தார்மீகமிழந்த சாமர்த்தியங்கள்

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

வெங்கட் சாமிநாதன்


இப்போது எந்த மாதம், எந்த நாள் என்புது கூட மறந்து விட்டது. இரவு பத்து மணி இருக்கும். தொலைபேசி மணி அடித்தது. கனடாவிலிருந்து செல்வ கனக நாயகம் பேசுகிறேன் என்றது குரல். யார் நம்புவார்கள் ? யார் இந்த கனக நாயகம் ? கனடாவுடன் எனக்கு என்ன தொடர்பு ? கனடாவை நான் எப்போதாவது நினைத்தாவது பார்த்திருக்கிறேனா ? வாழ் நாளிலேயே ? இப்போது நினைவுக்கு வருவது, கனடாவிலிருந்து ஐம்பதுக்களின் ஆரம்பத்தில் ஏகப்பட்ட நீராவி ரயில் என்ஜின்கள் வாங்கி, அவற்றின் கனத்தையும் வேகத்தையும் நம் நாட்டு இருப்புப்பாதைகள் தாங்கமுடியாத காரணத்தால், பத்து பன்னிரண்டு என்ஜின்கள் தொடர்ந்து கவிழ்ந்த விபத்துக்களின் காரணமாக மத்திய ரயில் மந்திரி தம் பதவியைத் துறந்தார். மந்திரிகள் தார்மீக பொறுப்புக்கள் பற்றி நினைத்த காலம் அது. இன்று அது பைத்தியக்காரத்தனம். அது ஒரு காலம். ஐம்பதுக்கள். இன்னொன்று தமாஷான விஷயம். கனடாவின் பிரதம மந்திரி ட்ரூடோ, நம் அரசின் அழைப்பில் இந்தியா வந்திருந்த போது அவருக்குத் தந்த உபசரிப்பில், ஒரு நாள் மாலை யாமினி கிருஷ்ணமூர்த்தியின் நடனமும் ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. யாமினி ஆடிய கிருஷ்ண சப்தத்தில் ஒரு கட்டம். ‘ராரா, ராரா ‘ என்று பாலகன் க்ருஷ்ணனை விளையாட்டும் குரும்புமான நேத்ராபிநயத்தில் நடனமாடும் யாமினி கண் சிமிட்டி கொஞ்சலாக அழைக்கப் போய், முன் வரிசையில் அமர்ந்திருந்த ட்ரூடோ, யாமினி தன்னைத்தான் அழைப்பதாக எண்ணி, தன் இருக்கையை விட்டு எழுந்து, மேடையை நோக்கி விரைந்தார், என்று ஒரு செய்தி உண்டு. இது எவ்வளவு உண்மை என்பது தெரியாது. ஆனாலும், இந்த கதையின் சுவாரஸ்யம் என் மனதில் நன்கு பதிந்து கனடாவைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் இந்த நினைவும் உடன் வரும். அதெல்லாம் சரி, இந்த கனக நாயகம் யார் ? ‘ உங்கள் வாழ் நாள் முழுதுமான் இலக்கிய சாதனைக்காக, உங்களுக்கு இயல் விருது அளிப்பதாக எங்கள் குழுவில் ஏகமனதாக தீர்மானித்துள்ளோம், நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். உங்களுக்கு முதலில் தகவல் தெரிவித்து உங்கள் சம்மதத்தைப் பெறத்தான் உங்களோடு தொடர்பு கொண்டேன் ‘ என்றார், கனக நாயகம். அவர் பேசியது இலங்கைத்தமிழ். ஆகவே இது hoax ஆக இருக்கமுடியாது. நான் ஜன்மத்தில் இப்படியெல்லாம் எனக்கு தொலைபேசி செய்திகள் வரும் என்று எண்ணியது கிடையாது. அதுவும் போக இது விருது பற்றி. இருப்பினும், ‘மகிழ்ச்சியான விஷயம். நன்றி. நான் சற்றும் எதிர்பார்க்காத விசயம் இது. எனக்கு இதை அதிகார பூர்வமாக கடிதம் எழுதுவீர்களா ? ‘ என்று கேட்டேன். ‘ ‘கட்டாயம் எழுதுவோம். நாளாகும். இது முன்னறிவுப்பு தான் ‘ என்றார், கனக நாயகம்.

