நினைவுகளின் தடத்தில் – 36

This entry is part [part not set] of 31 in the series 20091023_Issue

வெங்கட் சாமிநாதன்


உடையாளூர் மாறிக்கொண்டு வந்ததாகச் சொன்னேன். மாறாமல் எப்படியிருக்கும்? ஆனால் இந்த மாற்றத்தையெல்லாம் மாற்றம் என்று சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை. தத்தித் தத்தி குழந்தை நடை பழகுவது போல, இடறி, இடறி விழுவதும் எழுவதுமாகத் தான் இருந்தது. முதல் அடி வைப்பில் இடறி விழுந்தால், “நான் தான் அப்பவே சொன்னேனே, இதெல்லாம் நமக்கு ஒத்து வராதுடான்னு, சொன்னால் கேட்டியா?” என்பது போல் குரல்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் நிறைய எழும். கல்யாணம் என்றோ என்னவோ பேர் என்று நினைக்கிறேன். சரியாக ஞாபகமில்லை. ஆனால் இப்படித்தான் அவர் பெயர் மனதில் நிழல் அடிக்கிறது. நன்றாக சமைப்பவர். யார் வீட்டில் கல்யாணம் என்றாலும், அவர் வந்துவிடுவார். சமையலில் ஒத்தாசையாக இருப்பார். எந்த பெரிய வைபவமும், கிராமத்தில் அந்தக் காலத்தில் சமையலுக்கு என்று ஆட்களை சம்பளத்துக்கு நியமிப்பதில்லை. வீட்டில் உள்ள பெண்களே தான் எல்லா சமையல் காரியங்களுக்கும் பொறுப் பேற்றுக் கொள்வார்கள். பக்ஷணங்கள் எல்லாம் தயார் செய்வது என்பது ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கி விடும். அக்கம் பக்கத்துப் பெண்களும் உதவிக்கு வந்து விடுவார்கள். அந்த மாதிரியான சூழலில் கல்யாணம் தன் சமையலுக்குப் பேர் போனவர். “கல்யாணம், உன் ஆத்துக்காரி கொடுத்து வச்சவடா, அவளும் கூடமாட ஏதாவது செய்வளா, இல்லே நீ வந்து, “என்னத்துக்குடி நீ கிடந்து கஷ்டப்படறே, நான் ஒருத்தன் இருக்கேனோல்யோம்பியா?” என்று தமாஷ்களும் நடக்கும். அவரும் சிரித்துக்கொண்டே அவ்வப்போது சமயத்துக்கு ஏற்றாற்போல் ஏதாவது பதில் சொல்லி விடுவார். கோபப் படமாட்டார். நல்ல மனுஷன். கிராமத்திலே எத்தனை கல்யாணம் நடந்து விடும்? யாராவது எப்பவாவது, “வீட்டில் அவளுக்கு உடம்பு முடியவில்லை, வேறு வழி இல்லை” யென்றால், “ஏண்டா கல்யாணம், ஒரு 200 லட்டு பண்ணிக்கொடேண்டா, என்ன கேக்கறே சொல்லு” என்று வாய்ப்பு வரும். ‘இதையெல்லாம் நம்பி இருக்க முடியுமா? சின்னதா ஒரு ஹோட்டல் ஆரம்பித்தால் என்ன?’ என்று அவருக்குத் தோன்றியது. ஊருக்குள் நுழையும் முன், பிள்ளையார் கோயில் மேட்டுக்குக் கீழே, காவிரிக்குப் போகும் பாதை முனையில், சிவன் கோயிலுக்குப் பக்கத்தில், ஒரு சின்ன தென்னங்கீற்றுக் கொட்டகை போட்டுக் கொண்டார். நல்ல வசமான இடம். ஊரை விட்டு வெளியே வந்தால், வலங்கிமானுக்குப் போகணுமா, காவிரிக்குப் போகணுமா, இல்லை கும்பகோணம் போகணுமா, இல்லை கோவிலுக்குத் தானா, எதாக இருந்தாலும், எங்கே போவதானலும் எல்லாப் பாதைகளுக்குமான முச்சந்திதான் கல்யாணம் கீற்றுக் கொட்டகை போட்டுக் கொண்ட இடம்.

