நொறுங்கிய பழமை

This entry is part [part not set] of 19 in the series 20010618_Issue

திலகபாமா, சிவகாசி


வானுறை இறைவனுக்கும்-புவி
வந்து பிறந்தமானுடனுக்கும்
தீங்கீதத்தால் பாலமமைத்த
திருவையாறே

ஒன்னரை சதமாண்டு
உன் கரை இணைத்த
பாலம் நொறுங்கிட
பார்த்திட பலம்பெற்றயோ ?

மன்னர் முதல்
மக்களாட்சி தந்த
மந்திரி வரை
பாதச் சுவடுகள் பலவும்
பார்த்திருந்து தன்னுள்
பதித்திருந்த
வென்னார் பாலமே

பழமைக்கும் புதுமைக்கும்
பாலங்கள் அமையலாம்
வேர்களை கரையானழிக்க
வேடிக்கை பார்த்திருந்துவிட்டு
பூவிட்டு பொட்டிடு
பூஜைகளிட்டு
கிளைகளை வணங்குதலாய்
வென்னாரை நொறுங்கவிட்டு
காவிரியாறின் மேல் புதுப்பாலம்

மலையில் பிறந்து
மண்ணில் தவழ்ந்து
இடையில் அணைக்குள்
இருக்கப்பட்ட மதகுக்குள்
சிறைப்பட்டதால்
வாக்குறுதிகளாய் பின்
வழிந்த குருதிகளாய்
அரசியலாய்பின்
மாநிலச் சண்டைகளாய்
மாறிய போதும்
தாகம் தணிக்கும்
தண்ணீராய் மாறாதது கண்டு
காய்ந்த ஆற்றுக்குள்
கலந்து விழுந்தனையோ ?

புதிய பாலத்தில்
புதைக்கப்படும் ஊழல்கள் கண்டு
இனி தாங்கதென்று
இதயம் வெடித்து சிதறினையோ

வருடங்கள் செல்ல செல்ல
வைரம் பாயும் மரமாய்
கரும் புள்ளிகையில் வைக்கையிலும்
கலங்காத
வாக்காளனைப் போல் நீயும்
தாக்கங்களுக்கு ஆளாகுது
இதயம் வைத்திருக்க
இனி பழகுவாய் வென்னார் பாலமே

Series Navigation