’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

ஆசிப் மீரான்


அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே பங்கு கொண்ட மகளிர் தின விழா நிகழ்ச்சி கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை அவர்களின் தலைமையில் துபாயில் வெகு சிறப்பாக அரங்கேறியது.

மகளிர் பாடல் குழுவினரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் புதிய மெட்டில் குழந்தைகள் பாரதியார் பாடல்களைப் பாடினர். திருமதி.சியாமளா சிவகுமார் வரவேற்புரையை தொடர்ந்து பிரசித்தம் குழுவினர் வரவேற்பு நடனத்தை நிகழ்த்தினர். ‘பெண் கல்வியின் அவசியத்தை’ வலியுறுத்தி திருமதி. ரேணுகா குழுவினர் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை வழங்கினர்.அதனைத் தொடர்ந்த செல்வி நிவேதிதா ஆனந்தனின் குழுவினரின் நடனமும் அமீரக மேடைகளில் முதன் முறையாக சிறுமியர் சிலம்பாட்டம் ஆடியதும் பார்வையாளர்களுக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக திருமதி கவிதா பிரசன்னா நடனக் குழுவினரின் கிராமிய நடனங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது அதனைத் தொடர்ந்து திருமதி.ஜசீலா நவ்ஃபல் மகளிர் தினம் குறித்து சுருக்கமாக உரையாற்றினார். சங்க கால இலக்கியங்களை அடிப்படையாக வைத்து திருமதி.லக்ஷ்மி ப்ரியா மற்றும் பொற்செல்வி ஆகியோர் வழங்கிய சொற்சித்திரம் நிகழ்ச்சியும் ரோஷிணி, ஸ்வேதா, கதீஜா மற்றும் ஆயிஷா குழுவினர் அரங்கேற்றிய வசனங்களற்ற குறுநாடகமும் பார்வையாளர்களின் வரவேற்பையும் கைததட்டல்களையும் பெற்றன.

அதனைத் தொடர்ந்த ’இசைச்சாரல்’ நிகழ்ச்சியில் ஸ்ரீவித்யா (கீ போர்டு), நிவேதிதா (வீணை), பெனாசிர் (டிரம் பேட்ஸ்), கிருஷ்ணப்ரியா (வயலின்) ஆகியோர் வெவ்வேறு வாத்தியக் கருவிகளை இசைத்து பெண்கள் மட்டுமே பங்கு பெற்று இசையமைத்த முதல் மேடை என்ற பெருமையை அமீரகத் தமிழ் மன்றத்திற்கு ஏற்படுத்தினர். ஒளி ஒலிக்கோப்புகளை இணைத்து பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளை உள்ளடக்கி நடத்தப்பட்ட ‘சினேகமான சினேகிதியே’ என்ற வேடிக்கையும் வினோதமும் நிறைந்த நிகழ்ச்சியை அமைப்பின் செயலாளர் ஜெஸிலாவும், பெனாசிர் ஃபாத்திமாவும் சுவை குன்றாமல் வழங்கினர்.பார்வையாளர்கள் பெரிதும் ஆர்வத்துடன் பாராட்டிய நிகழ்ச்சியாக இது அமைந்தது.

அதனைத் தொடர்ந்த நிகழ்வில் பேசிய தோழர் தியாகு தாய்த்தமிழின் அவசியத்தை வலியுறுத்தி அழகுறப் பேசினார்.தொடர்ந்து 18 ஆண்டுகளாக தமிழகத்தில் தாய்த்தமிழ்ப்பள்ளியைத் தொடர்ந்தும் பல்வேறு சிக்கல்களூக்கு நடுவில் தாம் நடத்தி வருவதையும் ஆனாலும் தமிழகத்தில் 18 இடங்களில் தாய்த்தமிழ்ப்பள்ளிகள் இருப்பது பெருமை தருவதாக இருப்பதாகவும் மேலும் இது தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் அவர்.

’பெண் கல்வியின் அவசியம’ என்ற தலைப்பில் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் ஷேக் சிந்தா மதார் முதல் பரிசைப் பெற்றார். சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர் ஆசாத், நியூயார்க்கைச் சேர்ந்த ஸ்வாதி ஸ்வாமி ஆகியோர் தேர்ந்தெடுத்த கட்டுரைகளிலிருந்து சிறந்த கட்டுரையை ஊடகவியலாளர் மாலன் நடுவராக இருந்து தேர்வு செய்தார்.

உபயோகமில்லாத பொருட்களை வைத்து உருவாக்கப்பட்ட பொருட்களுக்கான போட்டியில் சிறந்த கைவினைக் கலைஞருக்கான பரிசை திருமதி.ஸ்ரீவாணியும், சிறந்த சமையல் கலைஞருக்காக நடத்தப்பட்ட போட்டியில் வென்றதற்காக ‘சுவை அரசி’ பட்டத்தை திருமதி.வஹிதா நஜ்முதீனும், மூன்றிலிருந்து ஒன்பது வயது குழந்தைகள் கலந்து கொண்ட சிறுமியருக்கான போட்டியில் சிறந்த தளிர்நடைக்கான பட்டத்தை செல்வி. நேஹா சுவாமிநாதனும் பெற்றார்.

சமூகப் பணிகளில் தம்மை சிறப்பாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் திருமதி.யாஸ்மின் நஜ்முதீன் சதக் அமீரகத்தின் சிறந்த தமிழ்ப்பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.விழாவில் பேசிய அவர் ‘ஒவ்வொரு பெண்மணியும் தன் சமூகத்துக்காக ஏதேனும் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். விழாவில் நடனமாடியவர்களுக்கும் பங்கு பெற்றவர்களுக்கும் பரிசுகளை திருமதி எனித், திருமதி சுதந்திர செல்வி, திருமதி காந்திமதி ஆகியோர் வழங்கினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய கவிஞர் தாமரை ‘பெண்கள் தினம் கொண்டாடப்படுவதின் அவசியத்தையும் அதன் பின்னணியையும்’ விளக்கினார் திரைத் துறையில் ஒரு பெண்ணாகத் தனக்கு நேர்ந்த இன்னல்களையும் அதனை எவ்வாறு தான் எதிர் கொண்டேன் என்பதையும் சுவைபடப் பகிர்ந்து கொண்ட கவிஞர் தாமரை பெண்களுக்குச் சமூகம் சார்ந்த முனைப்பும் அவசியம் என்பதையும் வலியுறுத்தினார். தான் 17 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதை எப்படி இன்றும் நிலை மாறாமல் அப்படியே இருக்கிறதென்பதையும் வெளிப்படுத்திய அவரது உரை மகளிர் நடுவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து பரிசு குலுக்கலும் நன்றியுரையும் நிகழ்ந்தேறின. விழாவுக்கான ஏற்பாடுகளை திரு.காமராஜன், திரு.ஆசிப் மீரான், திரு.சிவகுமார், திரு.ஃபாரூக் அலியார், திரு.இரமணி ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். திரு.கீழை ராஸா, திரு.ரியாஸ் அகமது, செல்வி.பெனாசிர், திரு.லக்ஷ்மி நாராயணன், திருமதி வஹிதா, திருமதி சந்திரா பானு ஆகியோர் காணொளி உருவாக்கம், ஒலி ஒளி அமைப்பு மேடை நிர்வாகம் போன்றவற்றில் பொறுப்பேற்று அதனைத் திறம்படச் செய்திருந்தனர்.

-ஆசிப் மீரான்

Series Navigation

ஆசிப் மீரான்

ஆசிப் மீரான்