சாயந்திரம் தான் அந்தக் கடை திறக்கும். ஒரு நாள் வடை, இன்னொரு நாள் போண்டா, இப்படி தினம் ஒன்றாக வீட்டி லேயே ரெடியாக போட்டுக்கொண்டு வந்து அங்கு உடகார்ந்து விடுவார். யார் வாங்கினார்கள், எப்படி வியாபாரம் நடந்தது என்று எனக்குத் தெரியாது. கிராமத்தில் யாரும் அவ்வளவு சுலபமாக காசை வெளியே விட்டு விடமாட்டார்கள். எதை நம்பி அவர் இதை ஆரம்பித்தார் என்று இப்போது நினைத்துப் பார்க்கும் போது நினைக்கத் தோன்றுகிறது. சாயந்திர வேளையாதலால் நாலைந்து பேர் அங்குகூடி விடுவார்களாம். சீட்டட்டத்துக்கோ அல்லது வேறு எதற்குமோ ஏதாவது ஒரு வீட்டுத் திண்ணையில் கூடுவதில்லையா, அது போலத் தான். வாங்கிச் சாப்பிடுகிறவர்கள் கூட்டமல்ல. அரட்டைதான் நடக்கும். வியாபாரமல்ல. “ஏண்டா கல்யாணம், இன்னிக்கு என்ன பஜ்ஜியா? ஒண்ணு கொடேன் பாப்பம். ஆத்திலே பண்ற மாதிரியா, இல்லே வியாபாரத்துக்குத் தானே, நாமே சாப்பிடப் போறோம்னு பண்றியா தெரியாடாமா?” என்று ஆரம்பிக்கும் அரட்டை. “தேங்காண்ணையா, இல்லே நல்லெண்ணையாடா? என்று ஒரு கேட்பார். “நல்லெண்னைதான்னா”, ன்னு பதில் வரும். “வியாபாரத்திலே அதெல்லாம் கட்டிவராது. கடலெண்ணையாக்கும், அநாவசியமா துருவித் துருவிக் கேக்கப்படாது இந்த இடத்துலே” என்று ஒருவர் கல்யாணத்துக்கு சப்போட்டாப் பேசுவார். “அட கடலெண்ணைன்னுதான் இருக்கட்டுமே. கடலெண்ணென்னு தெரியாம பண்ணிப்பிடறானோல்யோ, அது சாமர்த்தியம் தானே, அது கூட கல்யாணத்துக்குத் தெரியலேன்னா எப்படி? “என்று இன்னொருத்தர் கல்யாணத்தைத் தாங்கிப் பேசுவார். இப்படித்தான் அந்த இடத்தில் கலகலப்பு இருக்குமே தவிர வியாபாரம் நடக்கவில்லையாம். ஒரு நாளைக்கு இந்த அரட்டைக்கு முத்தாய்ப்பாக ஒருத்தர், “கல்யாணம், இவா இப்படித்தான் சொல்லீண்டிருப்பா, நீ ஒண்ணுக்கும் கவலைப்படாதே, நான் சொல்றதைக் கேளு, பேசாமே மண்ணெண்ணேயிலே பண்ணிப்பிடு, என்ன நான் சொல்றது? செலவும் குறைச்சல். இல்லாட்டா கட்டுபிடியாகுமா சொல்லு?” சொன்னாராம். இந்த வம்பே வேண்டாம் என்று கல்யாணம் அந்தக் கீத்துக் கொட்டகைக் கடையை ஒருவாரத்திற்குள் மூடிவிட்டார், அதிக நஷ்டமில்லாமல்.

