வலி வேதனை எல்லாம் முற்றிலுமாய் அறிந்திருக்கிறார். பசியால் குழந்தை அழுதாலும் அழாவிட்டாலும், அது அவருக்குத் தெரியும். எனவே, எல்லாம் பகவான் விட்ட வழியென்று, அவரிடம் பக்தி மட்டும் பண்ணிக் கொண்டு எதுவும் கேளாமல், இருந்து விட முடிந்தால் அது நல்லதுதான். ஆனால் வாஸ்தவத்தில், பசியெடுத்ததும் அழாமலே இருந்து விட குழந்தைகளால் முடிகிறதா ?

அளவுக்கு மீறிய ஆசையில் ஆண்டவனிடம் கேட்டு அழுவது நியாயமில்லை. அது வியாபாரம். பெற்ற பிள்ளைக்காக அழுகிற தகப்பனின் நியாயமான வேண்டுதல் அப்படியாகாது. பிள்ளைக்கு எதுவும் வந்துவிடக் கூடாதேயென்று அழுது கண்ணீர் சொரிகிறார் உன் தந்தை. அதனைப் பலிக்க வைக்கும் சக்தியும் உரிமையும் கருணையும் பகவானிடம் நிச்சயம் உண்டு. மருந்தில்லாமலே கூடக் குணமாக்கும் மெத்தப் பெரிய டாக்டர் அவர்.

அவரிடம் வாய்விட்டுக் கதறுவதால் உன் தந்தைக்குக் கிடைக்கும் மன ஆறுதலைத் தடுக்கும் உரிமை உனக்கில்லை. உனக்கும் ஒரு மகன் பிறந்து சுகமில்லாமலும் வந்து அவதிப்பட்டால் அப்போது தெரியும் அவரின் வேதனை. அதைப் புரிந்து கொள்ளாமல் இப்படி ஏளனம் செய்யாதே.”

அருந்தவம் மாமாவின் லெக்சர் நின்றதும், காருக்குள் மெளனம் சூழ்ந்து கொண்டது. இதுதான் இந்த மனுசனை நான் கிட்டடிக்கும் அடுக்குவதில்லை. என்னாலும் பதிலுக்குப் பேச முடியும். இதுதான் தாயம் என்று கொழும்பு வரை அறுவையில் இறங்கிவிடுவார். போதுமடா சாமி.

‘கிறீன்லன்;ட்சில்’ ஏசி ரூம் எடுத்துக் குளித்து விட்டு ‘நவலோக’ கவுண்டரில் ஸ்பெஷலிஸ்ட் பட்டியல் பார்த்து உள்ளதிலேயே பெரிய டாக்டராகப் பொறுக்கியெடுத்து, அவரைக் காண்பதற்காக காத்து நிற்க கால் கடுத்தது. வரிசையில் நூறு பேராவது இருக்கும். ஆளுக்கு நூறுப்படி பார்த்தாலும் ரூபா. 10,000 வருமானம், ஒரு மாலைப் பொழுதுக்குள்! பெயர் பெற்ற டாக்டர்தான்.

என் முறை வந்தது. நான் தடுத்தும், அப்பாவும் என்னோடு உள்நுழைந்து விட்டார். முகம் பாராமலே பெயர் வயது கேட்டு எழுதிவிட்டு யேஸ் என்று நிமிர்ந்தார் டாக்டர். அப்பா முந்திக் கொண்டு தலையிடியின் சரித்திரம் சொன்னார். வருத்தம் யாருக்கு என்று டாக்டர் அப்பாவை முறைத்தது போலிருந்தது. நர்ஸ் ரத்த அழுத்தம் பார்த்தாள். குப்புறப் படுக்கச் சொல்லி முதுகுத்தண்டை அழுத்திப் பார்த்தார் டாக்டர். என் இடுப்பிலிருந்த மொத்தமான அரைநார்க்கொடி டாக்டர் கண்ணில் பட்டிருக்கும் – கிட்டத்தட்ட ஏழு பவுணில் செய்தது. கை கழுவிவந்து துண்டில் நாலு வகை குளுசை கிறுக்கினார். ஸ்கான் பண்ணிப் பார்த்து முதுகெலும்பில் ஒபரேசன் செய்ய வேண்டும், அப்பல்லோவில் அட்மிற் பண்ணுங்க என்று உணர்ச்சியில்லாமல் சொன்னார்.

