நீலக் கடல் -(தொடர்) – அத்தியாயம் – 39

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


Mon enfant, ma soeur,

Songe a la douceur

D ‘aller la-bas vivre ensemble!

Aimer a loisir,

Aimer et mourir

Au pays qui te ressemble!

– (L ‘invitation au voyage) -Charles BAUDELAIRE

‘பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயரால் நான் உனக்கு ஞானஸ்னானம் கொடுக்கிறேன் ‘ என்று சொல்லி தீவின் வடக்குப் பகுதியிலிருந்த பாம்ப்ளுமூஸ் சர்ச்சில்* சேன் லூயி சர்ச்சின் பெரியசாமியார் கப்ரியேல் இகு(Gabriel IGOU), சற்று நேரத்திற்கு முன்புவரை கைலாசமாக இருந்தவன் தலையில் மூன்றுதரம் ஞானஸ்னானத் தொட்டியிலிருந்து தன்னிடமிருந்த கரண்டியால் நீரெடுத்து வார்த்து முடித்த வேளையில் கைலாசம், செபஸ்தியன் ஆகிப்போனான். பங்குச் சாமியார் இதுவரை தன்னால் மதமாற்றப்பட்ட அடிமைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு, மனதுக்குள் போதாதென்று குறைபட்டுக் கொண்டார். செபஸ்தியனென அழைக்கபடவிருந்த கைலாசத்தின் அருகே அவனது ஞானத் தாய் தந்தையராக மேன்மைமிகு குவர்னர் லாபூர்தொனேவும், அவரது பாரியாள் மதாம் ஷர்லொத் லாபூர்தொனேவும் நின்றிருந்தார்கள். இருவருக்கும் லசாரிஸ்து குருமார்களின் அபிலாஷைகளை முடிந்த மட்டும் நிறைவேற்றுவதில் மகிழ்ச்சி.

கைலாசம் கிறித்துவத்தை ஏற்றுக்கொண்டு சில்வியை மணமுடிக்கவேணுமெனச் லசாரிஸ்துகள் சொல்லியிருந்தார்கள். கைலாசத்திற்கு பைபிள் பாடங்கள் கற்பிக்கபட்டன. உபதேசியாரால், கைலாசம் உண்மையிலேயே மதம் மாறுகிறானா ? திருமணத்திற்காக மதம் மாறுகிறானா என அறியபட்டது. வேதக்காரனாக ஆவதற்கு ஆயத்தமாகிய கைலாசத்திற்கு ஞானத் தாய் தந்தையரை தேர்வு செய்ய வேண்டுமென்கிற நியதிப்படி, காமாட்சி அம்மாள் குவர்னரை அணுகியிருந்தார். அதற்கு. குவர்னரும் சந்தோஷமாக இணங்கினார்.

அமர்ந்திருந்த மற்ற ஐரோப்பியர்களின் முகத்தலிருந்து எதனையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. குவர்னரையும், பெரிய சாமியாரையும் திருப்திப் படுத்தவேண்டி, அவர்கள் வந்திருந்தார்கள். அடிமைகளின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அவர்களுக்கு விதிக்கபட்டிருக்கிறதா என்ன ? வந்திருந்த ஆப்ரிக்க இனத்தவருக்கோ, மலபாரிகள் தமது உறவுகளாக மாறிப்போனது குறித்த சந்தோஷமும், மலபாரிகளிடம் குவர்னர் காட்டுகின்ற நெருக்கத்தால் ஏற்பட்ட அசூயையும் கொண்டு அமர்ந்திருந்தார்கள். ஆனால், பெரும்பாலான தமிழர்கள் கைலாசத்தின்மீது கோபத்திலிருந்தார்கள். காமாட்சி அம்மாளும், சீனிவாச நாயக்கரும் நினைத்திருந்தால் இந்த விபரீதத்தைத் தடுத்திருக்கலாமே என்று முனகிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். மாறாக காமாட்சி அம்மாளுக்கும் சீனுவாச நாயக்கருக்கும் வழக்கம்போல ‘எல்லாம் விதிப்படி ‘ என்கின்ற இந்துக்களின் தர்மம் உதவிக்கு வந்திருந்ததால் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தெய்வானை கைலாசத்தின் பெயரை செபஸ்தியென் என உச்சரித்துப் பார்த்தாள். அவளுக்கு விளங்கவில்லை. ‘இன்றைய செபஸ்தியென் என்கின்ற பெயர், நேற்றைய கைலாசம் என்கின்ற மனிதனின் எல்லா இயல்புகளையும் திருப்பிப் போட்டுவிடும் சாத்தியங்கள் உண்டா ? அவன் மனதிலிருப்பது கைலாசமா ? செபஸ்தியனா ? திருமணத்திற்கு முன்னே கைலாசத்தினை மதம் மாறவேணும் என்று நிர்பந்தித்துவிட்டு, அவன் உண்மையான விசுவாசியாக இருப்பானென எதிர்பார்ப்பது சரியா ? ‘, என யோசிக்கலானாள். சர்ச்சுக்கு வெளியே இருந்த பாக்கு மரங்களும், வாழைமரங்களும், அவற்றில் பறந்து வந்தமர்ந்து மீண்டும் எழுந்தோடும் சிட்டுக் குருவிகளும் அவளது கவனத்தை ஈர்த்தன. ‘நல்லவேளை, இவற்றையெல்லாம் மனிதர்கள் மதம்மாறவேணுமாய் நிர்ப்பந்திக்கவில்லை ‘, என்றெண்ணிய மாத்திரத்தில், முறுவல் பூத்தாள்.