அந்தக் கல்யாணம் வீட்டில் தான் ஒரு டைம் பீஸ் இருந்தது. கிராமத்தில் வேறு எந்த வீட்டிலும் கிடையாது. அதற்கு அவசியமும் இல்லை. விடிவதற்குச் சற்று முன்னால் எழவேண்டும். பொழுது சாய்ந்ததும் சாப்பிட்டு உறங்க வேண்டும். இடையில் எந்தக் காரியத்தை மணி பார்த்துச் செய்யவேண்டும்? வெயிலைப் பார்த்து, விழும் நிழலைப் பார்த்து உத்தேசமாக நேரம் தெரிந்து விடும். ஆனால், ஒரு நாளைக்கு அது எனக்கு போதுமானதாக இருக்கவில்லை.

பாட்டி நிலக்கோட்டையிலிருந்து வந்து கொஞ்ச நாள் உடையாளூரில் தங்கியிருந்தாள். நிலக்கொட்டைக்குத் திரும்பிப் போகணும். எதற்காக வந்திருந்தாள், எப்படி வந்தாள் என்பதெல்லாம் எனக்கு ஞாபகமில்லை. ஞாபகம் இருக்கவேண்டும், அதைச் சொன்னால் தான் இனி நான் சொல்ல வருவது முழுமையாகும். ஆனால் நினைவில் இல்லை. அதில் நான் சம்பந்தப்படவில்லை என்பதாலோ என்னவோ. எப்படித் தனியாக வந்தாள், என்பது என் யூகத்திற்கும் புலப்படவில்லை. நிலக்கோட்டையிலிருந்து அம்மைய நாயக்கனூர் கொடை ரோடு ரயில் நிலையத்திற்கு மாமா பஸ்ஸில் அழைத்து வந்து ரயில் ஏற்றிவிடுவார் தான். ஆனால் கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து உடையாளூருக்கு எப்படி பாட்டி வந்திருக்க முடியும்? பாட்டி தனியாக குதிரை வண்டி அமர்த்திக்கொண்டு வலங்கிமான் போய் பின்னும் அங்கிருந்து இன்னொரு குதிரை வண்டி அமர்த்திக்கொண்டு உடையாளூர் வருவதென்பதெல்லாம், பாட்டியின் கிட்டத்தட்ட அறுபது வயது அனுபவத்தில் இல்லாத காரியங்கள். இப்போது பாட்டி நிலக்கோட்டை போகவேண்டும். கும்பகோணத்தில் ரயில் ஏற்றிவிட்டால் சாயந்திரம் நாலு நாலரை மணிக்கு கொடைரோடு போய்ச்சேர்ந்து விடுவாள். பாட்டி முதல் நாள் ராத்திரி தோசையோ ஏதோ சாப்பிட்டதோடு சரி. ரயில் ஏதும் சாப்பிட மாட்டாள். ஊருக்குப் போய் குளித்துவிட்டு சமையல் செய்து தான் சாப்பிடுவாள். இதிலெல்லாம் பாட்டி அப்படி ஒன்றும் பெரிதாக கெடுபிடி செய்கிறவள் இல்லை. ஆனால் அது தானே ஒரு பிராம்மண விதவை அனுஷ்டிக்க வேண்டிய நியமம். அதை மீற மாட்டாள். அவ்வளவு தான். நிலக்கோட்டை போகும் வரை வெறும் வயிறு தான். மாமா கொடைரோடு வந்து அழைத்துக்கொண்டு போய்விடுவார். அவருக்குச் செய்தி சொல்லியாயிற்று. கும்பகோணத்திற்கு செங்கோட்டா பாஸஞ்சர் காலை ஆறு மணிக்கு வரும். அதற்கு உடையாளூரிலிருந்து மாட்டு வண்டியில் வலங்கிமான் போய் அங்கிருந்து குதிரை வண்டி பிடித்து காலை ஆறு மணிக்குள் கும்பகோணம் போவது என்பது நடவாத காரியம். உடையாளூரில் மாட்டு வண்டிக்கு ஏற்பாடு செய்தாலும், வலங்கிமானில் காலை நாலரை மணிக்கு குதிரை வண்டிக்கு எங்கே போவது? ஆக, பாட்டியை எப்போது நான் பள்ளிக்கூடம் போகும் வயல் வரப்புகள் வழியே நடத்தி அழைத்துச் செல்வது தான் சாத்தியமான காரியம். “என்னடா, பாட்டியை கும்மோணத்திலே ரயில் ஏற்றி விடறயா?” என்று அப்பாவும் அம்மாவும் கேட்ட பிறகு, சாதாரணமாகவே ‘மாட்டேன்’ என்று சொல்வது முடியாது. அப்பாவோடு பாட்டி போகமாட்டாள். அப்பா முன்னாலேயே கூட பாட்டி நிற்க மாட்டாள். பேச மாட்டாள். அப்பாவும் தான். அம்மாவிடம் சொல்லித்தான் மற்றவர்க்கு செய்தி போகும். ஆக, வீட்டில் அடுத்த பெரியவன், ஆண்பிள்ளை நான் தான். இது ஒரு பெரிய காரியம் அதை நான் செவ்வனே செய்துமுடிக்கவேண்டும். “காலம்பற விடியறதுக்கு ரண்டு முன்னாடியே கிளம்பிடு. பாத்து மெதுவா கூட்டி அழைச்சிண்டு போ, என்ன?” என்றார் அப்பா. முதல் நாள் இரவே பாட்டி தன் பெட்டியைத் தயார் செய்து வைத்துக் கொண்டாள்.

