நெரூதாவும் யமுனா ராஜேந்திரனும் நானும்

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

சுகுமாரன்


பாப்லோ நெரூதாவை முன்னிருத்திய கருத்துப் பரிமாற்றங்களில் திரு.யமுனா ராஜேந்திரன் மீண்டும் தவறான பொத்தானை அமுக்கியே சர்ச்சையைப் புகையச் செய்கிறார். இதுபோன்ற சர்ச்சைகளில் ஈடுபடுவதில் எனக்கு உவப்பில்லை என்பதை மறுபடியும் வலியுறுத்த விரும்புகிறேன். காரணம் இத்தகைய சர்ச்சைகள் எங்கும் சென்றடைவதுமில்லை.பங்கு பெறுபவர்களை எந்தவிதமான புதிய அறிவுப் பரப்புகளுக்கும் இட்டுச்செல்வதில்லை என்பது இதுகாறும் என் அனுபவம். இதோ, திரு.யமுனா ராஜேந்திரன் முன்னெடுத்துச் செல்லும் இந்த சர்ச்சையிலும்

இலக்கிய ஆர்வலனுக்கு புதிதாகக் கற்றுக்கொள்ளும் வகையில் ஏதேனும் உண்டா ? எனக்கு சந்தேகமே. திரு.யமுனா ராஜேந்திரனும் நானும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிற அட்டைக்கத்தி யுத்தம் எவருக்கும் பயனில்லாதது- எங்கள் இருவருக்கும் கூட.

எனது கட்டுரைக்கும் எதிர்வினைக்கும் ஆதாரமான பகுதியாக நான் மீண்டும்மீண்டும் எடுத்துக்காட்டும் புள்ளிக்கு திரு.யமுனா ராஜேந்திரன் வரமறுப்பதுதான் இந்த பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள பலவீனம். நெரூதா பற்றிய எனது கட்டுரையில் நானே தமிழில் ஏக நெரூதா மொழிபெயர்ப்பாளன் என்று உரிமை பாராட்டிக் கொண்டிருப்பதாகக் கருதவில்லை. தமிழில் நடைபெற்ற முயற்சிகளை உதாசீனப் படுத்தியதாகவும் கருதவில்லை.என் கட்டுரைக்கு நான் வரையறுத்துக் கொண்டது நெரூதாவை நான் அறிமுகம் கொண்டதும் அதற்கு எனக்குத் துணையாகவிருந்த சந்தர்ப்பங்கள், வாசிக்கக் கிடைத்த மொழியாக்கங்கள், அதற்குக் காரணமாகவிருந்த

ஆளுமைகள், அந்த காலப்பகுதியில் எனது ஆதாரமாகவிருந்த மொழி ஆகியவை சார்ந்துமட்டுமே. இதை எனது எதிர்வினையில் சரியாகவே தெளிவுபடுத்தியிருக்கிறேன். நான் எழுதியிருப்பது ஒரு வாசகன் என்ற நிலையிலும் கவிதை ஆர்வலன் என்ற நிலையிலும் நெரூதா என்னைப் பாதித்தவிதம் பற்றியே தவிர தமிழில் நெரூதா நிகழ்வுகள் என்ற இலக்கிய வரலாற்றுப் பதிவையல்ல. இதையும் கறாராகவே எடுத்துக்காட்டியிருக்கிறேன்.இந்த நுட்பமான வகைப்பாட்டை திரு.யமுனா ராஜேந்திரன் கருத்தில் கொள்ளாமலேயே பேசிக்கொண்டிருக்கிறார். எனக்கு வருத்தமளிப்பதாக நான் குறிப்பிடுவது இந்தப் பாராமுகத்தைத்தான். குற்றாலம் அருவியில் நான் குளித்த அனுபவத்தைச் சொல்லமுனைந்தால் அருவியில் நீராடிய மற்றவர்களைப்

பற்றி ஏன் சொல்லவில்லை என்று கேட்பதில் எந்த தர்க்கமுமில்லை.

