உரத்த சிந்தனைகள்- 1

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

ராமசந்திரன் உஷா


Princess written by Jean P. Sasson

சென்னை விஜயத்தின்பொழுது உறவினர் வீட்டில் படிக்க கிடைத்த புத்தகம். மிக அவசரமாய் ஓரே நாளில் படித்து முடிக்க வேண்டிய கட்டாயம். பொதுவாய் நம் ஊர்காரர்கள், நாங்கள் துபாயில் இருக்கிறோம் என்றதும் இஸ்லாமிய மதக்கட்டுபாடுகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் நான் இருக்கும் ஐக்கிய அரபு நாட்டில் ( UAE) எந்த கட்டுபாடும் கிடையாது.

GCC என்று அழைக்கப்படும் (Gulf Cooperation Council ) குவைத், (துபாய், அபுதாபி ஆகிய நகரங்களை உள்ளடக்கிய) ஐக்கிய அரபுநாடு, கத்தார், ஓமான், பஹ்ரெய்ன், செளதிஅரேபியா ஆகிய ஆறு நாடுகளில் நிறைய இந்தியர்கள் பணி புரிகிறார்கள். அனைத்தும் இஸ்லாமிய நாடுகள் என்று இருந்தாலும் கடுமையான இஸ்லாமிய கோட்பாடுகள் செளதி அரேபியாவில் மட்டுமே கடைபிடிக்கப்படுகின்றன.

செளதி அரேபியாவின் ஆணாதிக்க சமுதாயத்தைப் பற்றிய புத்தகம். இப்புத்தகத்தில் செளதி அரச குடும்பத்தின் இளவரசி, தன்னுடைய சொந்தகதையை சொல்லுகிறாள். அங்குள்ள ஆணாதிக்க சமுகத்தைப் பற்றி விவரமாய் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் செளதி அரேபியாவில் பெண்களுக்கு காரோட்டும் உரிமையில்லை. பொது இடங்களில் எந்த நாட்டு, இன பெண்களானாலும் புர்க்கா அணிவது கட்டாயம்.

பெண்களின் விருப்பத்தைக் கேட்காமல் வயதான ஆணுக்கு சிறு வயது பெண்ணை இரண்டாம், மூன்றாம், நான்காம்

தாரமாய் திருமணம் செய்துக் கொடுப்பது, மனைவியை மதிக்காத ஆண் சமூகம், பணம் படைத்தவர்களின் பாலியல் வேட்கை,வேட்டை

என்று கதைப் போகிறது.

அதைப் படித்துக் கொண்டு இருக்கும்பொழுது, மதசார்ப்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவில் மட்டும் என்ன வாழ்கிறது என்று தோன்றியது ? ஷெரீனா, சரவணபவன் அண்ணாச்சி முதல் இன்றைய சிவகங்கை ஜெயலஷ்மி வரை பணம் படைத்த செல்வாக்கான ஆண்களின் விளையாட்டுக்கு பெண்கள் பலிகாடாய்தானே போய் கொண்டு இருக்கிறார்கள் ? நம் நாட்டு விஷயத்தில் பெண்களின் பேராசைதான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டாலும் சமூகத்தில் நடைமுறைகள் மூன்று வகையாகத்தான் எப்போதும் உள்ளது.

பெரும் பணம் படைத்த சமூகத்தில் செல்வாக்கானவர்கள்- எதுவும் செய்யலாம்! சட்டம், சமூகக் கோட்பாடுகளைப் பற்றி இவர்களுக்கு

கவலையேயில்லை. அதேப் போல ஏழைகளும்- அன்றைய பாட்டைப் பார்ப்பதால் இவர்களும் எதைப் பற்றியும் கவலைப் படுவதில்லை.

பாவப்பட்ட மத்தியவர்க்கம்தான், கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்று அவதி பட்டுக் கொண்டு இருக்கிறது. இவர்களுக்கு

பணக்கார வேஷம் போடவும் ஆசை, ஆனால் சமூகம் என்ன சொல்லுமோ என்ற பயமும் உண்டு.

இதேப்போல் Asne Seiersted எழுதிய ‘The Bookseller of Kabul ‘ ஆப்கானிஸ்தானின் பெண்களின் நிலைமையைப் பற்றி மிக சரியாய் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. துபாயில் இப்பொழுது பெஸ்ட்செல்லரில் இதற்குதான் முதல் இடம்.