அப்பா எழுப்பினார்: “எழுந்திரு. போய் கல்யாணத்தோடே கடிகாரம் ஒடலையாம். வெளுத்துண்டு வர்ரமாதிரி இருக்கு. எதுக்கும் நீ கிளம்பிடு. பாட்டியை மெதுவாத்தான் அழைச்சிண்டு போகணும். நாழியாகும்” என்றார் அப்பா.

பாட்டியை அழைத்துக் கொண்டுபோய் கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில் ஏற்றி விட்டு, நான் திரும்ப இங்கு மகாமகக் குளம் மேற்குத் தெருவில் இருக்கும் பாட்டி வீட்டுக்குத் திரும்பிவிடலாம். அங்கு குளித்து சாப்பிட்டு பள்ளிக்கூடம் போகலாம். ஒன்றும் சிரம மில்லை. நான் எப்படியும் கும்பகோணம் போய்த்தானே ஆகவேண்டும்.

பாட்டியின் பெட்டியை நான் எடுத்துக் கொண்டேன். இருட்டித் தான் இருந்தது. “நீ பாதி தூரம் போகும் போதே நன்னா விடிஞ்சுடும்டா, வெளுத்துண்டு வராப்லே தான் இருக்கு.” என்றார் அப்பா. இருட்டி இருந்தாலும் கொஞ்சம் இருட்டில் கண் பழகினால் சின்ன வரப்பு கூட நன்றாக தெரியவந்துவிடும். உடையாளூரிலிருந்து அரை மைல் தூரத்திலிருக்கும் ஆற்றங்கரை வரை வண்டிப் பாதை உண்டு. அந்த ஆற்றைக் கடந்த பிறகு ஒற்றையடிப் பாதை கும்பகோணம் அரசிலாற்றங்கரை வரும் வரைக்கும். எங்கள் ஊர் ஆறு வந்ததும் நான் பெட்டியை ஆற்றின் கரையிலேயே வைத்துவிட்டு பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு ஆற்றைக் கடந்து பாட்டியை ஆற்றின் மறுகரையில் நிற்க வைத்துவிட்டு மறுபடியும் ஆற்றைக் கடந்து பெட்டியை எடுத்துக்கொண்டு ஆற்றைக் கடந்து மறுகரைக்கு வருவேன். பாட்டி நான் பெட்டியை எடுத்து வரும் வரையில் மறுகரையில் காத்திருப்பாள். நான் வந்ததும் நடையைத் தொடர்வோம். நாதன் கோயில் வரும் முன் இன்னொரு ஆறு இருக்கிறது. அதையும் இப்படித்தான் கடக்கவேண்டும். ஆனால் அதன் பிறகு இரண்டு இடங்களில் குறுக்கே ஓடும் வாய்க் கால்களையும் இப்படித்தான் கடக்க வேண்டும். அந்த இரண்டு வாய்க்கால்களையும் கடக்க குறுக்கே இரண்டு தென்னை மரங்களை வெட்டிப் பாலமாகப் போட்டிருக்கும். ஆனால் அதைப் பாட்டியால் கடக்கமுடியாது. வாய்க்காலில் இறங்கித்தான் அழைத்துச் செல்ல வேண்டும்.