காலையிலேயே பாம்ப்ள்மூஸ் சர்ச்சிற்கு, சேன்லூயிலும், பாம்ப்ள்மூஸிலும் வாழுகின்ற ஐரோப்பியர்கள், ஆப்ரிக்கர்கள், மலபாரிகளெனக் கைலாசத்தின் ஞானஸ்னானத்திற்கும், சில்வியுடனான அவனது திருமண மதச்சடங்கிற்கும், தூவானத்தைப் பொருட்படுத்தாமல் பெருவாரியான மக்கள் திரண்டு வந்திருந்தனர். இச்சடங்குகளைத் சேன்லூயி ஆலயத்தில் நடத்துவதென்றே ஆரம்பத்தில் தீர்மானிக்கபட்டிருந்தது. இந்த சமயத்தில் புதிதாக பாம்ப்ளுமூஸ் பகுதியில் திறக்கபட்டுள்ள சர்ச்சிலேயே நிகழ்ச்சிகளை வைத்துக்கொள்ளலாமென குவர்னர் தெரிவித்த யோசனைக்கு காமாட்சி அம்மாளோ, சில்வியின் தகப்பனார் குரூபாவோ மறுமொழி ஏதும் சொல்லவில்லை.

‘வருகின்ற சூன் 27ந்தேதி 1743ம் ஆண்டு சேன் லூயியை (Saint Louis) இருப்பிடமாகக் கொண்ட காமாட்சி அம்மாள் குமாரன் செபஸ்தியனுக்கும், குரூபா என்பவரின் குமாரத்தி சில்விக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கபட்டிருக்கிறது. நடக்கவிருக்கின்ற திருமணத்திற்கு ஆட்சேபனைகள் இருப்பின் தெரிவிக்கலாமென ‘, உபதேசியாரால் வார்த்தைப்பாடு அறிக்கை சிலநாட்களுக்குப் முன்பாக படிக்கப்பட்டிருந்தது.

மணப்பெண் சில்வி வெள்ளைச் சேலை உடுத்தியிருக்க, அவளது தகப்பனார் குரூபா அழைத்துவந்தார். மணமகன் கைலாசமென அழைக்கப்பட்ட செபஸ்தியன் காமாட்சிஅம்மாள், தெய்வானை, நாயக்கர் ஆகியோர் சூழ, கறுப்பு ஆடையில் வந்திருந்தான். இருவரும் பெரிய சாமியார் முன்பாக பூசைப்பலிபீடத்திற்கு எதிரே நிற்கவைக்கபட்டனர். பைபிளில் -பழைய ஏற்பாட்டிலிருந்தும், புதிய ஏற்பாட்டிலிருந்தும் திருமணசம்பந்தமாக வாசகங்கள் வாசிக்கப்பட்டன. பெரிய சாமியார் பிரான்சுவா இகு, மணப்பெண்ணிடம், ‘இதோ உன்முன்னால் நிற்கின்ற செபஸ்தியனை திருமணம் செய்துகொள்ள சம்மதமா ? ‘, என்று வினவினார். அவளது ஒப்புதலுக்குப் பிறகு மணமகனிடம், ‘செபஸ்தியன்! இதோ உன் முன்னால் நிற்கிற சில்வியை திருமணம் செய்துகொள்ளச் சம்மதமா ? ‘, என்று வினவினார். அவனும் ஆமென்றான். இருவரது ஒப்புதலையும் அங்கீகரித்ததின் அடையாளமாக ‘ உங்களுடைய திருமணத்திற்கு அடையாளமாக ஆசீர்வதிக்கபட்ட மோதிரங்களை ஒருவருக்கொருவர் அணிவியுங்கள் ‘ என்றார்.