கடந்த இருபதாண்டுக் காலமாக பாப்லோ நெரூதா எனது கவிதையாக்கச் செயல்பாடுகளில் ஒரு பகுதியாகவும் வாழ்வியல் ரசனையாகவும் நீதியுணர்வின் ஒரு எல்லையாகவும் உடனிருந்து வந்திருக்கிறார். கவிதை எனது பிரக்ஞையின் சாரமாகத் தொடரும் காலம்முழுவதும் என்மீது செல்வாக்குச் செலுத்தும் ஆளுமைகளில் ஒருவராகத் தொடர்வார் என்பது நம்பிக்கை. தொடரவேண்டும் என்பது விருப்பம். இந்த நம்பிக்கையையும் விருப்பத்தையும் தமிழ் இலக்கியவாசகர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற கனவின் செயல்வடிவம் இப்போது நிறைவேறி

வருகிறது. இதுவரை நான் மேற்கொள்ள நேர்ந்த நெரூதா கவிதை மொழிபெயர்ப்புகளை ‘உயிர்மை பதிப்பகம் ‘ விரைவில் நூலாக வெளியிடவிருக்கிறது. அதன் முன்னுரைப் பக்கங்களில் தமிழ்ச் சூழலில் நெரூதா விளைவு குறித்து விரிவாகவே காணலாம்.

இதன் முன்னோட்டமாக ‘புது எழுத்து ‘ தனது வருமிதழை பாப்லோ நெரூதா சிறப்பிதழாகக் கொண்டுவருகிறது. ‘திண்ணை ‘யில் இடம்பெற்ற எனது நெரூதா அனுபவம் கட்டுரையும் கணிசமான மொழிபெயர்ப்புக் கவிதைகளும் பிற கட்டுரை களும் தொகுக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். வாசக நண்பர்களது கவனத்துக்காக முன்வைக்கும் இந்த தகவல்கள் என்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் யத்தனம் என்று திரு.யமுனா ராஜேந்திரன் வியாக்கியானம் செய்யாமலிருக்க வேண்டுமே என்று அஞ்சுகிறேன்.

பேசும் விஷயத்துக்குப் புறம்பான பொருளற்ற வாதங்களை இந்தக் கருத்துப் பரிமாற்றத்தில் அவ்வப்போது திரு.யமுனா ராஜேந்திரன் வீசியிருக்கிறார். முதல் எதிர்வினயில் என்னால் மறக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற அபிப்பிராயம் போலவே தற்போதைய எதிர்வினையில் நிதானம் தவறிய எதிர்வினை, சர்ச்சைகளிலிருந்து விலகல் ஆகிய அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள். இவற்றை என்னவென்று எடுத்துக்கொள்வது ? திரு.யமுனா ராஜேந்திரன் குறிப்பிடுவது போலவே தர்க்கம் எளிமையானதுதான்.நெரூதா கட்டுரையில் மலையாளச் சூழலின் பாதிப்பை பதிவு செய்ததற்கு சமமாக தமிழ்ச் சூழலின் சமாந்திர நிகழ்வுகளும் பதிவு செய்யப்

பட்டிருக்கவேண்டும். சரியாக இருக்கலாம். ஆனால் நான் பதிவு செய்தது எனது பிரத்தியேக அனுபவங்களை. அந்த அனுபவங்கள் ஏற்பட்ட காலப்பகுதியில் எனக்கு எதன் மூலம் பாதிப்புகள் நேர்ந்தனவோ அவற்றை. நான் அறியாத, நான் பாதிக்கப்படாத விஷயங்களைக் குறித்து அதிகாரபூர்வமாகப் பேசுவது நியாயமற்றது. எனது இந்த இயலாமையின் நியாயத்தை ‘திண்ணை ‘ வாசகர்களில் சிலராவது உண்ர்ந்திருக்கிறார்கள் என்பதை எனக்குக் கிடைத்த மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன.

இலக்கியம் சார்ந்த கருத்துப்பரிமாற்றங்களை இரண்டு நிலையில் காணவிரும்புகிறேன். ஒன்று: சர்ச்சை. இரண்டு: விவாதம். சர்ச்சைக்கு மேம்போக்கான அபிப்பிராயங்கள் போதும். விவாதத்துக்கு விரிவான தகவல்களும்,வாசிப்பும்,கருத்துநிலையை எட்டுவதற்கான அயராத தேடலும் அவசியம். நான் சர்ச்சைகளில் அவநம்பிக்கையும் விவாதங்களில் அபார நம்பிக்கையும் கொண்டிருக்கிறேன். (இது எனது தொழில் சார்ந்த வாழ்வின் தேவையும் கூட. ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தித் துறையின் பொறுப்பாளன் என்ற அடிப்படையில் விவாதங்களில்லாமல் செயல் படுவது சாத்தியமேயில்லை.) சர்ச்சை – Polemics யும் விவாத Discussion/Debate

மும் வெவ்வேறான தளநிகழ்வுகள். நவீன தமிழிலக்கியச் சூழலில் சர்ச்சைக்கு நீண்ட வரலாறுண்டு. (Polemics ஐ திரு.எம்.ஏ.நுஃமான் ‘வசைமரபு ‘ என்று குறிப்பிடுகிறார்) விவாதங்களுக்கு இன்றும் பிள்ளைப்பருவம். இந்த அணுகுமுறையில் தான் சர்ச்சைகளிலிருந்து விலகி நிற்க விரும்புகிறேன். அப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரம் எனக்குரிமையானது.