இதோ விடிந்து விடும். விடியும் சமயத்திலாவது கும்பகோணம் ரயில் நிலையத்தை அடைந்துவிடவேண்டும். தாமதமாகப் போய் விட்டால் வண்டி போய்விடும். பின் இந்த இருட்டில் பாட்டியை நடத்தி அழைத்துச் சென்ற கஷ்டத்திற்கு அர்த்தம் இல்லாது போய் விடும். அப்புறம் அப்பா அம்மாவிடம் பேச்சுக் கேட்கமுடியாது. எனக்கே ரொம்ப அவமானமாக இருக்கும். சீக்கிரம் போகணும் என்பதற்காக பாட்டியை வேகமாக நடக்கச் சொல்லமுடியாது. இவ்வளவு தூரம் பாட்டியை நடத்தி அழைத்துக் கொண்டு போவதே பாவம். அதிலே ஆத்திலே இறங்கு, வாய்க்காலில் இறங்கு, சீக்கிரமா வா என்றெல்லாம் வேறே கஷ்டப்படுத்த முடியுமா என்ன? இரவு ரொம்ப அமைதியாக இருந்தது. யாரும் பின்னால் வருவாரோ முன்னால் எதிர்ப்படுவாரோ கிடையாது. சுத்தி ஒரே வயல் பரப்பு. ஆற்றில் ஓடும் ஜலத்தின் சலசலப்பு. இரவுப் பூச்சிகளின் கிச் கீச் என்று ஒரு மாதிரியான சப்தம் வழி பூராவும். பயமென்றில்லை. பாட்டி கூட இருக்கிறாள். பாட்டிக்கு நான்,. எனக்கு பாட்டி என்று ஒருவருக்கொருவர் துணை இருப்பதான ஒரு தைரியம் மனத்தில். ஏதும் ஆபத்து வந்தால் நானோ பாட்டியோ இருவருமே பிரயோஜனமில்லை. இருந்தாலும் பயம் என்ற நினைப்பே இருவருக்குமே இல்லை. முடிந்த வரை சீக்கிரம் கும்பகோணம் போய்ச்சேரவேண்டுமே என்ற நினைப்புத்தான். போய்க்கொண்டே இருந்தால் விடிந்து விடுமே. அப்புறம் என்ன?

பாட்டியும் நானும் பெட்டியோடு இரண்டு ஆற்றையும் கடந்தாயிற்று. பாட்டி எங்கும் வழுக்கி விழ்வும் இல்லை. நடக்க முடியலேடா கொஞ்சம் உட்கார்ந்துட்டு போலாமே என்றும் பாட்டி ஒரு தடவை கூட சொல்லவில்லை. அரசலாற்றை அடைந்த போது, அதிர்ஷ்டவசமாக தோணி காத்திருந்தது. இந்த நேரத்தில் இருட்டில் தோணி கிடைக்குமா என்றே இந்த நிமிஷம் வரை எண்ணிப் பார்க்கவில்லை. தோணியைப் பார்த்ததும் தான், “அட இப்போஎப்படி தோணி தயாரா இருக்கு!” என்று ஆச்சரியப்படத்தான் தோன்றியது.