இது தமிழ் நாட்டில் நடந்த ஒரு பரிசுப்புரட்சி என்றே சொல்லவேண்டும். ‘ ‘டெலிபோன் வந்தது, ஆச்சரியப்பட்டுப்போய் விட்டேன் ‘ என்று ஸ்டாக் டயலாக் பேசுவார்கள். அது தான் தமிழ் வரலாறு. மரபு. ஆனால் இது தமிழ் நாட்டில் நடந்தது இல்லையே, கனடாவில் அல்லவா நடந்துள்ளது.! ஆக தமிழ் மரபும், வரலாறும், தமிழ் எழுத்தாளர் சீலமும் காப்பாற்றப்பட்டு விட்டது என்றுதான் சொல்லவேண்டும். என் சக எழுத்தாளர்களையும், தமிழ் எழுத்து உலகையும் எனக்கு நன்கு தெரியுமாதலால், நான் யாரிடமும் இதுபற்றி மூச்சு விடவில்லை. முன்னர், கோயில் சுண்டல்கடலை போன்று வினியோகிக்கப்படும் பரிசு ஒன்று, கலைமாமணி போன்ற ஒன்று, தமிழ் வளர்ச்சி கழக பரிசோ அல்லது தமிழ் அரசு பரிசோ எதொ தெரியாது, கடைசிக்கட்டத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது மறைந்த மாயம் தெரியவில்லை. ‘ ‘கடைசிக்கட்டம் வரை சென்றது எப்படி ஐயா ?, அதைச்சொல்லும், ‘ என்றேன். பதில் வரவில்லை. ஆக எந்நேரமும் எதுவும் நடக்கலாம். பிரதம மந்திரியின் சென்னை வருகையே ரத்தாகிறது. இந்த விருது எந்த மூலை ? தமிழ் எழுத்தாளர்களுக்கு தன் சகாக்களின் சுக துக்கங்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு. இந்த தள்ளாத வயதில் நான் அலையலாமா ? கனடாவில் குளிர் வேறு கடுமையானது. விசா வாங்குவது வேறு பெரிய தொல்லை. பேசாமல் மடிப்பாக்கத்திலேயே அக்கடா என்று இருப்பவர் தொல்லைப்படும் படி விடக்கூடாது, என்று எனக்காக விசனப்படுவார்கள். அது வராமலிருக்க ஆவன உடனே செய்வார்கள். தில்லியில் என்னைப் பார்க்க வருபவர்களை, ‘ ‘என்னத்துக்கு உங்களுக்கு கேடு காலம் ? அந்த ஆள் மேலே விழுந்து புடுங்குவான்யா ‘ ‘ என்று தடுத்தாட்கொண்ட மகானுபாவர்கள் எனக்கு நண்பர்களாக நிறைய இருந்திருக்கிறார்கள். இது எனக்கு தடுத்தாட்கொள்ளப்பட்டவர்களே பின்னாளைய சந்திப்பில் சொன்னது. ஆக என் சுக செளக்கியங்களில் அக்கறை கொள்ளும் தமிழ் எழுத்தாளர்கள் நிறைய. ஆக கனடாவுக்கு செய்தி போகக்கூடும். செய்திகள் போகின்றன தான். அது பற்றி பின்னர் சொல்ல இருக்கிறேன்

சில நாட்கள் கழித்து நான் கனடா வர செய்து கொள்ள வேண்டிய தயாரிப்புகள் பற்றி, உரை ஆற்றுவது பற்றி, அதற்கு முன் சுந்தர ராமசாமிடம் தாம் பேசியிருப்பதாகவும் அவருடன் ஒரு கலந்துரையாடலும் தமக்கு வேண்டும் என்றும் சொன்னார், பேசியது இம்முறை அ.முத்துலிங்கம். இதைத்தொடர்ந்து, அடுத்து என்னிடம் பேசியது, சுந்தர ராமசாமியே. இதற்கு சில வாரங்கள் முன் அவர் என்னை அவருடைய க. நா.சு நினைவுகளைப்பற்றிய புத்தகத்தைப் பற்றி அதன் வெளியீட்டு விழாவில் பேச நாகர்கோயில் அழைத்திருந்தார். விழாவுக்கு மட்டும் வந்து போவது என்றில்லாமல், ‘ ‘ நாம் சந்தித்து உரையாடி வெகு ஆண்டுகளாகி விட்டதால், சில நாட்கள் இங்கு தங்கி சாவகாசமாக் பேசும்படியாக வாருங்கள் ‘ என்று அழைத்திருந்தார். இதற்குள் நான், எல்லாக் கிழங்களுக்கும் நேர்வது போல் குளியலறையில் வழுக்கி விழுந்து, கால் முட்டியும் தேய்ந்து, நடக்கமுடியாது போய், தில்லி கதா விழாவுக்கும் போக முடியாது, நாகர்கோயில் போவதையும் விட்டு விடவேண்டியதாயிற்று. இயல் விருது எனக்கு கிடைத்துள்ளது பற்றி தனது சந்தோஷத்தைத் தெரிவித்து, எனது கால் நிலையைப்பற்றி விசாரித்தார். சுந்தர ராமசாமி. ‘ இதற்காக கனடா போகாமல் இருந்து விடாதீர்கள். விமான அதிகாரிகளிடம் சொன்னால் சக்கர நாற்காலியும், உதவியாளரும் கொடுப்பார்கள். ‘ என்றும், என் புத்தகங்களை மறுபடியும் ஒருமுறை படித்து, நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டு, பின்னர் உரையாடலுக்கு ஏற்பாடு செய்யலாம் ‘ ‘ என்றும் சொன்னார். ‘ ‘பக்கத்தில் கமலா இருக்கிறாள். உங்களுடன் பேச விரும்புகிறாள் ‘ என்று சொல்லி, போனைக் கொடுக்க, அவர் மனைவியும், தான் ‘ ‘ ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவதாகச் சொல்லி, வாழ்த்துத் தெரிவித்து, போகாமல் இருந்து விடாதீர்கள், ‘என்றார்.. பின்னர், டோரண்டோவில், செல்வம் அருளானந்தமும், மகாலிங்கமும் கூட இருவரும் தனித்தனியே, பேச்சுக்களிடையே, சொன்னார்கள், ‘பரிசு யாருக்கென தீர்மானமானதும், சு.ரா.வுக்கு தொலைபேசியில் சொன்னோம். அவர் மிகவும் சந்தோஷப்பட்டுச் சொன்னார், ‘ நாற்பது வருஷகாலமாக அவர் செய்துள்ளதற்கு அவர் பெற்றது ஒன்றுமில்லை. இந்த விருது அவருக்குக் கிடைக்கவேண்டியது தான். நீங்கள் செய்துள்ளது மிக நல்ல காரியம், என்றார் சு.ரா. ‘என்று எனக்குச் சொல்லப்பட்டது. கிடைத்த எல்லா செய்திகளும் ஒன்றை ஒன்று அரண் செய்வதாகவே இருந்தன.