மோதிரம் அணிவித்துமுடித்து இணைந்திருந்த மணமக்கள் கைகளை, பெரிய சாமியார் இணைத்துப் பிடித்துக்கொண்டு, ‘குழந்தைகளே நீங்கள் இப்போது இறைவன் ஆசீர்வதித்த திருமண பந்தத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் ஒருவர்க்கொருவர் விட்டுக்கொடுத்தும், ஒருவரையொருவர் நேசித்தும் மரண பரியந்தம் சேர்ந்து வாழ்வீர்களாக! இறைவன் இணைத்ததை மனிதன் பிரியாதிருக்கட்டும் ‘ என்பதாக ஆசீர்வதித்தார். பின்னர் மணமக்களுக்குச் சற்பிசாதம் கொடுத்து பூசையை முடித்துவைத்தார்.

மதியம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் குவர்னர் தம் பாரியாளுடன் கலந்துகொண்டு மணமக்களைக் கெளரவித்தார். ஐரோப்பியர்களுக்குப் பசியூட்டுவதற்காகவென்று (Aperitif), சாராயம் வழங்கப்பட்டது. பர்சாக் சிவப்பு ஒயினுடன், குவர்னரின் பிரத்தியேக சமையற்காரர் கைவண்ணத்தில் விருந்தின் ஆரம்பமாக முட்டை, பால், சுறாமீன் கலந்த பணியாரமும், மசாலா சேர்த்த பன்றி இறைச்சியும், இறுதியாக பாதாம்பருப்புத் திணித்த அத்திப்பழமும் பரிமாறப்பபட்டன. கிறேயோல் மக்களுக்கு உள்ளூர் சாராயமும், மசாலா தடவிய காட்டுப்பன்றியும், மரவள்ளிக் கிழங்கு மாவில் நனைத்த காட்(Cod) மீனும் வழங்கப்பட்டன. இந்து தேசத்துத் தமிழர்களுக்கென அதிரசமும், அரிசிச் சோறும், கீரைக்குழம்பும், மிளகு நீரும், பரிமாறப்பட வயிறார உண்டு பறங்கியர்களின் காதுகளுக்கு எட்டாமல் அடக்கமாய் ஏப்பம் விட்டார்கள். ஆனால் வந்திருந்த தமிழர்களில் பெரும்பாலோர், மனதிற் பெரும் வியாக்கூலத்துடனிருப்பதற்கான முகாந்திரத்தை பிற்பகலில்ில் அறிய முடிந்தது.

சேன்லூயி துறைமுகத்தில் மழை சோவென்று கொட்டிக்கொண்டிருந்தது. இந்தமுறை காலையில் பாம்ள்மூஸ் சர்ச்சில் கண்ட அளவு கூட்டமில்லையென்றாலும் காமாட்சி அம்மாள், தெய்வானை, சீனுவாச நாயக்கர், அவரது பாரியாள் ஆகியோர் புதுச்சேரிக்குப் புறப்பட அவர்களை வழியனுப்ப கொட்டுகின்ற மழையையும் பொருட் படுத்தாமல் தீவிலிருந்த மலபாரிகள் முழுவதுமாகக் கூடியிருந்தார்கள். தமிழர்களுக்கு எல்லாமாகவிருந்த காமாட்சிஅம்மாள் இப்படித் திடாரெனப் புறப்படுவதை நினைத்த மாத்திரத்தில், தங்கள் குலதேவதையே தீவை நிர்கதியாக விட்டு நீங்கிச் செல்வதாக உணர்ந்தார்கள். இனித் தீவில் நடக்கவிருக்கும் நல்லது கெட்டதை யார் நடத்துவார்கள். மனப்பிணிகளுக்கு மருந்தாகவிருந்த காமாட்சி அம்மாள் இடத்தை யாரால் நிரப்ப முடியும் ? என்ற கேள்வி எழுந்தது. எட்டியானும், அஞ்சலையும் காமாட்சி அம்மாளை ஏறிட்டுப் பார்க்க மனமின்றி தலை குனிந்து விசும்பிக் கொண்டிருந்தார்கள். வேலுப்பிள்ளை, சுப்பு முதலியார், செல்லமுத்து செட்டி, பாவாடைச் செட்டி, நாராயணசாமிப் பிள்ளை என வந்திருந்த ஆண்களும், அவர்களது பெண்ஜாதிகளும் பேசுவதற்கு என்ன இருக்கின்றது என்று நினைத்தோ என்னவோ முகத்தை இறுக்கமாக வைத்திருந்தனர். அவர்கள் பெரியவர் சீனுவாசநாயக்கரும் இப்படி இவர்களை அம்போவெனக் கை கழுவிவிட்டுப் போவாரென நினைத்ததில்லை. எண்ணிப் பார்க்கக் கோபமும் ஆத்திரமும் பொங்கிக்கொண்டு வந்தது. சில்வியின் தந்தை குரூபாவும், சகோதரன் லூதரும் கூட வந்திருந்தனர். காமாட்சிஅம்மாளை வழியனுப்பவென்று பிரெஞ்சுத் தீவின் நிர்வாகி திதியே தெ சேன்-மர்த்தென் குவர்னரின் சார்பாக வந்திருந்தார்.