நெரூதா தொடர்பான கருத்துப் பரிமாறலில் திரு.யமுனா ராஜேந்திரன் இழுத்து விட்டிருப்பது சர்ச்சையெனில் நான் பங்கேற்க விரும்பவில்லை. அதில் யாருக்கும் பயனில்லை. எங்கள் இருவரின் குரைப்பும் எதிர் குரைப்பும் தவிர. ஆனால் நெரூதாவை முன்னிருத்தி விவாதிக்க விரிவான சாத்தியங்கள் உள்ளன.அதன் விளைவாக இலக்கிய ஆர்வலர்கள் புதிய வெளிச்சங்களைக் காணவும் முடியும்.

பாப்லோ நெரூதா எழுபது எண்பதுகளில் பெரும்பான்மையான இந்திய/உலக மொழிகளில் அந்தந்த மொழிக் கவிஞராகவே உணரப்பட்டவர்.பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். ஆனால் தொண்ணூறுகளிலும் பின்னாட்களிலும் நெரூதா மீதான ஆவேசம் மங்கலானதாகவே இருந்திருக்கிறது. அவரது நூற்றாண்டையொட்டி பன்மடங்கு ஆவேசத்துடனும் கோலாகலத்துடனும் இன்று நெரூதா வாசிக்கப் படுகிறார். விவாதிக்கப்படுகிறார். அவரது கவிதைகளும் அதற்கு ஆதாரமான வாழ்க்கையும் புதிய கோணங்களில் அணுகப்படுகின்றன. இலான் ஸ்டாவன்ஸ்

(ILAN STAVANS) தொகுத்து வெளியிட்டுள்ள ‘தி பொயட்ரி ஆஃப் பாப்லோ நெரூதா ‘ பெருந்திரட்டின் முன்னுரையும் ஆடம் ஃபெய்ன்ஸ்டெய்ன் (ADAM FEINSTEIN) எழுதிய பாப்லோ நெரூதா – எ பாஷன் ஃபார் லைஃப் என்ற வாழ்க்கை வரலாற்று நூலும் இந்தக் கருத்துக்கு வலிமை சேர்ப்பவை. நெரூதா கவிதை மொழிபெயர்ப்பைச் செப்பனிடவும் மறுவாசிப்பு மேற்கொள்ளவும் இவை பெரிதும் உதவியுள்ளன.

இந்த மறுவாசிப்பு பல புதிய அனுபவங்களையும் இதுவரை அறிந்திராத தகவல் களையும் முன்வைத்தது. நெரூதா மீது நான் கொண்டிருந்த வழிபாட்டுணர்வை களைந்து விமரிசனபூர்வமான அணுகுமுறைக்கு வழி திறந்தது. (விமரிசன நோக்கிலும் பாப்லோ நெரூதா மும்மடங்கு பொலிகிறார் என்பது அவரது ஆளுமைக்கு சிறப்புச் சேர்க்கிறது)

நெரூதாவின் வாழ்வில் அங்கங்கே உறைந்து கிடக்கும் மெளனங்களையும் இறுகிக் கிடக்கும் ரகசியங்களையும் ஆடம் ஃபெய்ன்ஸ்டெய்னின் நூல் வெளிப்படுத்துகிறது. இவை விரிவான விவாதங்களுக்கும் அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இட்டுச்செல்லக் கூடும் என்று தோன்றுகிறது. ‘காலச்சுவடு ‘ ஆகஸ்ட் இதழில் பாப்லோ நெரூதா பற்றி ரவிக்குமார் எழுதியுள்ள கட்டுரையில் புதிய விவாதத்துக்கான அடையாளத்தைக் காணமுடிகிறது. நெரூதாவின் வாழ்க்கைக் குறிப்புகளை பெண்ணிய நோக்கில் வாசிப்பதன் தேவையை சுட்டிக் காட்டுகிறார் ரவிக்குமார். மிக முக்கியமான வாசிப்புமுறையாக இதைக் கருதுகிறேன்.