ஜய மோகனும் இரண்டு மூன்று தடவை எனக்கு டெலிபோன் செய்தார், ‘ ‘ஏதாவது காரணம் சொல்லி போகாது இருந்துவிடுவீர்களோ என்று எனக்கு பயம். அதனால் தான் திரும்பத் திரும்ப பேசுகிறேன். கட்டாயம் போய் வாருங்கள் ‘ என்பார். இதற்கிடையில் திண்ணை இணைய இதழில் எனக்கு அளிக்கப்பட விருக்கும் இயல் விருது பற்றி விரிவாக செய்தி தரப்பட்டிருந்தது. இதன் பிறகே, இனி தமிழ் நாட்டு என் சகபாடிகள் யாரும் என் உடல் நிலையில் அக்கறை கொண்டு, கனடப் பயணத்தை தடுத்து நிறுத்தி விட முடியாது என்ற நிச்சயம் என்னுள் பிறந்தது.

இதன் பிறகு ஒரு பிரபல பத்திரிகை, குங்குமம் என்று நினைவு, ‘விமர்சகர் வெங்கட் சாமினாதன் ஒரு லக்ஷ ரூபாய் பரிசு பெற அமெரிக்கா போகப்போவதாக ‘ ஒரு பெட்டியுள் அடக்கிய ஐந்து துணுக்குச் செய்திகளில் ஒரு துணுக்காக, வெளியிட்டிருந்தது. டொரண்டோ போனால் இந்த செய்தியைக்காட்டி, ஒரு லக்ஷ ருபாய் டிமாண்ட் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டேன். இதன் பிறகு எனக்கு வாழ்த்துக்கள் இரண்டோ மூன்றோ வந்தன. தமிழ் நாட்டின் ஏழுகோடியில் என் வோட்டு வங்கி இவ்வளவு தான் என்று தெளிவாகியது. தம் புத்தகங்களை அனுப்பி என் கருத்துக்களைக் கேட்டவர் தொகை கிட்டத்தட்ட ஒரு நூறு இருக்கலாம். ஆனால் வோட்டு வங்கி ஒரு கைவிரலுக்குள் அடங்கி விடுகிறது. ஒரு அன்பர் கேட்டார், ‘கனடாவுக்குப் போகணுமா இங்கியே கொடுப்பாங்களா ? ‘ என்று கேட்டார். ‘கனடாவுக்குப் போகணும் ‘ என்று சொன்னதும், ‘அடி சக்கை, லாட்டரிச் சீட்டு விழுந்துடுச்சி உங்களுக்குன்னு சொல்லுங்க, ‘ என்றார். இன்னொருவர், ‘ ‘கேள்விப்பட்டேனே, அப்படித்தாங்களா ? ‘ என்று கேட்டார். ஏதோ நான் போகக்கூடாத இடங்களுக்கு சந்திருட்டில் போய், அகப்பட்டுக்கொண்டு ஒரு இரவு போலிஸ் ஸ்டேஷனில் கழித்து வந்தவனை துக்கம் விசாரிப்பதான சோக பாவம் அவர் முகத்தில் இருந்தது. தமிழ் நாட்டில் பரிசு வாங்குவதும் இருட்டில் ஏற்பாடு செய்யப்படும் சமாசாரம் தானே என்ற மரபுத்தொடர்ச்சிதான் சோகத்திற்குக் காரணமோ என்னவோ. இவ்வளவு தான் தமிழ் நாடு இயல் விருது எனக்கு அளிக்கப்பட்டது பற்றி சந்தோஷம் அல்லது துக்கம் பட்டது. இதே விருது கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கோ அல்லது கவிப்பேரரசு வைரமுத்துக்கோ அளிக்கப்பட்டிருந்தால், தமிழ் நாடு என்ன அல்லோகலகல்லோலப்பட்டிருக்கும் என்று நினைத்துப்பார்த்தேன்.எத்தனை ‘சென்று வருக, வென்று வருக ‘ போஸ்டர்கள் தமிழ் நாட்டுச் சுவர்களை ஆக்கிரமித்திருக்கும். தமிழினத் தலைவரைக் கண்டு ஆசி பெற்று, அது முரசொலியில் கவிதையாக மலர்ந்தும் இருக்கும். கொடுக்கப்படுபவரின் குணத்தையும் தரத்தையும் தான் பரிசும் பெறுகிறது என்பது எவ்வளவு உண்மை என்பது மறுபடியும் நிரூபணமாயிற்று. பின்னே வேறு என்ன காரணம் ஐந்து லக்ஷம் பெறுமான ஸம்ஸ்க்ருதி பரிசு இ.பா.வுக்கு ஏதோ பாங்க் கணக்கில் சேர்ப்பது போன்று பேச்சு மூச்சின்றி நடந்து முடிகிறது. ? 50,000 ருபாய் சாகித்ய அகாடமி பரிசோ 50,000 க்கு மேலேயே செலவு செய்யப்பட்டு பெறப்பட்டு, தமிழ் நாடெங்கும் விழாக்கோலம் கொள்கிறது. . எனக்குக் கொடுத்து அதன் கெளரவத்தையே குலைத்து வீணாக்கிவிட்டதாக பலரும் நினைத்தார்கள்.இவர்கள் பொருமலில்,வயிற்றெரிச்சலில், ஒரு தமிழ் மரபு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