காமாட்சி அம்மாள் கைலாசத்தைத் தேடினார் அவன் தெவானையிடம் உரையாடிக்கொண்டிருந்தான்.

‘தெய்வானை புதுச்சேரிப் பயணம், உனக்கு சகல சம்பத்தையும் கொண்டுவருமென்று நம்புகிறேன். நீ ஏன் கண்கலங்குகிறாய் ? ‘

‘அண்ணா, இவ்வளவு வருடங்களாக என்னை அறிந்துமா இப்படிப் பேசுகிறாய். சில கிழமைகளுக்கு முன்புவரை என்னுயிர்த் தோழியாகவிருந்த நீலவேணி இன்று நம்மிடமில்லை. நேற்றுவரை எனக்குத் தமையனாக இருந்த நீ, இன்று எனக்கில்லையென்று ஆகிவிட்டது. என் உடல் பொருள் ஆவியென்று நினைத்திருந்த பெர்னார் குளோதனை எங்கேயென்று இந்து தேசத்தில் தேடப்போகிறேன். எனக்கென்ற உறவுகள் தொடருமா தொடராதா ? நீலவேணி மீதான நினைப்பில், காட்டிலாவது பேயாய் பிசாசாய் அலைந்திருக்கலாம். என்னை மீட்டு அம்மாவிடம் சேர்த்தவன் நீ. திக்குத் தெரியாத காட்டிலிருக்கும் எனக்கெதற்குக் கிரீடமும் அரசாங்கமும் ? ‘ என்றவளின் உதடுகள் ஒட்டாமல் நடுக்கமுற்றன. இதயம் கனத்தது. கால்கள் சோரக் கடற்கரை மணலில் துவண்டுவிழ இருந்தவளைக் கைலாசம் தாங்கிகொண்டான்.

‘தெய்வானை எல்லாம் கடவுளின் திட்டப்படி நடக்கின்றது. இந்து தேசத்தில் பிறந்த நான் இங்கே வரவேணுமென தீர்மானித்தது யார் ? உனக்காவது ஒரு காரணம் இருந்திருக்கின்றது. என் காரணத்தை எழுதியவன் யார் ? அவந்தான் உன் விதியையும் தீர்மானித்திருக்கிறான். எனக்கும் சில்விக்குமான திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கபட்டிருக்கவேணுமென்றால், உனக்கும் பெர்னார் குளோதனுக்குமுள்ள பந்தமும் அந்தப்படிக்காகத்தான் இருக்கவேணும். மனம்போல் மாங்கல்யமென சொல்லக் கேட்டிருக்கிறேன். உன் காதலில் உறுதியாகவிரு! கடவுள் திருவருளால் உன் வாழ்வில் ஒரு குறையும் அண்டாது. ‘ மனத்தைத் திடப்படுத்திக்கொண்டுபேசிய போதிலும் அவன் குரல் கம்முவதை ஒளிக்கவியலாமல் தடுமாறினான்.

‘கைலாசம்!… ‘

காமாட்சி அம்மாள் குரல்கேட்டு, தெய்வானையைத் தாங்கியவனாய் அழைத்துவந்து, நாயக்கர் பெண்ஜாதியிடம் ஒப்படைத்துவிட்டு, கைலாசம் காமாட்சி அம்மாளின் தோளில் முகம் புதைத்துச் சிறு குழந்தைபோல தேம்பித் தேம்பி அழுதான்.