சமீபத்தில் பார்த்த மலையாளப்படம்- பாடம் ஒன்னு, ஒரு விலாபம்

படத்தில் அறிந்த ஓரே முகம் நம் மீரா ஜாஸ்மின். கதையின்நாயகி ஏழை பெண் பள்ளியிருதி வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். படிப்பில்

மிக ஆர்வம். துபாய்க்கு செல்ல துடிக்கும் ஒருவனுக்கு இரண்டாம்தாரமாய் கட்டாய கல்யாணம். ஆனால் இந்தசிறு பெண், அவன்

அருகில் செல்லவே பயப்படுகிறாள். அவனின் முதல் மனைவியும், தாயாரும் அவளுக்கு பாதுகாப்பாய் இருக்கிறார்கள். ஒரு நாள் நாயகி

உடல்நலமில்லாமல் படித்திருக்கும்பொழுது, முதல் மனைவியைக் கட்டாயப்படுத்தி துக்க மருந்து கொடுத்துவிட்டு, தன்

ஆசையை தீர்த்துக் கொள்கிறான். காலையில் தன் நிலை உணர்ந்த நாயகி அழுது ஆர்ப்பாடம் செய்ததும் அவளை தாய்

வீட்டுக்கு அனுப்பிவிடுகிறான். துபாயில் வேலை கிடைத்ததும், அவளை சரிபடவில்லை, தொடவே விடமாட்டேன் என்கிறாள் என்று

சொல்லி தலாக் செய்துவிடுகிறான். இதனால் சந்தோஷப்பட்ட நாயகி தன் படிப்பை தொடருகிறாள் ஆனால் அவள்

தாய்மை அடைந்துவிட்டாள் என்று தெரிந்ததும், கணவனால் கைவிடப்பட்ட அவளின் ஏழைதாய் நெஞ்சடைத்து உயிர்விடுகிறாள்.

அனாதையாய் நிற்கிறாள் நாயகி. படம் ஆரம்பிக்கும்பொழுதும், கடைசி காட்சியிலும் நிறைய கணவனால் கைவிடப்பட்ட சிறுமிதாய்கள் வரிசையாய்தங்கள் குழந்தைகளுடன் ஆற்றங்கரைக்கு சென்று அழுது புலம்பியவாறு துணிதுவைக்கிறார்கள். குழந்தைகள் மணலில் அழுதுக் கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்கின்றன.

இப்படத்திற்குதான் மீராஜாஸ்மினுக்கு இவ்வருட சிறந்த நடிகை விருது கிடைத்தது. இப்படத்திற்கு டாக்காவில் சிறந்த படத்திற்கான

தங்கபதக்கமும் கிடைத்துள்ளது. பங்களாதேஷ் பார்வையாளர்கள், இது எங்கள் கதை என்று சொன்னார்களாம். ஆனால் இந்த

கதை, கேரளாவில் மல்லபுரம் மாவட்டத்து ஏழை இஸ்லாமிய பெண்களின் உண்மை கதை. பள்ளிக்கூடமே பெண்களை வலை வீசும்

தரகர்களின் தளம்.. இப்படம் வெளிவரும்பொழுது, சிறுபான்மையினரின் உணர்வுகளை தூண்டுகிறது என்று பிற்போக்குவாதிகளால்

ஒரு முறை தடைப்பட்டது, மற்றொருமுறை வணிக நோக்கு இல்லாமல் எடுக்கப்பட்டதால் ஓடுமா என்று விநியோகஸ்தர்களின்

சந்தேகத்தால் தாமதப்பட்டுள்ளது. ஆனால் நல்ல கதை எப்போதும் வெல்லும் என்று மற்றொருமுறை நீரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழில் மீ. ஜா நடித்து ஓடிய ஓரே படம் ரன். வழக்கமான பூ சுத்தல் கதை. இது எப்படி ஓடியது என்பது எடுத்தவர்களுக்கே புரியாத

புதி. அடுத்து ஷாமுடன் ஒரு படம் -ஊத்திக்கிச்சு. ஆயுத எழுத்து- ஹிட் என்று மணிரத்தினம் சொல்லுகிறார். நல்ல திறமையான

நடிகை, சேரன் போன்ற தரமான படம் தரும் இயக்குனர்கள், மீ.ஜா வின் திறமையை பயன்படுத்த வேண்டும். ஆமாம், இன்றைய

தமிழ் பட உலகில் டாசண்டான டைரக்டர் என்றால் சேரன் மட்டும்தானா ? ? ? ?

