நிலாச் சோறு

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

குமார் கணேசன்


பாடல்

களம்நிறை பாண்டி நாட்டில்
கனிநிலா ஒளியைக் கொட்ட
குளக்கரை அல்லி மொட்டாய்
குவிந்துமே விண்மீன் சூட்ட
இளம்பிறை இதயம் கூட்டி
இன்னிலா சோறு ஊட்ட
வளர்பிறை கையைக் காட்டி
வாவெனத் தலையை ஆட்ட
உளம்நிறை ஓளவைப் பாட்டி
உவந்துமே குழந்தை நாடி
வளம்நிறை ஆத்தி சூடி
வழங்கினாள் அன்பாய்ச் சீண்டி!

பொருள்

பெளர்ணமி நாளில் ஓர் இளம் தாய் தன் சேய்க்கு நிலாச் சோறுடன் தமிழும் சேர்த்து ஊட்டும் அழகியக் காட்சியினை இந்த ஆறு வரிகள் கொண்ட அறுசீர் விருத்தப் பாடல் விளக்குகிறது.

நெற்களங்கள் நிறைந்த செழிப்பான பாண்டிய நாட்டில் ஒரு பெளர்ணமி நாள். குளக்கரையில் அல்லி மொட்டுக்களைப் போல, ஆகாயக் குளத்தில் விண்மீன் கூட்டங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருக்கின்றன.

இளம்பிறை போன்ற அழகான ஒரு தாய் தன் குழந்தைக்கு நிலாச் சோறு ஊட்டுகிறாள். நிலவில் தோன்றும் நிழல் உருவத்தை “ஒளவைப் பாட்டி” எனச் சொல்லி தமிழ் உணவோடு, தமிழ் உணர்வையும் கூட்டுகிறாள்.

இவ்வாறு ஓர் இளம் மாலைப் பொழுதில், பெளர்ணமி நாளில், வளர்பிறை போன்ற தன் குழந்தைக்கு நிலாச்சோறு ஊட்டும் பொழுது, குழந்தை முழு நிலவை, குறிப்பாக ஒளவையின் திருவுருவை, பார்த்து கையைக்காட்டி தலையை அசைத்து “வா, வா” என அழைக்கிறது.

அறிவும் அடக்கமும் நிறைந்த ஒளவைப் பாட்டியும் , அகங்காரம், ஆணவம் எதுவுமின்றி, மனம் மகிழ்ந்து குழந்தையை நாடி அன்போடு அதைக் கொஞ்சி வளம் நிறைந்த ஆத்திச் சூடி சொல்லித் தருகிறாள்.

இவ்வாறு, நிலாச்சோறு ஊட்டும் அழகுடன் பாண்டிய மன்னனின்
ஆட்சியில், தமிழ் நாட்டின் செழிப்பையும், மக்களின் தமிழ்ப் பற்றையும்,
தமிழ் பெரும் புலவர்களின் அறிவு, அடக்கம், ஆணவமின்மை போன்ற பண்புகளையும்; இப்பாடல் விளக்குகிறது.

Series Navigation

குமார் கணேசன்

குமார் கணேசன்