ஆக இதில் எனக்கு ஏதும் புல்லரிப்போ அல்லது வேறு எந்த அரிப்புமோ இருக்கவில்லை. மாறாக, நிறைய அலைச்சலும் பணச்செலவும் தான், மன நிம்மதியையும் குலைத்துக்கொண்டு. ஆனால், என்னமோ சொல்வார்களே, உள்ளூரில் கோழி பிடிக்காதவன் வெளியூரில் யானையா பிடித்து விடுவான் என்று. எனக்கு உள்ளூரில் கோழிக்குஞ்சுகூட பிடிபடவில்லை. எங்கோ 6000 மைலுக்கு அப்பால் நான் அம்பாரத்தோடு யானையையே பிடித்துவிட்டதாக பாராட்டு வந்தது. உள்ளூர்க்காரன் யாரும் நம்புவதாக இல்லை. சந்தோஷப்படவும் இல்லை. ‘கனடா போகும் ஏற்பாட்டுக்கே இவ்வளவு செலவு இங்கேயே என்றால், கனடா போய் அதை வாங்கணுமா ? ‘ என்று ஒரு கேள்வி வீட்டில் எழுந்தது. ‘கனடா பார்க்கலாமே ‘ என்று சொல்லிப்பார்த்தேன். ‘ ஆமாம், கும்மிடிப்பூண்டியே பார்த்ததில்லை. கனடா பார்க்காவிட்டால் என்ன கெட்டுப்போயிற்று ? ‘- என்னிடம் இதற்கு பதில் இருக்கவில்லை. தில்லிக்கு விசா வாங்கப்போனேன். காலையில் 8.30 க்கு ஹை கமிஷன் வாயில் திறக்கும். நாம் இங்கிருந்து காலை 7.30க்கு கிளம்பி ஆட்டோவில் போய்விடுவோம். எட்டு மணிக்கெல்லாம் அங்கு இருப்போம். ‘ என்றார் நண்பர் ராஜேந்திரன். காலை 8,.00 க்கு அங்கு போனால், முதல் நாள் இரவே அங்கிருந்த புல்வெளியில் டேரா போட்டு உறங்கி எழுந்த பஞ்சாப் ஹரியானா கூட்டம். சுமார் 500-600 பேர். தினம் 100 பேர்தான் ஹைகமிஷன் காம்பவுண்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மிகுந்தவர் மறு நாள் வரலாம், என்று சொன்னார்கள். முந்தின தினம் இரவு வந்து புல் வெளியில் படுத்துக்காத்திருந்தவரில் வரிசைப்பட்டியலை ஒரு சர்தார்ஜி வாசிக்க ஒவ்வொருவராக ஹைகமிஷனின் வாயில் நோக்கி ஒடத்தொடங்கினர். ‘ பச்சீத்தர் சிங், ஜண்டா சிங், தெளசண்டா சிங், -மாஹீந்தர் சிங், ….ப்யாரா சிங், ஹர்மீந்தர் சிங்… அவ்வளவுதான் ஆயிற்று நூறு பேர் ‘ என்று சொல்லி முடித்தான்.அந்த சர்தார்ஜி. மிகுந்தவர்களும் பின் தொடர்ந்து ஒடிப்போய் வரிசையில் சேர்ந்து கொண்டனர். நானும் நொண்டி நொண்டி போய்ச்சேர்ந்தேன், 578வது ஆளாக. ‘எதற்கு இந்த பைத்தியக்காரத்தனம் ? தெரியாது. ‘ நேற்று உதவுவதாக சொன்ன அதிகாரி ஏமாற்றி விட்டாள். இப்போதான் அவளுக்கு டெலிபோன் செய்து விட்டு வருகிறேன். ‘ என்றார் ராஜேந்திரன். அரைமணி காத்திருந்தோம். யாரும் ஒரு அங்குலம் கூட முன்னேறியதாக தெரிய வில்லை. நான் இருந்த இடத்திலேயே இருந்தேன். இதில் ஏதும் அர்த்தமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. கால் வலி எடுத்தது. நிற்க முடிய வில்லை. ‘சரி திரும்பிப் போய் கனடாவுக்கு. ‘விசா கிடைக்க வில்லை. நானும் கனடா வரமுடியாது. உங்கள் தேர்வுக்கும் நல்ல மனதுக்கும் நன்றி ‘ என்று ஒரு இ-மெயில் கொடுத்து விடலாம். அது ஒன்று தான் செய்யக்கூடியது ‘ என்று தீர்மானித்தேன். ‘ இல்லை, நான் போய் ஏதாவது வழி இருக்கா என்று பார்க்கிறேன் ‘ ‘என்று சொல்லி உள்ளே போன ராஜேந்திரன் அரைமணி கழித்துத் திரும்பி, ‘டோரண்டோ யுனிவர்சிடி கடிதத்தை கொடுங்கள், காவல் அதிகாரி பார்க்க விரும்புகிறான் ‘ என்றார்.

உள்ளே நுழைய அனுமதி கிடைத்தது. ஆக நான் கனடா போனது, விருது பெற்றது எல்லாம், அந்த காவல் அதிகாரியின் மனது மாற்ற கடைசி இழையில், ராஜேந்திரன் மூளையில் அந்த நிமிடம் தோன்றிய அலையில், தொங்கிக் கிடந்தது. அந்த நூலிழை அறுந்திருந்தால், எத்தனை பேர் இப்போது தம் மனதுக்குள் பொருமுகிறவர்கள், அடக்கமுடியாது கரித்துக்கொட்டுபவர்கள் சந்தோஷப்பட்டிருப்பார்கள்! நடக்கவில்லை. இப்போது பலரின் முகம் சற்று தெளிவாகத் தெரிய தொடங்கியுள்ளது. இவ்வளவுதான் இந்த யாக்கையின் கனடச் செலவின் ஒரு அத்தியாயம். முதல் அத்தியாயம். இது பரிசு எனக்குக் கொடுத்த பரவசத்தைச் சொல்லும்.