முதுகெலும்பில் ஒபரேசனா!! மேல்விபரம் கேட்பதற்குள் நம்பர் 76 என அடுத்த ஆளை அழைத்தாள் நர்ஸ். கடவுளே என்ர பிள்ளைக்கு என்ன நடந்தது என்று தலையில் கை வைத்தார் அப்பா. ஒரு தரம் பெரியாஸ்பத்திரிக்கு விடுங்க என்று டிரைவருக்கு வழி காட்டினார் அருந்தவம் மாமா. என்னால் எதுவும் பேசமுடியவில்லை.

பெரியாஸ்பத்திரியில் டாக்டர் சிவசங்கர் ‘நைட் டியூட்டி’ என்றார்கள். காரை வீட்டிற்கு விடு என்று வழி காட்டினார் அருந்தவம் மாமா. ஒபரேசன் பற்றி அவரிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்ன சொல்கிறான் பார்ப்போம் என்றார். கதவைத் தட்டி ஊரிலிருந்து வருகிறோம் என்றதும் பல்லெல்லாம் காட்டி வரவேற்று விசாரித்தான் டாக்டர் சிவசங்கர். என் வயதுதான் இருக்கும். வெறும் எம்பிபிஎஸ்தான். ஸ்பெசலிஸ்டை விடவா வெட்டி முறிக்கப் போகிறான்!

உடுப்புகளைக் களைந்து கட்டிலில் குப்புறப் படுத்தேன். அன்டர்வெயரில் விரல் நுழைத்து, ஏன் இவ்வளவு இறுக்கமாக அணிகிறீர்கள் என்று கேட்டான். எனக்கு அதுதான் பிடிக்கும் என்று சொல்ல, இடுப்பை இறுக்கிப் பிடித்த எலாஸ்ரிக்கை இழுத்து டக்கென்று விண் தெறிக்க விட்டான். அம்மா என்று கத்தினேன்.

இடுப்பு அளவென்ன ? எவ்வளவு காலமாக இப்படி இறுக்கமாக அணிகிறீர்கள் என்று கேட்டான். இடுப்பு 36, பத்து வருசமாக என்றேன். அவன் மெலிதாகச் சிரித்தான். கிண்டல் போலத் தோன்றியது. இதெல்லாம் ஒரு டாக்டர் கேட்கும் கேள்வியா ? துணிக்கடைக்காரன்தான் கேட்பான்.

தலையிடியின் பூர்வீகம் கேட்டான். மேலிருந்து கீழாக முதுகுத்தண்டைத் தடவிக் கொண்டே வந்து இடுப்புப் பக்கம் திடாரென பெருவிரலால் அழுத்தினான். மீண்டும் அம்மாவைக் கூப்பிட்டேன். உடுப்பைப் போடச் சொல்லிவிட்டு விறாந்தைக்குப் போனான்.

உடம்புக்கு முதுகெலும்புதான் முக்கியம். அதிலேயே பிரச்னையென்றால் இனி இருந்தென்ன போயென்ன. வாழ்க்கையே சூன்யமாகி விட்ட சோகம் என்னைச் சூழ்ந்து கொண்டது.

அவன் அமைதியாகச் சொன்னான். “கொஞ்ச நாளைக்கு எலும்பில் வலியிருக்கும். காலையும் மாலையும் நகச் சூட்டில் சுடுதண்ணி ஒத்தடம் குடுங்க. பயப்பிடுவதற்கு ஒன்றுமில்லை. முதுகு நோ நிற்க, தலையிடியும் நின்று போகும்.”

“மருந்து ?” என்று அப்பா கேட்டார்.

“தேவையில்லை. வேண்டுமானால் அஸ்பிறின் எழுதித் தருகிறேன்;”.. .. என்று அவன் சாந்தமாகச் சொன்னான்.

அப்ப ஏன் தம்பி தலையிடிச்சது ? முதுகுத்தண்டில ஓப்பரேசன் செய்யவேனும் என்று வேற டாக்டர் சொன்னாரே என்று அப்பா கேட்டார்.

டாக்டர் சொன்னார். “இவர் அண்டர்வெயரை இறுக்கமாப் போட்டுப் பழகி விட்டார். ‘அறுநாக்கொடி’ அண்டி அண்டி முதுகெலும்பு நோப்பட்டுப் போச்சு. அந்தத் தாக்கத்திலதான் தலையிடிச்சது. இனிமேல் இறுக்கமான அண்டர்வெயர் போட வேண்டாம். மொத்தமான அறுநாக்கொடியை கழட்டி விடுங்க.”

நான் விறைத்துப் போனேன். பெருமானே என்று அப்பா கண்ணீர் சிந்தினார், நன்றிப் பெருக்கில். அருந்தவம் மாமா சாந்தமாக இருந்தார்.

***

karulsubramaniam@hotmail.com

Series Navigation