பல காதலிகளை நுகர்பண்டமாகப் பயன்படுத்தி நெரூதா கடாசியிருக்கிறார். அவரது அயலிட வாழ்க்கைக் காலத்தில் ஜாவாவில் சந்தித்து மணந்துகொண்ட மரியாவையும் அந்த உறவில் பிறந்த நோயாளிக் குழந்தையையும் கைவிட்டார். அவரை சரியான கம்யூனிஸ்டாக மாற்றிய தாலியா தெல் கரோலினையும் விட்டுப் பிரிந்தார். வெவ்வேறு காலகட்டத்தில் உறவு கொண்டு விலகிய பெண்களின் எண்ணிக்கையும் ஏராளம். முகமற்ற இந்த அநேகக் காதலிகளின் எண்ணிக்கையை ஒரே பெயரில் ஒளித்துவைத்துக் கவிதைகளில் நினைவு கூரவும் செய்திருக்கிறார். மாபெரும் மனிதநேயரான நெரூதாவின் மனம் இந்த வஞ்சனைகளால் கொந்தளித்திருக்குமே! அந்த உளவியலின் பின்னணி இலக்கிய விவாதத்துக்கு உரியதல்லவா ?

கவிதைப் போராளி என்ற நிலையில் உலகில் எங்கெல்லாம் மனித உரிமைகள் நசுக்கப்பட்டதோ அதற்கு எதிராக நெரூதா குரலுயர்த்தியிருக்கிறார். சர்வாதிகாரி களைக் கடுமையாக விமரிசித்திருக்கிறார். யுத்தக்கொடுமைகளுக்கு எதிராகப் போராடியிருக்கிறார். இவற்றுக்கு மறுபக்கமாக நெரூதா மெளனமாகவிருந்த சந்தர்ப்பங்களுமுண்டு. சோவியத் டாங்குகள் ப்ராகில் ஊடுருவியபோது அவர் பாராமுகமாக இருந்தார். 1956 கட்சி காங்கிரஸில் ஸ்டாலினின் தவறுகளை குருஷேவ் கடுமையாக விமரிசனம் செய்தபோது நெரூதா வாய்திறவாமல் இருந்தார். இத்தனைக்கும் ஸ்டாலின் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருந்தது போலவே கறாரான விமரிசனமும் கொண்டிருந்தவர் நெரூதா. ‘கடவுளும் சாத்தனும் ஒரே உடலில் குடியிருக்கும் மனிதன் ‘ என்றே ஸ்டாலினைக் குறிப்பிட்டவர். கம்யூனிசத்தின் மனித நேய அடிப்படையால் அதன்பால்

ஈர்க்கப்பட்ட ஒரு பெருங்கவிஞர் அதிகார அமைப்பின்முன் மெளனியாக நின்ற சோகம் விவாதத்துக்குரியது. ‘சதிகாரப் படைத்தலைவர்களே…வந்து பாருங்கள் தெருக்களில் இரத்தத்தை… ‘ என்ற அவரது வரிகள் எல்லா எதேச்சாதிகரிகளையும் போல ஸ்டாலினுக்கும் எதிராக ஒலிப்பதுதான் நெரூதா என்ற கவிஞனின் ஆதார அக்கறை என்று அடையாளம் காண்கிறேன்.

இந்த நோக்கிலான விவாதங்களும் கருத்தாடல்களுமே எனக்கு உடன்பாடனவை. அதன் மூலம் நெரூதா போன்ற ஆளுமைகளை நெருக்கமாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ளுவது சாத்தியம் என்று நம்புகிறேன். திரு.யமுனா ராஜேந்திரன் முன்வைத்த சர்ச்சையில் இந்த நம்பிக்கை காரணமாகவே ‘நிதானமற்று ‘ ஈடுபட நேர்ந்தது. எனது திண்ணை கட்டுரையின் தலைப்பு – பாப்லோ நெரூதா: ஒரு வாசகனின் அனுபவக் குறிப்புகள் – என்பதையும் அதற்காக நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட களம் திரு.யமுனா ராஜேந்திரன் கோரும் பதிவுகளை அனுமதிக்கவில்லை என்பதையும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். ‘தோட்கப்படாத செவிகளை கேட்க வற்புறுத்துவதிலுள்ள ஆயாசம் காரணமாகவும் என்னுள் மாபெரும் மரியாதைக்குரியவராக நான் கருதும் பெரும் கவிஞரை சாரமற்ற சர்ச்சையின் பொருளாக்குவதிலுள்ள இலக்கிய அத்துமீறல் குறித்த அச்சம் காரணமாகவும் ‘மெளனம் காப்பது என்ற மத்தியவர்க்க இலக்கிய தந்திரத்தைக் ‘ கைக்கொள்கிறேன்.

தோழமையுடன்

சுகுமாரன்

03 செப்டம்பர் 2004

n_sukumaran@rediffmail.com

Series Navigation

சுகுமாரன்

சுகுமாரன்