சுந்தர ராமசாமி திடாரென சுகவீனமுற்றதால், சிகித்சை பெற்றுப் பின் அமெரிக்கா செல்வதாக கடிதம் எழுதினார். அதற்கு மேல் அவர் ஏதும் விவரம் சொல்லவில்லை. அரவிந்தன் பேட்டி காண்பார் என முத்துலிங்கத்திடமிருந்து செய்தி வந்தது. இடையில் ஒரு ஒவியக் கண்காட்சியில் பார்த்த மனுஷ்யபுத்ரன், பேட்டி காண தன்னைக் கேட்டிருப்பதாகச் சொன்னார். அடுத்து சில நாட்கள் கழித்து, சிபிச்செல்வம் தான் தான் பேட்டி காணவிருப்பதாக சொன்னார். யாரும் முந்திய நபர் மறைந்து தான் காட்சி தரும் ரகசியம் என்ன என்பது பற்றி ஏதும் சொன்னதில்லை. என்னமோ திரை மறைவில் நடப்பதாகத் தான் மனதில் நிழலாடியது. முத்துலிங்கமோ எனக்கு எவ்வளவு தகவல் அவ்வப்போது தேவையோ அவ்வளவே தருபவராக இருந்தார். காலச்சுவடு, உயிர்மை இரண்டும் தான் இயல் பரிசு பற்றிய செய்தியை பிரசுரித்தன. கனடாவிலிருந்து திரும்பி வந்ததும், காலச்சுவடும், உயிர்மை யும், அமுதசுரபியும் கனடாவிலிருந்து வெங்கட் ரமணனும், முத்துலிங்கமும்(என் யூகம்) பரிசளிப்பு விழா பற்றி எழுதி அனுப்பிய செய்தியைப் வெளியிட்டிருந்தன.

கண்ணனுக்கு என் எழுத்தில், என் செயல்பாடுகளில் ஏதும் மதிப்பு கிடையாது என்பது எனக்குத் தெரியும். அது ஒரு காலத்தில் கண்ணனுடன் நெருங்கியிருந்தவர்களிடமிருந்தும் பேச்சுவாக்கில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் நேர் பழக்கத்தில், கண்ணன் ஒரு போதும், என் வயது காரணாமாகவோ, அப்பாவின் நெடு நாளைய நண்பன் என்ற காரணத்தோலோ, மரியாதைக்குறைவாக நடந்து கொண்டது கிடையாது. எனக்கும், கண்ணன் அப்பாவின் இலக்கிய ஈடுபாடுகளில் கொண்டுள்ள மதிப்பும் அப்பாவை ஒரு சிகரத்தில் அமர்த்திவிட எடுத்துக்கொள்ளும் தீவிர முயற்சிகளும் பாராட்டத்தகுந்தவையாகவே தோன்றின. மேலும் கண்ணனின் நிர்வாக திறனை நான் பாராட்டும்போதெல்லாம் கண்ணனுக்கு ஏனோ அவை கேலியாகவே பட்டன.

இனித்தான் சிலருக்கு தம் தமிழ் மரபு பேணும் நினைவு வந்தது போலும். காலச்சுவடு வில் பெட்டி கட்டி முக்கியப்படுத்திய கடிதம் ஒன்று, காலச்சுவடுவின் இலங்கை வாழ் ஆலோசனைக் குழுவினரான எம். ஏ நுஹ்மான் என்பவர் இயல் விருதுக்கு நான் தகுதியற்றவன், விருதுவின் கெளரவத்தையே இது தாழ்த்திவிட்டது என அவர் தன் வயிற்றெரிச்சலையே கொட்டித்தீர்த்துக் கொண்ட கடிதம் ஒன்று வெளியாகிற்று. இதற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பார்த்தால், காலச்சுவடு கண்ணனும் நுஹ்மானின் கரிப்பைப் பகிரிந்து கொள்வதாக எனக்குப் பட்டது. இயல் விருது அறிவிக்கப்பட்டபின் கண்ணன் என்னுடன் பேசியது, அதுவும் நாகர்கோயிலிலிருந்து தொலைபேசியில், ஒரே ஒரு முறை தான். இந்தியா டு டே யில் நான் தருமு சிவராமுவின் கதைத்தொகுப்பு பற்றிய என் மதிப்புரையைப் படித்துவிட்டு, அது மிக நன்றாக balanced- ஆக எழுதப்பட்டுள்ளதாகவும் தனக்குப் பிடித்திருந்ததாகவும் சொல்லத்தான். இதறகாகவா நாகர்கோயிலிலிருந்து std ? அதுதான் கண்ணன் முதல் தடவையாக என் எந்த எழுத்து பற்றியும் ஏதும் கருத்து சொன்னது . ‘இது பெரிய விஷயம் தான். கண்ணனின் பாராட்டு கிடைத்துவிட்டதே, இதற்கு மேல் என்ன வேண்டும் எனக்கு ? ‘ என்று பதிலளித்தேன். . பின் எனக்குத் தோன்றிற்று, ஒரு மதிப்புரையைப் பாராட்டத் தெரிகிறது. இயல் விருது பாராட்ட வேண்டிய விஷயமாகக் கண்ணனுக்குத் தோன்றாதது, மறதியோ, தற்செயலான விஷயமோ இல்லை என்று. இந்த நினைப்பு தவறாகவும் இருக்கலாம். ஆனால் நுஹ்மான் எழுத்தும் அது பெற்ற முக்கியத்வமும் ? பின்னர் அதைக் கண்டனம் செய்து வந்த கடிதங்கள் பத்தோடு பதினொன்றாக பிரசுரிக்கப்பட்ட பாங்கு. நுஹ்மானது கருத்து அவரதே எங்களது அல்ல என்று கூட ஒரு வரி அடிக்குறிப்பு கூட இல்லை. கண்ணனுக்கு அத்துடன் உடன்பாடு இல்லை எனில் அது பிரசுரிக்கப்பட்டிராது. ஏதும் நிர்பந்தமிருப்பின், பத்திரிகை அத்துடனிருந்து தன்னை விலக்கிக் கொள்ளும் குறிப்பு பத்திரிகை தர்மத்தை, தனி மனித தர்மத்தை, கருத்து தர்மத்தைச் சார்ந்து வெளியிடப்பட்டிருக்கும். காலச்சுவடு ஒரு முனிசிபாலிடி குப்பைத்தொட்டி அல்லவே., யாரும் எதையும் அதில் விட்டெறியலாம், எதுவும் கிட்ட வந்து ஒரு பின்னங்காலைத் தூக்கலாம் என்பதற்கு.