வாழ்வில் நகைச்சுவை-

வழக்கமான பார்ட்டி, ஒரு ஜப்பான் காரர், கொஞ்சம் வயசான ஆள். சரக்கு உள்ளேப் போயிருந்தது. நானும் என் பிள்ளைகளும் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்து, யுவர் சில்ரன் ? என்றுக் கேட்டார். நான் தலையை ஆட்டியதும் மாரீட் ? என்றார். இங்கு ஒரு முக்கிய விஷயம் கவனிக்க வேண்டும். நம் ஊரில் இன்றைய தேதிவரை கல்யாணம் ஆனால்தான் பிள்ளைகள். ஆனால் மற்ற இடங்களில்

ஒன்றிற்கும் மற்றதுக்கும் சம்மந்தமில்லை.

எனக்கும் பொழுதுப் போகவில்லை. சரி, நாமும் விசாரிக்கலாம் என்று யூ மாரிட் ? என்றதும், எஸ் செகண்ட் மேரேஜ், டூ சில்ரன் என்றார். சரி, முதல் மனைவி மூலம் குழந்தை என்றுக் கேட்டதும், நோ பர்ஸ்ட் மேரேஜ், நோ பர்ஸ்ட் ஒய்ப்! ஒன்லி செகண்ட மேரேஜ் செகண்ட் ஒய்ப் என்று சுந்தர ஆங்கிலத்தில் சொன்னார். பாவமே, முதல் சம்சாரம் இறந்துவிட்டாளோ என்று நினைத்து பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு, டைட் ? என்றுக் கேட்டேன். அந்த ஆள் நோ. நோ என்று பதறியவாறு, ஹோவ் ஒன்லி, செகண்ட் ஒய்ப் அண்டு சில்ரன். நோ ஹாவ் பர்ஸ்ட் ஒய்ப் என்றார் திரும்பவும் திருத்தமாய்!

எனக்கு மண்டை காய்ந்துவிட்டது. என்ன சொல்கிறார், முதல் மனைவியே இல்லாமல், முதல் எப்படி இரண்டாவது ஆக முடியும்

என்று என் கணவரை அழைத்துக் கேட்டேன். அவர், ஜப்பான்காரன் கூட பேச, ஸ்பெஷல் ஆங்கிலமொழி டெக்னிக் தேவை என்று

அலட்டிக் கொண்டு, அவரிடம் பேச ஆரம்பித்தார். அந்த ஆளும் அதே முதல் இரண்டான கதையைச் சொன்னதும் கொஞ்சம்

ஒழுங்காய் ஆங்கிலம் பேசும் இன்னொருவரை விசாரித்ததும் மேட்டர் புரிந்தது. அந்த ஆள், ஒரு தாய்லாந்துகாரியை கல்யாணம்

செய்து பிள்ளைகுட்டியும் பெற்று இருக்கிறார். அது சட்டப்படி செல்லுமானாலும், ஜப்பானிய சமூகத்தில் முதல் மனைவி ஜப்பான்காரியாய்தான் இருக்க வேண்டுமாம்! அதனால் இந்த முதல் மனைவியே இரண்டாவதாக கருதப்படுகிறாள். கொஞ்சம் கரகாட்டக்காரன் வாழைபழ ஜோக் மாதிரியில்லை!

கண்ணில் விழுந்த செய்தி

இரண்டு நாளுக்கு முன்பு கல்ப் நீயூசில் ஒரு செய்தி. ஈரானில் ஒரு பெண்மணி, அவள் கணவன் அவளை தினமும் அடிப்பானாம். அவனை வாரம் ஒரு முறை அடித்தால் போதும் என்று சொல்லுங்கள் என்று கோர்ட்டில் முறையிட்டிருக்கிறாள். அவள் கணவனை இந்த பிரச்சனைக்காக டிவோர்ஸும் செய்ய மாட்டாளாம், ஏன் என்றால் அவ்வளவு அவன் மேல் காதலாம். கணவனோ, தினமும் ஒன்று வைத்தால்தான் அவள் ஒழுங்காய் இருப்பாள் என்று திருவாய் மலர்ந்திருக்கிறான். நம் தமிழ் பண்பாடு அங்கும் பேணப்படுகிறதே என்று

மெய்சிலிர்த்துப் போனேன். இன்றைக்கும் நம் சினிமாவில், டாவி சீரியலில் கணவன் மனைவியை அடிக்கும் காட்சி உண்டே!