‘அம்மா உங்களை மறுபடியும் காணக்கூடிய பாக்கியம் எனக்கு நேருமா ? என் நினைவு உங்களுக்கு வருமா ? ‘

‘என்ன வார்த்தை பேசிவிட்டாய். ? கைலாசம் நீ எங்கே இருந்தாலும், நீதான் என்மகன் என்கின்ற நினைவோடு இருப்பேன். இப்போதுகூட காலம் கடந்துவிடவில்லை. நீ ஒப்புதல் அளித்தால், குவர்னரிடம் முறையிட்டு இந்த நொடியே, நீ எங்களுடன் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வேன். என்ன சொல்கிறாய் ? ‘

‘அம்மா!.. மன்னிக்கவேணும். இப்போது என்னால் தங்களுடன் வருவதென்பது இயலாது. இங்குள்ள மலாபரிகளுக்குக் தாங்கள் ஆற்றிய தொண்டினை நான் தொடர்வதென்று தீர்மானித்திருக்கிறேன். நம் மக்கள் மட்டுமல்ல, இங்குள்ள பூர்வீக மக்கள் கூட என்மீது அன்பு பாராட்டுகிறார்கள். அவர்கள் எண்ணத்தைப் பூர்த்திசெய்வேன். இறைவன் திருவுள்ளப்படி உங்களை மீண்டும் சந்திக்க முடியுமென்றால் அவசியம் இந்து தேசத்திற்கு வருவேன். எனக்கிங்கு ஒரு குறையுமில்லை. நீங்கள் தைரியத்துடன் கப்பல் ஏறலாம். ‘

‘சில்வி! அருகில் வாயேன் அம்மா! ‘ ஓடிவந்த சில்வியை காமாட்சி அம்மாள் அணைத்துக்கொண்டாள். சில்வி ஓலமிட்டு அழ, காமாட்சி அம்மாள் அவளைத் தேற்றும் வகையறியாது கண்கலங்கி நின்றிருந்தார்.

சில்வியைத் தன்னிடமிருந்து விலக்கிய காமாட்சி அம்மாள், தன் கண்களை முந்தானையாற் துடைத்துக்கொண்டு பேசினாள்.

‘சில்வி!.. இனி கைலாசத்தை தாயாகவும் தாரமாகவுமிருந்து கவனித்துக் கொள்ளவேண்டியது உன் பொறுப்பு. நீ கொடுத்த தைரியத்திலேயே அவனை இத்தீவில் விட்டுப் போகிறேன். எங்கே என்னைப் பார். நான் புறப்படவேணும். விடை கொடு! ‘

சில்வி சிரசை நிமிர்த்தி வலமும் இடமுமாக ஆட்ட, அவளது கன்னங்களில் காமாட்சி அம்மாள் வாஞ்சையாய் முத்தமிட்டார்.

கப்பல் ஊழியர்கள் நேரமாகிறதென வெள்ளைத் துணியைத் தளத்திலிருந்து அசைத்தனர். அங்கே நின்றிருந்த இரு கிறேயோல் பெண்கள் ஓடிவந்து சில்வியை காமாட்சி அம்மாளிடமிருந்து பிரித்தனர்.

நாயக்கரும், அவரது பெண்ஜாதியும் விடைபெற்று முன்னே நடந்து கப்பலில் ஏற அவர்களைத் தொடர்ந்து காமாட்சி அம்மாளும், தெய்வானையும் ஒருவர்பின் ஒருவராக ஏறின மாத்திரத்திரத்தில், கப்பல் நங்கூரமெடுத்து பாய்விரித்து புறப்பட்டது. மோர்ன் லா தெக்கூவர்த்து மலையின் பின்புறத்தில் கப்பல் மறையும் வரை காத்திருந்த கூட்டம் புறபட்டிருந்தது.

கும்பெனி சொல்தாக்களைத் தவிர்த்து, துறைமுக ஊழியர்கள் கபானுக்குத் திரும்பியிருந்தார்கள். சற்று முன்புவரை கும்பல் கும்பலாய் பறந்திருந்த கடற் காகங்களின் சுவடின்றி வானம் துடைக்கப்பட்டிருந்தது. சூரியன் மேற்கில் வீழ்ந்திருந்தான். பாறைகளில் அடித்து தெறித்த இந்து மகா சமுத்திரத்தின் கடல் அலைகள் சோர்ந்து கரையில் விழுந்தன. பகல் நேரத்திலில்லாத உப்போடுகூடிய முடைநாற்றம் அடர்த்தியாய், வீசிய காற்றில் கலந்திருந்தது. மின்மினி பூச்சிகள் பறப்பதும், இறக்கைகள் உதிர மண்ணில் விழுவதுமாயிருக்கின்றன. இருள் வியாபித்திருந்த கடற்கரை பிராந்தியத்தில் கைலாசத்தின் அழுகுரல் வெகுநேரம் ஒலித்துக்கொண்டிருந்தது.

/தொடரும்/

*Paroisse de SAINT-FRANCOIS-D ‘ASSISE http://www.dioceseportlouis.org/presentation/histoire/maurice/vice.htm

Series Navigation