நுஹ்மானுக்கு என்னிடம் 30 வருட மிகப் பழைய,கூலியாகப் பெற்ற ,குரோதம் உண்டு. கைலாசபதியின் ஒரு பிதற்றல் புத்தகத்தை நான் கடுமையாக நடை பத்திரிகையில் கண்டனம் செய்திருந்தேன். ஒரு மிக நீண்ட கட்டுரை. நடையின் நாலைந்து இதழ்களில் வந்தது. தாம் ஒரு மேதையாக குருவாக மதித்திருந்த ஒருவர் இப்படி அடி படுவது முற்போக்காளர் சமூகத்திற்கு அதிர்ச்சியாக இருந்தது. தமிழருக்கே உள்ள குணமான, கண்டுகொள்ளாமலிருப்பது, கைலாசபதிக்கு அப்போது செளகரியமாக இருந்தது. ஆனால் சில வருடங்கள் கழித்து, அது பூரணீ என்னும் இலங்கைப் பத்திரிகையிலேயே ஒரே இதழில் பிரசுரமானதும், தன் பேட்டையிலேயே தான் அவமானப்படுவது சரியல்ல என்று, அப்போது தன் காலடிக் கீழ் இருந்த நுஹ்மானை இதற்கு பதில் கொடுக்கச் சொன்னார் கைலாசபதி. ஆண்டை இட்ட கட்டளையை ஆசானின் திருப்திக்கு நிறைவேற்றப்பட்டது,ஒரு கூலிப்படையின் கர்ம சிரத்தையுடன். அதற்கான் வெகுமதியும் அவருக்குக் கிடைத்து அதை இன்று வரை அனுபவித்தும் வருகிறார் இவர். ஆக விஸ்வாசமான சொன்னதைச் செய்யும் கூலிப்படை என்னும் புகழ் ஏற்கனவே உள்ளதால், இப்போது, தன் அப்பாவுக்கு சமதையாக விருது பெற்றுள்ள, தான் மதிக்காத ஒருவரை சும்மா விடுவதா என்ற நினைப்போ என்னவோ, கண்ணனுக்கு. ஏற்கனவே நல்ல service record உள்ள கூலிப்படைக்கு இன்னொரு வேலை. தன் தர்பாரிலேயே வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள ஒரு ஆள் கிடைத்தால் வேறென்ன வேண்டும் ? கண்ணனின் நிர்வாகத்திறன் என் பாராட்டைப் பெற்றுள்ளதே.

நுஹ்மானின் வசைக்கு எதிரொலி பதிவுகள் என்னும் இணையத்திலேயே, எழுத வைத்துப் பெறப்பட்ட ஒன்று அது என வெளிவந்தது. இது கனடாவிலிருந்து வரும் இணைய இதழ் என்று நினைக்கிறேன். ‘கேட்டார்கள் எழுதிக்கொடுத்தேன் ‘ என்று நுஹ்மானே சொன்னதாகவும் ஒரு செய்தி. இதை நுஹ்மானின் மாண்பும் வரலாறும் அறிந்தவர்கள் நம்புவார்கள் தான். எனக்கு பல இடங்களிலிருந்து வரும் செய்தி, இது கட்டளையிட்டு பெறப்பட்டது என. காலச்சுவடையும் கண்ணனையும் நன்கு அறிந்த மனுஷ்யபுத்திரன் அவசரம் கருதி துண்டுபிரசுரமாக வெளியிட்டுள்ளதில் காலச்சுவடில் வெளியாகும் பல கட்டுரைகள் கூட்டுத்தயாரிப்புகள்தான் என்கிறார். கோட்டைக்குள் வெகு காலம் இருந்தவர். உள் விஷயங்கள் அறிந்தவர் என கொள்ளலாம். இக்கூட்டுத்தயாரிப்புகள், காலம், சந்தர்ப்பம், கருதிச் செய்யப்படும் திட்ட நடவடிக்கைகள் என்று அவர் பிரசுரத்திலிருந்து தெரிகிறது. ஜெயகாந்தன், ஜெயமோகன் பற்றி வந்த விமர்சனங்கள் இப்படிப்பட்டவை எனவும் இவற்றின் பின் இலக்கியம் மீறிய காரணங்கள் உண்டு என்றும் சொல்லப்படுகிறது. முன்னாளைய எதிரணிக்காரர், இன்றைய நேர்காணலுக்குப் பாத்திரமான பொ.வேல்சாமி. இது இப்போர்த் தந்திரங்களுக்கான இன்னும் ஒரு உதாரணம்.