கும்பகோணம் டவுனுக்குள்ளும் நுழைந்து நடக்க ஆரம்பித்தோம். பெட்டியைத் தூக்கி வருவதிலும் எனக்கு சிரமமோ களைப்போ ஏதும் இருக்கவில்லை. ரயில் நிலையம் போய்ச் சேர்ந்து பாட்டியை ஒரு பெஞ்சில் உட்காரவைத்தேன். “அப்பாடா” என்று இருந்தது. நல்லபடியாக வந்து சேர்ந்துவிட்டோம். ஆச்சரியம் என்னவென்றால் இன்னம் விடியவில்லை. ஸ்டேஷனில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ரயில் இன்னும் வரவில்லை. ஸ்டேஷனிலும் கூட்டமில்லை. இந்த நேரத்திற்கு அதிகம் போனால் இருபது முப்பது பேர் வண்டிக்குக் காத்திருப்பார்கள். நாலைந்து பேர் கூட கண்ணில் படவில்லை. கடிகாரத்தைப் பார்த்தேன். மணி அப்போது தான் ஐந்தே கால் ஆகியிருந்தது. ஆக, வீட்டை விட்டுக் கிளம்பியபோது மணி உத்தேசமாக, இரண்டரையோ இல்லை, மூன்று இருக்குமோ என்னவோ

“ரொம்ப முன்னாடியே கிளம்பிட்டோம் போலிருக்கேம்மா, மணியே தெரியலே. நடு ராத்திரிலே தனியா அஞ்சு அஞ்சரை மைல் நடந்திருக்கோம்மா” என்றேன் பாட்டியிடம். “போனாப் போறது போ. வந்து சேந்துடோமில்லியா, அது போறும்.” என்றாள் பாட்டி.

பாட்டியை ரயிலேற்றிவிட்டேன். சாயந்திரம் நாலு நாலரை மணிக்கு கொடைக்கானல் ரோட் போய்ச்சேரும். மாமா ஸ்டேஷனில் காத்திருந்து பாட்டியை அழைத்துப் போவார். கொடைக்கானல் மோட்டார் யூனியன் பஸ் ஒன்று காத்திருக்கும். முக்கால் மணி நேரத்தில் மாமாவும் பாட்டியும் நிலக்கோட்டை போய்ச் சேர்ந்து விடுவார்கள். பாட்டி கிணற்றடிக்குப் போய் குளித்துவிட்டுத் தான் சமையல் அடுப்பை மூட்டுவாள். முந்தின நாள் ராத்திரி தோசை சாப்பிட்டது. காலையில் குளித்துவிட்டு கா•பி சாப்பிட்டாள். கா•பி இல்லாமல் தலை வலி வந்துவிடும் பாட்டிக்கு. இனிமேல் அடுப்பு மூட்டி, தோசை வார்த்துச் சாப்பிடுவாளோ இல்லை, இரண்டு வாழைப்பழமும் போறுண்டா, என்று நாள் பூராவும் வெறும் வயிற்றோடு ரயில் வந்த களைப்பில் படுத்துண்டா போறும்னு இருந்து விடுவாளா, தெரியாது. ஒரு வயதான பிராமண விதவைக்கான ஆசார அனுஷ்டானங்களை விதித்தவர்கள், இப்படியான ரயில் பிரயாணங்களை எதிர்பார்த்தார்களா என்ன? ஆனால் பாட்டி இந்த ஆசார அனுஷ்டானங்களில் எதையும் எதற்கும் தளர்த்தியவள் இல்லை.

மணி ஆறேகால் தான் ஆகிறது. கொஞ்சம் வேகமாக நடந்தால் இருபது நிமிஷத்தில் மகாமகம் மேற்குத் தெருவுக்குப் போய்விடலாம். அனேகமாக பாட்டி இன்னும் கா•பி சாப்பிட்டிருக்கமாட்டாள். எனக்கும் கா•பி கிடைக்கலாம்..

வெங்கட் சாமிநாதன்/20.1.09

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்