பழைய எம் ஆர் ராதா பாட்டு, அடிக்கிற கைதான் அணைக்கும் பாட்டுதான் ஞாபகம் வந்தது. நம் சன் டாவியில் சனிகிழமை தோறும் ‘சின்னபாப்பா பெரிய பாப்பா ‘ என்று ஒரு திராபை சீரியல் வருகிறது. அதில் மாமனாராய் வருபவர், மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் பேரன் மோகன் ராதா. பார்க்கவும் அப்படியே தாத்தா போல, பேச்சும் அப்படியே! பார்க்கும்பொழுது மிக ஆச்சரியமாய் இருக்கிறது. அதேப் போல செளகார்ஜானகியின் பேத்தி, வைஷ்ணவியும் கொஞ்சம் பாட்டி போல!

இந்த சின்னபாப்பா, பெரிய பாப்பா முதலில் ஸ்ரீபிரியா, நிரோஷா, விஜயசாரதி செட்டு. ஆனால் அப்போதும் கணவனை மிக கேவலமாய் பேசுவது, ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளுவது என்று மிக மோசம். பிறகு என்ன பிரச்சனையோ ஊர்வசியின் அக்கா லீலாவதி( பெயர் சரியா ?) ஸ்ரீபிரியா வேடத்தில், இப்போது அனைவரும் மாற்றப்பட்டு சீமா, பல்லவிமேனன், எம். ஆர். ராதாவின் பேரன்.. இன்ன பிற நடிகர்கள்! கதை மிக மோசம், வல்கர், அசிங்கமான பாடி லேங்வேஜ்! நடிப்பு அதைவிட கேவலமாய் இருக்கிறது. மாறாமல் இருக்கும் பாஸ்கருக்கு மட்டும் நல்ல எதிர்காலத்தைக் காட்டியுள்ளது இந்த சி.பா.பெ.பா!

சுலப சமையல்-

சுலப சமையலும், வீட்டில் இருக்கும் சாமான்களிலேயே புது முயற்சிகளும்தான் செய்துப் பார்ப்பது எனக்கு விருப்பமான விஷயம். பிற மாநில, நாட்டு சமையல் குறிப்புகள் சுலபமானது என்றால்தான் முயற்சி செய்வேன். இரண்டு வருடத்திற்கு முன்பு ஹைதராபாத் சென்றிருந்தப் பொழுது, அங்கு சாப்பாட்டில் அதிகம் பொடிகள் இடம் பெறுவதைப் பார்த்தேன். எங்கள் வீட்டில் பருப்பு பொடி என்றால் து.பருப்பு. காய்ந்த மிளகாய், கொஞ்சம் பெருங்காயம், உப்பு இதை வறுத்துப் பொடி செய்வார்கள். இது எனக்கு அவ்வளவாய் பிடிக்காது. இதோ

ஒரு தெலுங்கு பொடி:

உளுத்தம் பருப்பு : ஒரு கரண்டி

துவரம்பருப்பு : ஒரு கரண்டி

தனிதனியாய் துளி எண்ணை வாணலியில் இட்டு, வறுத்து ஒரு தட்டில் கொட்டிக் கொள்ளவும்.

அதே வாணலியில் எண்ணை போடாமல் அரை கரண்டி சீரகம் வறுத்து தட்டில் கொட்டவும் .பிறகு காரத்திற்கு அதே வாணலியில் கொஞ்சம் காய்ந்த மிளகாய், கொஞ்சம் பெருங்காயம் வறுத்து ஆறியதும் உப்பு போட்டு நன்றாக பொடி செய்துக் கொள்ளவும். இந்த பொடியை சூடான சாதத்தில் நெய் அல்லது ந. எண்ணைப் போட்டு கலந்து சாப்பிட்டால் அமிருதம். இதற்கு அப்பளம், வடாம், உருளைகிழங்கு சிப்ஸ் போன்றவை நல்ல காம்பினேஷன்.

சுயம் பாகம் பிரம்மசாரிகளுக்கு ஒரு குறிப்பு- இப்படி பருப்புகளை வறுக்கும் பொழுது, காஸ் அடுப்பை சின்ன தீயில் சிம்மில் வைக்கவும்.

மைக்குரோவேவ் ஓவனில், மைக்குரோ பவரில் அத்தனை பொருட்களையும்- உப்பு நீங்கலாய் ஐந்து நிமிடம் வைத்தால் மொறுமொறுவென்று

ஆகிவிடும். பிறகு உப்பு சேர்த்து பொடி செய்துக் கொள்ளலாம்.

தோழியர்கூட்டு வலைப் பதிவு

26- 9- 2004

Series Navigation

ராமசந்திரன் உஷா

ராமசந்திரன் உஷா