அப்பாவுக்கு ஒரு குறிப்பிடத்தகுந்த இலக்கிய ஸ்தானம் உண்டு. கண்ணனுக்கு தன் அப்பாவின் மேல் அவர் எழுத்தின் மேல் உள்ள மதிப்பும் பிரேமையும் பாராட்டத்தக்கவையே. கண்ணனின் நிர்வாகத்திறனும், செயல்திறனும் யாரையும் உடன் கவரும். ஆனால், எதுவும் ஒரு அளவுக்கு மேல் முற்றிலும் குணம் மாறியதாகிவிடும். என்ன அளவு என்று கேட்கவேண்டாம். இதில் சாமர்த்தியம் காட்ட வேண்டாம். புளிப்பு இனிப்பாகும். இனிப்பு புளிப்பாகும். எந்த அளவில் ?. தெரியும் எல்லோருக்கும். அப்பா கம்பீரமான ஆகிருதி தான். photogenic தான். இயல்பான் அவரது தோற்றத்தில், மிக impressive ஆன புகைப்படங்களை நிறைய சேர்க்கமுடியும். அவரது ஜீவ சரித்திரத்தையே திட்டமிடாது சேர்த்த புகைப்படங்களாலேயே காட்சிப்படுத்தி விட முடியும். ஆனால் இப்போது திட்டமிட்டு நடந்துள்ள கண்காட்சி, அவரை ஒரு வெற்று மாடலாக்கி கீழிறக்கியுள்ள ஒன்று. தர்பாரில் இருப்பவர்களெல்லாம் புகழ் பாடுவார்கள் தான், நிதானமிழந்து, இவையெல்லாம் பழங்கால சமஸ்தான சூழலையே நினைவுறுத்துகின்றன. இதை ராமசாமி எப்படி எடுத்துக்கொண்டார் என்று தெரியவில்லை. இம்மாதிரியான ஒரு புகழ் தர்பாரைப் பார்த்து மகிழ, திமுக தலைவர் அலங்கரிக்கும் எந்த மேடையையும் பார்க்கலாம். அவர் தான் இப்புகழ்மாலைகளை ரசிப்பவர். காமராஜ் தலைமை தாங்கும் மேடையில் இதைக் காண முடியாது. அவர் ஒரு கலைஞர் இல்லைதான். இருப்பினும் அவரால் இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாது. ‘சரி போதும் நிறுத்திக்கண்ணேன் ‘ என்று மேடையிலேயே கண்டிப்பார்.

ஒரு காலத்தில் அப்பாவைச் சுற்றிச் சுற்றி பக்தியோடு வந்தவர்களெல்லாம் முற்றிலுமாக அன்னியப்பட்டுப்போய் இன்று சீறுவதற்குக் காரணம் யார், என்ன ? அப்பாவைச் சிகரத்தில் வைக்க யாரும் முயல வேண்டாம். தன் இடத்தை அவரே தேடிக் கொள்வார். இவர்களெல்லாம் பேசப்படுகிறார்களே, அப்பாவின் இடத்தை பறித்துக் கொண்டு விடுவார்களோ என்று பயந்து அவர்களை எல்லாம் சிறுமைப்படுத்தும் முயற்சிகள் எல்லாம் அப்பாவுக்கு அவப் பெயரைதான் தரும். நாகர் கோயில் மடம் என்று சொல்ல ஆரம்பித்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. அவர்கள் எல்லாம் அப்பாவின் விரோதிகள் அல்லர். அவரிடம் இன்றும் எந்த பகை உணர்வும் இல்லாதவர்கள் தான், ‘இதில் அவருக்கு இஷ்டமில்லை, அவர் இதை விரும்பவில்லை என்று எப்படி சொல்லமுடியும். ? ‘இப்போ நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். எல்லாத்தையும் கண்ணன் பார்த்துக்கறான். ‘ என்று சொல்வது யார். ? அவரை நிர்ப்பந்தப்படுத்தி மாடலாக யார் உட்கார வைக்க முடியும் ? ஒவ்வொரு அதிகாரியின் பிரபலத்தின் நடிகரின் வீட்டுக்கும் இழுத்துச்சென்று காக்க வைக்கமுடியுமா ? ஏன் இப்படி செய்கிறீர்கள் ? என்று ராமசாமியைக் கேட்டேன். ‘எல்லாமே பாலிட்டிக்ஸாக இருக்கும்போது நாமும் கொஞ்சம் அப்படிச்செய்யவேண்டித்தான் இருக்கிறது ‘ என்கிறார். எனக்குத் தெரிந்த முந்தைய ராமசாமி இப்படிப் பதில் சொல்லியிருக்கமாட்டார். இப்படிச் செய்திருக்கவும் மாட்டார். ‘ என்று எனக்குச் சொன்னவர் ராமசாமிமின் விரோதி அல்லர். ‘காலச்சுவடுவில் வருவதெல்லாம் என்க்குத் தெரிந்து தான் வருகிறது என்று நினைக்கிறீர்களா ? என்று கேட்டாராம் சுந்தர ராமசாமி. இதில் சாமர்த்தியம் தானே தெரிகிறது ? அவர் என்ன திருதராஷ்டிரரா ? ஒளரங்கசீப் சிறையிலிருக்கும் ஷா ஜஹானா ? முன்னைப்போல், சு.ரா.வை நினைத்தபோது பார்க்கமுடிவதில்லை. தடையாக இருப்பது கண்ணன் என்று என்னிடம் நீண்ட நாளைய எங்கள் பொது நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு ராமசாமியின் அவ்வப்போதைய உடல் நிலையும் ஒரு நியாயமான காரணமாக இருக்கலாம். அந்த நியாயமான காரணம், வேறு காரணங்களுக்கு நீட்டிக்கப்படும் சாத்தியத்தையும் இருக்காது என்று சொல்வதற்கில்லை.

முன்னொரு காலத்தில், ‘ இந்த சாகித்ய அகாடமி பரிசு எனக்குக் கொடுத்தால், அதை தூக்கி எறிவேன் ‘என்றவர், இப்போது அது தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருக்கிறது என்கிறார், இன்னொரு சு.ரா. நண்பர். இவ்வளவு தூரம் புழுத்து நாறிப்போய் கிடக்கும் அந்த பரிசுக்கா ஏக்கம் ராமசாமிக்கு ? ஞான பீடப் பரிசு அப்பாவுக்குக் கிடைக்க ஏற்பாடுகளில் முனைந்திருப்பதாக சொல்லப்படுவது உண்மையானால், சாகித்ய அகாடமி பரிசு பெற்ற கனவான்களை அடிக்க கையாண்ட தடி தானே இது ? எந்த பிரபலத்தையும் தரிசிக்காது, எந்த முயற்சியும் செய்யாது, இதைப்பற்றிக் கனவே கூட காணாது இருந்த ஒரு விருது எங்கோ இந்த பூதலத்தின் மூலையிலிருந்து என்னைத் தேடி வந்தால், அது யாருக்கும் கரிக்க வேண்டுமா ? கரிப்பெடுத்த ஜீவன் இருக்கக்கூடும் தான். அதற்கு இடம் கொடுக்க வேண்டுமா ? குடல் அவஸ்தைப் படுபவன் குளம் நாடிச் சென்றால், அந்த குளம் புனிதமாகக் கருதப்படுமா ? குடல் அவஸ்தைக் காரர்களுக்கெல்லாம், காலச்சுவடுதான் நாடும் குளமா ? கண்ணன் எப்படி தன் பொறுப்பை உதற முடியும் ? தனக்கு ஒரு நியாயம். ஜயமோகனுக்கு வேறொன்றா ? நாச்சார் மடம் எழுதியவர் தர்ம யுத்தம் செய்யவில்லைதான். ஆனால் அது எழுதியது ஜெயமோகன் இல்லை என்பது தெரிந்தும். ஜெயமோகன் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்டபிற்கும், ஜெயமோகனையே குற்றவாளியாக்கி, தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருப்பதன் நோக்கம் என்ன ? சொல் புதிது வில் வந்தால் அதற்கு பொறுப்பு ஜெயமோகன் தான் என்று வழக்காடுவது, புஷ்ஷுக்கு இராக்கைத்தாக்க சாக்கு கிடைத்தது போல், கண்ணனுக்கு செளகரியம் என்றால், காலச்சுவடு வில் வந்ததற்கு தான் பொறுப்பில்லை என்று எப்படி சொல்லமுடியும். ? இது சாமர்த்தியமான் கோழைத்தனம் தான். நுஹ்மான் அனுப்பிய இ-மெயில் இதோ என்று சொல்லலாம். எந்த ஊழலுக்கும் தப்பும் முன் தயாரிப்புகளில் விஞ்ஞான பூர்வமாக வரலாறு காணாத அளவு முன்னேறியுள்ள நாடு தமிழ் நாடல்லவா ?

இந்த காரியங்களினாலெல்லாம், காலச்சுவடோ, சுந்தர ராம சாமியோ, கண்ணனோ ஒரு அங்குலமாவது உயர்ந்துள்ளதாக நினைக்கமுடியுமா ? ஒரு செண்டி மீட்டராவது ? எந்த இழி செயலுக்கும் கூலிப்படைகள் கிடைப்பார்கள், பேட்டை ரெளடி போன்றவர்களால், காரியம் நடக்கும். அவர்கள் மரியாதை இழந்தவர்கள் ஆவார்கள். பேட்டை ரவுடிக்கு என்ன மரியாதை கிடைக்கும் ? யாரும் தலைவருக்குப் போட்டியாகி விடுவார்களோ என்று கிட்ட நெருங்க விடாது மண்டையிலடித்து துரத்தும் இன்றைய அரசியல் செயல்பாடாக இருக்கிறது காலச்சுவடின் காரியங்கள்.

எத்துறைக்கும், எக்காரியத்துக்கும் ஒரு தார்மீக பரிமாணம் உண்டு. எளிய வெற்றி, எளிய ப்ராபல்யம் தேடுகிறவர்கள் தார்மீகத்தை மறந்து விடுகிறார்கள்.

வெங்கட் சாமிநாதன்

12,9,04

swaminathan_venkat@rediffmail.com

(அக்டோபர் 2004 ‘அமுதசுரபி ‘ இதழில் இந்தக் கட்டுரை பிரசுரம் பெறுகிறது.)

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்